முதுமை-கடிதங்கள்

அன்புள்ள ஜெ.,

முதுமையும் அலோபதியும் வாசித்தேன்

தற்போதுதான் உடல் முழுக்க ட்யூப் மாட்டப்பட்டு ஐசியூ-வில் இரு வாரங்களாக இருக்கும் உறவினரைப் பார்த்துவிட்டு வந்தேன். மனதில் இருந்த அதே கேள்விகளுடன் ஒரு கட்டுரை. இத்தனை கஷ்டங்களுக்குப் பிறகும் அவரால் முழு ஆரோக்கியம் அடைய முடியுமா, நடமாட, பேச முடியுமா என்பதற்கு டாக்டர்களிடம் பதில் இல்லை. மருந்துக்கு மட்டுமே பல லட்சங்கள் செலவு இதுவரை. கொட்டிக் கொடுத்து அனாதைகளாக ஐசியூவில் சாகும் உறவினர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது.

எத்தனையோ முதியவர்கள் சீக்கிரம் சாவு வராதா என்று கதறி இருக்கிறார்கள்; பார்ப்பவர்களிடம் எல்லாம் தன்னை வீட்டுக்குக் கூட்டிச் சென்று விடும்படி கண்ணீருடன் மன்றாடி இருக்கிறார்கள். இருந்தாலும் நாம் அவர்களை விடுவதாயில்லை.

என் பாட்டி கூட, படுத்த படுக்கையாகவே பல வருடங்கள் கிடந்துதான் உயிர்விட்டார். மிகக்கொடூரமாக, மிக மெதுவாக முதுமை அவரது அடையாளங்களை எல்லாம் உறிஞ்சி, அவரை ஒரு கந்தல் மூட்டையாக மாற்றியபிறகே உயிரைப் பறித்தது. சாப்பிட்டு மலம் கழிக்கும் எந்திரமாக மாறிப்போனார். பாட்டி, அம்மா, அக்கா, அத்தை என்று ஒவ்வொருவரும் மனதில் வைத்திருந்த சித்திரத்துக்கும், அந்த எந்திரத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் போனது. வாழ்க்கையில் பல கஷ்டங்களைத் தாண்டித் தன் உயிரணுவைக் கைமாற்றிய அந்த ஜீவனுக்கு ‘கௌரவமான மரணம்’ என்ற எளிய கைம்மாறைக் கூட செய்யமுடியாமல் போனது.

ஆர்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

இன்று தங்கள் வலைத்தளத்தில் மேற்கண்ட தலைப்பில் வந்த கட்டுரையை படித்தேன்.சில நாட்களாக திரு.எஸ்.வி.ராஜதுரை அவர்களால் சற்று தடம் மாறியிருந்த நமது வலைத்தளம் மீண்டும் நமது பாதைக்குள் வந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

அக்கட்டுரையில் “சென்ற ஐம்பதாண்டுக்காலத்தில் அலோபதி மருத்துவம் ஒரு மாபெரும் வணிகமாக ஆகிவிட்டிருக்கிறது. அந்த வணிகத்தில் அது அடைந்த பெரிய கண்டுபிடிப்பு என்பது பிறப்பையும் இறப்பையும் நோயாக ஆக்க முடியும் என்பதுதான். அவ்விரு இயற்கையான நிலைகளுக்காகவே இன்று அலோபதியின் பெரும்பாலான மருந்துகள் விற்கப்படுகின்றன.”

என்று மிக சரியாக கணித்து எழுதி உள்ளீர்கள்.குறிப்பாக முப்பது,நாற்பது வருடங்களுக்கு முன் மிக மிக இயல்பாக வீடுகளில் சுக பிரசவமாக நடந்த பிறப்புகள் இன்று மருத்துமனைகளில் தேவையோ தேவை இல்லையோ அறுவை

சிகிச்சையோடு கூடிய பிறப்பாக மாறிவிட்டன.பிறப்புக்கு முன்னும் பின்னும்தான் எத்தனை முன்னேற்பாடுகள் எவ்வளவு செலவுகள்.நல்ல வேளை இப்பொழுது எல்லோரும் ஓன்று அல்லது இரண்டுடன் நிறுத்தி கொள்வதால் பிழைத்தோம்!.

அதேபோல் முதுமையையும்,இறப்பையும் நம் முன்னோர்கள் போல் நாம் என்றுமே இயல்பாக ஏற்று கொள்வதேயில்லை.

அன்புடன்,

அ.சேஷகிரி.

முந்தைய கட்டுரைவெண்கடல் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைசர்மாவின் உயில்- க.நா.சுவின் காணிநிலம்