யுங்

அன்புள்ள ஜெ,

சி ஜி யுங் ஆழ்படிமம் பற்றிக் கூறுவதை நீங்கள் முழுவதும் ஏற்றுக்கொள்கிறீர்களா? இந்து ஞான மரபின் அடிப்படையில் நீங்கள் மாறுபடும் இடம் உண்டா?

C G Jung – There is a thinking in primordial images, in symbols which are older than the historical man, which are inborn in him from the earliest times, eternally living, outlasting all generations, still make up the groundwork of the human psyche. It is only possible to live the fullest life when we are in harmony with these symbols; wisdom is a return to them.

சமீபத்தில் மேலுள்ளதை வாசித்தேன். மேலும், இந்தப் பதிவில் http://www.jeyamohan.in/?p=3705 உங்கள் பதிலும் மற்றும் என்னுடைய சில அனுபவங்களும் இதையே சுட்டுகின்றன.

நன்றி,
ராஜா

அன்புள்ள ராஜா

சி.ஜி.யுங் மீதான என் கவர்ச்ச்சிக்கு முக்கியமான காரணம் அவரது மொழி. இலக்கியவாதி என்றமுறையில் என்னைப் பொறுத்தவரை ஒருவிஷயம் அழகாகவும் கூர்மையாகவும் சொல்லப்படும்போதே அது முழுமையாகிவிட்டது என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதற்குமேல் புறவயமாகச் சொல்லப்படும் முழுமையான உண்மை என ஒன்று உண்டா என்ன?

இதிலும் யுங் அழகாகவே சொல்கிறார். ஆழ்படிமங்கள் மனிதனின் பிரக்ஞையைவிடப் பழைமையானவை, அவனுடைய கூட்டுஆழ்மனதைவிடப் பெரியவை என்றே நானும் நம்புகிறேன். என்னைப்பொறுத்தவரை கடவுள் என்பது என்னுள் இருந்து எழும் ஆழ்படிமம்தான். அந்த பிரம்மாண்டத்தின் முன் எப்போதுமே என்னை வெறும் தூசாக உணர்கிறேன். நான் என் அகங்காரமழிந்து அதையே என்னால் வணங்க முடியும்

என் எழுத்து என்பதையே நானறியும் அன்றாட வாழ்க்கை வழியாக என் ஆழ்மனதுக்கு, அங்குள்ள ஆழ்படிமங்களுக்குச் செல்லும் ஒரு வழி என்றே நினைக்கிறேன். படைப்பின் ஆழம் என நான் நினைப்பது என்னுடைய சொந்தப்படிமம் ஒன்று என் பண்பாட்டின் ஆழ்படிமத்துடன் கொள்ளும் மிகச்சரியான இசைவை மட்டுமே.

ஆம், இலக்கியத்தின் உச்சகணம் என்பது ஆழ்படிமத்தை உருவாக்கிய தொன்மையின் முடிவிலியுடன் என்னுடைய படிமங்களும் சொற்களும் கொண்டிருக்கும் பிரிக்கமுடியாத உறவு வெளிப்படும் தருணங்கள் மட்டுமே.

அப்போது நான் ஒரு நவீன எழுத்தாளன் மட்டுமல்ல, ஒரு புராதன இனக்குழுச்சமூகத்தின் குறிசொல்லியும்கூட.

ஜெ

முந்தைய கட்டுரைஅம்மையப்பம் கடிதம்
அடுத்த கட்டுரைதிகசி இணையதளம்