அன்புள்ள ஜெயமோகன்
வெண்கடல் simply brilliant.
வெகுநேரம் யோசித்துக் கொண்டிருந்தேன் இந்தக் கதையைப் பற்றி..
இன்று காலை என் கணவரிடம் உங்கள் கதையைச் சொன்னேன். வாசிக்கும் பழக்கம் இல்லாதவர். பொருளாதாரம்தான் அவரின் விருப்பம். எனக்கு நேர் எதிர். ஆனால் நான் சொன்னால் கதைகளைக் கேட்பார்.
அவரால் இந்தக் கதையை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். ஏனென்றால் நான் பட்ட வலி அது. அவர் பார்த்த வலி அது.ப்ரசவ வலியை விட கொடுமையான வலி அது ஜெயமோகன். ப்ரசவ வலியைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியும். இந்த வலி இருக்கே…..
அந்த சமயத்தில் எனக்கு 3 விஷயங்கள் தோன்றியது.முதலாவது – கடவுள் ஏன் பெண்களுக்கு இந்த மஹா வலியைக் கொடுத்தார்?அம்மா – தெய்வமாகத் தென்பட்டாள், என் கண்களுக்கு. நானும் கொடுத்தேனே அந்த வலியை அவளுக்கு!!என் பெண்கள் – அவர்களும் இந்த வலியைப் படப் போகிறார்களே? பாவம்…
யாராவது கரு தரித்த பெண்களைப் பார்க்கும் போதெல்லாம் அந்த வலியே என் நினைவுக்கு வரும் இப்போதும். மறக்கவே முடியாத வலி அது ஜெயமோகன்.
இன்னும் ஒன்றும் எனக்கு தோன்றும் – இந்த ஆண்களுக்கு மட்டும் இந்த வலி தெரிந்திருந்தால் பலாத்காரமே செய்ய மாட்டார்கள் என்று?
உங்களின் ஒரு வாசகர் கேட்டிருந்தார் – சுய அனுபவங்களைக் கொண்டு வாசிப்பது சரியா என்று?
என் சுய அனுபவத்தினாலேயே இந்த கதையை நான் வாசித்தேன். உணர்ந்தேன்.
பெண்மையைப் போற்ற வேண்டும் ஜெயமோகன். நான் பெண் என்பதால் சொல்லவில்லை, நான் என் தாயின் மகளாகச் சொல்கிறேன்.ஆமாம், உங்களுக்கு எப்படி இந்த வலி புரிந்தது?? தெரிந்தது?? ஏதோ நீங்கள் பட்டாற் குபோல் எழுதி இருக்கிறீர்கள்??
அருமை.
கடந்த வாரமாக வரும் உங்கள் கதைகளில் கொஞ்சம் உக்ரமான உணர்சிகளை உணர்கிறேன்.
அன்புடன்
மாலா
அன்புள்ள ஜெ
அம்மையப்பம் வாசித்தபோது கதை எளிமையான ஒன்று என்ற எண்ணம் வந்தது. ஆனால் அதன்பின் இந்த நாட்களில் பல சந்தர்ப்பங்களில் அந்தக்கதையை நான் நினைத்துக்கொண்டே இருந்தேன். ஏணிகூட்ட ஆசாரி எதுக்கு என்ற வரி ஒரு பழமொழி போலவே மனதில் பதிந்துவிட்டது. எந்தெந்த இடத்திலோ அது கேட்டுக்கொண்டே இருக்கிறது
சரவணன் முருகானந்தம்