ஈழம் ஒரு கடிதம்

ஜெமோ,

உங்களுடைய பார்வையில் இருந்து நான் கடுமையாக மாறுபடுகிறேன். இலங்கையில் இராணுவமும், விடுதலைப் புலிகள் இருவருமே மிகக் கடுமையான போர்க் குற்றங்களை செய்துள்ளார்கள், ஆனால் இங்குள்ளவர்கள் விடுதலைப் புலிகளின் போர்க்குற்றங்களைப் பற்றி மூச்சுக் கூட விடுவதில்லை. “விடுதலைப் புலிகள் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஒரு இராணுவ இயக்கம்”, என்று ஒருமுறை சோபா சக்தி கூறினார், அதுவே சரியான மதிப்பீடு என்று நினைக்கிறேன். “முறிந்த பனை” படித்த போது இந்த பாசிச புலிகளின் முழுமையான வெறியை அறிந்து கொள்ள முடிந்தது. பல பாலச்சந்திரர்களைக் கொலைக்களத்திற்குத் தெரிந்தே அனுப்பி வைத்தவர்தான் புலிகளின் தலைவர். அப்பாவிகளைக் கேடயமாகப் பயன்படுத்தித் தாங்கள் தப்பிக்க நினைத்தவர்கள்தான் புலிகள். 1987லும், 2003லும் அரசியல் தீர்வுக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பை சுத்தமாக அழித்துக் கொண்டு தங்களையும் ஈழத் தமிழ்மக்களையும் ஒரு சேர அழித்துக் கொண்ட இந்தக் கூட்டத்திற்குத்தான் இந்தப் போராட்டங்கள், அப்பாவி இலங்கைத் தமிழர்களுக்காக அல்ல. இந்த மாணவர் உண்ணாவிரதப் போராட்டம் பாசிச புலி மற்றும் அவர்களின் தமிழக முகவர்களின் பிரச்சார வழிமுறைகளின் வழியே சென்று கடுமையான இந்திய எதிர்ப்பில் போய்த்தான் முடியும் ஏற்கெனவே அந்தவழியில்தான் போய்க்கொண்டு இருக்கிறது. இந்தப் போராட்டங்கள் இலங்கைத் தமிழர் நல்வாழ்வுக்காக அல்ல, புலி பினாமிகளின் வெளிநாட்டுப் பண முதலீடுகளைக் காப்பாற்றிக்கொள்ளத்தான், இலங்கை அரசை தண்டிக்கிறேன் பேர்வழி என்று தங்களுடைய பணப்பறிப்பு தொழிலை வெளிநாட்டுப் புலிகள் தொடர்வதற்குத்தான் இது வழிவகுக்கும். இதில் ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் பெரும்பாலான தமிழகத் தமிழர்கள் இந்த கேலிக்கூத்தில் பங்கெடுக்காமல் இருப்பதே.

அண்மையில் தஞ்சைப் பெரியகோவிலுக்கு வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த புத்த பிட்சுக்கள் தாக்கப்பட்டார்கள். அதைத் தமிழ் தேசிய இயக்கங்கள் ஆதரிக்க செய்தன, அவர்கள் அப்படித்தான், ஆனால் ஒரு அறிவுஜீவி அவர் எப்போதும் இப்படிப்பட்ட நிகழ்வுகளை எதிர்ப்பவர், தினமும் தொலைக்காட்சியில் அறப்போராட்டம் நடத்துபவர் . அவர் இந்த பிட்சுக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நியாயப்படுத்திப் பேசுகிறார். புத்த மதமும், இலங்கை அரசும், இலங்கை ராணுவமும் ஒரே முனையில் இணைந்துள்ளதால் இங்கு அந்த பிட்சுக்கள் தாக்கப்பட்டது நியாயமானதாம். மதமும் அரசியலும் எல்லா தேசங்களிலும் கைகோர்த்தே உள்ளது. இவர் இந்து பெளத்த மதங்களை சார்ந்தவர்கள் அரசியல் நிலைப்பாடு எடுத்தால் அதைக் கடுமையாகக் குறைகூறுபவர் அதேசமயம், சரி அதையேன் சொல்வது உங்களுக்கே புரியும். ஆனால் இந்த அரைகுறை – ஜீவிகளின் இந்த நிலைப்பாடுகளால்தான் அவர்களுடைய நிறத்தை உண்மையான நடுநிலையாளர்களுக்குக் காட்டிக்கொடுக்கிறர்கள் அதுவரை நல்லதுதான்.

நன்றி
சு செல்வபாரதி

இலங்கைத் தமிழரும் மாணவர்களும்

இந்தியாவில் தமிழ் தேசியத்தின் செல்திசை

முந்தைய கட்டுரைகாந்தி சில சொற்கள்
அடுத்த கட்டுரைதொழிற்சங்கத்தின் எதிர்மறைத்தன்மை