கிளி சொன்னகதை:கடிதங்கள்

அன்புள்ள ஜெ

ராமாயணக்கிளி கதையை நான் கேட்டதில்லை. ஆனால் இந்தக்கதை வாசிக்க நன்றாக இருக்கிறது. கிலி பழைய நினைவுகளில் சிரகடிச்சு பறக்க வைக்கிறது

ஜெ.சுப்ரமணியம்

அன்புள்ள சுப்ரமணியம்,

மழைக்காலமாகிய ஆடியில் கழுத்தில் கோடுபோட்ட பச்சைக்கிளி அதிகமாக கத்தும். அது இனப்பெருக்கக் காலம். அந்த கிளியை கேரளத்திலும் குமரிமாவட்டத்திலும்  ராமாயணக்கிளி என்று சொல்கிறார்கள். மலையாள சினிமாப்பாட்டில் நீங்கள் அதிகமாக கேட்டிருக்கலாம்.

கேரளத்தின் ஆதிகவியான துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சன் ராமாயனத்தை கிளிப்பாட்டாக எழுதியிருக்கிறார். கிளி ராமனின் கதையைச் சொல்வதுபோன்றது அக்காவியம். ஆனால் உண்மையில் பெண்கிளி சீதையின் கதையைத்தான் அதிகமாகச் சொல்கிரது.

இக்கிளிக்கு சாரிகை என்று சம்ஸ்கிருத பெயர். சாரிக பைதலே சொல்லுக என்று அத்யாத்ம ராமாயணம் தொடங்குகிறது

மழையில் நனைந்த கிளிக்குரல் ஒரு சோகமான நினைவு. அத்துடன் எப்போதும் ஆடியில் வாசிக்கப்படும் சீதையின் கதையும் இணைந்து கொள்கிறது
ஜெ

அன்புள்ள ஜெயமோகன்

அமெரிக்காவில் நலமாக இருக்கிறீர்கள் என நினைக்கிரேன். நெடுங்காலம் கழித்து உங்கள் தளத்தை வாசிக்கிறேன். கிளி சொன்ன கதைந் அன்றாக சென்றுகொன்டிருக்கிறது. இக்காலத்தில் இம்மாதிரி கதைகளை படிப்பது கொஞ்சம் கடினமாக ஆகிக்கொண்டிருக்கிறது. துயரமான கதை. பெரிய ஒரு வெறுமையை மனதில் உருவாக்குகிறது. நான்கு பாகங்களையும் இப்போதுதான் ஒரே மூட்ச்சில் வாசித்தேன்.

கதையின்ந் அடை என் மனசுக்கு மிக நெருக்கமாக இருந்தது. ஆனால் பொதுவாக இந்த நடையை எப்படி பிற பகுதியில் உள்ள வாசகர்கள் உள்வாங்கிக்கொள்ள முடியும் என்று புரியவில்லை. எனக்கு குமரிமாவட்டத்தின் மொழியுடனும் வாழ்க்கையுடனும் ஒரு நெருக்கம் உண்டு. நான் கல்லூரியில் படிக்கும்போது என் தோழன் ஒருவன் அங்கிருந்து வந்து படித்தான். மணலிக்கரை அருகே உள்ள பாலப்பள்ளம் என்ற ஊரில் இருந்து. அங்கே சென்று அவனுடன் தங்கியிருக்கிறேன்.    அவனும் நாயர்தான். இரு சகோதரர்களும் ஒரு சகோதரியும் அவனுக்கு உண்டு. அவன் அப்பா அரசாங்கத்தில் வேலைபார்த்தார்

அன்புடன்
வி. கணேஷ்

அன்புள்ள கணேஷ்,
நன்றி. அந்தக்கதையின் கலாச்சாரக் குறிப்புகள், மொழி ஆகியவை பொதுவாசகரக்ளுக்குக் கொஞ்சம் கஷ்டமானவையே. அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்தவை அல்ல அவை. ஆனால் அதற்கு இரண்டு சமாதானங்கள் உண்டு. ஒன்று இது இயல்புவாதம். இயல்புவாதம் என்பது தகவல்களையும் உணர்ச்சிகளையும் அப்படியே சொல்ல முயல்வது. இரண்டு, எது மிக பகுதிசர்ந்து உள்ளதோ அதுவே உலகுதழுவது என்ற இன்றைய பின் நவீனத்துவ யுக இலக்கிய கோட்பாடு. ஆகவே சிறிய நிலப்பரப்புக்குள்  நிகழும் இந்த கதைக்கு ஒரு உலகுதழுவிய தன்மை இருக்கிரது
ஜெ

அன்புள்ள  திரு ஜயமோஹநுக்கு,
இராமயணக் கிளி சொன்ன கதைக்கு அடிக்குறிப்பாக நாஞ்சில்நாட்டு வட்டார வழக்குச் சொற்கள் பற்றிய விளக்கங்களையும் அளித்தால், என் போன்ற , தமிழ்நாட்டின் பிற பகுதியிச் சேர்ந்தவர்களுக்கு  உங்கள் எழுத்தை  உள்வாங்கிக் கொள்ளவும் ,  உங்கள் நடையை  மேலும் இரசிக்கவும்  உதவியாய் இருக்கும்.
அன்புடன்
சங்கரநாராயணன்

சேலம்

அன்புள்ள சங்கரநாராயணன்

கொடுக்கலாம்தான். இப்போது பயணத்தில் நேரமில்லை. எதற்கும் அ.கா.பெருமாள் தொகுத்து தமிழினி வெளியிட்ட ‘நாஞ்சில்நாட்டு வட்டார வழக்கு அகராதி’  ஒரு பிரதி வாங்கிக்கொள்வது நல்லது இல்லையா?

ஜெ

வணக்கம் !!
உங்களது வலை தளத்தில் நீங்கள் எழுதிய  “கிளி சொன்ன கதை” படித்தேன். நான் வசிப்பவர்கள் உலகத்தில் ஒரு புது மாணவன்.
இதனாலவோ என்னமோ  தெரியவில்லை எனக்கு ஒன்றும் புரியவில்லை, ஈர்க்கவில்லை…..மிக கடினத்துடன் இரண்டு பாகத்தை முடித்தேன்.

ஆதலால் என் மனம் மிகுந்த வேதனை அடைந்தது….வெட்க பட்டது. ஒருவேளை உங்களின் எழுத்துகளை வாசிக்கும் அளவுக்கு நான் இன்னும் வளர்ச்சி பெறவில்லை என நினைக்கிறேன். இப்படி இருந்தால் நான் எப்போது உங்களின் விஷ்ணுபுரம்  படிப்பது. என்னை போன்றோர்க்கு உங்களின் அறிவுரை என்ன?  ஒருவேளை பேச்சு தமிழில் எழுதும் கதைகளை படிக்கும் அறிவு மட்டும்தான்  என்னிடம் உள்ளதா? என்னை வளர்த்துக்கொள்ள என்ன செய்யவேண்டும்? மேலும் மேலும் நான் நிறைய படிக்க்க வேண்டும் என நீங்கள் கூறினால்…என்ன என்ன புத்தகங்களை படிப்பது நல்லது என கூறினால் மிக உதவியாக இருக்கும்.

அன்புடன்
அசூரி

அன்புள்ள அசூரி

இதில் வெட்கத்துக்கோ வேதனைக்கோ எதுமில்லை. எழுத்துக்கும் நமக்குமான உறவுதான் பிரச்சினையே ஒழிய அறிவுத்திறன் அல்ல.

இலக்கிய எழுத்துக்கு பல அழகியல் வகைமாதிரிகள் உண்டு. பொதுவாக நாமெல்லாம் வாசிப்பது யதார்த்தவாதத்தைத் தான்[ரியலிசம்] என்ன நடந்ததோ அதை நடந்தது மாதிரியே சொல்வதே யதார்த்தவாதம். ஆனால் அதில் கதையை ஆர்வமூட்டும்படி சொல்லக்கூடிய, கதையின் மையத்தை உருவாக்கக் கூடிய, கதையை தொகுத்துத் த்ரக்கூடிய ஆசிரியன் இருந்துகொண்டே இருப்பான். நம்முடைய பொழுதுபோக்குக் கதைகள் பெரும்பாலும் யதார்த்தவாதம் சார்ந்தவை. ஆகவே இந்தவகை எழுத்தை நாம் சிரமம் இல்லாமல் புரிந்துகொள்கிறோம். இந்த இணையதளத்தில் உள்ள அனல்காற்று, ஊமைச்செந்நாய் ,மத்தகம் போன்ற கதைகள் யதார்த்தவாதக் கதைகள். தல்ச்தோய், அசோகமித்திரன் போன்றவர்கள் யதார்த்தவாத எழுத்தாளர்கள்.

யதார்த்தவாதத்தில் உள்ள ஆசிரியனின் பங்கேற்பை தவிர்த்துவிட்டால் அதுவே இயல்புவாதம். [நாச்சுரலிசம்] இதில் கதை ‘அதன்போக்கில்’ விடப்படுகிரது. புறவுலகம் ஒரு  புகைப்படக்கருவியில் தெரிவதுபோல பதிவாக்கப்படுகிறது. அக ஓட்டங்கள் அப்படியே சொல்லபப்டுகின்றன. எதுவும் விளக்கப்படுவதில்லை. மையப்படுத்தப்படுவதில்லை. சுருக்கப்படுவதில்லை. [ அதாவது இப்படி ஒரு பாவனை இந்தவகை எழுத்தில் உண்டு. உண்மையில் சுருக்காமல் மையப்படுத்தாமல் எதையுமே எழுதமுடியாது] இயல்புவாதம் ஆசிரியன் இல்லாமல் இயங்கும் புனைவுலகம் எனலாம்

இயல்புவாத எழுத்து பண்பாட்டு நுட்பங்களை மிகச்சிறப்பாக காட்டக்கூடியது. சிந்தனைகளை முன்வைப்பதற்கு உதவுவது அல்ல. இதற்கு ஒரு முக்கியமான இலக்கிய  இடம் உண்டு. தமிழில் எம்.கோபாலகிருஷ்னன்[ மணற்கேணி] கண்மணி குணசேகரன் [ அஞ்சலை] .வேணுகோபால் [ வெண்ணிலை- கதைகள்] போன்றவர்கள் இயல்புவாத எழுத்தின் சிறந்த உதாரனங்கள். பூமணி அதன் தமிழ் முன்னோடி எனலாம்.

இயல்புவாத எழுத்தை கதையோட்டத்தின் சுவாரசியத்துக்காக வாசிக்க முடியாது. அன்றாட வாழ்க்கையில் எப்படி நிகழ்ச்சிகள் செல்கின்றனவோ அதேபோல இயல்பாகத்தான் கதை ‘நகரும்’. நிகழ்ச்சிகள் உத்வேகமாக இருக்காது. அன்றாடவாழ்க்கையில் உள்ள வேகமே அதற்கு இருக்கும். ஆனால் அது அன்றாட வாழ்க்கையில் நாம் காணத்தவறும் சிறு சிறு நுட்பங்களை தொட்டுச்செல்லும். பூதக்கண்ணாடி வைத்து அன்றாட வாழ்க்கையை பார்ப்பது போல என்று வைத்துக்கொள்ளுங்கள். நுட்பங்களை மட்டுமே கவனித்து வாசிப்பவர்களுக்கு உரிய இலக்கிய அழகியல் இது

கிளி சொன்ன கதை அனந்தன் என்ர சிருவனின் பார்வை கொன்டது. சிறுவனின் பார்வைக்குக் கிடைக்கும் புறவுலகம் அந்த பார்வைக்கே உரிய நுட்பத்துடன் அப்படியே பதிவாகிறது. அவன் கேட்கும் குரல்கள் அவன் காணும் நிகழ்ச்சிகள். அவற்றில் பெரும்பகுதி அவனுக்கு புரிவதில்லை. அவற்றின் வழியாக அவன் சென்றுகொன்டிருக்கிறான். அவன் குடும்பத்தில் மிகச்சிக்கலான சில விஷயங்கள் நடக்கின்ரன. வாழ்க்கை சுழித்தோடுகிறது. அவன் அதை புரியாமல் நோக்கிக்கொன்டு ஒழுகிச்செல்கிறான். அவன் பார்வையில் படும் காட்சிகள், அவன் கேட்கும் விஷயங்கள், அவன் சாட்சியாகும் நிகழ்ச்சிகளில் உள்ள நுட்பங்களை மட்டுமே கவனித்து வாசித்தால் போதும். இதை ‘கதை’ ஆக வாசிக்க முயலவேன்டாம்

இலக்கியம் வாழ்க்கை சார்ந்தது. வாழ்க்கை நுட்பங்களே இலக்கிய நுட்பங்கள். அவை அறிவு சார்ந்த ரகசியங்கள் அல்ல. அவற்றுடன் நம் மனம் தொடர்புகொன்டாலே போதும் அவை புரியும். கொஞ்சம் பழக்கம் தேவை அவ்வளவுதான்

ஜெ

முந்தைய கட்டுரைவாக்களிக்கும் பூமி 4, அறிவியலரங்கம்
அடுத்த கட்டுரைபண்பாட்டின் பலமுகங்கள்