வாழைப்பழ தேசம்-கடிதங்கள்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம்.

உலகின் மிகப்பெரிய வாழைப்பழம்
வாசித்தேன்

இவ்வளவு தெளிவாக நமது நாட்டின் “கையாகாதால நிலையை” விளக்கும் கட்டுரையை இதுவரை யாரும் எழுதியதாகத் தெரியவில்லை.வரிக்கு வரி உண்மை நிலையை அன்று முதல் இன்றுவரை
(இத்தாலிய சம்பவம் உள்பட) எந்தவித மறைப்பும் இல்லாமல் எழுதியிருக்கிறீர்கள்.நீங்கள் முன்பொரு சமயம் அன்றாட அரசியல் நிகழ்ச்சிகளை நான் விமர்சிக்கப் போவதில்லை என்று தெரிவித்திருந்தீர்கள் .ஆனால் இதை தயவு செய்து மறு பரிசீலனை செய்து அவ்வப்போது இம்மாதிரி கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதவேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.ஏனெனில் இங்கு தற்சமயம் யாரும் விருப்பு ,வெறுப்பின்றி எந்தவித சமரசங்களுக்கும் இடம் கொடாமல் இது போல் அரசியல் கட்டுரைகளை எழுதுவதில்லை.மேலும் இது பரவலாக வாசகர்களுக்கு சென்றடைய முன்னணி பத்திரிகைகளிலோ அல்லது வார இதழ்களிலோ தாங்கள் தொடர்ச்சியாக எழுதவேண்டும் என்பதும் எனது தாழ்மையான கருத்து.

முதலில் கட்டுரையின் தலைப்பு மற்றும் பெரிய வாழைப்பழத்தின் படத்தைப் பார்த்தவுடன்,அது சம்பந்தமான கட்டுரை என நினைத்தேன்,படித்தவுடன் தான் புரிந்தது கட்டுரைக்கு ஏற்ற மிகவும் பொருத்தமான தலைப்பு.
இதைத்தான் தீர்க்கதரிசியான இந்தியாவின் தலைக் குடும்பத்தின் மருமகன் ராபர்ட் வதேரா
சில நாட்களுக்கு முன்பு “MANGO PEOPLE BANANA COUNTRY ” என்று திருவாய் மலர்ந்தருளினார்! .

நன்றி.

அன்புடன்,

அ.சேஷகிரி

அன்புள்ள சேஷகிரி,

அரசியல்கட்டுரைகளை எழுதுவது ஒருவகை நேரவிரயம். அத்துடன் பிரபல ஊடகங்களுக்குச் செல்வது இன்னும் விரயம். அதிகப்படியான செய்தி ஊடகங்களால் செய்தி என்பதே கேளிக்கையாக ஆகிவிட்டது. சூடுபறக்கும் ஒரு விளையாட்டுப்போட்டிபோல

செய்தி ‘ஆறியபின்’ அதன் சாராம்சத்தைப்பற்றி விவாதிக்கலாமென்பதே என்னுடைய எண்ணம்

ஜெ

ஒரு பன்மை தேசம் தனது வலு குறைந்த பொருளாதார தன்மையாலும் ,தனது பன்மை அடையாளத்தாலும் காந்தியவாதியாலேயே வாழைப்பழ தேசமாக அறியப்படுவது அதன் தலையெழுத்து.

தேசிய உணர்வும், தேசிய பெருமிதமும் என்பது ஒற்றைப்படை சிந்தனைகள். அதை மதம், இனம் , மொழி எனப் பிறப்பின் கற்பிதம் வழி எழுப்பி பிரித்தெடுக்கத்தான் ஒராயிரம் நபர்கள் உள்ளார்களே. இந்த தேசியமும் , பெருமிதமுமே இட்லரும் , முசோலினியும் வைத்தது. அதில் என்ன பெருமை?

இந்திய ஒரு பன்மைத் தன்மை உள்ள ஜனநாயக நாடு, இதில் உள்ள வேற்றுமையில் ஒற்றுமையே இதன் பெருமிதம். இந்தியாவை அதன் வேறுபாடுகளை கொண்டு பிரிக்க ஆரம்பித்தால் தெருத் தெருவாக பிரித்து தேசியங்கள் அமைக்க வேண்டிய அளவு வேறுபட்ட கலாச்சாரங்கள் கொண்ட ஒரு நிலம், இது சேர்ந்திருப்பதில்தான் தனது பலத்தை அடையாளம் காண்கின்றது என்று முன்பு சொல்லி இருந்தீர்கள் . இந்த வேறுபட்ட கலாச்சாரங்களுக்குள் காந்தியும் , புத்தனும் கொண்டு ஒரு உரையாடல் மொழி எழுப்ப வேண்டிய தருணத்தில் ஒற்றைப்படை தேசியம் கவர்ச்சியாக இருக்கும், பலன் தராது என்று நான் நம்புகின்றேன்.

அம்பேத்கர் நம்பினார், நேரு நம்பினார், காந்தியும், காமராஜும் நம்பினார். எனக்கும் நம்பிக்கை இருக்கின்றது.

அன்புடன்
நிர்மல்

அன்புள்ள நிர்மல்

ஒரு தேசத்தைப்பற்றி அதன் குடிமக்கள் பெருமிதம் கொள்வதற்கும் அந்த தேசம் வலிமையாக இருப்பதற்கும் அது ஒற்றைப்படைத்தேசியத்தாலானதாக இருந்தாகவேண்டும் என்பதில்லை.

ஒரு குடிமகன் தன்னுடைய தேசத்தின் பன்மைத்தன்மை பற்றிப் பெருமிதம் கொள்ளலாம். அந்த மரபைப் பேண எண்ணலாம். தன் தேசம் அதன் பன்மைத்தன்மையாலும் ஜனநாயகத்தாலுமே வலிமையானதாக இருக்கவேண்டுமென விரும்பலாம்.

பன்மைத்தன்மை என்பதும் ஜனநாயகம் என்பதும் பலவீனத்துக்கான சாக்குப்போக்காக இருக்கவேண்டுமென்பதில்லை. ஒரு தேசம் தேசமாக இருப்பதே அந்த மக்களை ஒன்றுபடுத்தி வலிமையான சமூகமாக ஆக்கி அவர்களின் பொருளியல்நலன்களையும் பண்பாட்டையும் காப்பதற்காகத்தான்

தேசப்பற்று தேசிய ஒருமைப்பாடு என்றெல்லாம் நான் சொல்வது இந்த தேசம் ஒற்றைப்பண்பாடுள்ள இறுகிய தேசமாக இருக்கவேண்டுமென்ற பொருளில் அல்ல. நேர்மாறான பொருளில்.

ஜெ

முந்தைய கட்டுரைநாவல்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகுடியைக் கட்டுப்படுத்துதல்