வயக்காட்டு இசக்கி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,

வணக்கம் . நேற்று அ கா பெருமாள் எழுதிய வயக்காட்டு இசக்கி படிதேன் . அவர் ஒரு researcher ஆகத்தான் தாணுமாலையன் ஆலயம் புத்தகம் எனக்குக் காட்டியது . ஆனால் அவரும் ஒரு அற்புதமான கதை சொல்லி என்று இந்த வயக்காட்டு இசக்கி எனக்குக் காட்டியது .

ராப்பாடிகளைப் பற்றியான கதையையும் , அவர்களின் வாழ்க்கையையும் ஒரு கதை போலவே சொல்லிச் செல்கிறார் .

ஓநாயின் மலத்தைத் தேய்த்துக் குறி சொல்லவருவதால்தான் அவர்களின் அருகில் நாய் வருவதில்லை மற்றும் ராப்பாடிகளை உழவுத்தொழிலை வாழ்த்தி வெகுமதி பெறும் பாடகர்கள் போன்ற தகவல்களையும் தனக்கே உரித்த முறையில் கல்வெட்டுகளின் சான்றுடன் சொல்லிச் செல்கிறார் .

ராப்பாடியின் பாட்டில் இருந்து பல நெல்வகைகளைப் பட்டியல் இடுகிறார் . அப்படியே நெல்வயல்களைத் தாக்கும் நோய்களைப் பற்றியும் அதைத் தடுப்பதற்கான முறைகளையும் சொல்லுகிறார்.

இசக்கியின் கதையைச் சொல்லி முடிக்கும்போது அவள் கணவன் மேடான அவள் வயிற்றைத் தடவி தடவி அழுதான் என்று அவர் சொல்லிச் செல்லும் இடம் ஒரு உச்சகட்ட இலக்கியமாக எனக்குப் பட்டது . ( அந்த அளவுக்கு எனக்கு ரசனைக் குறைவோ ? (: (: ). எப்போதும் சிறுகதையோ அல்லது நாவலோ படித்து முடித்தபின் அதில் வரும் காட்சிகள் நம் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். இதுவும் படித்ததில் இருந்து ஓடிக்கொண்டே இருக்கிறது . இரவெல்லாம் அவன் அவள் வயிற்றைத் தடவிய காட்சியே கனவாக ஓடியது .

முடிக்கும்போது இப்படியாக வயல்வெளியைக் காப்பாற்ற உயிரை விட்டவர்கள் தெய்வம் ஆனர்கள். அபூர்வமான நெல்வகைகளைப் பயிரிட்டுப் பரிமாறிக் கொண்டவர்கள் மட்டும் மனிதராய்ச் செத்துப் போனார்கள் என்று முடித்து ஒரு research முடிந்த உடன் researchers எல்லாம் ஒரு conclusion கொடுப்பார்கள் என்ற நியதியையும் காப்பாற்றி விட்டார் .

ஜெ இதைப் படித்தபோது என் தாத்தா என்னை அவர் மடியில் உட்காரவைத்துக் கதை சொல்லிய காலம் மனதில் தேர் ஓடுவதுபோல் ஓடியது . அவரும் தகவல்களைச் சொல்லும்போது இடையில் கதையைப் போட்டு அவர் சொன்னது கதையா என்று நினைப்பேன் . என் தாத்தாவிடம் பேசியது போலவே இருந்தது இதைப் படித்து முடித்தபின் . உங்களின் அறம் சிறுகதைகளைப் போலவே எனக்கு இந்த வயக்காட்டு இசக்கியும் இதயத்துக்கு நெருக்கமானவை.

அன்புடன்

பன்னீர் செல்வம்

அன்புள்ள பன்னீர்

இந்தக் கதைகளை நான் 2000 வாக்கில் தட்டச்சு செய்து விக்கிக்காகக் கொடுத்தேன். இணையத்தில் உள்ளன என நினைக்கிறேன்

ஜெ

அ கா பெருமாள் விக்கி மூலம்

அ கா பெருமாள்

முந்தைய கட்டுரைவிவாதமுறை பற்றி மீண்டும்
அடுத்த கட்டுரைபம்பி