வணக்கம் ஜெ.மோ,
நான்(24) IAS தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கும் மாணவன் . கடந்தே இரு வருடங்களாகத் தங்களது இணையத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பவன். வாழ்வின் பொருள் அறிய ஆன்மீகத் தேடலில் அங்கும் இங்கும் அலைந்து பின் மீண்டும் என் IAS தேர்வுக்குத் தயார் செய்து கொண்டிருக்கிறேன். நம் சமூகம் தொடர்ந்து செல்ல சில நாயகர்கள் ( காந்தி , போஸ் , விவேகானந்தர் , பிரபாகரன் , அன்னை தெரசா ,கலாம் , பில் கேட்ஸ்… போன்றோர்) அனைத்துத் துறைகளிலும் வேண்டும் என்பது என் கருத்து . அவர்களது உண்மைகளை ஆராயும் போது சிலரது சில நல்ல பிம்பங்கள் உடையத்தான் செய்கின்றன . ஆனால் அவை அனைத்தையும் பொது வெளியில் வைத்துத்தான் ஆக வேண்டுமா. இவ்வாறு அனைவரது பிம்பங்களும் உடைக்கப்படுமானால் பின் சராசரி மனிதர்களுக்கும், இளம் தலை முறைகளுக்கும் ஒரு ‘முன் மாதிரியாக ‘ யாரைத்தான் முன்னிறுத்த முடியும் .
இது உங்கள் “வரலாற்றின் வண்டலில்…” கட்டுரை படித்ததினால் எழுந்த கேள்வி. சில விடயங்களை, அவை உண்மையாய் இருப்பினும் அதைப் பொது வெளியில் உலக நன்மை கருதி மறைப்பது நல்லது(ஜனநாயகத்தை மீறாமல்) என்பது என் எண்ணம். என்னுள் உடைக்கப்பட்டது ‘போசி’னுடைய பிம்பம் அல்ல இந்திய தேசிய ராணுவத்தினுடையது . இச்சமூகத்தை நேசிப்பவராகவும், ஆழ்ந்த அனுபவமும் மிக்க உங்களது கருத்துக்காகக் காத்துக்கொண்டிருக்றேன் .
புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜெ.மோ,
-பெ .ர .சந்தோஷ் கிருஷ்ணன் .
அன்புள்ள சந்தோஷ்,
நீங்கள் சொல்வதற்கு இந்தியாவில் ஒரு மரபு உள்ளது. சென்றகாலத்தில் உள்ள நல்லவற்றை மட்டும் நினைவில் நிறுத்திக்கொள்வது, வாழ்ந்த மனிதர்களைக் கடவுள்களாக ஆக்கிக்கொண்டு அவர்களின் குறைகளைத் தாண்டிச்செல்வது. அதை நம் பெற்றோர் நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். இயல்பாகவே அது சரி என நாம் நினைக்கிறோம்.
இன்னொரு மரபு உள்ளது. அதை ஐரோப்பாவில் உருவானது எனலாம். அது சென்றகாலங்களை, மறைந்த ஆளுமைகளை எல்லாப் பக்கங்களையும் கணக்கில்கொண்டு கறாராக மதிப்பிட்டு ஆராய்வது. உண்மையை மட்டுமே நினைவில் நிறுத்திக்கொள்வது.
நம்முடைய மதிப்பீட்டை நாம் நிலப்பிரபுத்துவ காலத்துக்குரியது எனலாம். ஐரோப்பிய மதிப்பீட்டை நவீன காலகட்டத்திற்குரியது எனலாம். மூதாதை வழிபாடும் வீரவழிபாடும் வேரூன்றிய காலகட்டத்திற்குரியது நம்முடைய வழி. நவீன ஜனநாயகமும் அறிவியலும் வளர்ந்த காலகட்டத்திற்குரியது ஐரோப்பாவின் வழி. நான் ஐரோப்பாவின் வழியே இன்று பொருத்தமானது என நினைக்கிறேன்.
நம்முடைய மரபான பார்வை இன்று நடைமுறைச் சாத்தியம்கூட அல்ல என்பதைக் காணலாம். காரணம் நம்மைச்சுற்றி ஜனநாயகம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இங்கே எல்லா கருத்துக்களும் தாராளமாக முன்வைக்கப்படுகின்றன.
ஜனநாயகம் என்பது கருத்துக்களின் அதிகாரம். ஆகவே ஒவ்வொரு கருத்தும் இன்னொன்றை மறுக்கிறது. உடைக்க முயல்கிறது. அந்நிலையில் ஒரு கருத்தின் உருவமாக உள்ள மனிதரை விமர்சிப்பது தவிர்க்கமுடியாததாகிறது. அதிலிருந்து எவரையும் பாதுகாக்க முடிவதில்லை.
பிம்பங்களை உடைக்கவேண்டாம் என்று சொல்பவர்களைக் கவனியுங்கள். அவர்கள் தங்களுக்குச் சாதகமான பிம்பங்கள் உடைபடும்போது மட்டுமே அதைச் சொல்வார்கள். ஆனால் தங்களுக்கு எதிரான பிம்பங்களை உடைக்கும்போது அதை உண்மைக்கான தேடல் என்றுதான் அவர்களும் சொல்வார்கள்
ஓர் உதாரணம் சொல்கிறேன். 1992 வாக்கில் நான் தினமணியில் ஒருகட்டுரை எழுதினேன். அதில் அரசியல் தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அவர்களின் சிந்தனையைப் புரிந்துகொள்வதில் எந்த அளவுக்குப் பங்காற்றுகிறது என எழுதியிருந்தேன். அதில் கார்ல்மார்க்ஸுக்கும் அவரால் பாலுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கைவிடப்பட்ட பணிப்பெண்ணான ஹெலென் டெமுத்துக்குமான உறவைப்பற்றிச் சொல்லியிருந்தேன்.
அந்தக் கட்டுரை இங்குள்ள இடதுசாரிகளைக் கொந்தளிக்கச் செய்தது. ஏனென்றால் இங்கே அதுவரை கார்ல் மார்க்ஸ் பற்றி முன்வைக்கப்பட்ட சித்திரமே வேறு. மார்க்ஸுக்கும் ஜென்னிக்குமான தெய்வீகக்காதலைப்பற்றிய காவியங்கள் மட்டுமே இங்கே பாடப்பட்டிருந்தன. ஹெலென் டெமுத்தின் பெயரை எவரும் உச்சரித்ததே இல்லை.என்னுடைய கட்டுரையை அவதூறு என எவராலும் மறுக்கமுடியாது, ஏனென்றால் அந்தத் தகவல்கள் உலகளாவ ஒப்புக்கொள்ளப்பட்டவை.
இடதுசாரிகள் இருவகையில் எதிர்வினையாற்றினர். மார்க்ஸின் சிந்தனைகளை மட்டுமே பார்க்கவேண்டும், அவரது படுக்கையறைக்குள் தலையைவிடுவது அநாகரீகம் என்று ஒருசாரார் சொன்னார்கள். மார்க்ஸ் செய்தது ஐரோப்பிய சூழலில் இயல்பான ஒன்றே என ஒருசிலர் எழுதினார்கள்.
நான் அவற்றுக்கு இவ்வாறு பதில் சொன்னேன். மார்க்ஸின் சிந்தனைகளை அவரது செயல்களில் இருந்து பிரித்துப்பார்க்க முடியுமா? பாட்டாளிகளின் சிந்தனையாளர் ஒரு பாட்டாளியைப் பாலியல்ரீதியாக்ச் சுரண்டியது அச்சிந்தனைகளைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான தகவல் இல்லையா என்ன?
ஒருவேளை அப்படிப்பிரித்துப்பார்க்க மார்க்ஸியர் தயாராக இருந்தாலும் பிறரும் அப்படிச்செய்யவேண்டுமென சொல்ல அவர்களுக்கு ஏது உரிமை? மேலும் மார்க்ஸின் செய்கை ஐரோப்பியச்சூழலில் சாதாரணமான ஒன்று என்றால் அதை ஏன் இங்குள்ள மார்க்ஸியர் ஒளித்துவைத்தார்கள்?
அதைவிட நான் கேட்ட முக்கியமான கேள்வி ஒன்றுண்டு. இந்த நியாயங்கள் மார்க்ஸியர்களின் எதிரிகளுக்கும் பொருந்துமா? காந்தியை அரைநூற்றாண்டாக மார்க்ஸியர் தனிப்பட்ட முறையில் மட்டுமே விமர்சித்துவருகிறார்கள். அவரது பாலியல்சோதனைகளை மேடைகள் தோறும் திரித்தும் வளைத்தும் பேசியிருக்கிறார்கள். அவருக்கும் அவரது பிள்ளைகளுக்குமான உறவைப்பற்றி வெறும் பொய்களை எழுதி பேசிப்பரப்பியிருக்கிறார்கள்.
அப்போதெல்லாம் அது தனிப்பட்ட தாக்குதல் அல்லவா என்று கேட்கப்பட்டபோது காந்தி மீதான நம்பிக்கையை உடைக்க அது தேவைதான் என இவர்கள்தான் வாதிட்டார்கள். அதாவது உண்மையான பிம்பங்களைக்கூட அவர்கள் உடைப்பார்கள். அவர்களின் போலிப்பிம்பங்களை எவராவது தொட்டால்கூடக் கொதிப்பார்கள்
திராவிட அரசியல்வாதிகள் இதில் இன்னும் ஒரு படிமேல். அவர்கள் மேடைகள் தோறும் காந்தியையும் நேருவையும் தனிப்பட்டமுறையில் விமர்சித்ததற்கு அளவே இல்லை. ஆனால் அவர்களின் புனிதபிம்பங்களான ஈவேரா அண்ணாத்துரை பற்றி உண்மையான தகவல்களை, அவர்களின் நெருக்கமான தோழர்களான பாரதிதாசன், கண்ணதாசன் போன்றோர் எழுதியவற்றைச் சொல்லிப்பாருங்கள், கொந்தளிப்பார்கள்.
ஈவேரா வைக்கம்போராட்டத்தில் மிகச்சிறிய ஒரு பங்கையே வகித்தார் என்பது அப்பட்டமான வரலாறு. முழுக்கமுழுக்க தகவல்ரீதியானது. அவர்தான் அதை தொடங்கி நடத்தினார் என்ற பொய்யை எழுபது வருடங்களாகச் சொல்லி நிலைநாட்டிவிட்டனர்.அந்த உண்மையை சொன்னமைக்காக என்னை வசைபாடி ஐம்பது கட்டுரைகளாவது எழுதப்பட்டிருக்கின்றன.
எப்போதுமே இதை நீங்கள் கவனிக்கலாம். காந்தியை எந்த எல்லைவரைக்கும் சென்று வசைபாடுபவர்கள்தான் பகத்சிங்கையோ சேகுவேராவையோ சுபாஷ் சந்திர போஸையோ பற்றிய உண்மைத்தகவல்களைச் சொன்னால் பிம்பங்களை உடைப்பதன் அபாயம் பற்றிப் பேச ஆரம்பிப்பார்கள்.
ஆக பிம்ப உடைப்பு இங்கே நிகழ்கிறது. அப்படியென்றால் எல்லா பிம்பங்களையும் உடைத்துப்பார்ப்போம். எது சாரமுள்ளதோ அது நீடிக்கட்டும். அதுதானே முறை?
உங்கள் வினாவுக்கு நேர்நிலைப் பதில் என்றால் இப்படிச் சொல்வேன். வரலாறு என்பது வெறுமே தெரிந்து வைத்திருக்கும் தகவல் மட்டுமல்ல. அது இன்றைய நடைமுறைக்கான பாடங்கள் கொண்டது. ஆகவே அது உண்மைகளின் அடிப்படையில் அமைந்திருக்கவேண்டும். பொய்களின் அடிப்படையில் அமைந்திருந்தால் பொய்யான பாடங்களை அளிக்கும். அந்தப் பாடங்கள் வழியாகச்செல்லும்போது அழிவே எஞ்சும்
சுபாஷ் சந்திரபோஸின் வரலாற்றையே எடுத்துக்கொள்வோம். சுபாஷ் பிரம்மாண்டமான ஒரு ராணுவத்தை அமைத்து பிரிட்டிஷ் ராணுவத்திடம் போரிட்டு இந்தியாவை மீட்க முயன்றார், கிட்டத்தட்ட வெற்றிபெற்றார் என்ற பொய்க்கதை திரும்பத்திரும்பச் சொல்லப்படும்போது அது வன்முறையின் வழியை நியாயப்படுத்துவதாக ஆகிறது. வன்முறை மூலம் எளிதில் சுதந்திரம் பெற்றிருக்கலாம், காந்திதான் அகிம்சைப்போராட்டம் மூலம் அதைத் தாமதப்படுத்தினார் என விளக்கப்படுகிறது.
இந்த பிம்பம் இன்றைய அரசியலில் வன்முறையின் பாதையை வலியுறுத்துபவர்களால் திரும்பத்திரும்ப முன்வைக்கப்படுகிறது. இந்தப் போலிவரலாறு அளிக்கும் பாடம் வன்முறைமூலம் அரசியல் மாற்றமும் சமூக மாற்றமும் உருவாகும் என்று கற்பிக்கிறது. அதன் விளைவாக இளைஞர்கள் வன்முறையை நம்பி ஏற்கும் வாய்ப்புகள் உள்ளன. வன்முறை அரசியலின் எல்லா அழிவுகளுக்கும் பாதை திறக்கிறது.
உண்மையில் சுபாஷ் சந்திரபோஸ் ஜெர்மனிக்கும் ஜப்பானுக்கும் அன்றைய சூழலில் தேவையான வெறும் பொம்மையாகத்தான் இருந்தார். அவர் திரட்டிய ராணுவம் என்பது சரணடைந்த பிரிட்டிஷ் படைவீரர்களால் ஆனது. அவ்வீரர்கள் போர்க்கைதிகளாக இருப்பதைவிட ராணுவசேவை அதிக வசதிகளை அளிக்கும் என்பதற்காகவே அதில் சேர்ந்தார்கள்.
சுபாஷின் படை பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தை எதிர்கொண்ட இரண்டே இரண்டு போர்முனைகளில் அவர்கள் சரணடையவே முயன்றார்கள். அதன்பின் ஜப்பான் அப்படையை எடுபிடிப்படையாக மட்டுமே பயன்படுத்திக்கொண்டது. இந்தியாவை வென்றபின் இங்கே அவர்களுக்கு ஒரு பொம்மை ஆட்சியாளர் தேவைப்படுமென்பதனால்தான் ஜப்பானியர் சுபாஷை முன்னிறுத்தினர்
சுபாஷ் ஜப்பானியரால் அவமதிக்கப்பட்டார். கண்ணெதிரே ஏழை இந்தியர்கள் சயாம் மரணப்பாதையில் லட்சக்கணக்கில் கொல்லப்படுவதை எதிர்த்து ஒரு சொல் பேச அவரால் முடியவில்லை. அவரது சகாவான மோகன்தாஸ் அந்தமான் சிறையில் ஜப்பானியரால் வதைக்கப்படும்போது அஅவர் ஒன்றும் செய்யமுடியவில்லை. இதெல்லாம் உண்மையான வரலாறு
இந்த உண்மையான வரலாறு அளிக்கும் பாடங்கள் என்ன? வன்முறையின்பாதை என்பது தற்காலிகமானது. அது ஏற்கனவே வலிமையுடன் இருப்பவர்களுக்கானது. வலிமை இல்லாதவர்களின் வன்முறைவழி என்பது கடைசியில் வலிமையுடைய எதிரிக்கு எதிரியாகிய இன்னொரு வலிமையுடையவனின் அடிமையாகச்சென்று சேர்வதில்தான் முடியும்.
இந்தியா போன்ற ஒரு தேசம் ஏராளமான உள்முரண்பாடுகள் கொண்டது. வன்முறைப்பாதை முன்னெடுக்கப்பட்டால் அந்த முரண்பாடுகள் சகோதரச்சண்டைகளாகவே மாறும். அதுவும் சுபாஷின் வரலாறு அளிக்கும் பாடம்.
ஒருவேளை சுபாஷ் வென்றிருந்தால் நமக்கு ஜப்பானின் பொம்மையரசு ஒன்றுதான் கிடைத்திருக்கும் . அது அன்றைய பிரிட்டிஷ் அரசைவிட பலமடங்கு கொடூரமானதாக இருந்திருக்கும். ஜப்பானியர் சயாம் மரண ரயிலில் தமிழர்களைக் கொன்றழித்ததே சிறந்த ஆதாரம்.சுபாஷ் தன் உணர்ச்சிகரமான முட்டாள்தனத்தால் இந்தியாவை ஒரு மாபெரும் அபாயத்தின் விளிம்புக்குக் கொண்டுசென்றார். அது இன்னொரு பாடம்.
இந்த உண்மையான வரலாறு அளிக்கும் சரியான பாடங்கள்தான் நாம் இன்றைய சூழலை எதிர்கொள்ள உதவும். என்ன காரணத்தால் காந்தி அகிம்சையையும் ஜனநாயகப் போராட்டத்தையும் முன்வைத்தார் என்று புரிந்துகொள்ளமுடியும்.
சுபாஷின் பொய்யான பிம்பம் ஏன் உடைக்கப்படவேண்டும்? நேரடியான உதாரணமே உள்ளது. சுபாஷ் என்ற பொய்யான பிம்பத்தில் இருந்து ஊக்கம் கொண்டு அவரை முன்னுதாரணமாக எண்ணித்தான் இலங்கையில் ஆயுதப்போராட்டம் பிரபாகரனால் ஆரம்பிக்கப்பட்டது. அது உருவாக்கிய எல்லா அழிவுகளுக்கும் காரணமாக சுபாஷின் போலிப்பிம்பத்தைச் சொல்லலாம்
இத்தகைய பொய்பிம்பங்கள் கண்ணிவெடிகளைப்போல நம் சிந்தனைக்குள் புதைந்துகிடக்கின்றன. ஆரம்பத்திலேயே அவற்றைக் கண்டெடுத்துக் களையவேண்டியது அவசியம்
ஜெ