திரு. ஜெயமோகன் சார் அவர்களுக்கு
சற்றே நீண்ட கடிதம் தான். ஆனால் நான் இதை உங்களிடம் கூறியே ஆக வேண்டும் என்ற ஆவலில் எழுதுகிறேன்.
கோவையில் நடைபெற்ற விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவுக்கு வந்த உங்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும் என்று நினைக்கவில்லை. சந்திக்க முடியுமா என்று நண்பர் முரளியிடம் கேட்டபோது சனிக்கிழமை (22-12-12) பார்க்கலாம் என்றார். ஆனால் திடீரென்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணிக்கு வந்து, இப்போது போனால் சந்திக்கலாம். உரையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
உங்களுடனான முதல் சந்திப்பு அப்படி ஓர் இரவில் அமையும் என்று நினைக்கவில்லை. கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள அந்த பங்களாவில் நீங்கள் உரையாடிக் கொண்டிருந்தபோது நாங்கள் வந்தோம். நாளிதழ் ஒன்றில் பணியாற்றுகிறேன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
ஒரு எழுத்தாளர் அதுவும் புகழ் மிக்கவர் என்ற தோரணையையும், அப்படியா தம்பீ…நல்லது… என்ற பதிலையும் எதிர்பார்த்து நான் வரவில்லை என்றபோதிலும் மனதின் ஓரத்தில் அது நின்று பார்த்துக் கொண்டேயிருந்தது.
எழுத்தும் எழுத்தாளனும் வேறானவை. எழுத்தை ரசிக்கும் நாம் எழுத்தாளனிடமும் அதே போன்ற உரையாடலையும் பார்வைக் கோணங்களையும் எதிர்பார்த்து ஏமாந்து போவதால் எழுத்தாளரைத் தொலைவில் நின்று அவர் படைப்பினூடே அவரிடம் அந்தரங்கமாக உரையாடிக் கொள்வதே சிறந்தது என்று நான் எண்ணியிருந்தேன்.
“சார் நான் ரகுநாதன்… பத்திரிகையில் உதவியாசிரியராகப் பணி புரிகிறேன்.”
“இவரு உங்களின் தீவிர ரசிகர் சார்” -முரளி
“சார்….தீவிர வாசகர் என்று சொல்லுங்கள்” என்றேன். நீங்கள் உள்பட எல்லோரும் சிரித்தனர். இறுக்கமான மனநிலையை சற்றே தளர்த்திய வாசகனின் உரையாடல் அது.
நேரமே தினமும் துரத்தும் எதிரியாகத் திகழும் அலுவலகம் என்பதால் பணிச்சுமை ஒருபுறம், மன உளைச்சலை ஏற்படுத்தும் சில்லறை அரசியல் செய்வோர் மறுபுறம் என தினமும் மனப் பிறழ்வு நிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்த போதெல்லாம் ஆற்றுப்படுத்த நூல்கள் உதவியிருக்கின்றன.
ஆனால் டிசம்பர் 21 ஆம் தேதி இரவு இரண்டரை மணி நேரங்கள் பேருவகை அளித்தவை என்றே கூறுவேன்.
நாங்கள் வந்த போது 12 ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய கோதிக் கலாசாரம் பற்றியும் கோதிக் இலக்கிய வகைகள் பற்றியும் கூறிக் கொண்டிருந்தீர்கள். அழிவு, பயங்கரம், ஆபாசம் இவை மூன்று கூறுகளே கோதிக் கலாசாரத்தின் அடிநாதம். பின்னர் ஐரோப்பாவில் கிறித்துவம் எவ்வாறு இயங்கியது (இது சரியாக நினைவில்லை) எனக் கூறினீர்கள்.
அதே நேரம் இந்திய மரபில் நாட்டார் தெய்வங்கள் பெருந்தெய்வ வழிபாட்டில் எவ்வாறு உள்ளிழுக்கப்படுகிறது என்று கூறியபோது, கிருஷ்ணன் அவர்கள் பவானி குருவரெட்டியூர் அருகே மாதேஸ்வரன் மலையிலுள்ள ஒரு கோவில் எவ்வாறு தொல் சமூக வழிபாட்டு முறையிலிருந்து வைணவ வழிபாட்டு முறைக்கும் சடங்குகளுக்கும் மாறியுள்ளது என்று விவரித்தார். ஆனால் அது இயற்கையே என்றும் ஒரு சமூகம் தன்னளவில் முன்னேறும்போது முதலில் முக்கியத்துவம் கொடுப்பது தனது கோயிலுக்கும் அது சார்ந்த பணிகளுக்குமே என்பதையும் அதனால் அடுத்த கட்ட வழிபாட்டு முறைக்கு அச் சமூகத்தினர் செல்வது இயல்பே என்றும் விளக்கியபோது 1998ல் கல்லூரியில் படித்தபோது அந்த மலைக் கோவிலுக்கு நண்பர்களுடன் நடந்து சென்று வந்தது நினைவுக்கு வந்தது.
ஒரு மனிதன் தன்னளவில் முன்னேற்றம் அடையும்போது கருத்தியல் ரீதியாகவும் ஆன்ம ரீதியாகவும் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வதாலேயே பெருந்தெய்வ வழிபாட்டுக்குச் செல்வதும் பின்னர் தத்துவம் நோக்கி நகர்வதும் நிகழ்கிறது என்பதை functional god, almighty god, philosophical god என்ற நிலைகளாகக் கூறி ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு ஏதோவொரு போதாமையால் மனித மனம் இயல்பாகவே முன்னகர்வதன் வெளிப்பாடே சிறு தெய்வத்திலிருந்து பெருந்தெய்வ வழிபாடும், அதிலிருந்து தியானம், யோகம் போன்றவற்றின் மூலம் ஆன்மிக குருக்களைத் தேடிச் செல்வதும் நிகழ்வதாகக் கூறினீர்கள்.
இந்த இடத்தில் ஒரு நிலையிலிருந்து மற்றொன்றுக்குச் செல்வது போல் தத்துவத்திலிருந்து மீண்டும் பின்னோக்கி வந்து உருவ வழிபாட்டை சில யோகா குருக்கள் செய்வது ஏன் என்று கேட்டேன்.
உண்மையில் இதற்கு நீங்கள் கொடுத்த விளக்கம் முழுமையும் என் கண்களை நோக்கியே இருந்ததை மற்றவர்கள் அறிந்தார்களா எனத் தெரியவில்லை. இந்த இடத்தில் பெரிய எழுத்தாளர் × எளிய வாசகன் என்றில்லாமல் கேள்விக்கான விளக்கத்தை மிக கவனத்துடன் அளித்தது அது வரை இருந்த சரியல்லாத, உயர்வல்லாத பிம்பத்தை உடைத்து ஏற்கெனவே தங்கள் மீதிருந்த மதிப்பை மேலும் பலபடி உயரச் செய்தது என்றே சொல்வேன்.
அடிப்படையில் மனித மனம், இல்லாத ஒன்றைக் கற்பனை செய்ய முடியாமல் தவிக்கும்போது ஏதாவது ஒரு பிம்பம் அதற்குத் தேவையென்றும், அவ்வாறு தத்துவ விளக்கம் அறிந்து கொண்ட பின்பு உருவத்தை வழிபட்டாலும் அந்த விளக்கத்தையே உணர்ந்து வழிபடுகிறோம். அந்த வகையில் யோகா குருக்கள் செய்யும் பணி தத்துவத்தை நோக்கிய பயணத்தில் ஒரு சிறு கூறுதான், அது தேவையானதுதான் என்று விளக்கினீர்கள். philosophical god க்கு அடுத்த நிலை என்ன என்றபோது தூய ஞானம் தான் அது தன்னையறிதல் மூலமே நிகழ்கிறது என்று பதில் அளித்தீர்கள்.
இந்தியப் பண்பாடு என்பது இதைப் போல பல்வேறு கூறுகளைக் கொண்டது. இத்தனை இனக் குழுக்களை ஒருங்கிணைத்து வழிப்படுத்தும் ஆற்றலானது, இங்குள்ள அனைத்து வழிபாட்டு முறை, தத்துவம், உரையாடல் போன்றவற்றை உள்ளிழுத்து செரித்து ஒரு சமரசப் புள்ளியில் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னகர்வதிலேயே உள்ளது என்றும் உலகில் வேறெங்கும் இது போலக் காண முடியாது என்பதையும் சீனாவி்ல் 9 இனக் குழுக்கள் மட்டுமே இருந்தபோதும் அங்கே ஓயாத போரும் ரத்தம் சிந்துதலும் நடந்து கொண்டேயிருந்தன என்றும், ஆப்பிரிக்காவில் பல்வேறு இனக் குழுக்கள் இருந்தபோதும் அங்கே இந்தியா போன்று சமரசமும் விவாதங்களும் உள்ளிழுத்துக் கொள்ளுதலும் நடைபெற முடியவில்லை என்றும் விளக்கினீர்கள்.
பிறகு சூஃபிஸம், சித்தர் மரபு, ஊர்த்துவ தாண்டவம், தமிழில் அறிவு ஜீவிகள், சாகித்ய அகாதெமி என்று பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதித்த பின்பும் நான் வெறும் கோப்பையாகவே அமர்ந்திருந்தேன். இரவு மணி 2 ஆனபோதும் அங்கிருந்து எழுந்து வர மனம் இல்லை என்றாலும் உரையாடல் அத்துடன் முடிவடைந்தது.
பின்னர் எனக்குள் இருந்த எளிய ரசிகனின் உற்சாகத்தால் உங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது மறக்க முடியாதது.
உண்மையி்ல் அந்த இரண்டரை மணி நேரம் ஒரு சத்சங்கம் போலவே உணர்ந்தேன். அப்போது வரை என் மனதிலிருந்த ஒரு சில முக்கியமான மன உளைச்சல்களுக்கான தீர்வை நோக்கி மனம் சட்டென்று திறந்து கொண்டது. உண்மையில் அது ஒரு விழிப்பு என்றே சொல்வேன். அது உங்களை சந்தித்ததால் வந்தது என்பதில் ஐயமில்லை.
ஒரு எளிய வாசகன் தன்னை சந்திக்கும்போது கண்களில் தெரியும் just like that பாவனை உங்களிடம் காண முடியவில்லை. ஒரு வகையில் பெரியோரை வியத்தலும் இலமே…சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே என்பது போலவே உங்கள் பார்வை இருந்தது. அப்படித்தான் அந்தச் சந்திப்பில் தங்களை உணர்ந்து கொண்டேன்.
வெளியே வரும்போது முரளியிடம் கூறினேன். இந்த நாளை மறக்க முடியாது. ஒரு மகத்தான மனிதரைக் கண்ட பேருவகை மனதுக்கு இனிமையாக இருக்கிறது. அதற்கு வழிகோலிய உங்களுக்கு நன்றி என்றேன். இருவரும் சிரித்தோம். பின்னர் வீடு வரை உரையாடலை அசைபோட்ட படியே வந்தோம்.
அதற்கு பின் இந்திய ஞானம்- தேடல்கள், புரிதல்கள் நூல் வழியே ரைஸ் டேவிட்ஸின் பௌத்த ஞான விளக்கவுரையின் அடிச்சுவடு வரை வந்து நிற்கிறேன். இது தொடரும்…இந்தப் பயணத்தை இட்டுச் சென்றது உங்கள் உரையாடலே. ஒரு இரண்டரை மணி நேர உரையாடல் இவ்வளவு நிகழ்த்துமா என்று இந்தக் கணம் வரை வியந்து கொண்டே இருக்கிறேன்.
அன்புடன்
ரகுநாதன்
கோவை
அன்புள்ள ரகு
உரையாடல் என்பது ஒரேசமயம் நம்மையும் நம்முடன் உரையாடுபவரையும் கண்டுபிடிக்கும் விளையாட்டு. ரேமண்ட் கார்வரின் கதீட்ரல் கதையில் விழியிழந்தவரும் நண்பரும் சேர்ந்து கதீட்ரல் ஒன்றை வரைவார்கள். இருவரும் ஒரு கதீட்ரலைக் கண்டடைவார்கள். உரையாடல் படைப்பியக்கம் அளவுக்கே உற்சாகமானதாக அமைவதற்கான காரணம் என்பது உரையாடப்படுபவர்கள் மாறிக்கொண்டிருக்கிறார்கள், அவர்களின் இயல்புக்கேற்ப நம் உரையாடலும் மாறுகிறது என்பதுதான். நான் வெறும் சினிமா பற்றி அன்றாட அரசியல் பற்றி மட்டும் பேசி முடித்த நண்பர்சந்திப்புகளும் பல உண்டு. அதை முன்னிலைதான் முடிவுசெய்கிறது.
உரையாடலின் முக்கியமான இரு விஷயங்களை நான் தமிழின் இருபெரும் ஆளுமைகளிடமிருந்து புரிந்துகொண்டேன். சுந்தர ராமசாமி மிகக் கவனமாக உரையாடுவார். அவரது பிம்பத்தைப்பற்றிய சிரத்தை இருந்துகொண்டே இருக்கும். அவரது கடிதங்களில்கூட அவரது வழக்கமான நடை இருப்பதைக் காணலாம். உரையாடலை சிறப்பாக அமைப்பதற்கான முயற்சி அவர் தரப்பில் இருக்கும். சுவாரசியமான விஷயங்கள் ஆழமான விஷயங்களுடன் சரிவரக்கலந்திருக்கும்
மாறானவர் ஜெயகாந்தன். அவர் தன்னைப்பற்றிய எந்த பிம்பத்தையும் உருவாக்குவதில்லை. மனதில் தோன்றியதைத் தோன்றியவாறே பேசுவார். சிலசமயம் வசை. சிலசமயம் நக்கல். அபூர்வமாகக் கெட்டவார்த்தைகள். உரையாடல் சிறப்பாக அமையும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. உரையாடல் நிகழுமென்பதற்கே உறுதி இல்லை. மீசையை முறுக்கியபடி மணிக்கணக்கில் சும்மா அமர்ந்திருக்கவும் கூடும். ஆனால் உரையாடலின் புரவியில் அவர் ஏறிவிட்டால் அது பாய்ச்சல்தான்
இரு வகை உரையாடல்களிலும் நுட்பமும் ஆழமும் உண்டு என்றாலும் ஏனோ எனக்கு ஜெயகாந்தனின் முன்மாதிரியே உவப்பாக இருக்கிறது. உரையாடல் வழியாக நான் நிகழ்வது மட்டுமே முக்கியம், அதன் மூலம் என்னைப்பற்றி என்ன சித்திரம் உருவாகிறது என கவனிக்கக்கூடாது என்று முடிவெடுத்தபோது நான் ஜெயகாந்தனைச் சந்தித்திருக்கவில்லை. சுந்தர ராமசாமியுடனான என்னுடைய வேறுபாட்டில் இருந்து நான் அடைந்த சுயதரிசனம் அது.
ஆம், அந்த இரவு அழகானதுதான். நண்பர் ஷிமோகா ரவியின் இல்லம் அது
ஜெ