வெண்கடல், நீரும் நெருப்பும்- கடிதங்கள்

அன்புள்ள சார்,

நலமா?

நீண்ட இடைவெளிக்குப் பின் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்.

எனது பணியில் சிறு மாற்றம். வேறு ஒரு ‘டெஸ்க்’ கில் வேலை செய்கிறேன்.
புதிய இடத்தில் இணையத்  தொடர்பு கிடைப்பது அபூர்வம்.

கிடைத்த கொஞ்சநஞ்ச நேரத்தில் உங்கள் கட்டுரைகளை மட்டும் படிக்கிறேன்.
உங்களுடன்.. தொடர்பு இந்த அளவில் அறுபட்டதற்கே வருத்தமாக, ஏக்கமாக இருக்கிறது.

கட்டுரைகளை மட்டும்தான் படிக்கிறேன் என்று சொன்னேன் இல்லையா! ஆனால், ‘நீரும் நெருப்பும்’ அப்படிப் படிக்காமல் போகமுடியவில்லை. கதையின் முதல் வாக்கியத்திலேய இருந்த ‘பாபு’ என்ற வார்த்தை பார்த்ததுமே உள்ளே நுழைந்து விட்டேன். படித்து முடித்தேன்.

முக்கியமா.. அந்த சிறுபிள்ளைகளுக்கான உணவைப் பார்த்ததுமே குழந்தையைப் போல்
பாபுவின் முகம் மலரும் காட்சி… என் மனக்கண் முன்னால் தத்ரூபமாகக் காணமுடிந்தது. அந்தக் கன்னங்களின் சுருக்கங்கள், தெறித்து நிற்கும் பற்கள், கண்களில்.. குறும்பு, அதே குழந்தைத்தனம்! அவர் அப்படியேதான் சிரித்திருப்பார்.
காந்தி ஒரு குழந்தையுடன் இருக்கும் காட்சி சில நாட்களுக்கு முன் பார்த்ததுண்டு.
கைக்குழந்தையும், காந்தியும் சிரித்து கொண்டு இருப்பார்கள்!
இருவரில் யார் குழந்தை என்றே சந்தேகப்படும் அளவிற்கு!
உங்கள் எழுத்தைப்படிக்கும்போது அந்த காட்சியும் நினைவிற்கு வந்தது.

அனால் அந்தக் காட்சிக்குப்பிறகு வந்த உங்கள் வாக்கியங்கள் சற்று ஏற்றுக்கொள்ளும் படி இல்லை.

அதில்… காந்தியின் உதவியாளர் நினைப்பது போல் எழுதி இருப்பீர்கள்..”அவருக்குள் ஒரு குழந்தை இருக்கிறது. அது இன்னும் விளையாடவும் தின்பண்டங்கள் சாப்பிடவும் இலக்கில்லாமல் அலையவும் ஆசைப்படுகிறது. பாபுவின் ஓயாத போராட்டம் அவருள் இருக்கும் அந்தக்குழந்தையுடன்தான்..”

அதெப்படி… தன்னுள் இருக்கும் குழந்தையை(ஒரு வகையில் பெண்மையையும்) தக்க வைத்து கொள்வதுதனே மகான்களின் குணம்! அதற்கு எதிராக அவர் ஏன் போராடணும்? அந்தக் குழந்தைத் தன்மையை இழந்தால் பாபு எல்லாரையும் போல் ஆகிவிடுவார் இல்லையா?

கதையின் மூலக் கருவை விட்டு…. தேவையில்லாத விஷயங்களைப் பார்க்கிறேனோ? என்று யோசித்தேன்.
உண்மையில் கதையின் ஆதாரமான விஷயத்தை முதல் வாசிப்பில் என்னால் தொட முடியவில்லைதான். இரண்டாவது வாசிப்பில்தான் புரிந்தது.

இருந்தாலும் இந்தக் குழந்தைதன்மை பற்றிய கேள்விதான் என்னுள் ஓடிக்கொண்டே இருக்கிறது.

நன்றி,
ராஜு

அன்புள்ள ராஜூ

கதையை விளக்க விரும்பவில்லை. குழந்தை பற்றிய நமது பிம்பங்களைக் கொஞ்சம் பரிசீலனைசெய்யவேண்டும் என்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். குழந்தை ஆணவமற்றது. ஆகவே அதை ஒரு தூய ஆன்மா என்கிறோம். அதேசமயம் அது அழுத்தமான தன்னுணர்வு அல்லது சுயநலம் கொண்டதும் கூட. வாழ்வதற்கான உக்கிரமான இச்சைதான் குழந்தை. கூடவே அது அடிப்படை மிருக இயல்புகளின் தொகையும்கூட. ஏனென்றால் அது ஒரு தூயமிருகம்.

ஜெ

அன்புள்ள ஜெ

அறம் வரிசை போன்று இப்பொழுது தாங்கள் படைக்கும் சிறுகதைகளும் மிகுந்த மனவெழுச்சியையும் உணர்ச்சிப் பெருக்கையும் உண்டாக்குகின்றன. வெண்கடல் – நல்ல கதையாகப் போய்க் கொண்டிருந்த கதையை ‘எனக்க பாலுகுடிச்ச சீவனாக்கும் அதெல்லாம்…’ என்ற வரி வேறு ஒரு தளத்துக்குஎடுத்துச் சென்று மிகச் சிறந்த கதையாக ஆக்குகிறது. சட்டென்று எதோ ஒரு திரை விலகியது போல் தாய்மை, கடைக்கண்,தாய்ப்பால் என்று பலவிதமான படிமங்கள் புலப்பட்டன

அன்புடன்
டாக்டர். ராமானுஜம்
சென்னை

அன்புள்ள ராமானுஜம்

உண்மைதான். இந்தக்கதைவரிசையில் வெண்கடல் அறம் கதைகளின் உலகுக்குள் உள்ளது

ஜெ

முந்தைய கட்டுரைமகாபாரதப்போர்முறைகள்
அடுத்த கட்டுரைமையநில இலக்கியமும் குடியேற்றநில இலக்கியமும்