கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார்,

தங்களுக்கே உரித்தான நகைச்சுவையுடன் கூடிய இந்தக் கட்டுரையை ரசித்துப் படித்தேன். கல்லூரி நாட்களில் இந்த அரண்மனைக்குச் சென்றிருக்கிறேன். மனதில் ஒருவகை இனம் புரியாத உணர்வுகளை உருவாக்கியது அதன் தோற்றமும் அதன் அலங்காரப் பொருட்களும். உடன் வந்த நண்பர் ஒருவர் ஒரு கோழி இறகைத் தலையில் சொருகிக்கொண்டு, ‘நான்தான் திருவிதாங்கூர் மகாராஜா’ என்று வலம் வந்தது இன்றும் நினவில் நிற்கிறது (இன்று அவர் ஒரு பெரிய தனியார் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார்). முதல் மாடியில் இருக்கும் கருங்கல்லால் ஆன கழிவறையும் மற்றுமோர் ஆச்சரியம் (இரண்டுக்கும் தனித்தனி பாதைகள்!!!)

மரம் நடுதல், குளம் வெட்டுதல் தவிர்த்து, மன்னர்களின் வாழ்க்கை முறை குறித்து ஏதேனும் நூல்கள் உள்ளனவா?

அன்புடன்
இளம்பரிதி

அன்புள்ள இளம்பரிதி

உண்மையில்சென்ற சிலவருடங்களில் தமிழில் பல துறைகளிலும் முக்கியமான நூல்கள் பல வெளிவந்துள்ளன. ஆனால் மன்னர்கள், அரண்மனைகள் பற்றி ஆய்வுநோக்குடன் எழுதப்பட்ட நூல்கள் இல்லை என்றே தோன்றுகிறது

ஜெ

அன்புள்ள ஜெ.,

கற்பழிப்பு என்பது பெண்கள் பொதுவெளிக்கு வருவது பிடிக்காத ஆணாதிக்க மனோபாவம் என்ற தொனியில் தங்கள் கட்டுரை இருக்கிறது. சுனிதா வில்லியம்ஸ் கூட ‘ஆணும் பெண்ணும் சமமாக நடத்தப்பட்டால் கற்பழிப்பு நடக்காது’ என்ற வகையில் கருத்து கூறி இருக்கிறார்.

‘பெண்கள் அரைகுறை ஆடை அணிவதுதான் இதற்குக் காரணம்’ எனும் கூற்றுக்கு எதிர்க்கூற்று போலத்தான் இது தொனிக்கிறது.

கற்ற்பழிப்பு என்பது அடிப்படையில் பாலியல் இச்சையை மையமாகக் கொண்டது (பழி வாங்கும் நோக்கில் நடக்கும் சில சம்பவங்கள் தவிர). பேருந்தில் உரசுவது, பெண்களைக் ‘கமெண்ட்’ அடிப்பதில் ஆரம்பித்து கற்பழிப்பு வரை மிகப் பெரும்பாலும் அது ஆணின் பாலியல் வக்கிரமே முதல் காரணம். இந்த வக்கிரம் பிடித்த ஆண்கள் பாலியல் சுகத்துக்காகப் பெண்களின் காலில் விழுந்து சேவை செய்யவும் தயாராகத்தான் இருப்பார்கள். பின் எங்கிருந்து வந்தது ஆணாதிக்கம்…

இதைக் குறைப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது – துருப்பிடித்துக் கிடக்கும் நம் நீதி அமைப்பு முறையாக செயல்படுத்தப்பட வேண்டும். தெளிவான சாட்சியங்கள் இருந்தால் கூட பலப் பல வருடங்கள் வழக்கு இழுப்பதும், குற்றவாளிகள் விடுவிக்கப்படுவதும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் (வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இதற்காக சில முயற்சிகள் தொடங்கப்பட்டன; வழக்கம் போல் நம் வழக்கறிஞர்கள் கூட்டம் சேர்ந்து அதை நாசமாக்கிவிட்டது)…

‘நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது’ என்ற வறட்டுத்தனமான சித்தாந்தத்தைத் தூக்கி எறிய வேண்டும். நூறு குற்றவாளிகள் தப்பித்தால், அங்கே ஆயிரம் அப்பாவிகள் பாதிக்கப்படுவார்கள் என்பது நம் புத்தியில் உறைக்கவேண்டும்.

சட்டத்தை மாற்றுவது எளிது; நீதி அமைப்பை சீராக்குவது கடினம். நம் அரசியல்வாதிகளுக்கு இந்த சூத்திரம் தெரியும். அதனால்தான் சட்டத்தை மாற்றுகிறேன் பேர்வழி என்று கிளம்பி இருக்கிறார்கள்.

நன்றி
ரத்தன்

அன்புள்ள ரத்தன்

பாலியல் வன்முறை என்பது ஓர் அடிப்படை மானுட இயல்பின் வெளிப்பாடு. கொலைபோல, திருட்டுபோல. அதை இல்லாமலாக்க முடியாது. ஆனால் இன்று அதன்மீது சமூகம் ஏற்றிக்கொண்டிருக்கும் ஆணாதிக்கப்பசப்புகளை களைந்து அதைக் குற்றமாக மட்டுமே காணலாம் என்பதே என் எண்ணம்

ஜெ

முந்தைய கட்டுரைசுந்தர ராமசாமி, அசோகமித்திரன்
அடுத்த கட்டுரைஅம்மையப்பம் கடிதம்