குழந்தைகளும் நாமும்

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம். நீங்கள் நலமா?. பத்து பன்னிரண்டு மாதங்களாக உங்களிடம் கேட்க நினைத்த ஒரு கேள்வி. இப்போது சற்றே கை மீறிச் சென்ற பின் கேட்கிறேன். நீங்கள் இதற்கு முன்பே பதில் சொல்லி இருக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. அதை ஒரு கடிதத்தில் உங்களின் ஒரு நண்பரும் குறிப்பிட்டிருந்தார். என்னால்தான் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி இருப்பின் அதன் சுட்டியை மட்டும் அனுப்பினால் போதுமானது அல்லது அதை உறுதி மட்டும் செய்யுங்கள், இன்னும் முயன்று கண்டுபிடித்துவிடுகிறேன்.

பெரும்பாலான இந்துக் குடும்பங்களில் பிறந்து வளரும் குழந்தைகளுக்கு இந்துமதம் ஒரு பக்தி மதமாக, அதிலும், நெக்குருகும் பக்தி என்பதை விட, வேண்டுதல்-நன்றி சொல்லுதல்கள், கோவில் செல்லுதல், பலியிடுதல் நிறைந்த ஒரு மதமாகத்தான் அறிமுகமாகின்றது (முதலில், என் இந்த அவதானிப்பு சரியா என்று தெரியவில்லை). அவளது 50 வயதுவரை ஆண்டவனிடம் ஏதும் வேண்டாத, அல்லது பிறருக்கு மட்டும் வேண்டிவந்த, கண்ணன் பாடல் கேட்டாலே அழுகின்ற என் அம்மாவைத் தவிர, எனக்கும் இது விதி விலக்கல்ல. சிறுவயது முதலே எனக்கு ஒரு தேடல் இருந்தது (என்று இப்பொழுது நம்புகிறேன்). ஆனால் அந்தத் தேடல் என்னை எங்கும் அழைத்துச் செல்லவில்லை. அல்லது நான் அதைக் கொண்டு எதையும் தேடவில்லை. கோவிலுக்கு அம்மாவுடன் செல்லும் போது எனக்குக் கொஞ்சம் தயக்கம் இருந்தாலும் எப்பொழுதும் மறுத்ததில்லை. ஆனால், கோவிலுக்கு உள்ளே சென்ற மறு நிமிடம் என் தர்க்க புத்தி தலை தூக்கிவிடும். உருகி வழிபட நேர்ந்ததே இல்லை. ஏன், வழிபட்டதே இல்லை. முடிந்ததே இல்லை. துரதிஷ்டவசமாக இதைத்தாண்டி நான் செல்லவில்லை.

இந்த அவஸ்தை தராத மூன்று கோவில்கள், எங்கள் பக்கத்துக் காட்டில் இருந்த, “பாட்டப்பன் கோவிலும்”, தஞ்சைப் பெரிய கோவிலும், மதுரா கிருஷ்ணன் கோவிலும்தான். தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியது நான் என்றோ, அதில் கல் சுமந்தது நான் என்றோ என்னக்கு ஒரு நினைப்பு உண்டு. அக்கா இல்லாத எனக்கு, +2 முடிக்கும் போது கிடைத்த ஒரு உறவு அக்கவின்மேலான பாசத்தாலும், பொன்னியின்செல்வன் நாவலை 15-வது தடவையாகப் படித்த romanticism-த்தினாலும் இருக்கலாம். நானும், என் தோழியும், நண்பர்களும் கல்லூரி நாட்களில், கோவையிலிருந்து இரவு கிளம்பி, தஞ்சை சென்று, பிரகாரத்தில், வெளிப்பூங்காவில் படுத்துத் தூங்கிவிட்டு பின் இரவு மீண்டும் கோவை திரும்பி விடுவோம். அதில் பாதி முறை, கோவிலுக்குள் சென்றதில்லை. சிற்பங்களைக் கூட ஆழ்ந்து பார்த்ததில்லை. ஒத்த அதிர்வுகள் உள்ள 3 நண்பர்களுடன் சுற்றுலா சென்று பார்த்து, வியந்து வந்த கஜுராகோ கோவில்களையும் சேர்த்துக் கொள்ளலாம் (மூர்த்தியைத் திருடவந்த்ததாக ஒரு நாயும், ஆளும் எங்களைக் காட்டுக்குள் துரத்தியது கூடக் காரணமாய் இருக்கலாம்). பாட்டப்பன் கோவில் நாங்கள் ஆடுமேய்பவர்களுடன் விளையாடும் இடம்.

பொதுவாக, வழிபாட்டுக்காக செல்லாத இடங்களில் எனக்கு இந்தத் தர்க்கம் வருவதில்லை.

ஆனால் நான் ஒரு கலாச்சார இந்துவும் இல்லை. காசியின் படிக்கட்டுகளில், கங்கையின் கரைகளில், கொடுமுடி நதிக்கரையில், ஒரு பழைய கோட்டை இடிபாடுகளில் என் மனம் நெகிழ்ந்துவிடுகிறது. ஒரு கண்ணன் பாட்டு, அம்மன் பாட்டு கண்களில் நீர் வழிய வைக்கின்றது. அதிகம் இதைப் பற்றிப் பேசிக்கொள்ளாவிட்டாலும் என் தோழிக்கும் இதே நிலைதான். நாங்கள் கடந்த 6 வருடங்களாகக் காசி தவிர எந்தக் கோவிலுக்கும் சென்றதில்லை. அதிலும், காசி கோவிலில் அதே தர்க்கம் தான். காசியின் படிக்கட்டுக்களும், சாரனாத்தும்தான் எங்களுக்குஆனந்தம் தந்த இடங்கள்.

இந்த நீண்ட பீடிகைக்குப் பிறகு என் முதன்மையான கேள்விக்கு வருகிறேன். எங்களுக்கு 3.5 வயதில் ஒரு மகன். அவனுக்கு இந்து மதத்தை எப்படி அறிமுகப்படுத்தினால் நல்லது? வெளிநாட்டில் வசிப்பதால் இதுவரை, வழக்கமான அறிமுகம் எதுவும்கொடுக்காமல் தடுப்பது எளிதாக இருந்தது. ஆனாலும் பண்டிகைகள் (தீபாவளி, கார்த்திகை தீபம் முதல் கிறிஸ்துமஸ் வரை) பட்டாசுகள் இல்லாமல் கொண்டாடிக் கொண்டிருக்கிரோம். சென்ற வாரம் ISKON கோவிலுக்கு இலவச உணவின் மீது ஆசைப்பட்டுப் போகும் வரை அவனுக்கு சாமிகும்பிடத் தெரியாது. வீட்டில் சாமியைப் பற்றிப் பேசியதுகூட இல்லை. இப்பொழுது நாளுக்கு 100 முறை கிருஷ்ணா பெயரை சொல்கிறான். தானே செய்துகொண்ட பேப்பர் மைக்கின் முன் அமர்ந்து பாடுகிறான். சென்ற வருடம் ஹரித்துவார் சென்றபோது கங்கையில் முங்கி முங்கிக் குளிக்க அவன் காட்டிய ஆர்வத்தையும்,இமை கொட்டாமல் கொசுக்கடியில் படகில் உட்கார்ந்து கங்கா-ஆர்த்தி பார்த்ததையும் பார்த்தால், இன்னும் சற்று பொறுப்புடன் அவனுக்கு இந்து மதத்தை அறிமுகம் செய்யவேண்டியது எங்கள் கடமை என்று நினைக்கிறோம். கடந்த இரு வருடங்களாக, அவனை ஒரு “compassion’ உள்ள ஆளாக வளர்க்க செய்த முயற்சி வீண் போனதாகத் தெரியவில்லை.

மீண்டும் ஒருமுறை என் கேள்வி. நம் குழந்தைகளுக்கு எப்படி இந்துமதத்தை அறிமுகப்படுத்தினால் அது சரியாக இருக்கும்?அவர்களுக்கு இந்த அவஸ்தையைத் தவிர்த்துவிடும் நோக்கத்தில் கேட்கவில்லை. ஆனால், அப்படி ஒரு தேடல் வரும்போது அதைப் பின்தொடர அவர்களுக்கு ஒரு தளம் அமைத்துக்கொடுக்க முடியுமா என்பதே அது….உங்களின் இந்துமதம் பற்றிய நூல்களை இன்னும் வாசிக்கவில்லை. ஆனால், உங்கள் கட்டுரைகளை உன்னிப்பாக வாசித்துவருகிறேன்.

என்றும் அன்புடன்,
கெளதம்

*

அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம். நாங்கள் அனைவரும் நலம். அங்கு அனைவரும் நலம் தானே.

கேள்விகள் உண்மையானால், தேடல்கள் தீவிரமானாதாக இருந்தால் பதில்கள் தானாக முன்வரும் எங்கோ என்று படித்த ஞாபகம். உங்களுக்கு இந்தக் கடிதம் எழுதிய அடுத்த நாள் கொற்றவை படிக்க ஆரம்பித்தேன். என் கேள்விக்கான பதிலை அங்கிருந்து எடுத்துகொள்ள முடியும் என்று தோன்றுகிறது.

மேலும் இன்று தூக்கம் வராமல் நடுஇரவில் உங்கள் தளத்தைத் துளாவியபோது இதை(http://www.jeyamohan.in/?p=637) கண்டுபிடித்தேன். கிட்டத்தட்ட இதே கேள்வியை நான் சில வாரங்கள் முன்பு உங்களிடம் கேட்டிருந்தேன்.

உங்களின் கருத்துக்கள் கிட்டத்தட்ட நான் எண்ணியபடியே இருந்ததது. குழந்தைகளின் மேல் நம் நம்பிக்கைகளைத் திணிக்கத் தேவையில்லை. வேண்டுமென்றால் தேடல்களைத் திணிக்கலாம். யோசிக்கும்பொழுது அதுவும் தேவை இல்லை. தேடல் அவர்களுக்காய் வரும்போது அதைப் பற்றி செல்லும் தைரியம் மட்டும் தந்தால் போதுமானது. தேடல் வராத மனிதன் இருக்க முடியுமா என்ன? அது பிரபஞ்சத்தின் அடிப்படை விதி இல்லையா?

நானும் என் மகனும்(மித்ரன்), அம்மாவும் ஒவ்வொரு வாரமும் அருகிலுள்ள ஒரு ISKON கோவிலுக்கு செல்கிறோம். ஞாயிற்றுக் கிழமைகளில் மிகுந்த கூட்டம் வரும். அதுவே ஒரு சந்தோசம் கொடுப்பதுதான். கீதை சார்ந்த ஒரு சொற்பொழிவின் முடிவில், 15 முதல் 20 நிமிடம் வரை பாட்டும் ஆட்டமும் தான். மித்ரனுக்கு நடனம் ரொம்பப் பிடித்த ஒன்று. முழுநேரமும் ஆடிக்கொண்டிருப்பான். வீட்டில் கூட தினம் ஒரு அரைமணி நேரம் எல்லாரையும் ஆட வைத்துவிடுவான். இந்துமதத்தைப் பற்றிய, இந்தக் கொண்டாட்டம் சார்ந்த அறிமுகம் ஒரு நல்ல தொடக்கம் என்றுதான் நம்புகிறேன். குறைந்த பட்சம், “சாமி கண்ணை நோன்டிடும் “னு சொல்லித் தொடங்குவதை விட மேல்தானே? அங்கு கால்வாசிப் பெண்களும் ஆண்களும் குதித்தும் ஆடியும், ஓடியும் நடனமாடுகிறார்கள். அந்தப் பெண்களுக்கு அது தரும் சந்தோசம், அமைதி கண்கூடாகத் தெரியும். எல்லோரும் மன இறுக்கம் தளர்ந்து ஆடினால் இன்னும் நன்றாக இருக்கும்.

கடந்த 6 வருடங்களாக எந்த மதம் சார்ந்த விழாக்களை நானும் மாலதியும் கொண்டாடவில்லை. அதில் ஏதும் எதிர்ப்பு இல்லை. ஆனால் பங்கு கொள்ளும் ஆர்வமும் இல்லை. ஆனால், எங்கள் மகன் பிறந்த அடுத்த வருடம், நம் மரபை, அதன் கொண்டாட்டங்களை, தன் சந்தோசங்களை அவனுக்கு மறுக்க எந்த உரிமையும் எங்களுக்கு இல்லை என்பதை உணர்ந்துகொண்டோம். அது மட்டுமல்ல, உள்ளூர, பண்டிகைகளின் உண்மையான கொண்டாட்டத்திற்கு எங்கள் மனம் ஏங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. மாலதி தன் பதின் பருவத்துப் பொங்கல் விழாக்கள் பற்றிப் பேசாத வாரம் இல்லை.

கோவிலில் நடப்பது சார்ந்த அவன் கேள்விகளுக்கு முடிந்த அளவு உண்மையான பதில் தர முயல்கிறோம். நம்பிக்கை சார்ந்த பதில்கள் எதுவும் தருவதில்லை. எடுத்துக்காட்டாக, தீபாவளி பற்றிய கேள்விக்குக் கூட, அது ஒரு பழங்குடி வழக்கம் எனவும், நோய் அன்டாமலிருக்க, மழைக்காலத்தில் பூச்சிகள் வராமலிருக்க என்று. நரகாசுரன் வதம் பற்றிப் பேசுவதில்லை. இது எதுவும் புரியாத வயசுதான். இருந்தாலும், எங்களுக்கு ஒரு பழக்கமாகட்டும் என நினைக்கிறோம். புரியவும் செய்யலாம். ஆனால் அது போன்று தெரிந்து அவன் ஏதும் கேட்கும் போது மழுப்பாமல் இருக்கவும் முயல்கிறோம். கோவில் உண்டியில் காசு போட ஒற்றைக்காலில் நின்ற போது அவன் அம்மா, அதற்கு பதில் தெருவில் இசைக்கும் கலைஞ்சர்களுக்குப் போட வைத்துக் கொண்டிருக்கிறாள். ( கோவில் உண்டியலில் காசு போடுவதைத் தப்பென்று சொல்லவில்லை. ஆனால் இந்தக் கோவில், நிறைய பணம் உள்ளவர்கள், மற்ற பணம் உள்ளவர்களுக்கு ‘அன்னதானம்’ செய்யக் காசு கேட்குமிடம். )

உங்களுக்குக் கடிதம் எழுதி சில நாட்களிலேயே கொற்றவை படிக்கத் தொடங்கினேன். முதல் முறை சில வருடங்களுக்கு முன் ஆரம்பித்த போது முதல் சில பக்கங்களில் படிக்க முடியாமல் வைத்துவிட்டேன். இந்த முறை, அதே சில பக்கங்களில், ஒரு மகத்தான காவியத்தைப் படிக்கத் தொடங்கி இருப்பதை உணரமுடிந்தது. இல்லை, இந்தக் கடிதம் அதைப் பற்றியதல்ல. அதில் கோவலன் வரத் தொடங்கும் வரை இருக்கும் பகுதிகள் என் மகனுக்கு இந்து மதத்தை அறிமுகப்படுத்த ஒரு வழிமுறையைக் காட்டும் என நம்புகிறேன். அதை சிறு கதைகளாக, குழந்தைக் கதை போல மாற்றி (அல்லது கெடுத்து) அவனிடம் சொல்லிக்கொண்டுள்ளேன்.

உங்கள் (http://www.jeyamohan.in/?p=637) க்கான பதிலில், இந்து சூழலில் குழந்தைகளுக்கு நம்பிக்கை சார்ந்த மத அறிமுகம் யாரும் செய்வதில்லை என்று சொல்லி இருந்தீர்கள். அது ஓரளவுதான் சரியோ என்று தோன்றுகிறது. சில இடங்களில் வளரும் இஸ்லாம் குழந்தைகள் மேல் திணிக்கப்படும் தீவிர நம்பிக்கைப் பிரச்சாரம் அளவு இல்லாவிட்டாலும், இந்து மதமும், நம்பிக்கை வழியாகத்தான் அறிமுகமாகின்றதல்லவா? யாரும் பிரச்சாரம் செய்வதில்லை. ஆனால் பெற்றோர்களின் அன்றாட செயல்பாடுகள், இந்து மதத்தை ஒரு நம்பிக்கையாகத்தானே குழந்தைகளுக்கு அறிமுகம் செய்கிறது.

இன்னும் சொல்லப்போனால் ஒரு பயமாக? என் பதின் பருவத்தில் எந்த சாமியையவது கும்பிடாமல் விட்டுவிட்டால் (63 நாயன்மார்களில் ஒருவராய் இருந்தாலும்) வீடு வரும் வரை அந்த சாமிக்குக் கோவம் வந்திடுமோன்னு பயமாய் இருக்கும். அதற்காக, வலக்கை ஐந்து விரல்களையும் மொட்டு போல் குவித்து வாயில் கடித்துக் கொள்வோம்.

ஆனால் நீங்கள் சொல்வது சரியென்றும் தோன்றுகிறது. என் தந்தையோ, நண்பர்களின் பெற்றோரோ சாமி பத்தி, சாமி கும்பிடுதல் பற்றிப் பேசியதில்லை. சாமிக்கு ஒரு வாழைத்தார் கொண்டுபோய்க் கொடுத்துட்டு வா என்றோ, இளநி வெட்டிக் கொடு என்றோதான் சொல்லி இருக்கிறார்கள். இடம் வலமாக சுத்து என்றோ, கீழே படுத்து வணங்கு என்றோ யாரும் சொன்னதில்லை (குறைந்தபட்சம், மாத இதழ்களில் ஸ்வாமிகளின் ஆன்மீகக் குறிப்புகள் வரும் வரை). முச்சந்தியில் கோவில். கீழே படுத்தால் ரோட்டுப் புழுதி முழுதும் அந்தக் கருத்த தேகத்தில்தான். அவர்களை அப்படிப் பார்த்தால் எருமைகள் மிரண்டுவிடும். ஆகவே, அவர்கள் எதையும் போதிக்கவில்லை. அவர்கள் வழக்கத்தைப் பார்த்து மட்டுமே வளர்ந்தோம். பிறகு அந்த சடங்குகளுக்கு ஒரு விளக்கத்தை புராணம் சார்ந்தோ, கட்டுக்கதை சார்ந்தோ, ஆன்மீகத் துணுக்குகள் சார்ந்தோ, அர்த்தமுள்ள இந்துமதம் சார்ந்தோ கொடுத்துகொண்டோம்.

அன்புடன்,
கௌதமன்

அன்புள்ள கௌதமன்

குழந்தைகளுக்கு எதைக்கற்றுத்தருவது என்பதைப்பற்றி எந்தக்குழப்பமும் தேவையில்லை. நம்மை அவர்கள் முன்னால் அப்படியே வைத்தால்போதும். நாம் அப்படி வைக்காவிட்டாலும் அவர்கள் நம்மை அப்பட்டமாகப் புரிந்துகொள்ளத்தான் போகிறார்கள். முன்வைத்தால் அப்பா நேர்மையானவர் என்ற பெயராவது மிஞ்சும்

நாம் நம்பாத ஒன்றைக் குழந்தைக்குச் சொல்லக்கூடாது. நாம் நம்பும் ஒன்றைச் சொல்லாமலிருக்கவும் கூடாது. குழந்தைக்காக நாம் நம்மை விசேஷமாகத் தயாரித்துக்கொள்வதெல்லாம் நடைமுறைச்சாத்தியமில்லை. நமக்கு எது சிறப்பெனத்தோன்றுகிறதோ அந்த வாழ்க்கையை நாம் வாழ்கிறோம். அந்த வாழ்க்கையை நாம் நம் குழந்தைகளுக்கு அளிப்போம்

என்னுடைய குழந்தைகளுக்கு என்னுடைய வாசிப்பை, நூல்களைத்தான் அளித்தேன். எனக்கு எது பிடித்தமானதோ எது தெரியுமோ அதையெல்லாம்பற்றிப்பேசினேன். ஏழுவயது அஜிதனுக்கு அவன் அளவுக்குப் புரியும்விதமாக அத்வைதத்தை விளக்க முயன்றிருக்கிறேன். செய்யலாம் என்றும் குழந்தைகளுக்கு நாம் நினைப்பதைவிட அதிகமாகவே புரியும் என்றும் நித்யசைதன்ய யதி சொன்னது உண்மை என்று கண்டுகொண்டேன்

அந்த உரையாடலை அவர்கள் இன்று மிக வளர்ந்துவிட்டபின்னரும் தொடர்கிறேன். சென்ற இரு வருடங்களாக அஜிதனைப்பொறுத்தவரை இடம் மாற ஆரம்பித்திருப்பதை மகிழ்ச்சியுடன் உணர்கிறேன். இன்று நவீன சிந்தனைகளை நான் அவனிடமிருந்தே கற்றுக்கொள்கிறேன். அவன் மிகநுட்பமாக விவரிக்கக்கூடியவன். அது நானே எனக்குச் சொல்லிக்கொள்வது போலிருக்கிறது.

ஜெ

முந்தைய கட்டுரைதேவர்கள் அணிவகுக்கும் தோரணவாயில்
அடுத்த கட்டுரைஉலகாளும் பொருளின்மை