கிளி சொன்ன கதை : 6

அம்மா புன்னகையுடன் நீறு எடுத்து சற்றே நெற்றியில் போட்டுக்கொண்டு சந்தனத்தை அதற்கு கீழே வைத்தாள். மெல்ல ”போத்தியம்மை வரலியா?”என்றாள். போத்தி ” அவ எப்பமும் பாதி வாசிப்பிலதானே வந்து கேறுவா… ” என்றபடி உள்ளே போனார்.

அம்மா போய் கல்யாணி மாமி அருகே அவள் மஞ்சள் பையைப்போட்டு இடம்பிடித்து வைத்த இடத்தில் கால்நீட்டி அமர்ந்தாள். வேலப்பன் பண்டிதருக்கு கருப்பட்டி மணம் அடிக்கும் சுக்கு காப்பியை பித்தளை லோட்டாவில் கொண்டுசென்று பக்தியுடன் கொடுத்தான். அவர் வாங்கி ஊதி ஊதிக் குடித்துவிட்டு வாயை துடைத்தபடி கனைத்தார்

” நேத்து எங்க விட்டேண்ணு ஓர்மை இருக்குல்லா? அசோகவனத்தில சீதாதேவி இருக்கதை ஆலமரத்துக்கு மேல ஒளிச்சிருந்து ஹனுமார் சுவாமி பார்க்கிறார். அப்பிடியே கைய ரெண்டையும் தலைக்கு மேல கூப்பி கும்பிடுதார்.” அவர் சற்று குனிந்து கூர்ந்து பார்த்து படிக்க ஆரம்பித்தார். மலையாளமே ஒருமாதிரி மென்மையாக ஒலிக்கும் அனந்தன் காதுக்கு. அவர் மேலும் மென்மையாக்கி அழுவதுபோலவோ பாடுவது போலவோ வாசித்தார்.

அனந்தன் அவரது தொப்பையையும் அதில் ஸ்படிகமணி மாலை வளைந்து அமர்ந்திருப்பதையும் மூக்கு ரோமங்கல் வெளியே தெரிவதையும் கூர்ந்து பார்த்தான். பிறகு ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பார்த்தான். பிறுத்தா அம்மச்சி அதற்குள் நன்றாக தலை சரிந்து வாயை பசுவின் குதம்போல சுருக்கங்கள் தெரிய மூடி ர்ர்ர்ஸ்க் ர்ர்ர்ஸ்க் என்று ஒலியெழுப்பி தூங்கிக் கொண்டிருந்தாள்.

போத்தியம்மை பத்மத்தை துணைக்குக் கூட்டிக்கொண்டு வேகமாக வந்த வழியிலேயே கணபதிக்கும் மகாதேவருக்கும் அரைக்கணத்தில் கும்பிடுபோட்டுவிட்டு வந்து பின்பக்கம் ஏறி அமர்ந்தாள்.

கல்யாணிமாமிக்கு பின்னால் இருந்த ராகிணி கையை நீட்டி மெல்ல அனந்தன் கையைத் தொட்டு கிள்ளினாள். அனந்தன் திடுக்கிட்டு அவளைப் பார்த்தான். அவள் முகத்தை ஒன்றும்தெரியாதவள்போல வைத்துக் கொண்டு கதை கேட்டாள். அனந்தன் விலகி அமர்ந்து அவள் முகத்தையே பார்த்தான். அவள் எட்டாம் கிளாஸ் படிக்கிறாள். நீலநிறத்தில் வெள்ளிச் சரிகைபோட்ட பாவாடையும்  நீளஜம்பரும் அணிந்திருந்தாள். சற்றே தூக்கிய மேலுதடுக்குமேல் மெல்லிய மீசை. நிறைய முகப்பருக்கள். ஒருவேளை அவள் கிள்ளவில்லையோ? அனந்தன் வேறு முகங்களைப் பார்த்தான். அம்மா வாசிப்பில் ஆழ்ந்திருந்தாள்

மீண்டும் கிள்ளல். இம்முறை அனந்தன் அவள் முகத்தைப் பார்த்ததுமே தெரிந்துகொண்டான்.ளங்கே மெல்லிய சிரிப்பு தெரிந்தது. உதடுகளில் மட்டுமல்லாது மூக்கு கண் கன்னம் எங்கும் அந்தச் சிரிப்பு இருந்தது. அவள் அவனை திரும்பிப்பார்த்து நாக்கை நீட்டி மேலுதட்டை தொட்டு முழித்துக் காட்டினாள். அனந்தன் போ என்று தலையை ஆட்டினான்.

அனந்தன் அவள் முகத்தையும் கண்களையும் பார்த்துக் கோண்டிருந்தான். அவள் தன் கால்விரலால் அவன் கால்வெள்ளையை வருடியதும் மீண்டும் திடுக்கிட்டு காலை தூக்கினான். அவள் அவனைப்பார்த்து மெல்ல சிரித்தாள். அவள் ஜம்பரில் மார்புகள் சிறிதாக புடைத்திருப்பதை அவள் கையில் அணிந்திருந்த கண்ணாடி வளையல்களை காலில் இருந்த வெள்ளிக் கொலுசை அனந்தன் பார்த்தான். அவள் பெரிய மாமிகளைப்போல சிரிப்பதாக அவனுக்குப் பட்டது.

அனந்தன் எட்டி பத்மத்தைப்பார்த்தான். அவள் கதையை கூர்ந்துகேட்டுக்கொண்டிருக்க போத்தியம்மை தலையை தூக்கம் கொண்டுகொண்டு சாய்க்க ஒருபக்கமாக ஆடிக்கொண்டிருந்தாள். அவனுக்கும் மெல்ல தூக்கம் வந்தது.

ஆண்கள் சிலர்தான் ஓரமாக விலகி தரையிலும் கற்களிலுமாக  எஞ்சியிருந்தார்கள். பண்டிதர் வாசிப்பை நிறுத்திவிட்டு அசோகவனத்தையும் சீதா தேவியைக் காவல் காத்த பூதகிகளையும் பற்றி வர்ணித்துச் சொன்னார். அனந்தன் கோட்டாவி விட்டான். லேசாக அம்மா மீது சாய்ந்தான். ராகிணி மெல்ல அவன் அருகே சாய்ந்து செவியில் ”’கொசுமுழுங்கி…”என்றாள். அனந்தன் எழுந்து அமர்ந்து வாய்க்குள் நாக்கைவிட்டு துழாவினான். ராகிணி சிரிக்க அம்மா அவளைப் பார்த்து புன்னகை செய்தாள்.

”அப்டிப்பாத்தாக்க சீதாதேவி ரெண்டு சிறையிலயாக்கும் இருந்தா. வெளியே பூதகிகளும் கோட்டையும் காவலும் சமுத்திரமும் சேந்து உண்டாக்கின சிறை. இன்னொண்ணு உள்ள அவளுக்கிருந்த கற்புங்கிற சிறை. அவ சீதையாக்குமே. ஜனகன் மகள். ராமச்சந்திர மூர்த்திக்க பத்தினி. சாட்சாத் லக்ஷ்மீ தேவி. நெறியும் முறையும் அறமும் மீறி அவ என்னமாம் செய்ய முடியுமா? கண்ணால ஒரு நோக்கு பாத்தே அவ ராவணையும் லங்காபுரியையும் ஏழு கடல்களையும் ஏழு உலகங்க¨ளையும் சாம்பலாக்கிர முடியும்னுட்டு கம்பநாட்டாழ்வார் சொல்றார். தர்மத்துக்கு கட்டுப்பட்ட கடல் மாதிரி அவ அலையலையா அடிச்சாலும் அந்த சிறைகளுக்குள்ள அடங்கி அசோகவனத்தில இருந்தா.சீதா தேவிக்க பெருமைய எந்த கவிஞன் சொல்லி முடிக்க முடியும். பாட்டைப் பாப்பமா…”

அனந்தன் நன்றாக அம்மா தோள் மீது சாய்ந்துகொண்டான். அம்மாவின் மாலையில் நிறைய ஊக்குகல் இருந்தன. அவற்றை லேசாக ஆட்டினான். ஒருமுறை கோட்டவி விட்டு மேலும் சாய்ந்தான். தூங்கிவிட்டான்.

மீண்டும் அவன் கண்விழித்தபோது ஒரே அமைதியாக இருந்தது. வாசிப்பை நிறுத்தி விட்டாரா? அவன் மெல்ல தலை தூக்கிப் பார்த்தபோது பண்டிதர் மெல்லிய குரலில் வாசிப்பதைக் கேட்டான். திரும்பி அம்மாவைப் பார்த்தான். உதடுகள் அழுந்தியிருக்க அம்மாவின் கண்கள் நிறைந்து கன்னத்தில் வழிந்தன. அந்த நினைவே அவளுக்கு இருக்கவில்லை. அவன் திரும்பி மற்றவர்களைப் பார்த்தான். கல்யாணி மாமி அழுதுகொண்டிருந்தாள். அங்கே இருந்த எல்லாப் பெண்களும் கண்ணீருடன் இருந்தனர். ராகிணி கூட கண்ணீர் வழிய கைகளில் தலையைத் தாங்கி அமர்ந்திருந்தாள்.

[end]

1
2
முந்தைய கட்டுரைகிளி சொன்ன கதை: கடிதங்கள் மீண்டும்
அடுத்த கட்டுரைகன்னிநிலம் – நாவல் : 1