கிளி சொன்ன கதை : 5

அம்மா உள்ளே இருந்து எட்டிப்பார்த்து ” பெண்டாட்டி செத்தா அடியந்தரத்துக்கு மாவு அரைக்கிறதுக்கு கொண்டு போட்டிருக்கு…. வேற சோலி இல்ல…” என்றாள். ”ஏமான் மனசு கொண்டு இப்பம் நூறுநாழி அரி அரைச்சு மாவாக்கியாச்சு அம்மிங்கிரே ”என்று தங்கம்மை சொல்லி வாய்பொத்தி சிரித்தாள்.

சிறிய துகள்களாக தூசி போல சாரல் பெய்ய இலைகளும் கூரையும் சொட்டிக்கொண்டே இருந்தன. வானம் நன்றாக மூடி காற்று மங்கியிருக்க அவ்வப்போது சுழல்காற்று நீர்த்துளிகளை அள்ளியபடி சென்றது. அண்ணா ஒரு கையில்டேழுபேட்டரி டார்ச் லைட்டும் இன்னொரு கையில் பாளைப்பையும் துணிக்குடையுமாகச் சென்றார். வாழைவயலில் காவலுக்குச் செல்கிறார். அவருக்கு போத்தியின் வாழைவயலில் கால்கூறு உண்டு. மொத்தம் நாற்பது ஏத்தன் வாழை. எல்லாம் குலைவிட்டு காய்பருக்க ஆரம்பித்திருந்தன. ராசப்பனுக்கு கால்கூறு. அணைஞ்சிக்கு கால்கூறு. மிச்சம் போத்திக்கு. அவருக்கு கொடுக்க வேண்டிய காணத்துக்கு பகரமாக மூன்றுபேரும் அவரது வாழையையும் தண்ணீர் காட்டி உரம் வைத்து காவல் காத்துக் கொடுக்க வேண்டும். அண்ணா குலைவெட்டியதும் அனந்தனுக்கு சட்டையும் புதிய குடையும் வாங்கித்தருவதாகச் சொல்லியிருந்தான்.

கோயிலில் வெளிநடை திறக்கும் ஒலி கேட்டது. அனந்தன் சாரலில் இறங்கி சேற்றில் குளிரக் குளிர கால் பதித்து ஓடி கோயில்பறம்பைத் தாண்டி கிழக்கு வாசலுக்குப் போனான். பித்தளைக் குமிழிகளும் தாழ்களும் பதித்த , வாய் திறந்த யாளிகளும் துதிக்கை தூக்கிய யானைகளும் ஒன்றோடொன்று பின்னி செறிந்த உத்தரச் சட்டங்கள் கொண்ட பெரிய மரக்கதவை சாமிப்பிள்ளை தள்ளித் திறந்தார். அதன் மரத்தாலான அச்சாணி கூய்ய்ய் என்று கசங்கி வீரிட்டது. கதவுக்கு மேல் மரத்தால் செய்யப்பட்ட கரிய சிற்பம். அது என்ன என்பதையே கண்டுபிடிக்க முடியாதபடி விளக்கின் கரியுடன். உள்ளே மணல்பரவிய கோயில் முற்றத்தில் மரமல்லி மரத்தின் அடியில் வெண்பூக்கள் நட்சத்திரங்கள் போல சிதறி கிடந்தன. அரளிப்பூக்குலைகள் சிவப்பும் மஞ்சளுமாக நீர் சொட்டி சற்று குனிந்து நின்றன. முள் அடர்ந்த வில்வத்தில் இருந்தும் தென்னைகளிலிருந்தும் நீர்த்துளிகள் சொட்டின. செம்பருத்திச் செடிகளின் கீழே வாடிக்குவிந்த சிவந்த பூக்கள் . செம்பருத்தி இதழ்களில் நீர் துளிகள் ஒளியுடன் தெரிந்தன.

அனந்தன்னுக்கு மழைபெய்து கொண்டிருக்கும் கோயில் மிகவும் பிடிக்கும். வட்டக்கூம்புவடிமான அலங்காரச் சில்லோட்டுக்கூரை மழை பெய்தால் கருஞ்சிவப்பாக கிரீடம் போலிருக்கும். உச்சியில் ஒற்றைக்கலசம் துலக்கமாக வளைவுகளில் ஒளியுடன் தெரியும். கூரைவிளிம்பு சொட்டிய தடம் துல்லியமான வட்டமாக நீர் தேங்கி கிடக்கும். அனந்தன் அதன் வழியாக வட்டமாக நடந்தான். சாமிப்பிள்ளை உள்ளே போய் மேற்கு வாசலைத் திறந்தான். மகாதேவரின் கருவறை மேற்குநோக்கியது. முகமண்டபம், அலங்கார மண்டபம், பெருவாயில் எல்லாம் மேற்கே வள்ளியாற்ரை நோக்கித்தான். மேற்கு முற்றமும் மிகப்பெரியது. அங்கே கொடிமரமும் பலிமண்டபமும் உண்டு. அப்பால் அகலமான படிகக்ட்டுகள் இறங்கி ஆற்றுக்குச்செல்லும். கொட்டாரத்தெருவுக்குச் செல்வது கிழக்குவாசல் என்பதனால் கிழக்குவாசல்தான் முக்கியமானதாக இருந்தது. பழைய வயக்க வீடு தெற்குவாசலுக்கு நேராக இருந்தது. அதற்கு மேற்காக அனந்தனின் வீடு. தெற்கும் வடக்கும் வாசல்களைத் திருவிழாநாளில் மட்டும்தான் திறப்பார்கள்.

கோயிலின் கீழ்கழகம் வேலை பாச்சுபிள்ளை பாட்டாவுக்குத்தான். அவருக்கு எண்பதுவயது தாண்டிவிட்டது. அவர்தான் சின்னவயதுமுதலே கீழ்கழகமும் காவலும். அவருக்கு அறுபது வயதாக இருக்கும்போது திருவிதாங்கூர் தமிழ்நாடாக மாறி கோயிலை தமிழ் சர்க்கார் ஏற்றெடுத்தது. முப்பத்தெட்டு வயது என்று போட்டு வேலையில் சேர்ந்தார். அப்போதிருந்த வலிய ஸ்ரீகாரியம் ஸ்தாணுமாலையம்பிள்ளை பாச்சு பிள்ளைக்கு வேண்டியவர். பாச்சுபிள்¨ளைக்கு நடக்க முடியாததனால் அவரது பேரன் சாமி வேலைகளைச் செய்வான். ”மகாதெவருக்க கணக்கில நம்ம பற்றாயம் அறுபதாக்கும். இன்னும் அஞ்சு கொல்லம் சர்வீஸ¤ண்டு மக்களே வேலப்பா…”என்று பாச்சுபிள்ளை சொன்னார்.

போத்தி பல்லை நாணல்குச்சியால் குத்தி துப்பியபடி ” ஒரு காரியம் உள்ளதாக்கும் வேலப்பா, ஸ்தாணுமாலையம்பிள்ளைக்கு சொற்கம் உறப்பாக்கும். காரணம் இந்த திருவட்டார் அம்சத்தில கொறைஞ்சது அம்பது பிள்ளையளாவது ஆடியம்மாசைக்கு பித்ருபெலி இடும்பம் ஒருவீதம் அவருக்கும் சென்ணு சேரும்.”. ”நம்ம பாச்சு பிள்ளைக்க பிள்ளையளுக்க பங்கும் அதில உண்டுமா?”என்றார் கொல்லன் வேலப்பன். ”அது நாம நாமளாட்டு சொல்லி அபவாதம்  ஆக்கபிடாது. பாச்சுபிள்ளை சொன்னா அது வேற. அவ்வோ தந்தையானாச்சு பிள்ளையளாச்சு….” போத்தி சொன்னார். பாச்சுபிள்ளை தலையை ஆட்டியபடி ” பாம்பானா புனம் தேடும். புனமானா பாம்பிருக்கும்ணாக்கும் சொல்லு. பாண்டிக்காரன் சொல்லுகது உண்டுல்லா, எந்த புத்தில எந்த்ப் பாம்பிருக்கோ என்னமோண்ணுட்டு.போட்டு…” என்றார்.

வேலப்பன் அனந்தனைப்பார்க்க பாச்சுபிள்ளை ”என்னடே இங்க நிக்கே? உனக்கு இண்ணைக்கு படிப்புண்டா?”என்றார். அனந்தன் ஒன்றும் சொல்லாமல் தூணைப்பிடித்துக் கொண்டு பாதி முகம் மறைந்து நின்றான்.” அப்பா உண்டாடே வீட்டில?”என்றார் போத்தி. அனந்தன் வெட்கி முகத்தை எண்ணைப்பிசுக்குபடிந்த  கல்மோகினியின் கரிய கால்களில் புதைத்தான்.”பாவம். நல்லோரு நாயருக்கு இப்டி ஒரு பெய” என்றார் வேலப்பன். ”அது அந்த நட்டாலத்துக்காரிக்க பணியில்லா? கொச்சனை எப்பமும் இடுப்பில கேற்றி வச்சு கொஞ்சி வேவில்லாத்த கொழுக்கட்ட கணக்கு வளத்து வச்சிருக்கா” என்றார் பாச்சுபிள்ளை. அனந்தனிடம் ”போடே போயி வல்லதும் படி போ, சந்தியை ஆச்சுல்லா?”என்றார். அனந்தன் அங்கிருந்து கால்களை தேய்த்தபடி நடந்து வாசலைக் கடந்து எட்டிப்பார்த்து ”இப்பம் வலிய ஒழிவாக்கும்.படிப்பு இல்ல”என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

சாமி தென்னை ஓலையால் பாச்சுபிள்ளை முடைந்த பூக்குடலையை எடுத்துக் கொண்டு பூப்பறிக்க ஆரம்பித்தான். அவனுக்கு ஒரு கால் சற்று திரும்பியிருக்கும். அனந்தன் அவனது காலடித் தடங்களைப் பார்த்தான். ஒரு கால்தடம் வேறுபக்கமாக திரும்பியிருந்தது. ஆடி ஆடி சென்று சாமி செடிகளின் கிளைகளை இழுத்து இழுத்து பூக்களைப் பறித்தான். ”டே டே டே பூ பூ பூ பூப்பறிச்சு குடுடே… பூ பூ பறிச்சு க் க் க் குடுடே” என்றான். சாமியின் வாய் நிறைய வெற்றிலை இருக்கும். பற்கள் கறுப்பாக இஷ்டம்போல வளர்ந்து நிறைந்து நிற்கும். அனந்தன் துள்ளி அரளிக்கிளைகளை பிடித்து இழுத்து பூக்களைக் காட்ட சாமி அவற்றைப் பறித்தான். மூலையில் சுருட்டி வைத்திருந்த அழுக்குவேட்டியை எடுத்து தரையில் சாமி விரித்தான். அனந்தன் மரமல்லியில் தொற்றி ஏறி கிளையைப்பிடித்துக் கொண்டு தொங்கி உலுக்கி பூக்கலை பொழியச் செய்தான். அதற்குள் அவன் நன்றாக நனைந்துவிட்டான். சாமி பூக்களை அபப்டியே சுருட்டி எடுத்து குடலையில் கொட்டினான்.

அனந்தன் வில்வத்தில் முள்ப்டாமல் பெரிய முள்மீதே கால்களை வைத்து ஏறி இலை பறித்துக் கொண்டிருந்தபோது காளி அம்மச்சி குனிந்தபடியே கைகளை வீசியபடி வந்தாள். அம்மச்சி நடப்பது ஒரு மெலிந்த பசுமாடு முன்னங்கால்கள் தரையில் படாமல் நடப்பது போலிருக்கும். அகிடுகள் முன்னால் உள்ள பசு. இரண்டு அகிடுகள். அம்மச்சியின் முலைகளில் கீழே தான் ஏதோ சதை தோலுக்குள் இருப்பது போலிருக்கும். மேலே எல்லாம் வெறும் தோல்தான். குளிக்கும்போது அம்மச்சி முலைகளை தூக்கி தோள்மீது போட்டிருப்பாள். கரிய புகையிலைச்சுருட்டு போன்ற காம்புகளை முதுகுப் பக்கமாகப் பார்க்க முடியும். முலையின் அடிப்பக்கம் உடலில் உரசி உரசி கறுப்பாக தேய்ந்துபோனது போலிருக்கும்.

அம்மச்சி இடுப்பில் கைவைத்து மெல்ல நிமிர்ந்து அண்ணாந்து அனந்தனைப்பார்த்தாள் ”அதாராக்கும் மரத்தில? நம்ம தங்கப்பனுக்க பொட்டன் மகனுல்லா?” சாமி , ” அவ் அவ் அவ் அவ்வனாக்கும் க் க் க்கேறினது” என்றான். ‘சீ நீக்கம்புல போறவனே, உனக்க கிட்ட எத்தன மட்டம்டே சொல்லியிருக்கு பொட்டன்பயலப் பிடிச்சு மரத்தில கேற்ரப்பிடாதுண்ணு. எட்டும்பொட்டும் திரியாத்த பய விளுந்து கைஒடிஞ்சா தங்கப்பன் வந்து உனக்க சங்கைச் செத்தி எடுத்துப்போடுவான் பாத்துக்க. தங்கப்பன் சீவன் சீவனாட்டு வளத்துத அருமைப்பயலாக்கும்… டேய் மண்டுணி , எறங்குடா கீழ எறங்கணும் இப்பம்…” அனந்தன் பயந்து இறங்கியபோது உள்ளங்கையில் ஒரு முள் குத்தியது . அம்மச்சி ”நீ என்னத்துக்குடே மரத்தில கேறுதே..?” என்றாள். அனந்தன் ஒன்றும் சொல்லாமல் பேசாமல் நின்றான். ”கையையும் காலையும் வச்சுகிட்டு ஒருபாகத்தில இரி கேட்டியா?” என்றாள் அம்மச்சி. அனந்தன் கையை பின்பக்கம் கால்சட்டையில் துடைத்தன், கடுத்தது.

அம்மச்சி நீளமான துரப்பையை எடுத்து கோயில்முற்றத்தை கூட்ட ஆரம்பித்தாள். ”சம்போ மகாதேவா சம்போ! சம்போ மகாதேவா சம்போ!” என்று சொல்லியபடி மூச்சு வாங்க கூட்டிக் கூட்டி ஓரமாக ஒதுக்கி பனைநார் கடவத்தில் அள்ளி வெளியே கொண்டுபோய் குப்பைக்குழியில் போட்டாள். ”நான் கொண்டு போய் போடட்டா அம்மச்சி?”என்றான் அனந்தன். ”நீயா மகாதேவனுக்க சக்கறம் சம்பளமாட்டு வாங்குதே? நான்லா? எனக்கு கையும் காலும் நல்ல உறப்புண்டு. ஒருவாயி நிறையதுக்கு ரண்டு கை போரும்டே. நீ உன் சோலியப்பாரு”என்றாள் அம்மச்சி. அனந்தன் அம்மச்சி கூட்டிய மணல்தரையில் ஈர்க்கில் கோடுகள் வளைவாக விழுந்திருப்பதைப்பார்த்தான். ‘கடல்!’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான். அலைகல் மீது படகில் அவன் சாய்ந்து ஆடியும் சுழன்றும் போராடினான். கரை வெகுதொலைவில் இருந்தது. அப்போது செம்பாலான முகடு கொண்ட கூம்புவடிவ கப்பல் ஒன்றைக் கண்டான். ” உதவி !உதவி!”என்று அவன் கூவினான்.

போத்தி இடுப்பில் ஒற்றைத்துண்டு மட்டும் உடுத்து அவசர அவசரமாக வந்தார். வெற்றிலைச்சாறு கடைவாயில் வழிந்திருந்தது.” என்ன போற்றியங்கத்தே நேரம் இருட்டியாச்சா?”என்றாள் அம்மச்சி கூட்டியபடியே. ” ஒண்ணு நில்லு காளியே… நான் மேலைக்கடவு வரைக்கும் போனேன் .சொன்னேன்லா ஒரு அசல் காரம்பசு. எண்ணாழி கறவையுண்டு. இந்தா இந்த மட்டுக்கும் கொம்பு கைநகம் நெறத்தில. மடி நல்ல கொடம் மாதிரி. காம்புநாலும் கறுப்பாட்டு மசிப்பேனா மாதிரி. ஐஸ்வரியம்ணாக்கமப்டி ஒரு ஐஸ்வரியம்….”என்றபடி மடைப்பள்ளியை திறந்தார்

”எனக்க கிட்ட ஏன் சொல்லுகேரு? நான் பசுவா வாங்கப்போறன்?” என்றபடி அம்மச்சி கூட்டினாள்.” இப்பம் பாதியாளுக இங்க மகாதேவனைக் கும்பிடவா வாறானுக, மாட்டுத்துப்பு கேக்கத்தானே வாறானுக? நீரும் மந்திரம்ணு சொல்லி மகாதேவரு முன்ன நிண்ணு மணிய ஆட்டிட்டு ஜெஸ்சி கூசா காங்கேயம் நாடன்னு மந்திரம் சொல்லுகேரு….”

போத்தி உள்ளிருந்து செம்புகுடத்தை எடுத்து தோளில் வைத்தபடி வந்தார்.ஆவருடைய தோளிலும் புஜங்களிலும் பச்சை நரம்புகள் புடைத்த தசைக்கோளங்கள் இருகி உருண்டு நின்றன. முடி அடர்ந்த மார்பும் வயிறும் தொடைகளும் எல்லாம் இறுக்கமாக வீரபத்ரன் சிலையில் இருப்பதுபோலவே இருந்தன. குதிகால்சதை அவர் நடக்கும்போது வண்டிக்காளையின் தசைபோல இறுக்கமாக அசைந்தது. ”அது பின்ன காளியே கோனான் பாதி பிராமணன், பிராமணன் பாதி கோனான். அதாக்கும் பழையாளுக சொன்ன சாச்திரம்…என்னாண்ணாக…”

காளி அம்மச்சி, ”போரும் போரும். உம்மகிட்ட வேளம் சொல்ல எனக்கு கெதியில்ல…போயி தண்ணி கொண்டுட்டு வாரும்…” என்றாள். போத்தி ”அதுக்குத்தானே போறது என்னமோ வெரட்டுதே… நீ நிக்க நெலையப்பாத்தா எனக்க அம்மைண்ணுல்லா தோணுது… அச்சன் போத்திக்க சம்பந்தம் உண்டோ” என்றார்

”தொறப்பயால சாத்திப்போடுவேன். போத்தீண்ணு பாக்க மாட்டேன்”என்றாள் அம்மச்சி ”தங்கம்போலத்த மனுஷனைப்பத்தி சொல்லுக வேளம்….” போத்தி குடத்துடன் படி இறங்கிபோனார். ”போறதப்பாரு, இப்பம் வருவாரு நாயி மோண்டுட்டு வாறதுமாதிரி…. கோமணம் நனையாம குளிச்சுப்போட்டு….”என்றபடி அம்மச்சி கூட்டிக் கோண்டிருந்தாள்.

பூஜைப்பொருட்களுடன் கொல்லன் வேலப்பனும் அவர் மனைவி கிருஷ்ணவேணியும் வந்தார்கள். வேலப்பன் நல்ல கறுப்பு. குள்ளமாக இருந்தாலும் தோளும் புஜங்களும் நன்றாக உருண்டு இருந்தன. கிருஷ்ணவேணியை அம்மச்சி ”பாறசாலக்காரி”என்று அழைப்பாள். அவள் கொல்லத்தி அல்ல, வாணியத்தி. பாறசாலை உற்சவம் காணப்போய் திரும்பும்போது வேலப்பன் அவளுடன் வந்தார். ” பாறசாலைககரி வந்தியாடீ? வெளக்குக்கு எண்ணை கொண்டுவந்தியா?” அம்மச்சி இடுப்பில் கைவைத்து எழுந்து நின்று கேட்டாள்.

”ஒண்டு அம்மச்சியே….” என்றாள் கிருஷ்ணவேணி. அவள் கண்கள் நீளமாக எருமையின் கண்கள் போலிருந்தன. நல்ல கறுப்பு நிறம். காதில் ஜிமிக்கி போட்டு அதை ஆட்டி ஆட்டி கரிய முகத்தில் பற்கள் வெண்மையாக தெரிய சிரித்தபடியே பேசுவாள். அனந்தன்னிடம் ”அய்யடா இதாரு வலிய நாயரல்லியோ. எந்தரு செய்யணு ஏமான்?”என்றாள். அவள் குனிந்தபோது சிவப்பு புள்ளிபோட்ட மஞ்சள் ஜம்பர் வழியாக சற்ரே நிறம் வெளுத்த கரிய முலைகளின் விளிம்புகள் தெரிந்தன. ” கொச்சன்றெ அம்ம எவிடே?” அனந்தன் ஒன்றும் சொல்லாமல் விழித்துப் பார்த்தான். அவள் அவன் கண்களை கண்டதும் மேலே போட்ட நேரியதை இழுத்து போட்டாள்.

”திரி வேணுமே வெணியே”என்றாள் அம்மச்சி. கிருஷ்ணவேணி ” கொண்டுவந்நிட்டுண்டு அம்மச்சியே” என்றாள். வேலப்பன் ராமாயண வாசிப்பு நடக்கவேண்டிய இடத்தை குட்டி நாணல் துரப்பையால் நன்றாக கூட்டி அனுமான் சிலையருகே முந்தைய நாள் எண்ணை சிந்திய பிசுக்கை விபூதி போட்டு சாக்குத்துண்டால் நன்றாக துடைத்தார். சாமி வாழையிலைகளை வெட்டிக் கொண்டுவந்து மண்டபத்தில் பரப்பி  பூக்குடலையை அதில் கொட்டினார். உலர்ந்த வாழைமட்டையை எடுத்து நீரில் நனைத்து உரித்து நார் செய்து வைத்தார். கிருஷ்ணவேணி பூக்களை அவளது நீளமான விரல்களால் எடுத்து வேகமாக பூக்கட்ட ஆரம்பித்தாள். கண்முன்னால் பூமாலை உருவாகி நெளிந்து வளைந்து இலையில் விழுந்து கொண்டிருந்தது.

பாச்சு பிள்ளையின் குரல் கேட்டது ” எளவெடுத்த ஆடிச்சாரலுக்கு அரி கிட்டினாலும் வெறகு கிட்டுதா? நாசமத்துபோவதுக்கு…லே சாமி லே நொண்டி நாறிக்கு காதும் கேகப்பளுதில்ல…”

சாமி அதைக் கேட்டும் ஒருமுறை லேசாக இளித்தபின் பூக்கட்டலைத் தொடர்ந்தார். பாச்சு பிள்ளை சுருக்கம் பரவிய மார்பை உந்தி பிருஷ்டத்தை பின்னால் தண்ணியபடி கையில் துணிப்பையுடன் வந்தார். அவருக்குப் பின்னால் அரிசி மூட்டையில் தலை புதைந்து பாதி முகம் தெரிய தவசியும் வாழைக்குலைகளை கரியிலையின் சுற்றிக்கட்டி சுமந்தபடி பெரிய காக்கிப் பைகளை இருகைகளிலும் ஏந்தியபடி பாலையனும் வந்தனர். அரிசியை மடைப்பள்ளி வராந்தாவில் தொம்மென்று போட்டு சும்மாடாக இருந்த தூண்டை எடுத்து முகம் துடைத்தபடி விலகி நின்றான் தவசி. பாலையன் பையை வைத்தபின் வாழைக்குலைகளை இறக்கி வைத்தான். வெளியே தெரிந்த பழங்களிலிருந்து பாளையன்கோடன் பழம் என்று தெரிந்தது.

”இண்ணைக்கு ஆராக்கும் செறப்பு?”என்று கிருஷ்ணவேணி கேட்டாள். தவசி ” திருவோந்தரம் பார்ட்டி…”என்றான். மூவரும் கிருஷ்ணவேணியையே பார்த்தனர். அவளுடைய கண்கள் அங்குமிங்கும் தாவின. கைமட்டும் பூகட்டிக் கொண்டிருந்தது. அவர்கள் கிருஷ்ணவேணியின் மார்புகளைப் பார்க்கிறார்கள் என்று அனந்தன்னுக்கு தெரிந்தது.

சாமி திடீரென்று பூக்களை அப்படியே போட்டுவிட்டு எழுந்து நொண்டி நடந்து வெளியே போனான். பாச்சு பிள்ளை மூவரையும் பார்த்தார்.”ஏம்லே குந்தம் முளுங்கின கணக்காட்டு நிக்குதிய? அரிய வாரி களுவி வையுங்கலே. லே பாலையா நீ சக்கரையை எடுத்து பிரிச்சுவை..” இருமி மூச்சு வாங்கியபடி சென்று கல்மேடையில் கால்களை மடக்கி அமர்ந்து விரல்கள் வளைந்த சுள்ளிக்கைகளை தலைமீது வைத்துக் கொண்டார்.

கிழக்கு வாசல் வழியாக மேலும் ஆட்கள் வந்தார்கள். கோயிலில் ஓசையும் நிழலாட்டமும் அதிகரித்தது. அதுவரை அனந்தன்னுக்கு அங்கே இருந்த ஈடுபாடு குறைந்து அவன் பின்வாங்கி அரளிப்புதர்கள் அருகாக நகர்ந்தான். அரளி இலைகளை பிய்த்து குறுவாட்கள் செய்து ”ஹஹஹா!”என்று மனதுக்குள் சிரித்தபடி எதிரிகள் மீது எறிந்தான். ஒரு சிறிய தேன்சிட்டு வந்து அரளிமலரை முகர்ந்துபார்த்துவிட்டு சென்றது. கோயில் மீது நான்கு கொக்குகள் உயரத்தில் பறந்துசென்றன. அனந்தன் அங்கே நிற்பதை கோயிலில் அனைவருமே மறந்துபோனதுபோல, அவன் எவர் கண்ணுக்கும் தெரியாதவனாக ஆகிவிட்டதுபோல உணர்ந்தான்.

[more]

1
2
முந்தைய கட்டுரைகிளிசொன்ன கதை:மேலும் கடிதங்கள்
அடுத்த கட்டுரைகிளி சொன்ன கதை: கடிதங்கள் மீண்டும்