கிளி சொன்ன கதை : 5

மதியத்தில் நிழல்கள் மங்கி தரை இருண்டது. வடமேற்கே பேச்சிமலையிலிருந்து பெரிய மேகங்கள் நகரும் கல்கோபுரம்ங்கள் போல வரிசையாக ¦மிக மெல்ல நகர்ந்து ஒன்றுடன் ஒன்று இடித்துக்கொண்டு நுனிகள் மோதிக்கலந்து வந்து தலைக்குமேல் பரவி தென்மேற்கு நோக்கிச் சென்றன. அனந்தன் ஒட்டுத்திண்ணையில் குந்து அமர்ந்து வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். கீழே வள்ளியாறு தென்கிழக்காக தேங்காப்பட்டினம் நோக்கிச்செல்கிறது. மேலே மெகங்களும் அதே திசை நோக்கித்தான் செல்கின்றன. பெய்த மழைதான் ஆறு.பெய்யாமல் வானத்தில் பறந்து ஒழுகும் ஆறுதான் மேகம். நீரை தென்கிழக்கிலிருந்து ஏதோ அழைக்கிறது. அது போய்த்தான் ஆகவேண்டும். எல்லா நீரும் நேராக அங்கே சென்றாக வேண்டும். ஊரிலுள்ள எல்லா நீரும் ஆற்றுக்குச் செல்வதைப்போல.

நீருக்கு அதன் பயணமும் வழிகலும் எல்லாம் முன்கூட்டியே தீர்மானிக்கபப்ட்டிருக்கின்றன. யாரால்? மகாதேவர், பெருமாள், பகவதி ,சாஸ்தா? அனந்தனுக்கு ஏனோ இந்த தெய்வங்களுக்கு நீருடன் நேரடித் தொடர்பு இருக்குமென தோன்றவில்லை. அவர்கள் எல்லாம் சொற்கத்தில் வேறுவேறு வேலைகளில் இருக்கிறார்கள். நீருக்கு வேரு ஏதோ தெய்வம் உண்டு. மேலே வானத்தில் எங்கோ உட்கார்ந்துகொண்டு நீரின் வழிகளை ஒரு சின்ன பென்சில் வைத்து அது வரைகிறது. அதை நீரால் மீறமுடியாது. அந்த தெய்வமும் நீரால் ஆனதாக இருக்கும். அதன் உடல் நீலநிறத்தில் நீர் போல நெளிந்தபடியே இருக்கும் .அதன் உடல் வழியாக மறுபக்கம் பார்க்கமுடியும். கண்ணாடி போல ஒளி விடும். அப்படி தனக்குத் தோன்றியதை என்ணியபோது அனந்தனுக்கு பரபரப்பாக இருந்தது. அதை ஜோசியர் தாத்தாவிடம் சொல்லவேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.

அனந்தன் உள்ளே போனான். எதையாவது கொறித்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தான். அம்மா உள்ளே சின்ன அறைக்குள் கொடித்துணிகளுக்கு நடுவே பனம்பாயை விரித்து தலையணைவைத்து மல்லாந்து படுத்து புத்தகத்தை மார்புமீது வைத்து விரித்து படித்துக் கொண்டிருந்தாள். பெரிய இமைகள் பாதி மூடியது போல சரிந்திருந்தன, உள்ளே கருவிழி அங்குமிங்கும் ஓடுவது இமைப்பிளவின் வழியாகத் தெரிந்தது. உதடு உலர்ந்து ஒன்றோடொன்று ஒட்டியிருக்க காயம் சற்று கருகி கருஞ்சிவப்பு கொண்டிருந்தது. அம்மாவின் முண்டு சற்று மேலேறி அவள் முழங்கால்வரை லேசான வீக்கத்துடன் பளபளப்பாக இருப்பதை அனந்தன் கண்டான். லைப்ரரி புத்தகம். திருவட்டார் ஸ்ரீ சித்திரைத்திருநாள் மெமோரியல் லைப்ரரியிலிருந்து ராசப்பன் எடுத்துவந்து கொடுத்தது.

அனந்தன் அருகே போய் அமர்ந்து அதன் அட்டையை உற்றுபார்த்தான். பெரிய கண்கள் கொண்ட ஒரு பெண்ணின் படம். ஜிப்பா போட்டு நடுவகுப்பு எடுத்து தலைசீவிய ஒரு வரைமீசைக்காரரின் தலைமட்டும் அடியில். மேலே வளைந்த மலையாள எழுத்துக்கள். ” அம்மா, இது என்ன புஸ்தகம்?” என்றான் அனந்தன். ”கதை”என்றாள் அம்மா. ”என்ன கதை” அம்மா ஒன்றும் ஒல்லவில்லை. ; ”இது என்ன எழுதியிருக்கு?” அம்மா கண்களைத் திருப்பாமலேயே ”ஸ்ரீகாந்தன்” என்றாள். ”நல்ல கதையா அம்மா?” அம்மா”ம்”என்றாள். அனந்தன் குப்புற படுத்து தலையை அடியில்கொண்டுசென்று அட்டையைக் கூர்ந்துபார்த்தான். இப்போது ஸ்ரீகாந்தனின் கண்கள் அவனைப்பார்த்தன. நல்ல மனிதன், துக்கமான கண்கள். ”யார் எழுதின கதை அம்மா?” அம்மா ”சரத்சந்திர சட்டர்ஜி ” என்றாள். ”அந்த சரத் சந்திர சட்டர்ஜி எவ்ளவு கதை எழுதியிருக்கார்?” .அம்மா ”போ…போயி விளையாடு…அம்மா பிறவு சொல்லுதேன்” என்றாள்

”சரத் சந்திர சட்டர்ஜி! சரத் சந்திர சட்டர்ஜி!”என்று தனக்குள் சொல்லியபடி அனந்தன் வெளியே நடந்தான். எவ்வளவு கம்பீரமான பெயர். நல்ல தாளம் உள்ள பெயர். அனந்த கிருஷ்ணன், தாளமே இல்லை. த்ரிவிக்ரமன் தம்பி சார் ”அனந்த கிருஷ்ணன் நாயராடே?”என்று கேட்டார். ”இல்ல சார். அனந்தகிருஷ்ணன் மாத்திரம்தான் ”என்றான் அனந்தன். ” எந்தா நாயர்னு ஒரு கொறவு ?”என்று கேட்டுவிட்டு ஆஜர் புத்தகத்தை எடுத்துப் பார்த்தார். அதன் பின் அவர் மட்டும் ஒவ்வொருமுறையும் மறக்காமல்  எப்போதும் அனந்த கிருஷ்ணன் நாயர் என்றுதான் கூப்பிடுவார். அசட்டுத்தனமான பெயர். சரத் சந்திர சட்டர்ஜி! எவ்வளவு நல்ல பெயர். பெரிதாக ஆனதும் அந்த பெயரையே தானும் வைத்துக்கொள்ள வேண்டும்.

அனந்தனுக்கு சில நாட்களுக்கு முன்னால் ஜகத்சிம்ஹன் என்ற பெயர் மிகவும் பிடித்துபோய் அதையே வைத்துக்கொள்ள நினைத்தது ஞாபகம் வந்தது. அது என்ன கதை? கபால குண்டலா ? இல்லை வேறு ஏதோ? அம்மா சொன்ன கதையில் ஜகத்சிம்ஹன் ஒரு பெரிய குகைக்குள் வாளை உருவியபடி தனியாகப் போகிறான். நல்ல இருட்டு. உள்ளே தன்ணீர் ஓடையாக ஓடுவதன் வெளிச்சம் மட்டும்தான். குகையில் நிறைய ஓவியங்கள் கண்களை விழித்து பார்த்துக்கொண்டிருந்தன. அந்தக்குகைக்குள்தான் சந்தால் ராஜாக்கள் ஒளித்துவைத்த அருணபுஷ்பம் என்ற ரத்தினம் இருந்தது. ஆனால் சரத் சந்திர சட்டர்ஜி அதைவிட நல்ல பெயர். பெரிய ஆளாக மாறியதும் அதைவிடபெரிய புஸ்தகம் எழுதவேண்டும் என்று அனந்தன் முடிவுசெய்தான். அந்த புஸ்தகத்தை தூக்கவே முடியாது. அதை தரையில் விரித்து வைத்து பக்கத்தில் ஒரு ஸ்டூல் போட்டு உட்கார்ந்துதான் படிக்க முடியும்!

அனந்தன் அடுக்களைக்குள் சென்று வைப்புபெட்டியைத் திறந்தான். அனந்தனின் திடீர் பசிகளுக்காக கண்ணாடியாலான பரணிக்குள் வறுத்த பயறு போட்டுவைத்திருந்தாள் அம்மா. அதை அள்ளி ஒரு சின்ன தட்டத்தில் போட்டுக் கொண்டான். ஒருதுண்டு கருப்பட்டி இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அம்மாவை அவள் படிக்கும்போது எழுப்ப முடியாது. அனந்தன் அதை கொறித்தபடி மீண்டும் மேற்குப்புறத்துக்குச் சென்றான். பறம்பே இருட்டாக இருந்தது. வானத்தில் அடர்ந்த கருமேகம் பந்தல்போல பரவியிருக்க எல்லா மரங்களும் அசையாமல் நின்றன. தென்னை ஓலைகளின் நுனியில் மட்டும் தூங்கும் அடைக்கோழியின் வால்நுனி போல ஒரு சிறிய அசைவு இருந்துகொண்டிருந்தது. அனந்தன் பறம்பில் இறங்கி மேற்கு எல்லைக்குப்போய் விறகுபுரையின் விளிம்பி ஏறி நின்றான். விறகுப்புரைக்குள் அடுக்கிவைத்த தென்னைமட்டைகளுக்குமேல் கோழிகள் அணைந்திருந்து கக்கக்கக் என்று சொல்லிக் கொண்டிருந்தன. சாணிக்குட்டைகளும் ஏழெட்டு அணைதடிகளும் கிடந்தன.

அனந்தன் எதிரே தெரிந்த பெரிய ஆனைமதிலையே பார்த்தான். அப்பாவின் அப்பாவின் தறவாட்டு வீடு இருந்த இடத்தைச் சுற்றி வளைத்த காப்பு மதில் இப்போது இரண்டுபக்கம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. கிழக்குபக்கம் இடிந்து பெரிய பாளங்களாக தரையில் விழுந்து மாழையில் பாதி கரைந்து காச்சிலும் காட்டுபயறும் கொடிகள் படர்ந்துமூடிக் கிடக்கிறது . ஒருபக்கம் சுவர் காணாமலேயே போய்விட்டது. அங்கெல்லாம் முருக்கு நட்டு மூங்கில் பிளாச்சு கட்டி அதில் காரைமுள் நட்டு படர்த்திவிட்டு வேலி கட்டியிருக்கிறது. உள்ளே இருந்த வீடு தட்டும் நிரையும் கொண்ட பத்தாயப்புரை என்று காளியம்மச்சி சொன்னாள். வயக்கவீடு என்று பெயர், அப்பாவின் தறவாட்டுபெயர் அதுதான். ”ஐஸரியம் ஒள்ள வீடல்லியோ.எட்டு தலமொறக்காலம் அங்கிண பேருகேட்ட அம்மச்சிமாரு ஒறைச்ச கொலவாளும் நெறைச்ச நெலவறையுமாட்டு இருந்தாவ. இப்பம் எல்லாம் போச்சு. அம்மச்சிமாரு இருந்தெடம் மண்ணாப் போச்சு. கேஸ¤ம் வழக்கும் வக்காணமும்….. போட்டும் , எல்லாம் மகாதேவனுக்க இஷ்டம்போல. அல்லாம பின்ன நாம என்ன சொல்லுகது?”என்றாள்.

”இப்பம் கேசு எங்கயாக்கும் நிப்பு?” என்றார் ராமன்போத்தி ஸ்ரீமண்டபத்தில் அழுக்குத்துண்டுடன் மல்லாந்தபடி. கோயிலில் சந்தியாநேரத்துக்கான சாந்தி முடிந்தபின் ஜாம சாந்தி நடக்கும்வரை போதி மண்டபத்தில் படுத்திருக்க கும்பிட வந்தவர்களும் கோயில் வேலைக்காரர்களும் சேர்ந்து அமர்ந்து பேசுவார்கள். காளியம்மச்சி ”ஓ அது நடக்குது அம்பது வருஷமாட்டு… பப்பனாவபுரத்தில கோடதி இருக்கும்பம் அங்க கொண்டு குடுத்த கேஸாக்கும். பாறசாலை செம்பகவல்லிக்கும் பொம்மனை சுலோசனைக்குமாக்கும் கேஸ¤. கேஸ¤ குடுத்தது சுலோசனைக்க நாயர் பெலராமன். அவன் ஒரு சும்பன் நாயரு. அவனுக்கு வேற சோலி இல்ல. கிருஷிப்பணி ஒரு மயிரும் தெரியாது. மத்த சோலி அல்லாம ஒண்ணும் தெரியாதுண்ணு சுருக்கம். ஒரு கேஸ¤ குடுத்தா அத வச்சிட்டு கொஞ்சநாள் வெள்ளக் குப்பாயமும் சீலைக்குடையும் டார்ச் லைட்டுமா கோடதிகளுக்கு போலாமே. வக்கீல் கொமஸ்தன்மாருக்க ஒப்பரம் இருந்து நல்லா பரிப்புவடையும் சுகியனும் தின்னு சூடு சாயை ஊதிக்குடிக்கலாம். அதுக்காச்சுட்டி குடுத்த கேஸ¤…. ”

”நீ என்ன வேணுமானாலும் சொல்லு காளீ, நாயரானா அடியோ பிடியோ ஒரு நாலு கோடதி கேஸ¤ வேணும்… அதொரு மதிப்பாக்கும்” என்றார் கால்களை மடித்து, முழங்கால் உயரத்தைவிட தலை தாழ்ந்திருக்க கூன்முதுகை வளைத்து தூணில் சாய்ந்திருந்த பாச்சுபிள்ளை பாட்டா. பாட்டாவின் மூக்கு வளைந்து மேலுதடை தொடுவது போலிருக்கும். வாய் நன்றாக உள்ளே போய்விட்டது.

”…பின்ன, கோடதியில இல்லா நாயருக்க அம்மை ஆருகிட்டே அந்தியுறங்கினாள்ணு சொல்லுகான். இப்பம் சுலோசனைக்க மூத்தமகன் செல்லப்பன் நடத்துகான் கேஸ. வீடு பொளிஞ்சு விழுந்து ஊரில உள்ளவனெல்லாம் கிட்டின கழுக்கோலையும் உத்தரத்தையும் கொண்டுபோனாவ. வீடிருந்த தடத்த நிதி கிட்டும்ணுட்டு தோண்டித் தோண்டி தேடின கள்ளன்மாரு பெருச்சாளி மாதிரி கிண்டி மறிச்சு போட்டாச்சு. இப்பம் இந்த பாதி ஆனைமதிலும் ஓடு பொளிஞ்ச கொட்டியம்பலமும் மிச்சம். அண்டிகளைஞ்ச கொரங்கு கொண்டிய பிடிச்சு ஆட்டினது மாதிரி இப்பம் இதுக்காக்கும் கேஸ¤. போக்கத்த சவங்க…” காளிப்பாட்டி புகையிலையை சுருட்டி அதை பல்லின் பெரிய இடைவெளி ஒன்றில் நன்றாக செருகி இறுக்கினாள்.

”தங்கப்பன் சாருக்கு எடத்த வாங்குத சிந்த உண்டோ?” என்று ஆசாரி குமரேசன் கேட்டார். காளிப்பாட்டி வாயை கோட்டி கீழுதட்டை நீட்டி சாற்றை உறிஞ்சியபின் ”அவனுக்கு அவனுக்க தந்தைக்க வீடும் மன்ணும்ணுட்டு ஒரு சங்குருக்கம் உண்டு. பெண்ணு கெட்டி அவளுக்க வகை நாலு புத்தன் கையில வந்ததும் ரண்டு கட்சிகள்ட்டயும் செண்ணு அந்தமட்டுக்கும் காலுபிடிச்சு பாத்தான். அவ்வோ சம்மதிக்கல்ல. வாசியில்லா? நீயா நானா, நீ செத்தா நானும் சாவுதேன் – அதாக்கும் வாசி…. பின்ன அங்கிண இங்கிண தேடி பொன்னுவெலை குடுத்து இந்தப்பறம்ப வாங்கி ஒரு வீட்டைக் கெட்டி அதுக்கு வயக்க வீட்டு மேக்கே விடுண்ணு பேரும்போட்டு கேறி குடியிருக்கான். அவனுக்கு அப்டி ஒரு நெறைவு…”

”அவருக்கக் தந்தையானுக்க வீட்டில அவருக்கு பாத்தியதை இல்லியோ?”என்று பாண்டிக்காரன் சுடலை கேட்டார்.

”பாண்டிக்காரன் கேக்குத கேள்விய கேட்டுப்போட்டான் பாத்தேரா ஓய். மக்கா, இது திருவாங்கூராக்கும். அனந்த பப்பனாவ சாமிக்க மண்ணு. இங்க மக்கத்தாயம் இல்ல மருமக்கத்தாயமாக்கும். சொத்து நேரா பெண்மகக்ளுக்கும் அவிக பிள்ளையளுக்குமாக்கும் போகும்…” போத்தி சொன்னார்

”பெத்த பிள்ளைக்கு சொத்தில்லேண்ணா, நல்ல சட்டம் ”என்றார் பாண்டிக்காரர்.

”ஓரோ நாட்டில ஓரோ சட்டம். உம்ம ஊரில கோடீஸ்வரனானாலும் பெத்த பெண்ணடிகளுக்கு அஞ்சு பைசா குடுக்காம எல்லாத்தையும் பையம்மாரு எடுத்துக்கிடுவானுகள்லாவே? இப்பம் நீரு இருக்கேரு, உம்ம குடும்ப சொத்தில உம்ம தங்கச்சிமாருக்கு பாகம் குடுப்பேராவே?”

” பொட்டைகக்ழுதைகளுக்கு மண்ணு குடுத்தா அதுக என்ன வெள்ளாமையா செய்யப்போகுது? சும்மா கெடப்பீரா?” பாண்டிக்காரர் சொன்னார்.

”அப்பம் அதாக்கும் கதை. இதில நமக்கு கிட்டினா அது நியாயம். கிட்டல்லண்ணா அநியாயம். அல்லாத பூமியில நீதி ஞாயம்ணுட்டு ஒரு அடிமயிரும் இல்ல கேட்டேரா?”

”மகாதேவனை தொட்டு பூசிக்குத போத்தி சொல்லித வேளத்தபாரே”என்றார் பாச்சுபிள்ளை

”மகாதேவன் மயிரப்பிடுங்கினாரு…போவும்வே”

”ஓய் ஒய் பஞ்சபாவம் சொல்லாதிரு வே” பாச்சுபிள்ளை கைநீட்டி கூவினார்

”வேய் என்ன கெடந்து மோங்குதேரு… பரமசிவன் பிரம்மாவுக்க தலமுடிய பிடிச்சு கழுத்தை அறுத்து எடுத்தாரா, சொல்லும்..”

”அது உள்ளதாக்கும்”

”பின்ன நான் என்னவாக்கும் சொன்னேன்…? சும்மா கெடந்து கெணாட்டுதேரு, போற காலத்தில போக்களியாம”

”போறவன் உமக்க அப்பன் நாராயணன் போத்தி. ”என்றார் பாச்சுபிள்ளை. ”நான் அந்த நஞ்சையும் குறெ கண்டவனாக்கும்”

”ரெண்டாளும் சேந்து அந்தக்காலத்தில நல்லா கையாலைகள் கேறிச் சாடியிருப்பியளே? ”

”சேச்சே, அது செரியில்ல போத்திசாமி,  பெத்த அப்பாவைப்பத்தி அதெல்லாம் சொல்லுகது மரியாதை இல்லை ”என்றார் பாண்டிக்காரர்

”அதுக்கும் வல்ல புராணத்தைச் சொல்லுவாரு, அங்களம் முடிஞ்ச புராணம். மண்ணாப் போறதுக்கு” என்றார் பாச்சுபிள்ளை

போத்தி ”ஏம்வே கோயிலில உக்காந்து அமங்களமாட்டு பேசுதேரு? ஒரு சான்னித்தியம் உள்ள எடமுல்லா? ”என்றபடி எழுந்து போனார். பாச்சுபிள்ளை வாயை நண்டுவளை போல திறந்து அவர் போன வழியையே பார்த்தார்.

அனந்தன் பயறு மிச்சமிருப்பதை உணர்ந்து மீண்டும் கொறிக்கத் தொடங்கினான். காற்றில் கோயில்பறம்பின் மாமரத்தின் இலைமாளிகை விசில்களைக் கலந்தது போல ஒலியெழுப்பியது. மாஞ்சருகுகள் பறந்துபோய் ஆனைமதில் மீது மோதிக் குவிந்தன. மதிலின் மறுபக்கம் ஓங்கி நின்ற வாழைகளின் இலைநுனிகள் மேல்விளிம்பில் கிளிப்பச்சைநிறத்தில் கிழிந்து கொடிகள் போல துடித்து துடித்து உரசின. நல்ல வெண்ணிறமான கும்மாயப்பூச்சு. இரு இடங்களில் மட்டும் கும்மாயம் உதிர்ந்து உள்ளே செம்மண் பரப்பு சிறு வெடிப்புகளும் கரைவுகளுமாக புண் போலத் தெரிந்தது. காட்டில் எழுந்துவளரும் பெரும்  சிதல்கூட்டை உடைத்து அந்தச் செம்மண்ணுடன் காய்ச்சிய அக்கானியும் அரைத்த கக்காச்சுண்ணாம்பும் கலந்து ஆனையைவிட்டு மிதிக்கவைத்து குழைத்து கட்டப்பட்டது. மேலே சுண்ணாம்பாலான கண்ணாடித்தேய்ப்பு. கண்ணாடித்தேய்ப்பு செய்வதைப்பற்றி குமாரன் ஆசாரி சொல்லியிருக்கிறார். செக்கில் போட்டு நன்றாக அரைத்து மையாக்கிய சுண்ணாம்பை தண்ணீரில் கரைத்து பாத்திகளில் கட்டி தேக்கிவைப்பார்கள். நீர் வற்றும்போது மேலே படிந்திருக்கும் வெண்ணைக்களியை பனை ஓலையால் வழித்தெடுத்து கும்மாயம்பூசிய பரப்பு மீது பூசி கண்ணாடியால் தேய்த்து மெருகேற்றுவார்கள். அது காயும்போது நல்ல துளுவன் பட்டுபோல வாழைக்குருத்துபோல ஒளிவிடும். வெள்ளைபூசவேண்டிய அவசியமே இல்லை.

ஆனைவிலாபோல நடுவே வளைந்து உப்பி மேலும் கீழும் குறுகிய மதில்சுவர். மேலே பெரிய ஒடுகள் பதித்து உடலில் நீர் வழியாமல் செய்யப்பட்டிருந்தது. மதில் மடிந்து சென்று மறுபக்கம் மையத்தில் வீட்டுக்குள் செல்லும் வாசலாக பெரிய கொட்டியம்பலம். யானைகள் துதிக்கைபிணைத்து வரிசையாகச் செல்லும் மரக்கொத்துவேலை செய்யப்பட்ட தேக்கு உத்தரங்கள் மீது தேக்குமரக் கழுக்கோல்கள் பாவி ஒட்டுக்கூரை.கீழே இருபக்கமும் கண்னாடித்தேய்ப்பு சுவரில் பழங்காலத்தில் மூலிகைச்சாயத்தால் வரையப்பட்ட லட்சுமி பிள்ளையார் ஓவியங்கள் அழிந்து ஆட்டத்தில் கனியாத்தி கலைத்த களமெழுத்து படம் போல தெரிந்தன. நீலநிறம் மட்டும் ரசாயனச்சாயம். சரஸ்வதியைச்சுற்றி இருந்த தடாகமும் பிள்ளையாரின் வயிற்றில் சுற்றிய நாகமும் நீலமாக அழியாமலிருந்தன. பக்கச்சுவரில் வெளியே பார்க்கவும் உள்ளே பார்க்கவும் சித்திரக் கொத்துப்பணி செய்த கதவுகள் கொண்ட சிறிய கிளிவாதில்கள். அமர்ந்து அமர்ந்து தேய்ந்து பித்தளைபோல வழவழப்பகிக் குளிர்ந்த மரத்தாலான இரிப்புமாடமும் தட்டுமாடமும்.

இரிப்பு மாடங்கள் நடுவே உள்ளே போகும் நடைவழியில் கனமான கருங்கற்களைச் செதுக்கிப் பதித்திருந்தது. இறங்கும் படிகளில் நெளியும் பாம்பை செதுக்கிய கற்படிகள் சரிந்து ஊடாக நெருஞ்சி முளைத்து கிடந்தன. பாதையின் இருபக்கமும் விளக்குப்பாவைகள் செதுக்கபப்ட்ட கல்நிலைகளில் பித்தளையை உருக்கி ஊற்றி பதிக்கப்பட்ட இரும்பு கதவாணிகளில் பண்டு இருந்த கனமான கதவுகள் இப்போது இல்லை. கமுகுத்தடி பிளந்த வரிச்சிலால் செய்த அழிக்கதவு கம்பிபோட்டு கட்டிவைத்திருந்தது. உள்ளே வாழைகளும் தென்னையும் காட்டுநொச்சியும் காசித்தும்பையும் தொட்டால்வாடியும் அடர்ந்த பச்சைக்குள் செதுக்கிய கல்தூண்களும் கற்பலகைகளும் கிடந்தன. கொட்டியம்பலம் உயரமாக ஒரு சிறிய கட்டிடம் போலவே இருந்தது. வாழைத்தோட்டத்தில் கட்டும் ஏறுமாடத்தையே பெரிதாக அலங்காரமாகக் கட்டியதுபோல.

திடீரென்று கையாலை அருகே குவிந்து கிடந்த சருகுகள் கிளம்பி சுழன்று சுழன்று வந்து இலைகளிலும் புதர்களிலுமாக படிந்து அமைந்தன. அனந்தன் எழுந்து காற்று வரும் வழியைப் பார்ப்பதற்குள் இன்னும் பெரிதாக காற்றலை கிளம்பி பெரிய மிருகங்கள் எழுந்து முட்டிமோதி வருவதுபோல சருகுக்குவியல்கள் பறந்து சுழன்று வந்தன. அனந்தனின் வாயும் கண்ணுமெல்லாம் மண். அவன் கண்களைக் கசக்கியபடி துப்பியபோது பறம்பின் எல்லா மரங்களும் உய் உய் என்று ஊளையிட்டன. கண்களை திறந்தவன் தென்னைகள் சாமிவந்து தலைசுழற்றி ஆடி உடல்நடுங்குவதையும் புதர்கள் ஆற்றங்கரை நாணல்கள் போல தெற்கு நோக்கி சீவி ஒதுக்கப்பட்டிருப்பதையும் கண்டான். சருகுக்குவியல்மீது மண் பொழியும் ஒலி மழைபோலக் கேட்டது. காற்று பறம்புக்கு அப்பால் ஆற்றின் பள்ளத்தில் பாய்ந்திறங்கும் ஓலம்.

மதிலில் கும்மாயப்பரப்பின்மீது பெரிய மழைத்துள்ளிகள் சாய்வாகப் பாய்ந்து  வந்து  தத் தத் என்று விழுந்து உடனடியாக உலர்ந்தன. சருகுக்குள் ஒரு ஓணான் ஓடி குதித்து மரத்திலேறியது. இலைகளுக்கு மேல் கலைந்து பறக்கும் காகங்களின் சிறகொலி கேட்டது. மழைத்துளி சில கணங்களில் நின்று காற்று மட்டும் ஊளையிட்டு வீசியபின் இன்னொரு கணத்தில் பொட்டலத்தை அவிழ்த்து கொட்டியதுபோல மீண்டும் மழைத்துளிப் பொழிவு. சுவர் நனைந்து நிறம் மாறி மேலும் துலக்கமான வெண்மையாகியது. அனந்தன் வானத்தைப்பார்த்தான்.நீராலான கூரை. அலைகளாக மழையின் ஓசை வலுத்து தென்னைஓலையை தரையில் போட்டு சுழற்றி இழுக்கும் ஒலிபோல எழுந்தது. இலைகள் நீர் சொட்டி எம்பிக் குதிக்க ஓலைகள் நீருடன் சுழன்றடிக்க கூரை விளிம்பிலிருந்து ஜோசியர் தாத்தாவின் ஸ்படிக மாலை போல நீர் விழ அனந்தன் மழையையே பிரமைபிடித்து பார்த்து நின்றான். சட்டென்று நிறுத்தப்பட்டதுபோல காற்றும் மழையும் ஓய்ந்து எங்கும் துளிகளின் ஒலிமட்டும் கேட்டது. சிறிதுநேரம் கழித்து வீசிய காற்றில் எல்லா இலைகளும் உலுக்கப்பட்டு ஒருநிமிடமழை ஒன்று பெய்தது.

அப்பா பெரிய காட்டுசேம்பின் இலையை குடைமாதிரி பிடித்துக்கொண்டு கமுகும்பாளை கோட்டிய பையில் நீட்டிய வெற்றிலைநுனிகள் தெரிய மடித்துக்கட்டிய வேட்டியுடன் மேலே துண்டுமட்டும் போட்டு செருப்பில்லாமல் சேற்றை மிதித்தபடி வந்தார். உள்ளே கருப்பட்டி போட்டு அவித்து பாகம்செய்த குமரேசவிலாஸ் நயம் யாழ்ப்பாணம் தடம்புகையிலைப்பொதி இருக்கும் என்று அனந்தன் அறிவான். ஒருமுறை அப்பா இல்லாதபோது அனந்தன் பொதியை திறந்து மணமும் இனிப்பும் நிரம்பிய புகையிலையை ஒரு கிள்ளு அள்ளி போட்டு மென்று தலைசுற்றி வாந்தி எடுத்திருக்கிறான். வடக்குப்புறத்திண்ணையில் வியர்வையுடன் படுத்தபோது உத்தரம் நெளிந்து நெளிந்து வீடே ஆடியது. காது அடைத்து தங்கம்மையின் குரல் வெகுதொலைவில் கேட்டது. பச்சைமிளகாய் கிள்ளிப்போட்ட மோர் குடித்து அரைமணிநேரம் கழித்துதான் அவனால் எழுந்திருக்கமுடிந்தது. அப்பா வக்கீலை பேச்சிப்பாறை பஸ் ஏற்றிவிடப்போன போது சட்டைபோட்டு குடை எடுத்துக்கொள்ளவில்லை. தூங்கி எழுந்து வக்கீல் அப்பாவிடம் மேலும் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தார். அம்மா ஊறவைத்த பச்சரிசியை அம்மியில் வைத்து அரைத்து,தேங்காயும் உப்பும்சேர்த்து பிசைந்து சீலாந்தி இலையில் வைத்து மடித்து கனலடுப்பில் போட்டு சுட்டு சூட்டப்பம் செய்தாள். நான்கு சூட்டப்ந்த்தை ஆவிபறக்க பிய்த்து தின்று பசும்பால்விட்டு சீனி போட்ட அரைமொந்தை டீயை பித்தளை வங்கத்தில் விட்டு விட்டு குடித்து ஏப்பம் விட்டு வியர்வை ஆறிய பின் வக்கீல் கிளம்பினார்.

அப்பா கொச்சப்பியின் மகன் ஜெஸ்டஸை வரச்சொல்லியிருந்தார்.  முக்கால்சாக்கு வாசறுமிண்டான் சம்பா அரிசியை கட்டி ஜெஸ்டஸின் தலையில் தூக்கிவைத்து முன்னால் அனுப்பினார். வக்கீல் ”அப்பம் நான் வாறண்டே தங்கப்பா….பாத்து எடுத்து நடந்துக்கோ. சொன்னது ஓர்மையில இருக்கட்டும். ஆப்பீஸில வந்து என்னை பாரு. நான் காரியங்கள் மங்களமாட்டு நடத்தி தாறேன்… வாறண்டே…மக்கா வெசாலமே வாறன் கேட்டியா?” என்று கிளம்பி படலை திறந்தபின் ”இல்ல மறந்துபோட்டன். அந்த பழுக்கடைக்கா குடுக்கதாட்டு சொன்னியே”என்றார். அப்பா ஓடிப்போய் பறித்து வைத்திருந்த பாக்குகளை ஒரு பையில்போட்டு தன் கையில் எடுத்துக் கொண்டார். வக்கீல் மகாதேவர் கோயிலை நோக்கி நின்று கைகூப்பி கண்மூடி கொன்சநேரம் கும்பிட்டபின் கால்களை வெடுக் வெடுக்கென்று தூக்கிவைத்து குடையை ஊன்றி முகவாயைத் தூக்கி கண்ணாடியின் கீழ்ச்சில்லு வழியாகப் பார்த்தபடி நடந்தார். அவர்கள் வெளியே சென்றதும் அம்மா ”வீட்ட பசுஞ்சாணகம் கொண்டு மெழுகணும்…. நெஞ்சவிஞ்ச சனியன்”என்றாள்.

அப்பா நடந்துபோன பாதையின் காலடிக் குழிகளில் சிவந்த நீர் ஊறித்தேங்குவதை அனந்தன் கண்டான். பயறு தீர்ந்துவிட்டது. மீண்டும் வீட்டுக்குபோகலாமா என்று யோசித்தான். ஆனால் அப்பா வீட்டுக்கு வந்ததுமே அம்மாவை ஏதாவது வேலை எவ ஆரம்பித்திருப்பார். அனந்தன் கால் கடுத்து சுற்றுமுற்றும் பார்த்தான். பெரிய ஆட்டுக்கல் கிடந்தது. பழைய வயக்கவீட்டுக்குள் கிடந்த ஆட்டுக்கல் அது. ஒருநாள் இரவு யாரோ உள்ளே புகுந்து நிதி தேடியிருந்தார்கள். ஓடையிலிருந்து நீர் மொண்டு ஊற்றி ஈரமண்ணை சத்தம் செய்யாமல் மண்வெட்டியால் அள்ளி இடுப்புவரைக்கும் தோண்டிப் பார்த்த குழி புது மண் எழுந்து கிடந்தது.கருப்பம் காலையிலேயே அங்கே போய் ம்ங் ம்ங் என்று முனகியபடி வாலாட்டியபடி புதுமண்ணைத் தோண்டி குதித்துக் கொண்டிருந்தது. அப்பா கையாலையில் ஏறி நாயைக் கூப்பிட்டார். ”டா,, இங்க வா… வாடா” பிறகு குழியைக் கவனித்து கையாலையை பிரித்து உள்ளே சென்றார். அனந்தன் அப்பாவைப் பின்ர்கிடர்ந்து போனான்.

குழிக்குள் ஒரு கல்விளிம்பு தெரிந்தது. அப்பா உடனே அப்பு அண்ணாவுக்கு ஆளனுப்பினார். கொச்சப்பியும் சார்லஸ¤ம் வந்தார்கள். எல்லாருமாகச் சேர்ந்து மண்ணைவிலக்கியபோது அந்த பெரிய ஆட்டுரலின் பாதிவட்டம் தெரிந்தது. ” சின்ன வயசில விஷ¤வுக்கு தோசை சுடணுமானா இதிலதான் அரைக்கிறது கேட்டையா அப்பு? நல்ல ஆளு சைஸ¤க்கு குழவி உண்டும். ஆட்டணுமானா ஒத்த ஆம்பிளையாலதான் முடியும். பெண்ணாப்பெறந்தவ யாரும் அசைச்சுக்கிட மாட்டாவ…. ” அப்பா மண்குவிந்த கரையில் சுற்றி சுற்றி வந்தார். ”நான் விளிம்ப பாத்தப்பமே கண்டுபிடிச்சுப்போட்டேன்…. கடுத்தா அம்மாவனுக்க சரீரம் எப்டி இருக்குமிண்ணாக்கும் நீ நெனைக்கே? கிங்காங்குல்லா? தோளெல்லாம் நல்ல கன்கன்பீரங்கி மாதிரியாக்கும் . அடிச்சு வார்த்தெடுத்த இரும்புடே… மடியில துவர்த்தபோட்டுகிட்டு கேறி இருந்தாருண்ணாக்க ஒருமணிக்கூறில இருவத்தஞ்சுகிலோ அரியை சந்தணமாட்டு அரைச்சு வழிச்சுப்போடுவாரு…”

ஆட்டுக்கல் அசைந்தபோது இளகிய மண்ணைக்கண்டு அனந்தன்னுக்கு கிலியாக இருந்தது. அவ்வளவுபெரிய வட்டம். மூன்று கடப்பாரை கொண்டு நெம்பி அதை சரித்தபோது வட்டமான தடமெங்கும் மண்புழுக்கூட்டம் போல வேர்கள் அடர்ந்து தெரிந்தன. வடம்கட்டி இழுத்தும் கமுகு வரிச்சில் கொண்டு நெம்பியும் ஆட்டுகல்லை அசைத்து தூக்கி மேலேதூக்கினார்கள். அனந்தன்னின் மார்பளவுக்கு உயரம். அவன் படுத்தால் காலும்தலையும் உள்ளே வருமளவுக்கு அகலம். குழிக்குள் அவன் உட்கார்ந்துகொள்ள முடியும். அத்தனைபெரிய ஆட்டுக்கல்லை அனந்தன் பார்த்ததே இல்லை. ”எமகாலச் சரக்குல்லா?”என்றான் சார்லஸ் உடலெங்கும் மண் அப்பியிருக்க மூச்சுவாங்கியபடி அதை சுற்றிவந்து.

”அது பின்ன அண்ணைக்குள்ள ஆளுகள் இண்ணைக்குள்ள வக்கு தேவாங்கு வதங்கல் கேஸாடே? அடிமொறையும் அப்பியாசமும் படிச்ச குருக்களாக்கும். ஒரு நேரத்துக்கு இருநாழி அரிக்க கஞ்சியும் ஒரு முழுக்கூழைச்சக்கைக்க மயக்கும் இருந்தாத்தான் குடிச்சு நெறையும். அப்டிப்பட்ட ஆளுகளாக்கும். டேய் சார்லஸ், தலைமொறையாட்டு எங்களுக்க குடும்பமாக்கும் இந்த ஏரியாவுக்கு களரி குருக்கள். மகாராஜா பொன்னுதம்புரான் கைகொண்டு தந்த பட்டும் வளையும் வீரசங்கிலியும் எல்லாம் நான் என் கண்ணுகொண்டு கண்டதாக்கும்…” அப்பா தன் வடசேரி சுட்டித்துண்டாலேயே ஆட்டுகல்லை துடைக்க ஆரம்பித்தார். ” ஏமான் மாறணும் . நல்லா வெள்ளம் விட்டு களுவிப்போடலாம்…” என்றார் கொச்சப்பி. ”ஆனா இத வச்சு மாவாட்டுயதுக்கு ஆரக்கொண்டு கழியும்? . குழியில இருந்து அம்மாவன்மார உயிர்ப்பிச்சு எடுக்கணுமே ஏமானே?”

அப்பாவுக்கு அந்த அபிப்பிராயம் மிக மிக மகிழ்ச்சி அளித்தது. வெற்றிலைக்காவிப் பற்கள் தெரிய கெக் கெக் கெக் என்று சிரித்து துண்டால் வாயைத் துடைத்தார். ”கெடக்கட்டுடே கொச்சப்பி. நாலாளு காணட்டு வலிய வயக்கவீட்டுகாரன்மாருக்க கழிஞ்ச காலம் என்னாண்ணுட்டு.. பின்ன அல்லாம?” ஆட்டுக்கல்லை உருட்டி விலக்கியபின் அங்கேயே நன்றாகத் தேடிப்பார்த்தபோதும் குழவிக்கல் கிடைக்கவில்லை. பதிலுக்கு ஏழெட்டு சிறிய எலும்புகள் கிடைத்தன. சிவப்பாக மண் படிந்து மரக்குச்சி போல் இருந்த ஒன்றை எடுத்து நீட்டி அப்பு அண்ணா ” கையெல்லாக்கும்.” என்றார். கொச்சப்பி அதை வாங்கிப்பார்த்து ”சின்னதாட்டுல்லா இருக்குவு?”என்றார். ”சின்ன பிள்ளையாக்கும். கூடிப்போனா ஒரு வயசு…” என்றார் அப்பு அண்ணா

அப்பா அதை வாங்கிப்பார்த்துவிட்டு ” அந்தக்கலத்தில தலப்பிள்ள ஆம்பிள்ள செத்தா வீட்டுவக்கிலேயே குழிச்சிடுயதாக்கும் ரீதி. எரிக்கிறதில்ல. அதொரு சாஸ்திரம்…”என்றார். அதை திருப்பிப்பார்த்து ” எனக்க அண்ணன் ஒராள் சின்னவயதில செத்திட்டுண்டுண்ணு சொல்லிக் கேட்ட ஓர்மை இருக்குடே . இது அவராக்குமோ ?” சார்லஸ் வாங்கி பார்த்துவிட்டு ”இது பத்து நூறு இருநூறு வரியம் பழசாக்கும் ஏமானே”என்றான். ”எப்டிடே சொல்லுகே?” ”புதிய எல்லானா அதில அரக்குமாதிரி பசைப்பற்று இருக்கும். அம்பது வருசம் கழிஞ்சா அது சுண்ணாம்பாட்டு ஆயிப்போடும். ஆனா நல்ல பெலம் இருக்கும். ஓங்கி அடிச்சா ஒருத்தன கொண்ணு போடலாம். இது பொடிஞ்சு வருது பாத்தியளா, அப்பம்  சுண்ணாம்பு பசையுணங்கி நல்லா மடிச்சுப்போச்சு….”

”நீ வைத்தியன்லா” என்றார் கொச்சப்பி பாராட்டாக. சார்லஸ் ”நம்ம அப்பனாக்கும் அந்தக்காலத்தில பனையேறிகளுக்கு கடுப்பு செய்துகுடுக்கியது. அந்தக்காலத்தில இந்த உருக்கிரும்பு இல்லல்லா? ஓட்டிரும்பு ஒடையும் காரிரும்பு வளையும். நயம் கடுப்புக்கோலுண்ணாக்க அது எரும மாட்டுக்க முழங்கால் எல்லுதான். குதிர எல்லு கிட்டினா அது ஒண்ணாம் நம்பர். ஒரு அம்பது வருசம் பழைய எல்லு ரெண்டெண்ணம் தேடி எடுத்து உள்ள இருக்க மஜ்ஜைக்குழியில நல்ல ஈயத்த உருக்கி விட்டு ஆறவச்சா நல்ல கடுப்புமட்டை ரெடி. நூறுவரியம் எண்ணைக்கும் ஆயிரம் மட்டம் போட்டு பாளை சதைச்சாலும் ஒண்ணும் ஆவாது. அப்பிடி ஒரு பெலமாக்கும்….நானும் சின்னவயசில அப்பன்கூட எல்லுதேடி போறதுண்டு…”

”அப்பம் இது ஏமானுக்க வல்ல அப்பூப்பனோ மற்றோ காணும்… இங்கிண வல்ல எடத்திலயும் நிண்ணு கேக்காரோ என்னமோ? ”என்றான் கொச்சப்பி. ”நான் எல்லாருக்கும் சேத்து பெலி போட்டு பெரயில வைக்குதேன்டே. ஒரு வருசமும் மனசறிஞ்சு நான் முடக்கினதில்ல பாத்துக்கோ” என்றார் அப்பா அந்த எலும்பை பார்த்தபடி ” அத குழியில போட்டுமூடுடே நாயிநரி கடிக்காம…” சார்லஸ் அதைப்புதைக்கும்போது ”ஏமானே கொளவில்லா?” என்றான். குழவி கிடைத்தது என்றதும் அப்பா பாய்ந்தோடி வந்து ”தோண்டுடே…ஏன் முழுக்கே?” என்றார்

தோண்டி எடுத்தபோது குழவி உடைந்து பாதிதான் இருப்பது தெரிந்தது. அடிப்பகுதியை காணவில்லை. மேல்பகுதியில் கைப்பிடிக்குமிழ் ஒரு நல்ல கருப்பட்டி அளவுக்கு இருந்தது.சார்லஸ் ஏதோ சொல்ல கொச்சப்பி ”போலே சவத்டெஹ்ளவுக்கு பெறந்த பய”என்றார் சிரித்தபடி. ”என்னவாக்கும் சிரி?”என்றார் அப்பா. ”இல்ல இந்த ஏமான்மாருக்க கைக்க சைஸ¤ வலுதுல்லா…அதாக்கும் சொன்னது.” என்றான் கொச்சப்பி. அப்பா ”அது பின்ன அப்பியாசிகள்லா? கையெல்லாம் இந்த இந்தமட்டுக்கு இருக்கும். ஓரோ வெரலும் ஒரு வெள்லரிக்கா அளவுல்லா…”. சார்லஸ் ”அதாக்கும் நான் சொன்னது ஏமானே. கை வலுதான கைகொண்டு பிடிக்கதும் வலுதாட்டு வேணுமுல்லா?” என்றான். அப்பா ஒரு கணம் யோசித்து திரும்பி அனந்தன்னைப்பார்த்துவிட்டு ”சோலியச் செய்யுங்கடே. சும்மா சலம்பாம….”என்றார்.

”ஏந்திவிடய்யா தள்ளிவிடய்யா ஐலஸா ” என்றெல்லாம் கூவியபடி .ஆட்டுக்கல்லை உருட்டி உருட்டி கொண்டுவந்து விறகுப்புரை அருகே போட்டார்கள். அப்பா அவரே தண்ணீர் மொண்டுவந்து நன்றாகக் கழுவினார். குழி நன்றாகத்தேய்ந்து கருமையும் பளபளப்புமாக பானையின் உள்பக்கம் போலிருந்தது. ஆட்டுக்குழவி ஒருபக்கமாகச் சாய்ந்து சாய்ந்து விழுந்ததனால் குழியின் ஒருபக்கம் சாய்வாக தேந்திருந்தது. அப்பா அந்த்ஹ தேய்வை மெல்ல தடவித் தடவிப் பார்த்தார். எல்லாரும் போனபின் அதனருகே ஒரு ஸ்டூல் போட்டு அமர்ந்து அதை பலவிதமாக ஆழமாக பார்த்து தொட்டு பரிசோதனைசெய்தார்.

1
2
முந்தைய கட்டுரைகிளிசொன்ன கதை:மேலும் கடிதங்கள்
அடுத்த கட்டுரைகிளி சொன்ன கதை: கடிதங்கள் மீண்டும்