தமிழகத்தில் தமிழ்

பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன்,

நலம் தானே?

இன்றைக்கு நடந்த ஒரு நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினேன். குடும்பத்துடன் இரவு உணவுக்காக சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒரு உணவகத்துக்கு சென்றோம். திண்டுக்கல்லில் ஆரம்பித்து இன்று சென்னை முழுவதும் பரவியிருக்கும் ஒரு தொடர் உணவகம் அது. அவர்களுக்கேன்றே பிரத்தியேக ஒலி அலைவரிசை! அதில் தமிழ் பாடல்கள் பெரும்பான்மையாக ஒலித்தன. சில இந்தி பாடல்களையும் ஒலிபரப்பினர்.

எங்கள் அருகே அமர்ந்த ஒரு வட இந்திய தம்பதி, மேசை விரிப்பு தாளில் இருந்த தமிழ் எழுத்துக்களை கண்டு வெறுப்பாக பேச ஆரம்பித்தனர். தொடர்ந்து கசிந்த இளையராஜாவின் பழைய பாடல்கள் அவர்களுக்கு நாராசமாக இருந்தது. உணவக மேலாளரை அழைத்து பிடி பிடி என பிடித்தனர். OMR பகுதி தமிழர்கள் வாழும் இடம் இல்லையென்றும் தமிழ் பாடல்களை ஒலிபரப்பி வியாபாரத்தை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுரை வேறு. மேலாளர் எல்லா மொழி பாடல்களும் ஒலிபரப்புகிறோம் என்று சமாதனம் செய்து தப்பித்தார்.

எங்கிருந்து வருகிறது இந்த மொழி வெறுப்பு? வாழ வந்த இடத்தின் மொழியை, கலாச்சாரத்தை சற்றேனும் தெரிந்து கொள்வதில் ஏன் இந்த தயக்கம்? இந்த மண்ணுடன் இயைந்து வாழ மொழி ஒரு மிகப்பெரிய பாலம். அதை கடந்து வருபவர்கள் வேறு சிலரே.

எனக்கு இது போன்ற ஜென்மங்களை பற்றி கவலை இல்லை. கொஞ்சம் ரத்தம் சூடேறுகிறது, அவ்வளவுதான்! என் கவலை எல்லாம் தமிழ் பேசாத கேட்காத ஒரு சூழலை சென்னையில் என் வாழ்நாளில் காண நேரிடுமோ என்ற அச்சம் தான். பத்து வருட அமெரிக்க வாழக்கைக்கு டாட்டா சொல்லிவிட்டு தமிழகம் வந்தது இதற்குத்தானா என்ற விரக்தி.

“தமிழ் இனி” என்ற குறும்படத்தை (http://www.youtube.com/watch?v=ufvA_VNj–M) பார்த்திருப்பீர்கள். அமெரிக்காவில் தமிழ் பேசுவது எவ்வளவு கடினமோ அதை விட கடினம் சென்னை மேட்டுக்குடி சமூகங்களில் தமிழில் பேசுவது. வேலைக்காரர்களும் காரோட்டிகளும் பேசும் மொழியாக தமிழ் புறந்தள்ளபட்டிருக்கிறது. இந்த வகையில் பெங்களூர் போல சென்னையும் மண்ணின் மனமே இல்லாத வறட்டு/பகட்டு ஊராக மாறிவிடுமோ? நினைத்தாலே நெஞ்சு கனக்கிறது! L

பணிவன்புடன்,

லட்சுமணன்

முந்தைய கட்டுரைசைதன்யா என்னும் எழுத்தாளர்
அடுத்த கட்டுரைநிலம் கடிதம்