லங்காதகனம்-கடிதம்

அன்புள்ள மோகன்,

‘லங்கா தகனம்’ படித்து முடித்த கையோடு எழுதுகிறேன். சமீபத்தில் எந்தவொரு எழுத்தும் இத்தனை அயர்ச்சியையும், கலக்கத்தையும், பயத்தையும், நெகிழ்வையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தவில்லை.

இடுப்பில் வேட்டி மட்டும் அணிந்து, திறந்த மயிரடர்ந்த விரிந்த மார்புடன், அழகான நீண்ட கரங்களுடன் அறிமுகமாகும் போது, ராமன் குட்டியைப் போல நானும் அனந்தன் ஆசானை ஒரு நடனக்கலைஞர் என்று மட்டுமே தீர்மானித்திருந்தேன். வெற்றிலைச் செல்லத்தை எடுத்துப் பிரித்துத் தாம்பூலம் கூட்டி, காம்பைக் கிள்ளி , சுண்ணாம்பு தேய்த்து, பாக்கை நறுக்கும் போது ஆசானின் செய்கையில் உள்ள இயல்பான தாளலயத்தை ரசித்துக் கொண்டிருக்கும் போதே, ‘நான் பைத்தியம் இல்ல, தெரிகிறதா?’ என்று சொல்லிக் கலங்க வைத்தார். அதற்குப் பிறகு ‘லங்கா தகனம்’ உள்ளே இழுத்துச் சென்று மூழ்கடித்து விட்டது. எத்தனை விவரங்கள், நுணுக்கங்கள், வர்ணனைகள்!

‘என் மனசு ஆறவில்ல குழந்தை. இந்த மார்புக்குள் ஒரு காலியிடம் இருந்து அழுத்திக் கொண்டே இருக்கிறது. ஆட்டம் முடிந்து வேஷம் களையும் போது என் மனசை சூனியம் வந்து நிறைக்கிறது. எதையோ இழந்து விட்டவன் மாதிரி பதைப்பாக இருக்கிறது. அனுமானை நான் அடையவில்லை என்று தோன்றுகிறது. . . . . நான் அனுமன் ஆகிவிட்டு மீண்டும் திரும்பி விடுகிறேன். என் மூர்த்தி இன்னும் என்னை அனுக்ரகம் பண்ணவில்லை. என்னை அவர் ஆட்கொள்ளவில்லை. என் வாழ்க்கையோ தீர்ந்து கொண்டிருக்கிறது. நான் காத்துக் கொண்டிருக்கிறேன். வாழ்நாள் முழுக்க இப்படியே போய்விடுமோ என்று பயமாக இருக்கிறது’ என்று மனம் கலங்கும் அசலான கலைஞர் ஒருவரை, கோமாளியாகப் பார்ப்பதும், அவரை சோற்றுக்காகக் காத்து நிற்க வைப்பதும் இன்றைக்கும் பல்வேறு சூழல்களில் பல்வேறு இடங்களில் நடந்து கொண்டுதானே இருக்கிறது! தொடர்ந்து உதாசீனம் செய்யப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிற நம் நாட்டுப்புறக் கலைகளையும், கலைஞர்களையும் பற்றி நானும், நண்பர் கோலப்பனும் புலம்பிக் கொண்டிருக்கும் வேளையில் ‘லங்கா தகனத்தைப்’ படித்தது, மேலும் மனதைக் கனக்கச் செய்து விட்டது.

ஒருகட்டத்தில் அனந்தன் ஆசான் எவரையும், எதையும் பார்க்காமல், அவரது பார்வை முகத்தின் உட்புறமாகத் திரும்பியிருப்பது போல, புதர்கள் மீது தாவிப் பாய்ந்தவராக, கிட்டத்தட்ட அந்தரத்தில் மேடை நோக்கிச் சென்ற அனந்தன் ஆசானைப் பின் தொடர்ந்த என் மனமும் அப்படித்தான் ஆகிவிட்டது.

நன்றி.

சுகா

அன்புள்ள சுகா,

உங்கள் பாராட்டு நிறைவளித்தது, என்னை நானே பாராட்டிக்கொள்வதுபோல அல்லவா?

என்றும் எப்போதும் அதிகாரம் முன்னால் கூசி நிற்கிறது கலை. அதன் உக்கிரத்தை பிற எவரையும் விட அதிகாரம் அறியும் என்பதனால்தான் அது அப்படி சிறுமைப்படுத்தப்படுகிறது

எழுத்தாளனின் அதிகாரத்தை ஸ்டாலின் அளவுக்கு அறிந்த பிறர் இல்லை என்று சுந்தர ராமசாமி சொல்வதுண்டு

ஜெ

முந்தைய கட்டுரைலங்காதகனம்-கடிதம்
அடுத்த கட்டுரைமகாபாரதப்போர்முறைகள்