«

»


Print this Post

நம்முடைய அறிவுஜீவிதம்


ஜெமோ,

நீங்கள் சொல்வது மிகவும் சரிதான் ஐரோப்பிய மையவாதம் எப்போதுமே மற்ற சிந்தனைகளை மிகவும் கீழாக மட்டுமே மதிப்பீடு செய்கிறது. அது எந்தக் கீழைநாட்டவனையும் கசப்படையச்செய்யும். சராசரிகளை விட்டுத் தள்ளலாம் ஆனால் இந்த White’s Men Burden மனப்பான்மை அறிவியலை தங்களுடைய வாழ்கை லட்சியமாகக் கொண்ட ஐரோப்பியர்களையும் ஆட்சி செய்வதுதான் மிகவும் கசப்பைத் தருவதாகும்.

‘Guns, Germs, and Steel’ புத்தகத்தை சமீபத்தில்தான் வாசித்தேன், நீங்கள் அந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதியிருக்கீர்கள் என்று நினைக்கிறேன். அந்தப் புத்தகம் ஐரோபிய மையவாதத்தில் இருந்து கொஞ்சம் நகர்ந்து ‘Fertile Crescent’டை அடையும் ஒரு முயற்சி என்றே நினைக்கிறன். அந்தப் புத்தகத்தில் Fertile Crescentடைப் பற்றி அதிகமாகப் பிரஸ்தாபிப்பதைப் பார்த்தேன், கொஞ்சம் சிரிப்பாகத்தான் இருந்தது, புரிந்து கொள்ளவும் முடிந்தது. Fertile Crescentடுக்கு சமமாக சீனா முன்னேறியதை அந்தப் புத்தகம் சரியாக விளக்கவில்லை என்றே நினைக்கிறன்.

ஆனால் நம்முடைய பிரச்சனை அதுவல்ல. நம்முடைய சொந்த வீட்டில் இருப்பவர்களே நம்முடைய சிந்தனையின் வீரியத்தைக் குறைத்தும், குழப்பியும் கேலி செய்வதுதான் மனதை நோகச் செய்கிறது. சமகால இலக்கியவாதிகளில் கருத்தியல் நேர்மையுடனும் அதே சமயம் நடைமுறை சாத்தியக் கூறுகளை உள்ளடக்கியதான விமர்சனங்களை வெளிப்படுத்தும் மிக மிக சிலரில் நீங்களும் ஒருவர். ஆனால் உங்களை மிகவும் வசைபாடுகிறவர்களையே நான் அதிகமும் எதிர்கொள்ளுகிறேன் அந்த வசையில் நகைப்பிற்கு உரிய பகுதி என்னவென்றால் உங்களை இந்துத்துவ ஆதரவாளர் என்று முத்திரை குத்துவது. இந்துத்துவ ‘idealogy’யை கட்டமைத்த சர்வார்கர் பௌத்தத்தை மிகக் கடுமையாக விமர்சிப்பதை வாசித்திருக்கிறேன், ‘நீங்களோ ஒரு மாறுவேட பௌத்தர்’ உங்களை எப்படி ஒரு இந்துத்துவ ஆதரவாளர் என்று சொல்லுகிறார்கள் என்றே புரியவில்லை.

ஒரு சில பிரச்சனைக்காக ஒட்டு மொத்த பாரம்பரியத்தையே அயோக்கியத்தனமானது என்று எழுதுகிறார்கள். உயிர்மெய்யில் பாலியல் வன்முறை பற்றிய ஒரு பத்தியில் அ.முத்துகிருஷ்ணன் போலியான ஒரு அறவியலை உருவாக்கிக் கொண்டு மிகவும் கொந்தளித்து எழுதி இருக்கிறார். அந்தக் கட்டுரையைப் படித்து முடிக்கும் பொழுது எனக்கு BPதான் ஏறியது (ஒத்திசைவு ராமசாமி இவரை மிக அருமையாகப் பகடி செய்திருந்தார் அவருடைய ‘இதுதாண்டா தொழில்முறை களப்பிணியாளன்!’ பத்தியில்).

டில்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய பெண்ணின் சமுக அந்தஸ்து மற்றும் ஜாதியைத்தான் ஆராய்ந்து இருக்கிறார்கள் இந்த உத்தமர்கள். உயர்ஜாதிப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானால் இவர்களுக்குப் பரவாயில்லை போலிருக்கிறது. இன்னொரு கட்டுரையில் யமுனா ராஜேந்திரன் உங்களை மறைமுகமாகத் தாக்கி எழுதி இருந்தார். யமுனா ராஜேந்திரனின் கட்டுரை அருந்திராய் சேனல் 4இல் உளறியதற்கு ஆதரவாக. (அருந்ததி ராய்யின் அருள்வாக்கு என்னவென்றால் டில்லியில் பாலியல் கொடுமைக்கு ஆளான பெண் ‘affuluvant family’யைச் சார்ந்த பெண், மேல் சாதிப் பெண் என்ற ரீதியில் இருந்தது)

யமுனா ராஜேந்திரனைப் பற்றி ஒன்றைப் பகிர்த்து கொள்ள விரும்புகிறேன். ஒருமுறை இவர் இப்படி எழுதினார் ‘இங்கு Leo Tolstoyயையும், Fyodor Dostoevskyயையும் படித்தவர்கள் தங்களைப் பெரியவர்கள் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள், ஆனால் நான் Nikos Kazantzakisயைப் படித்தவன்’. நம்முடைய அறிவுஜீவி(?) வட்டாரம் முழுமையுமே இப்படித்தான் இருக்கிறது. யமுனாவின் அந்த வார்த்தைகளைப் படித்த பின்புதான் தெரிந்தது நாம் சில புத்தகங்களைப் படித்தால் அறிவுஜீவி/சிந்தனாவாதி ஆகிவிடலாம் என்று. போகிற போக்கில் அட்டைப்படத்தைப் பார்த்தாலே அறிவுஜீவி மற்றும் சிந்தனையாளர் ஆகிவிடலாம் போலிருக்கிறது. சிந்தனையையும் படிப்பையும் பிரித்தறியாத இந்த மூடர்கள்தான் ஒட்டு மொத்த இந்திய சிந்தனை மரபையும் பிற்போக்கானது என்று வாய் வலிக்கப் பேசுகிறார்கள்.

என்னுடைய கடிதத்திற்கு விரைவாக பதில் அளித்தமைக்கு நன்றி, இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் தமிழ்ச்சூழலில் ஒரு அறிவுஜீவி, வாசகர் கடிதத்திற்கு விரைவாக ‘reply’ செய்தால் அவர் உண்மையான அறிவுஜீவியல்ல என்று (நிறுவப்பட்ட) ஒரு வதந்தி உலவுகிறது :)

உங்களின் இணையப் பக்கத்தில் இருந்து நான் நிறையக் கற்று கொண்டு இருக்கிறேன். உங்களுடைய கருத்துக்களின்  வாயிலாக என்னுடைய சிந்தனையின் போக்கில் நிறைய மாறுதல்களை நான் அடைந்து இருக்கிறேன். முக்கியமாக காந்தியைப் பற்றி. அதைப் பிறிதொரு கடிதத்தில் விரிவாக எழுதுகிறேன்.

தமிழில் டைப் செய்வதுதான் மிக சோர்வாக இருக்கிறது, அடிப்படையில் மிக மிக சோம்பேறியான எனக்கு அது இன்னுமும் சோர்வைத் தருகிறது. ல/ள எந்த சொல்லிற்கு சேர்ப்பது என்பதே எனக்கு ஒரு மாபெரும் அறவியல் போராட்டம், கடிதத்தில் சொற்பிழைகள் இருந்தால் மன்னிக்கவும். தமிழில் கடைசியாக நான் எழுதியது நான் 12ஆம் வகுப்பு பயின்ற பொழுது. கிட்டத்தட்ட 10 வருடங்களாகிவிடது.

தொடர்ந்து உங்களுடன் இணைப்பில் இருக்க ஆசை.

சு.செல்வபாரதி

அன்புள்ள செல்வபாரதி

நாம் இருநூறாண்டுகளுக்கும் மேலாக அன்னிய ஆதிக்கத்தினால் சுயநிராகரிப்புக்குப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். இன்றும்கூட நம்மை நாமே நிராகரிக்கச்செய்யும் இந்திய அறிவுஜீவிகள் ஐரோப்பாவால் ஊட்டம் கொடுக்கப்பட்டு வளர்க்கப்படுகிறார்கள். அவர்களே நம்முடைய சூழலை நிறைத்து சத்தம்போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இடதுசாரிகள் என்ற போர்வையில். மனித உரிமையாளர்கள் என்ற பாவனையில்…

நம் சரித்திரபூர்வமான தாழ்வுமனப்பான்மை நம்மை மேலைநாட்டுவழிபாட்டுக்குக் கொண்டுசெல்கிறது.அதை இவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். கூடவே நம் மூளைச்சோம்பல் சூழலில் மிதந்தலையும் எளிய கருத்துக்களை எதிரொலிக்கச்செய்கிறது.

இதை மீறிச் சிந்திக்கவும் முன் செல்லவும் அபாரமான தன்னம்பிக்கையும் சுயமான வாசிப்பும் சிந்தனையும் தேவை. அது மிக அபூர்வமாகவே உள்ளது. மிச்சபேர் எது சமகாலத்தில் அரசியல்ரீதியாக சரியானது, எது முற்போக்கானது என்று சொல்லப்படுகிறதோ அதைப் பின்தொடர்ந்து செல்கிறார்கள்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/35122