அறம்கதைகளைப் போல…

அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு

இது ஒரு மயக்கமாய்க் கூட இருக்கலாம். “என்னதான் இருந்தாலும் எம்ஜியார் போல வருமா”
வகையறாவாக இருக்கலாம் .ஆனால் அறம் ,சோற்றுக்கனக்கு -இரண்டை விஞ்ச யாராலும்
முடியாது என்று தோன்றுகிறது . அவர் ஜெயமோகனாகவே இருந்தாலும் ..

சமீபத்து “நிலம் ” “குருதி” போன்றவற்றில் திரு ஜெயமோகன் தெரிகிறார்.ஆனால்
அவற்றில்{ { “அறம் “,”சோற்றுக்கணக்கு}அவரைக் காணோம்.பாடுபவன்,பாடுபொருள் மற்றும் உண்மை யாவும் ஒன்றான தருணம் அது.

எனவே அறம் கட்டடம் அல்ல பறவை காலில் ஒட்டிப் பாறையில் விழுந்து வெளிப்பட்ட
வீரியமான செடி தாவரம் .கடவுள் படைப்புக்குக் கீழே கையெழுத்துப் போடுவதில்லை
அறம் கதையின் வரிகள் அல்ல அதன் நினைவே அழ வைக்கிறது.

சரவணகுமார்.
கோவை

அன்புள்ள சரவணக்குமார்

உங்கள் மனநிலை புரிகிறது. ஆனால் எனக்கு இவ்விஷயத்தில் எந்தக்குழப்பமும் இல்லை

அறம் வரிசைக் கதைகள் வெளிவந்தபோது அவற்றில் என்னுடைய சிறந்த கதைகளில் உள்ள அமைதியும் நுட்பமும் குறைவு என ஒரு சாரார் சொன்னதை நினைவுறுத்துகிறேன். அப்போது சொன்ன பதில்தான் இப்போதும்.

கதைகளின் வடிவம், மொழிநடை, உணர்ச்சிகரம், நுட்பம் எல்லாமே அவை எந்த இலக்கைநோக்கிச் செல்கின்றன என்பதை ஒட்டி உருவாகக்கூடியவை. அறம் எழுப்பும் வினாக்கள் இலட்சியவாதம் சார்ந்தவை, ஆகவே உணர்ச்சிகரமானவை

மாறாக இக்கதைகள் எழுப்பும் வினாக்கள் ஆன்மீகமானவை. ஆகவே அமைதியையும் நுட்பத்தையும் நோக்கிச்செல்லக்கூடியவை. என்னைப்பொறுத்தவரை இரண்டுக்குமே இணையான முக்கியத்துவம்தான்.

அறம் கதைகளைக்கொண்டு இக்கதைகளையோ அல்லது இவற்றைக்கொண்டு அவற்றையோ மதிப்பிடமுடியாது

ஜெ

முந்தைய கட்டுரைவாசிப்பின் தடைகள் -கடிதம்
அடுத்த கட்டுரைவாசிப்புக்கு உதவி