வாசிப்புக்கு உதவி

மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய ஜெயமோகன் சார் அவர்களுக்கு

வணக்கங்கள். உங்களின் தீவிர ரசிகன் நான். உங்களுடய படைப்புகளில் ‘காடு’ மிகவும் பிடித்து இருந்தது . கொற்றவையும், விஷ்ணுபுரமும் வாசித்தேன் என்றாலும் , அது என் சிற்றறிவுக்குப் பெரிய விஷயமாக இருந்தது. எனவே இன்னும் சில முறை படித்து விட்டு உங்களுக்கு எழுதலாம் என்று இருக்கின்றேன். உங்களுடைய கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். தத்துவம், வரலாறு மற்றும் இலக்கியம் என்ற உங்களின் பரந்த எழுத்து பெரும் பிரமிப்பை அளிக்கின்றது. நான் நிறையக் கற்றுக் கொண்டே இருக்கின்றேன். உங்களுடைய எழுத்துக்களை வாசித்துக் கொண்டிருக்கின்றேன் என்பதே பெருமையாக உள்ளது. இன்னும் தீவிரமாக வாசிக்க வேண்டும். வாசிக்கக் கற்றுக் கொள்வேன் என்று நினைக்கின்றேன். இந்த வருடம் புத்தக கண்காட்சியில் கடலூர் சீனு அவர்களை சந்தித்தேன். புதிய பதிப்பகத்தைப் பற்றி சொன்னார். அவரைப் பார்த்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. உங்களுடைய ‘அருகர்களின் பாதையில்’ புத்தகமாக வரப் போவதாக முன்பு குறிப்பிட்டு இருந்தீர்கள். எப்பொழுது வெளி வரும் சார்?

மிக்க நன்றி சார்

சு. ஜெயக்குமார்

அன்புள்ள ஜெயக்குமார்

கொற்றவையோ விஷ்ணுபுரமோ உங்களுக்கு சரியாகப்புரியாமல் போனமைக்குக் காரணம் உங்கள் ‘சிற்றறிவு’ எல்லாம் ஒன்றுமில்லை. அந்த உலகுடன் உங்களுக்குப் போதிய பழக்கம் ஏற்படவில்லை, வாசிப்புக்கான ஒரு வழி திறக்கவில்லை என்பது மட்டுமே

இந்நிலையில் அந்நூல்களைப்பற்றி விவாதிப்பதே மிகச்சிறந்த வழி. உங்கள் வாசிப்பிலுள்ள எல்லாத் தடைகளையும் மிக எளிதாக உரையாடல் மூலம் வென்றுவிடமுடியுமென்பதைக் காண்பீர்கள். வாசித்த நண்பர்களுடன் பேசுங்கள். அவர்களும் உங்களைப்போல சரியானமுறையில் உள்வாங்கிக்கொள்ளாதவர்களாக இருந்தாலும்கூட அவர்களின் வாசிப்பு உங்கள் வாசிப்பின் ஓர் எல்லையைத் தெளிவாக்கும்

இந்த இணையதளத்தில் அந்நாவல்கள் பற்றி வாசகர்கள் எழுதிய ஏராளமான கடிதங்களும் விவாதங்களும் உள்ளன. அவை உங்கள் வாசிப்பை வழிகாட்டிக் கொண்டுசெல்லக்கூடும்.

விஷ்ணுபுரம் நாவலைப்பொறுத்தவரை அதற்கான விவாதங்கள் எல்லாமே விஷ்ணுபுரம்.காம் என்ற இணையதளமாக ஆக்கப்பட்டுள்ளன. அதை வாசித்தாலே போதும்

ஜெ

முந்தைய கட்டுரைஅறம்கதைகளைப் போல…
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம்-கடிதம்