அன்புள்ள ஜெ அவர்களுக்கு,
சற்றுமுன் வாசிப்பின் பெரும்தடை என்ற பதிலைப் படித்தேன்.அவரின் கேள்விக்கு நேர் எதிரான நிலை என்னுடையது..நானே இரண்டு நாட்களாகத் தீவிர மன எழுச்சியிலும் பின் குழப்பத்திலுமாகத் தடுமாறிக் கொண்டு இருந்தேன். நன்றி .அந்த பதிலில் இருந்தே எனக்கான பதிலையும் எடுத்துக்கொண்டேன்.
முதலாவது வெறும் முள் அளித்த தீவிர மன எழுச்சி..படித்த பின் இரவெல்லாம் உறங்கவே இல்லை உண்மையிலேயே உடம்பெல்லாம் ரத்தத்தோடு ஐசக் போலக் கருவறையை விட்டு வெளியேறத் துடிக்கும் மன எழுச்சியும்,முடியாமல் மூச்சு முட்டுவதாகவும் உணர்ந்த அந்த கணம் .அந்த மூட்டையை மட்டும் எறிய முடிந்து இருந்தால் ஹூம்…மீண்டும் மீண்டும் இரவெல்லாம் அதையே வாசித்து கொண்டு இருந்தேன். இதைப் போன்றே என்னை தீவிரமாக வாட்டிய இன்னொரு படைப்பு டார்த்தீனியம்.
ஏன் இது போன்ற இத்தனை தீவிர மனஎழுச்சி உங்களின் மற்ற படைப்புகளில் எனக்குக் கிடைக்கவில்லை என்று நெடு நாளாகவே குழம்பிக் கொண்டு இருந்தேன். விஷ்ணுபுரம் வாங்கிய கையோடு ஒரே இரவில் வாசித்தேன் ..அதைப் போன்றே மற்ற படைப்புகளும் கூட. ஆனால் அவற்றை எல்லாம் விட வெறும் முள் அளித்த உணர்வு அந்தரங்கமானது . மீண்டும் மீண்டும் அதை வாசித்துக் கொண்டு இருக்கிறேன். யாயினாகவும்,ரெபக்காவின் கடையும், செழியனும்,ஐசக் அவனின் மூட்டையும், தச்சன் மகனின் புழுதி படிந்த கால்களின் தடங்கள் வழியே அந்தப் புழுதி மண்ணில் என்னை அலைக்கழிக்கின்றன.
ஒருவேளை அனுபவம் அல்லது ஒரு கேள்விப்பட்ட ஒரு விஷயம் , இலக்கியம் அளிக்கும் அபாரமான விரிவை மட்டுப்படுத்துகிறதா? உதாரணமாக பின் தொடரும் நிழலின் குரலில் தர்க்க மனம் தொடர்ந்து எழுத்தாளர் ஜெ.,வுடன் விவாதித்து கொண்டே வந்தது..இறுதியில் புத்தகம் மட்டுமே என்னோடு எஞ்சியது.
இரும்புச் சட்டையின் எடை என்ன என்பதைப் புரிந்து கொண்டேன் என நினைக்கிறேன். இனி புனைவுகளில் நீந்த எளிதாக இருக்கும் என நம்புகிறேன்.:-)
அன்புடன்,
பிரதீப்.
அன்புள்ள பிரதீப்
ஒரு கதை ஏன் நம்மை பாதிக்கிறது, இன்னொன்று பாதிப்பதில்லை என்பதை நம்மை நாமே கூர்ந்துநோக்கித்தான் புரிந்துகொள்ளமுடியும். அதற்கான காரணங்கள் பல. குறிப்பாகச் சொல்லப்படவேண்டியது நாம் படைப்புக்கு அளிக்கும் தடைகள்
அந்தத் தடைகளில் முக்கியமான சில உண்டு. ஒன்று படைப்பு என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற நம்முடைய முன்முடிவு. உதாரணமாக அறம் கதைகளின் நல்ல வாசகர்களில் ஒருசாரார் வெறும்முள் முதலிய கதைகளைக் கூர்ந்துவாசிப்பதோ உள்வாங்கிக்கொள்வதோ இல்லை. ஏனென்றால் படைப்பு என்றால் அது உணர்ச்சிக்கொந்தளிப்பாகவே இருக்கவேண்டுமென நினைக்கிறார்கள். ஆகவே ஆழமான ஆன்மீக அலைக்கழிப்புள்ள கதையைத் தவறவிடுகிறார்கள்
இரண்டாவது தடை ஆசிரியரைப்பற்றிய மனப்பிம்பங்கள். நம் சூழலில் எதையுமே படிக்காத படித்தாலும் உள்வாங்கும் திராணியற்ற வம்புக்கும்பலால் அவை உருவாக்கப்படுகின்றன. அவற்றுடன் தன்னைப்பிணைத்துக்கொண்ட வாசகன் படைப்பின் முன்னால் ஒருவகை வீம்புடனேயே வந்து நிற்கிறான். ஆசிரியரை நிராகரிக்க, அவரிடம் குற்றம் காண, அவருடன் மானசீகமாகச் சண்டைபோட முனைகிறான். விளைவாக அவன் இழப்பது படைப்பை.
ஆனால் எந்த ஆசிரிரையரையானாலும் பெரும் வழிபாட்டுடன் அணுகுபவன் இந்த அளவுக்குப் படைப்பைத் தவறவிடுவதில்லை. நான் தல்ஸ்தோயையும் பஷீரையும் அப்படித்தான் அணுகுவேன். அந்தப்பற்று எனக்கு அவர்களின் படைப்புக்குள் ஆழமாகச் செல்லத்தான் உதவுகிறது. தடையாக இல்லை. அதன் எல்லா அம்சங்களையும் கருத்தில் கொள்ள, அதற்காக பலமுறை வாசிக்க அந்த ஈடுபாடு உதவுகிறது
சென்றகாலங்களில் நம் மரபில் ஆசிரியன் மீதான பெரும் பற்று இருந்தால் மட்டுமே அந்நூலை வாசிக்கவேண்டும் என்ற கருத்துத்தான் சொல்லப்பட்டது. ஆனால் சமீபகாலமாக நம் இலக்கியமறியா வம்பாளர்களால் எழுத்தாளன் மீது வாசகன் நிராகரிப்புமனநிலையையே கொண்டிருக்கவேண்டும், அதனுடன் மட்டுமே படைப்பை அணுகவேண்டும், அதுதான் வாசகனின் ஆளுமையை நிலைநிறுத்தும் என்ற அபத்தமான பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. கணிசமான ஆரம்பநிலை வாசகர்கள் அந்த மனநிலையைக் கொண்டிருக்கிறார்கள்.
விளைவாக மேலோட்டமான அரைகுறை வாசிப்பை அவர்கள் அடைகிறார்கள். அசட்டு அபிப்பிராயத்தை உருவாக்கிக்கொண்டு அதைக்கொண்டு தங்கள் அகங்காரத்தை நிறைவுசெய்துகொண்டு படைப்பிலிருந்து விலகிவிடுகிறார்கள். அவர்களுக்குத்தான் பேரிழப்பு.
படைப்பின் குறியீட்டுப்புலம் அன்னியமாக இருப்பது அல்லது அது திறக்காமலிருப்பது ஒரு பெரிய தடை. வெறும் முள் போன்ற படைப்பின் கிறித்தவக் குறியீட்டுப்புலம் சராசரி வாச்கனுக்குத் திறக்காமலிருக்கலாம். அதேபோல மகாபாரதம் சார்ந்த கதைகள் கிறித்தவ வாசகர்களுக்குத் திறக்காமலிருக்கலாம்.
கடைசியாக நீங்கள் சொல்வது. அதைப் படைப்பு கோரும் கவனத்தை முழுமையாகக் கொடுக்கமுடியாமை என்று சொல்லலாம். வெறும்முள் உங்களைக் கவரும்போது பின்தொடரும் நிழலின் குரலில் உள்ள’உயிர்த்தெழுதல்’ ஏன் கவராமல் போயிற்று? காரணம் அந்நாவல் அளிக்கும் சவால் முழுக்கச் சந்திக்கப்படவில்லை என்பதுதான்
பின் தொடரும் நிழலின் குரல் அரசியல்பிரக்ஞைகொண்ட வாசகனுக்காக எழுதப்படுகிறது. அவனுடைய கனவுடன் அது உரையாட விழைகிறது. ஆனால் அவன் மிகமிகக் கனமான போதமனம் கொண்டவன். ஆகவே அவனுடன் அது விவாதிக்கிறது. கிட்டத்தட்ட அவனை விவாதத்தில் எங்கும் திரும்ப முடியாதவனாக ஆக்குகிறது. தலையில் அடித்துப் படுக்கவைத்து நினைவிழக்கச்செய்வதுபோல. அதன் பின் அவன் ஆழ்மனதுடன் உரையாடுகிறது. கனவுக்குள் செல்கிறது
நீங்கள் அந்த விவாதத்தின் ஏதோ ஓர் இடத்தில் வாசிப்பை நிறுத்திக் கொண்டுவிட்டீர்களோ என அஞ்சுகிறேன்.உங்கள் தன்னகங்காரம் அல்லது பிரக்ஞை மிக கனமானது போலும். இன்னொருமுறை நீங்கள் அந்நாவலை மீண்டும் வாசிக்கவும் புதியதாகக் கண்டடையவும் கூடும். வெறும்முள்தான் தொடக்கமாக இருக்கலாம்.
ஜெ