நான் சென்னையில் ஒரு பல்கலைக் கழகத்தில் பொறியியல் முதலாம் ஆண்டு பயின்று வருகிறேன்.நான் எனது பதினோராவது வகுப்பில் இருந்து ஆங்கில இலக்கியதின் மேல் அளவற்ற காதல் கொண்டிருக்கிறேன்.சென்ற நான்கு மாத விடுமுறையின் தொடக்கத்தில் உங்கள் “நவீன தமிழிலக்கிய அறிமுகம்” நூலை வாசித்தேன்.அன்று முதல் நான் எந்த நூலையும் நிராகரிப்பது இல்லை.நாவலாசிரியர் தேவை இல்லாமல் ஒரு நூலை எழுத மாட்டாரென்பதைப் புரிந்துகொண்டேன்.வாசிப்பை உழைப்பாக்க என்னால் முடிந்த அளவு முயற்சி செய்கிறேன்.தாங்கள் தொகுத்துள்ள ஐந்து தலைமுறை எழுத்தாளர்களையும் வாசிக்க வேண்டுமென்பது எனது தீராத ஆசை.தமிழ் இலக்கிய உலகிற்குள் என்னை அழைத்துச் சென்றதற்காக எனது மனமார்ந்த நன்றிகள்.
நான் படித்தவற்றைப் பற்றி யாரிடம் பேசுவது , யாரிடம் விவாதிப்பது என்று எனக்குத் தெரியவில்லை.என் நண்பர்களுக்கு வாசிக்கும் பழக்கம் கிடையாது. ஆகையால் நான் படித்தவற்றைப் பேசினால் அவர்கள் ஆர்வத்துடன் கேட்பதில்லை . படித்தவற்றைக் கண்டிப்பாக அடுத்தவரிடம் பேசவேண்டும் என நான் சொல்லவில்லை. அப்படிப் பேசினால் எனக்கு மன அமைதி கிடைக்கும் என்று தோன்றுகிறது. அதுமட்டும் அல்லாமல் வாதம் செய்தால் புது சிந்தனைகளை வளர்த்து என்னுள் இருக்கும் கேள்விகளுக்கும் விடை தேடலாம் என்பது என்னுடைய எண்ணம். இந்த எண்ணம் சரி தானா??
.
சுந்தர் சொக்கையா
அன்புள்ள சுந்தர்,
நான் நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் நூலிலேயே சொல்லியிருந்த விஷயம் இது, இலக்கிய அரட்டை இல்லாமல் இலக்கியம் வளரமுடியாது. என்னைப்பொறுத்தவரை கேளிக்கைகளில் உன்னதமானது அதுதான்.
விவாதம் என்ற சொல்லால் குறிப்பிடாமல் அரட்டை என்கிறேன். விவாதம் என்பதில் ஒரு தீவிரம் உள்ளது. அந்தத் தீவிரமில்லாத உரையாடல்களையே நான் இங்கே சுட்டுகிறேன். தீவிரம் இருக்கையில் கோபதாபங்கள் உருவாகும். எங்கோ ஒரு புள்ளியில் தனிப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பிக்கும். விளைவாக உரையாடலே கசப்பான அனுபவமாக ஆகிவிடும்.
இங்கே இலக்கியவிவாதங்கள் அனைத்திலும் அகங்காரமும் சிறுமையும் அவற்றின் விளைவான் வன்முறையும் வெளிப்படுவதனால் பொதுவாக எல்லா உரையாடல்களையும் தவிர்க்கும் மனநிலை பல வாசகர்களிடம் உள்ளது. அதன் இழப்பு அவர்களுக்கே
இலக்கியத்தை பேசிப்பேசியே புரிந்துகொள்ள முடியும். படைப்புகளில் உள்ள நுட்பங்கள் உரையாடல்களிலேயே துலங்கமுடியும். இரண்டு வகையில்.
ஒன்று ஒரு படைப்பில் உள்ள வடிவநுட்பங்கள்,மொழிநுட்பங்கள்,படிமங்கள்,தரிசனங்கள் ஆகியவற்றை நாம் உரையாடல்களில் விளக்கிக்கொள்கிறோம். நாம் கண்ட ஒன்றை இன்னொருவர் கண்டிருக்கமாட்டார். நாம் அவர் கண்டதைக் கண்டிருக்கமாட்டோம். பத்து சமானமான வாசகர்கள் சேர்ந்து ஒரு படைப்பைப்பற்றிப்பேசினால் பத்துவாசிப்புகள் ஒன்றாகின்றன. ஒவ்வொருவரும் பத்துமடங்கு அந்தப்படைப்பை வாசித்தவராக ஆகிறார். ஒரு கூட்டுவாசிப்பின் முன் எந்தச் சிக்கலான படைப்பும் தன் எல்லாத் திரைகளையும் களைந்துவிடுவதைக் காணலாம்
இரண்டு, இலக்கியத்தை வாசிக்கும் பயிற்சிகளில் முக்கியமானது தொடர்புவலையை உருவாக்கிக்கொள்ளுதல். ஒரு கருத்தை அல்லது படிமத்தை அல்லது நிகழ்ச்சியை வாசிக்கையில் அதனுடன் பல்வேறு விஷயங்கள் தொடர்புகொண்டு நம் நினைவிலும் ஆழ்மனதிலும் விரிந்துகொண்டே இருப்பதுதான் அது. associations என இதை சொல்கிறார்கள். நம்முடைய சொந்த வாழ்வனுபவம் மிகக்குறைவாகவே இருக்கமுடியும். ஆகவே நாம் உருவாக்கும் தொடர்புவலை சிறியதாகவே அமையும். ஆனால் இலக்கிய அரட்டை மூலம் நாம் நம்மைச்சூழ்ந்துள்ள அனைவருடைய அனுபவங்களையும் ஒன்றாக இணைத்து மிகப்பெரிய ஒரு தொடர்புவலையை உருவாக்குகிறோம். படைப்பை அந்த வலையில் அமைக்கையில் அது பிரம்மாண்டமானதாக ஆகிவிடுகிறது
ஆனால் இங்குள்ள சிக்கல் இங்கே இலக்கியம் வாசிப்பவர்கள் மிகமிகக் குறைவு என்பதனால் இன்னொரு வாசகர் நம் அன்றாட வாழ்க்கையின் வட்டத்துக்குள் அமைவதே இல்லை என்பதுதான். சென்றகாலகட்டத்தில் இது மிகப்பெரிய சிக்கலாக இருந்தது. இலக்கியவாசகர்கள் நீண்ட கடிதங்களை எழுதி அதைத் தாண்டிச்செல்ல முயன்றார்கள். மிக அபூர்வமாக சில இடங்களில் நல்ல அரட்டை மையங்கள் அமைந்தன. நாகர்கோயிலில் சுந்தர ராமசாமியும், கோயில்பட்டியில் தேவதச்சனும் அதற்கான மையமாக ஆனார்கள். அந்த வாய்ப்பு அனைவருக்குமில்லை.
ஆனால் இன்று இணையம் உள்ளது. இணையக்குழுமங்கள் அளிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். கீழ்க்கண்ட சில விதிகளைப் பின்பற்றும் குழுமங்கள் உதவியானவை.
1. விவாதம் கட்டில்லாமல் செல்வதை அனுமதிக்கக்கூடாது
2. நாகரீக விளிம்புகளை மீறக்கூடாது
3. தனிப்பட்ட தாக்குதல் இருக்கலாகாது
4. எதிர்மறைத்தன்மை இருக்கக்கூடாது
அத்தகைய குழுமங்கள் மனதை உற்சாகப்படுத்தும் நல்ல விவாதங்களை உருவாக்கும். அந்நோக்குடன்தான் சொல்புதிது குழுமத்தை உருவாக்கியிருக்கிறோம்
ஆனால் தனிப்பட்ட உறவு இல்லாத குழும விவாதங்கள் ஒரு கட்டத்தில் தேங்கிவிடுகின்றன என்று உணர்ந்தோம். இணையத்தில் அறிமுகமாகும் ஒருவர் வெறும் பெயரடையாளமாகவே தங்கிவிடுகிறார். ஆகவேதான் தனிப்பட்ட முறையில் சந்திப்புகளும் விவாதங்களும் நிகழ்வதற்காக விவாதக்கூட்டங்களையும் ஏற்பாடுசெய்கிறோம். அங்கே அனல் பறக்கும் விவாதங்களுக்குப்பதில் நட்பார்ந்த அரட்டை நிகழும்படி செய்கிறோம்
சொல்புதிது சார்பில் வருடம் நான்கு சந்திப்புகள் நிகழ்கின்றன. அவற்றில் ஒரு நட்பார்ந்த அரட்டைச்சூழலை உருவாக்கியிருக்கிறோம்
ஜெ