குடியைக் கட்டுப்படுத்துதல்

அன்புள்ள ஜெ,

ந‌லம்தானே,

தங்களுடைய எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.

பூரண மதுவிலக்கு பற்றிய தங்களின் கட்டுரையை வாசித்தேன். இதனை அரசு அமல்படுத்தும் பட்சத்தில் கள்ளச்சாராயம் வந்து விடுமே.

இதனால் போலிசார் மிக அதிகமாகப் பணம் சம்பாதிப்பார்களே தவிர குடிப்பவர்கள் குடித்துக்கொண்டுதானே இருப்பார்கள்.

நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் கிராமத்தில் நான் கண்டது அதைத்தான்.
(எனது சொந்தவூர் திருச்சி மாவட்டம் பச்சை மலை அடிவாரம்)

இதனடிப்படையில் பார்த்தால் இந்தப் பெரியவர்கள் செய்வது சரியா?

தனிமனித ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு வருவது மட்டுமே இதற்கு தீர்வு அதற்க்கு ஆவன செய்தால் மட்டுமே நிறைய நல்ல மாற்றங்கள் நிகழ்ந்திடும் இல்லையா?.

தயவுசெய்து விளக்குங்கள்.

நன்றி.

கதிரேசன்

புருனே

அன்புள்ள கதிரேசன் ,

இந்த மதுபற்றிய விவாதங்களில் எல்லாம் ஒரே மாதிரியான குரல்களே ஒலிக்கின்றன. ஏனென்றால் அவை நம் சமூகமனதுக்குத் திட்டமிட்டுப் புகட்டப்பட்டவை.

நம் சமூகத்தில் பொது இடங்களில் புகைபிடிப்பது குற்றம். மது அருந்திவிட்டு வாந்தி எடுப்பதும், கூச்சல்போடுவதும்,ஆபாசமாக உளறுவதும் , சாலையில் விழுந்துகிடப்பதும் சட்டபூர்வமானவை. என்ன ஒரு சமூகப்பிரக்ஞை!

சிலவருடங்களுக்கு முன்னால் புகைப்பிடிப்பதற்கான கட்டுப்பாடுகள் வந்தபோது பெரும்பாலான புகைப்பழக்கமுடையவர்கள் அதை வரவேற்றதைக் கண்டேன். அந்தக்கட்டுப்பாடுகளினால் தாங்கள் புகைபிடிப்பது குறையும் என அவர்கள் சொன்னார்கள்.

அதுவே அடிமையாக்கும் பொருட்களின் இயல்பு. அதை உபயோகிப்பவர்களில் மிகபெரும்பாலானவர்கள் அதை வெறுப்பார்கள். விலக முயல்வார்கள். தங்கள் பலவீனம் காரணமாகவே அதை மீண்டும் மீண்டும் நுகர்வார்கள். அந்த பலவீனத்தை தன்னிடமிருந்தும் பிறரிடமிருந்தும் மறைப்பதற்காக அதை ரசிப்பதாகவும் அது உயர்வானது என்றும் பாவனைசெய்வார்கள்.

எந்தபோதைப்பொருளையும் வெளிப்படையாக விற்றால், பிரச்சாரம் செய்தால் சமூகம் அதற்கு அடிமையாகும்.
சமூகம் விதிக்கும் கட்டுப்பாடுகள் அவற்றுக்கு அடிமையானவர்களுக்கு நல்லதே செய்யும். உலகில் எங்கும் எந்த போதைப்பொருளும் முழுமையாகன சுதந்திரத்துடன் விற்கப்படுவதில்லை- தமிழகத்தில் மது அப்படி விற்கப்படுகிறது. அதையே நான் சுட்டிக்காட்டுகிறேன்.

அரசு ஒரு கொள்கையை எடுப்பதற்குக் காரணமாக அதனால் அக்கொள்கையின் விளைவாக உருவாகும் ஒரு குற்றத்தைத் தடுக்கமுடியாமல்போகும் என்று சொல்வதைப்போல கேவலம் உண்டா என்ன? அரசு நினைத்தால் அக்குற்றத்தைத் தடுக்கமுடியாதா என்ன?

முழுமையாகத் தடுக்கமுடியாவிட்டாலும் கூடக் கள்ளச்சாராயம் இன்று அரசுச்சாராயம் கிடைப்பதுபோல தெருவுக்குத்தெரு கிடைக்காது. அது சாலையில் வந்து நின்று சுண்டி இழுக்காது. அதைக் குடிப்பது எளிதாக இருக்காது. இன்றுபோல அதைக்குடிப்பது கௌரவமாக கருதப்படாது. அங்கீகாரமுள்ள கேளிக்கையாக இருக்காது.

இந்த தேசத்தை பொருளியல் ரீதியாக அழித்துக்கொண்டிருக்கும் குடியைக் கட்டுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாக அது அமையும். கள்ளச்சாராயம் வந்துவிடக்கூடாதே என்ற பதைபதைப்பினால்தான் அரசாங்கம் சாராயவிற்பனையை நடத்துகிறது என்று சொல்வதைப்போல கேலிக்கூத்து வேறொன்றில்லை

குடி பழைய கட்டுரைகள்

குடிக்கு எதிரான போராட்டம்


பூரண மதுவிலக்கு


குடிநோய்


குடி ஒரு கடிதம்


நமக்குள் இருக்கும் பேய்

முந்தைய கட்டுரைவாழைப்பழ தேசம்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஆட்டிசம்- சில புரிதல்கள்