ஜெவின் சில கதைகள் போல இந்தக் கதையிலும் ஆண்கள் உணர்ந்து கொள்ள முடியாத பெண்ணின் வலி, தாய்மை போன்றவை வருகின்றன என்று நினைத்தேன். ஆனால் அது மட்டும் கதையல்ல என்றும் தோன்றுகிறது.
முதலில் இந்தக்கதையிலும் creativity பற்றிய கேள்வியையே ஜெ தொடர்கிறார் என்று தோன்றியது. (பெண் சிருஷ்டியின் குறியீடு. எங்கிருந்தோ சுரக்கும் வெண்கடலை அந்தப் பெண், மாடுகள், தாய்தெய்வங்கள் வழியாக அடையாளம் காண்கிறார். தன்னுள்ளா? அல்லது பிள்ளையாகவா?)
ஆனால் கடைக்கண் பற்றிய உரையாடல்கள், சித்திரங்கள் என்னை சிதறடித்துவிட்டன. உளியை நேராகப் பார்த்துக்கொண்டு கடைக்கண்ணில் பிள்ளையைப் பார்க்கும் ஆசாரி. பிள்ளையை நேராகப் பார்த்துக் கடைக்கண்ணில் அடுப்பைப் பார்க்கும் ஆசாரிச்சி. கடைசியில் ஜெயனைக் கடைக்கண்ணால் பார்க்கும் அந்தப்பெண். கலை, கலைஞன், தாய்மை போன்ற சொற்கள் மட்டுமே மனதில் எழுகின்றன.
பாலையும் ரத்தத்தையும் உறிஞ்சும் அட்டைகள் எதைக் குறிக்கின்றன? நீங்கள் கண்டமேனிக்கு association செய்கிறீர்கள் என்று சொல்வதற்குள் நிறுத்திவிடுகிறேன்
ராஜா
அன்புள்ள ராஜா
அன்புள்ள ராஜா
சரியாகத்தான் போகிறீர்கள்
அட்டையை அவள் குழந்தைகளாகவே காண்கிறாள்
தாயின் குருதியை உண்ணாத குழந்தைகள் உண்டா?
ஜெ
அன்புள்ள ஜெ
எளிமையான கதைகளுக்குள் படிமங்கள் மூலம் சிக்கலையும் சிக்கலான கதைகளுக்குள் எளிமையான ஞானத்தையும் வைக்கிறீர்கள் என நினைக்கிறேன்
அம்மையப்பமும் வெண்கடலும் எளிய கதைகள். ஆனால் படிமங்களைத் தொடர்ந்து போனால் சிக்கலாக ஆகிவிடுகின்றன. நீரும்நெருப்பும் வெறும் முள் போன்றவை சிக்கலான கதைகள். படிமங்களாக வாசித்தால் எளியகதைகள்
சரவணன்
அன்புள்ள சரவணன்
கதைகளுக்காக மட்டுமே கடிதங்கள் எழுதும் ஒரு வட்டம் இருப்பது மகிழ்வளிக்கிறது
படிமங்கள் எப்போதுமே எளிமையானவை. நாம் யோசிப்பதற்குள் புரியக்கூடியவை அவை. ஆனால் எளியவை என நாம் நினைக்கும்கதைகளில் படிமங்கள் இருப்பதை நாம் கவனிப்பதில்லை அவ்வளவுதான்
ஜெ