கிளி சொன்ன கதை : 3

Ahalya_rama

 

அனந்தனை தங்கம்மை கூட்டிச்சென்று நெல்லுபுரைக்கு அப்பால் உரல்மீது உட்கார வைத்தாள். ”அப்பி ஆருகிட்டயும் பேச வேண்டாம் கேட்டுதா?அப்பிக்கு என்ன வேணுமானாலும் எனக்க கிட்ட கேக்கணும். அப்பிக்கு இனி நானாக்கும் அம்மை ”என்றாள். அனந்தன் ”நான் உன் கூடத்தான் கஞ்சி குடிப்பேன்”என்றான். ‘செரி குடிச்சணும்”என்றாள் தங்கம்மை.

அம்மா வந்து எட்டிப்பார்த்து ”அவன் ஒண்ணும் குடிக்கல்ல தங்கம்மையே” என்றாள்.”இங்க கொண்டு வரணும்.நான் குடுக்கேன்” என்றாள் தங்கம்மை. அம்மா எனாமல் குழிதட்டில் கஞ்சி கொண்டு வந்தாள். பயறு சேர்த்து வைத்த சிவப்புச் சம்பாவரிசிக் கஞ்சி . தொட்டுக்கொள்ள கண்ணிமாங்காய் உப்பிலீடும் காய்ச்சிய பப்படமும். ”தேங்கா போட்டிருக்கா?”என்று அனந்தன் அம்மாவை கேட்டான்.”எவளவு போட்டிருக்கு…பாரு”என்று அம்மா தவியால் கிண்டிக் காட்டினாள்.”இன்னும் கொஞ்சம் தேங்கா” என்றான் அனந்தன். ”போடா” என்றாள் அம்மா ”தேங்காய தின்னுட்டு தூறீட்டு அலையணுமா. பேசாம குடி” .”நீ என் அம்மை இல்ல. தங்கம்மைதான் என் அம்மை”என்றான் அனந்தன். ”கூடச்செண்ணு பொறு போ” என்றாள் அம்மா. ”ஏன் பொறுக்கப்பிடாதோ? பொன்னுபோல பாப்பம்லா கொச்சேமான?”என்றபடி தங்கம்மை அவன் கன்னத்தை வருடினாள். அம்மா இன்னொரு தட்டில் கஞ்சி கொண்டுவந்து தங்கம்மைக்கு கொடுத்தாள்.

அம்மா போனபின் தங்கம்மை ”அப்பிக்கு தேங்காதானே வேனும். இஞ்சேருங்க” என்று தன் தட்டிலிருந்து தேங்காய் துருவல்களை நானல்குச்சி வைத்து கோட்டிய பலாஇலையால் மெல்ல அள்ளி அவன் தட்டில் வைத்தாள். ”நீ ஊட்டிவிடுவேன்னு சொன்னியே?” என்றான் அனந்தன். ”எப்பம் சொன்னேன்?” ”நீ சொன்னே”. ” அப்பி அம்மைகிட்ட சொல்லி ஒரு பெண்ணு கெட்டிவைக்கச் சொல்லணும். அவ தினமும் ஊட்டிவிடுவா” அனந்தன் ”எனக்கு நீதான் ஊட்டிவிடணும்”என்றான். தங்கம்மை அவனுக்கு கோட்டிய பலாஇலையால் கஞ்சியை அள்ளி ஊட்டிவிட்டாள்.

அனந்தன் தங்கம்மையிடம் ”தேங்கா கல்ப விருட்சமாக்கும் தெரியுமா?”என்றான். ”ஆரு சொன்னது?” . அனந்தன் ”சோசியர்தாத்தா சொன்னார். தேங்கான்னா இந்த பிரபஞ்சம். தண்ணிதான் கடலு. ஓடு அதைச்சுத்தி இருக்க ஆகாசம். அதாக்கும் பிள்ளையாருக்கு தேங்கா ஒடைக்கது. நான் அடுத்த மாசம் அளப்பங்கோடு போவேனே”. ”ஆருகூட போவுது அப்பி?” ”நானும் அண்ணாவும் ஆசாரியும். போத்திக்க பசுமாடு குட்டி போட்டிருக்கில்லா? பாலு கொண்டுபோய் அளப்பங்கோடு முத்தப்பனுக்கு குடுக்காட்டி முத்தப்பன் பசுவுக்க சொப்பனத்தில வந்து பாலுகுடுக்காதேண்ணு சொல்லிரும்லா .நாம மடியில கையை வைச்சா பசு சவிட்டும். அதாக்கும் பாலு கொண்டுபோய் குடுக்கிறது…நீ போயிட்டுண்டா அளப்பங்கோட்டுக்கு?”

அம்மா வந்து ”குடிச்சானா? என்ன ஒரே பேச்சா கெடக்கு, பனையோலையில பட்டி பெடுத்தமாதிரி…? உனக்க கிட்ட மட்டும் பேசுதானே. மத்தவங்க கேக்கும்பம் இந்தப் பேச்சையெல்லாம் எங்க வச்சிருக்கான்னே தெரியல்லியே.”

தங்கம்மை காலி தட்டை நீட்டியபடி ” நல்ல மணிமணியாட்டுல்ல பேசுது பிள்ள. ஆயிரம் நாக்குள்ள அனந்தனுல்லா எனக்க செல்லம்? ”என்றாள். ”குடிவெள்ளம் மட்டும் எடுத்து குடுத்திட்டுபோ தங்கம்மையே” அம்மா சொல்லிவிட்டுச் சென்றாள்.

தங்கம்மை மண்குடத்தை எடுத்துக்கொண்டு ஊற்றுத்தண்ணீர் எடுக்கச் சென்றாள். அனந்தன் அவள் பின்னால் பேசியபடி சென்றான். அவள் பறம்புவழியாகவே தேங்காய்மட்டை அடுக்கி மண்சரிவுகளில் செய்யப்பட்டிருந்த படிகளில் இறங்கி மூங்கில் படலைத் திறந்து ஆற்றுக்குள் சென்றாள்.

பறம்பில் கமுகின் இளம்பாளை விழுந்து கிடந்தது. அனந்தன் அதை எடுத்து ”கிரீடம் செய்து குடு”என்றான். ”அப்பி பேயாம வரணும் பெட்ட அடிக்கு இன்னி கிரீடம் மட்டுதான் கொற” என்றாள் தங்கம்மை. அனந்தன் அடிபட்டதை நினைவுகூர்ந்து தொடைகளையும் தோளையும் பார்த்தான். தடித்தடியாக சிவர்ந்து வீங்கியிருந்தன. ஒரு அடிபட்ட இடம் எப்படி இரட்டைவரி போல வீங்குகிறது என அனந்தன்னுக்கு புரியவில்லை.

தங்கம்மை மணலில் கால்புதைய நடந்தாள். அனந்தன் பின்னால் ஓடி ”கிரீடம்” என்றான். ”சும்மா வருதா? ஆராம் கண்டா சிரிப்பாவ. அப்பிக்கு இப்பம் என்ன வயசாச்சுண்ணாக்கும் நெனைப்பு? பளைய காலம்ணாக்கா பத்து வயசில எண்ணதேச்சு மெய்யுருவி பிழிச்சில் நடத்தி இதுக்குள்ள களரியில சேத்துவிட்டிருப்பாவ. ஓதிரமும் கடகமும் செல்லி வலிஞ்சு கெட்டி வலத்து மாறி அடிச்சு இருந்து எந்திரிச்சு அங்கம் சவிட்டுத பிராயம். பாளைக்கிரீடம் வச்சு நடக்குத மோகம் கொள்ளாம்……”

அனந்தன் அடமாக காலை ஊன்றி நின்று ”கிரீடம்”என்றான். தங்கம்மை ”செரி இஞ்ச தரணும்”என்று அதை வாங்கி கீறி வளைத்து சிறிய தலைப்பாகைக் கிரீடம் போல அனந்தன் தலையில் சுற்றினாள். அனந்தன் உடனே மூலம்திருநாள் மகாராஜாவாக ஆகிவிட்டதாக உணர்ந்தான். வாள் இல்லாத குறை தெரிய சுற்றுமுற்றும்பார்த்தான். வாளாகச் செயல்படும் பொருட்கள் எவையும் கண்ணில் படவில்லை. ஊற்றருகே அமர்ந்து கோட்டியபாளையால் ஏற்கனவே ஊறியிருந்த தண்ணீரை இறைத்து ஊற்றி அடிநீர் வந்தபின் புதிய நீர் ஊறிவரக் காத்திருந்தாள். சரசரவென கரைமணலை விண்டுவிழச்செய்தபடி நீர் ஊறி வந்தது. அதை மேலாக அள்ளி குடத்தில் ஊற்றினாள். குடம் களக் களக் என்று நிறைந்தது.

அனந்தன் புதருக்குள் உண்மையிலேயே ஒரு வாள் கிடப்பதை கண்டான். நன்றாகத் தீட்டப்பட்ட வாள். அல்லது அங்கே ஒரு குட்டி நீரோடை ஓடி வெயிலில் ஒளிவிடுகிறது, இல்லை வாள்தான். அனந்தன் அருகே சென்று கூர்ந்து பார்த்தபோதும் வாள்தான். அது ஒருவேளை மூலம்திருநால் மகராஜாவின் வாளேதானா? அவர் இந்தவழியாக செல்லும்போது மறந்துவிட்டுவிட்டுப் போயிருப்பாரோ ? அந்த வாலை எடுத்ததனால் அனந்தன்னை சித்திரை திருநாள் மகாராஜா கூப்பிட்டு குட்டி ராஜாவாகக்கூட ஆக்கி விடுவார். அனந்தனுக்கு பெரிய ராஜ்யமெல்லாம் வேண்டாம். சின்னதாக இருந்தால் போதும் ஒரு கொட்டாரம் இரண்டுகுளம் கொண்டம் காடு. மலை?

அனந்தன் புதருக்குள் சென்று அதை தொட்டான். கிழ்சிசல் துணிபோல அழுந்தியது, வாள் அல்ல. தங்கம்மை பின்னால் நின்று ”அப்பி அங்க என்னெடுக்குவு?” என்றாள். அதை கண்டுவிட்டு ”அய்யய்ய அப்பி வரணும்…. அது பாம்பு உரிச்ச சட்டையில்லா… அங்க எங்கிணயாம் அதுக்க குட்டிகள் இருக்கும்… வரணும்..” அதற்குள் அனந்தன் ஒரு குச்சியால் அதை எடுத்தான். வெள்ளிச்சரிகை போல தொங்கியது. ”கீள போடணும் செல்லட்டு…கீள போடுதா அடிவாங்குதா?”

அனந்தன் அதை போட்டான். ”கொடி மாதிரி இருக்கு” ”இங்க வரணும்…” அனந்தன் கால்பட்டு அங்கே கிடந்த ஒரு பழைய மண்கலத்தின் உடைசல் திரும்பியது. உள்ளே மென்மையான சேற்றுக்குள் நெத்திலிமீன் குஞ்சுகளை குவித்தது போல பாம்புக்குட்டிகள் பளபளப்புடன் நெளிந்தன.

”அய்யோ அப்பி ஓடிவந்திரணும்…எல்லாத்துக்கும் வெசமுண்டு” தங்கம்மை கூவினாள். அனந்தன் தாவி தங்கம்மை அருகே வந்தான்.”சொன்ன பேச்சு கேக்காம எல்லாத்துக்கும் சாடி போறது. மோந்துபாக்குத பட்டி மாதிரி…… வரணும்” என்று தங்கம்மை அனந்தனின் காதைப்பிடித்து அழைத்துச் சென்றாள்.

குடிநீர் வைக்கும் செம்புக்கலத்தில் நீரை ஊறிவிட்டு ”அம்மிங்கிரே ….அம்மிங்கிரே….இம்பிடு காயம் எடுக்கணும், பறம்பில ஆத்துவக்கில பாம்புக்குட்டியில்லா புளுத்துக் கெடக்கு…”என்றாள். அம்மா உள்ளிருந்து தவியுடன் வந்ந்து ” நல்லதா தங்கம்மையே” என்றாள். ”நல்லதாக்கும் அம்மிங்கிரே . நல்லது குட்டி போட்டாக்க நல்ல பிரசவம்ணாக்கும் சாத்திரம். ஒரு கொறையும் வராது.” அம்மா அதற்கு ஒன்றும் சொல்லவில்லை. பேசாமல் நடந்து போய் காயக் கட்டியை கொண்டுவந்து தங்கம்மை கையில் கொடுத்தாள்.

செம்புநீரில் அதை போட்டு கைவிட்டு நன்றாகக் கலக்கிணாள் தங்கம்மை. ” காயம்ணாக்க பாம்பு வராதா?”என்றான் அனந்தன். ”பாம்புக்கு காயம்ணாக்க பிடிக்காது. நாத்தம்லா?”

அம்மா உள்ளிருந்து ”இண்ணைக்கு உச்சையூணுக்கு ஒரு விரியன்பாம்பு வருது நாடாத்தியே. அதுக்கு காயம்போட்ட சாம்பாருண்ணாக்க நாலு உருண்ட சோறு பின்னயும் கேறும்” என்றாள். தங்கம்மை ”வக்கீலா வாறாரு?”என்றாள். அம்மா ”ஆமா, தலையெழுத்த ஜெயிக்க முடியுமா?”என்றாள். ” நாயம்மாரு இருக்கதனால்தான் வக்கீலம்மாரு ஜீவிச்சுதாவ” என்றபடி தங்கம்மை செம்பும் குடமுமாக கிளம்பினாள்.

புதருக்குள் பல இடங்களிலாக காயநீரை தெளிந்தாள். பாம்புக்குஞ்சுகளைக் காணவில்லை. ”அங்க எங்கிணயாம்தான் ஒளிச்சு கெடக்கும்..போவாதிய” பாம்புகள் இருந்த இடத்திலெங்கும் காயநீரை தெளித்தாள். ”அம்மைக்காரி வந்து ராத்திரிக்குள்ள கூட்டிட்டு போயிருவா ”.

அனந்தன் ”கல்லைப்போட்டு கொல்லலாமா?” என்றான். ”அப்பி நல்ல நாயருக்க வேளமா சொல்லுது? நல்ல பாம்பு அப்பிக்க தெய்வமுல்லா? கொண்ணாக்க ஏளு சென்மத்துக்கு பாவமாக்கும் ”

ஊற்று நீர் எடுக்கும்போது தங்கம்மை ” அப்பிக்கு நாகப்பறம்பு மாடம்பிக்க கத அறியிலாமில்லியா? கடலுபோல சொத்தும் மலபோலத்த வீடும் ஏளுதலமுறைக்கு ஐஸ்வரிய்முமாக்கும் நாகத்தாரு அவிகளுக்கு குடுத்தது? எங்க போச்சு? மண்ணாப் போச்சு. நாக கன்னிக்க சாபம்லா?” தங்கம்மை தண்ணிருடன் எழுந்து நடந்தாள். அனந்தன் பின்னால் சிந்தனையுடன் நடந்தான்.

அனந்தன் பலமுறை கேட்ட கதைதான். வடக்கு ஏலா தாண்டி பெருவரம்பில் ஏறி அப்பால்சென்றால் கொச்சுநாடாரின் ரப்பர் எஸ்டேட். அதற்கு அப்பால் மேடாக ஒரு செம்மண் ஏற்றம். அதன்மீது நாகப்பறம்பு வீடு இருந்தது. அனந்தன் ஒரே ஒருமுறை பத்மம் கூட போய் அதை அவன் பார்த்திருக்கிறான். பத்மம் அவளது மாமி வீட்டுக்கு அவள் அம்மா பனச்சமூட்டுக்கு ஒரு கல்யானத்துக்கு போட்டுக்கொண்டுபோக இரட்டைவடச்செயினை இரவல் வாங்கபோனபோது கூடவே அனந்தனும் போனான். திரும்பும் வழியில் இருவரும் பெருவரம்பில் நின்று அப்பால் செம்மண் குன்றுமீது ரப்பர் மரங்களிந் இலையடர்த்திக்கு மேலாக நாகப்பறம்பு மாளிகையின் உச்சிநுனி தெரிவதை வேடிக்கை பார்த்தார்கள். ஓடு வேய்ந்த கூம்புக்கூரை வாழைக்கூம்பில் போளை சற்று இளகி நிற்பது போல நுனி தூக்கி நின்றது. உச்சி நுனியில் செம்பில் செய்து களிம்பேறிக் கறுத்த ஒருபாம்புப் பத்தி.

”அதாக்கும் நாகப்பறம்பு மாளிக. அதில எம்பிடு அற தெரியுமா?” ”எம்பிடு?” ”மொத்தம் நூத்தி அம்பது. மண்ணுக்குள்ள அம்பது. மண்ணுக்கு மேல அம்பது. மச்சில அம்பது. எல்லாம் தட்டும்நிரையும். ஒரு அறையிலயும் இப்பம் ஆளில்ல. ””ஏன்?” ”ஆளு போனா நாகயட்சி பிடிச்சு தின்னு போடுவா” அனந்தன்னின் காலில் ஒரு குளிர் ஏறியது. இருவரும் வெயில் புகைந்த கரிய ஓட்டுக்கூரையை வெறித்து பார்த்தனர். ”போலாமா?” என்று பத்மம் கிசுகிசுபாகக் கேட்டாள். அனந்தன் ”ம்” என்றான். இருவரும் வரம்புவழியாக ஓடிவந்தனர்.

கைத்தோடு இறங்கி தொடைவரை சுழித்த நீரில் கால்வைக்கையில் அனந்தன் ”பத்மம்”என்றான்.”என்னடா ஒண்ணுக்கு வருதா?”. ” நாக யட்சி பாக்க எப்டி இருப்பா?” பத்மம் உற்சாகமாக ” நாகயட்சில்லாம் பாக்க ரொம்ப அழகு தெரியுமா? ஜெயபாரதிய விட அழகு. நல்ல சிவப்பு நெறம். கண்ணெல்லாம் பெரிசா பளபளன்னு இருக்கும். ஆரு கண்டாலும் ஆசைப்பட்டுபோவா. ”பத்மம் அவன் கைகளைப் பிடித்தாள்”ஆனா அவளுக்க கையில உள்ள பத்துவிரலும் பத்து குட்டி பாம்பாக்கும். வெசப்பாம்பு. இப்டி நாக்கை நீட்டிட்டு.. ஆ… அவளுக்கு கால் இல்ல. பாம்புமாதிரி வாலுதான். ஆனா நல்ல கசவுநொறிவச்ச பட்டு உடுத்திருக்கதனால அது தெரியாது. அவ நடந்துவார மாதிரித்தான் இருக்கும். தாத்தா பாத்ததுமே சொல்லிபோடுவார். அவ நடக்கது நடை மாதிரி இருக்காது. தீ பறந்து வாறதுமாதிரி இருக்கும்…”

அனந்தன் மூச்சு இறுக, ” தாத்தா எப்பம் பாத்தாரு?” என்றான். ”ரொம்ப நால் முன்னல்லா…. தாத்தா ஆனைப்பாறை நாயர் வீட்டில புரயில வைக்கிறதுக்கு நேரம் பாத்து குடுத்திட்டு வாறப்ப நல்ல ராத்திரியாயிப்போச்சு. ஆவணி மாசம் ஆயில்யம் நாள் பௌர்ணமி. எப்டி இருக்கும்!” .”எப்டி?” ”போடா. ரொம்ப பயமாட்டு இருக்கும்லா?” ”ம்” என்றான் அனந்தன். ”தாத்தா வாறப்ப பெருவரம்பில ஒரு பெண்ணு நிண்ணுட்டு இருக்கா. பாத்தா அப்டி ஒரு அழகு. நல்ல தறவாட்டு குட்டியாக்கும்னு தாத்தாவுக்குத் தோணிப்போச்சு. ஏங்குட்டி இங்க நிண்ணு கரையுதேண்ணு கேட்டார். எனக்க அம்மை போட்டு அடிக்கா நான் சாவப்போறேன் அதுக்குத்தான் வந்தேண்ணு அவ சொன்னா. சீச்சீ இதுக்குப்போயி குடும்பத்தில பெறந்த பெண்ணடி வீட்டவிட்டு இந்த பாதி ராத்திரியில வரலாமா? வா நான் வந்து உனக்க அம்மைக்கிட்ட சொல்லுகேண்ணு சொல்லி தாத்தா அவள கூட்டிட்டு போனார். அங்க பாத்தா ஒரு பெரிய மாளிகை தகதகண்ணு வெலக்கும் பந்தமுமாட்டு எரிஞ்சு நிக்குது. ஆகா இப்டி ஒரு மாளிகை நம்ம ஊரில இல்லியேண்ணுட்டு தாத்தா அவளப்பாத்தா கையெல்லாம் பாம்பா நெளியுது. கண்ணு பாம்புக்கண்ணு. அய்யோண்ணு அலறிகிட்டு ஓடி வந்தாரு. பத்துநாள் பனிச்சு கெடந்து ஒருவழியாட்டு மேலமங்கலம் கணியானுக்க ரெட்சை கெட்டின பிறகு எந்திரிச்சாரு. அண்ணைக்கு தாத்தாவுக்க இடுப்பில மண்டைக்காட்டில நேந்து கெட்டின பதக்கம் இருந்ததனால தப்பினாரு….”

அனந்தன் ‘உனக்கு இடுப்பில பதக்கம் இருக்கா?”என்றான். பத்மம் பாவாடையை தழைத்து ”பாத்தியா மண்டைக்காட்டு பதக்கம். ஏழுசொல்லு உறுக்கு எல்லாம் கெட்டியிருக்கு”என்றாள். அனந்தன் இடுப்பில் ஒன்றுமில்லை. அவன் வயிறு சில்லிட்டது. நான்குபக்கும் புதர்களின் உள்ளே பலவிதமான கூரிய கண்கள் திறந்தன. அவன் வேகமாக மறுபக்கம் ஏறி ஓடினான்.”அனந்தன்…டேய் ..”என்று கூவியபடி பத்மம் கூடவே ஓடி வந்தாள்.

தங்கம்மை தண்ணீரை ஊற்றிவிட்டு எட்டிப்பார்த்தாள். ” எளையவனுல்லா வந்திருக்கான்…” என்றாள். தங்கம்மையின் இளையமகன் ராசப்பன் தொழுத்தின் கம்பில் உட்கார்ந்திருந்தான். ” நீ எப்டி பாத்தே?” என்றான் அனந்தன். ”இங்க நெழலு கண்டுதுல்லா….” அனந்தன் நிழலைப்பார்த்தான். ராசப்பன் மாதிரியே இல்லை. தங்கம்மை எப்படிக் கண்டுபிடிக்கிறாள் என்று தெரியவில்லை.

தங்கம்மை எட்டிப்பார்த்து ”ராசி, கஞ்சி குடிச்சியாலே?” என்றாள். ”ஓம்”என்றான் அவன். அம்மா உள்ளிருந்து ”இப்பம்தான் வந்தான். கஞ்சி குடிச்சான். காரிய மாட்டாசுபத்திரியில காட்டணும்ணு சொன்னாவ” என்றாள். அப்பா காரியை கயிறு மாற்றிக் கட்டிக் கொண்டிருந்தார். ராசப்பனும் அண்ணாவும் ஒரே கிளாஸ்.

அண்ணா உள்ளிருந்து சட்டை போட்டுக்கொண்டு வெளியே வந்தான். கையில் ஒரு மஞ்சள் பை. ராசப்பன் போட்டிருந்த சட்டை அண்ணாவின் பழைய சட்டை. ராசப்பன் எப்போதும் அண்ணாவின் பழைய சட்டையை மட்டும்தான் போடுவான். புதிய சட்டை அவனுக்கு எடுப்பதேயில்லை. போன ஓணத்துக்கு மட்டும் அப்பா அவனுக்கும் புதிய சட்டை எடுத்துக் கொடுத்தார். அவன் கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கியதற்காக. அண்ணா கணக்கில் நாற்பத்தெட்டுதான்.

தங்கம்மை தவிடு கொழித்துக் கொண்டிருந்தபோது அம்மா வந்து ”தங்கம்மை ராசப்பனுக்க சட்டையை பாத்தியா? நல்ல நெறமுல்லா? நல்லா சேரும்…”என்றாள். தங்கம்மை நிறுத்தி புரியாமல் ”ஆருக்கு?”என்றாள். அனந்தன் ” ராசப்பனுக்கு. அவன் கணக்கில புலியில்லா? அதாக்கும் அப்பா வாங்கினது”என்றான்.

தங்கம்மை கையை தன் வேட்டியில் துடைத்துவிட்டு அதை மெல்ல தொட்டு வருடினாள். ” எல மாதிரி மெல்லிசாட்டுல்லா இருக்குவு? கீறிப்போவுமா ? ”என்றாள் ”மெல்லிசா இருந்தாத்தான் நல்ல துணி கேட்டுக்க. உனக்க பய கணக்கில நூறுமார்க்கில்லா வாங்கியிருக்கான். புத்தியுள்ள பய. அவன நல்லா படிக்க வைக்கணுமிண்ணு சொல்லியிருக்காவ” தங்கம்மையின் தலை மெல்ல ஆடியது. முகத்தில் மோவாய்சதையில் ஒரு மெல்லிய இழுபடல். கண்களில் நீர் படலமாவதை அனந்தன் கண்டான்.

ராசப்பன் சட்டை துணியைக் கண்டதும் மகிழ்ச்சி அடையாதது அனந்தனுக்கு ஏமாற்றமாக இருந்தது. ”ராசப்பா பாத்தியா … மல்மல் துணி மல்மல் துணி பாத்தியா?” என்று அவனே பலமுறை சொல்லியும் ராசப்பன் அதை பொருட்படுத்தாமல் சாதாரணமாக இருந்தான்.

துணியை அண்னாவே கொண்டுபோய் தைத்து கொண்டுவந்தான். ”ராசப்பா போடு பாக்கட்டு”என்றாள் அம்மா. ராசப்பன் பேசாமல் நின்றான்.”போடுல… உனக்க அம்மா பாக்கட்டு”. ராசப்பன், ”சும்மா கெடக்கணும் அம்மிங்கிரே” என்றான். ”போடுலே, பெரிய மத்தவன் மாதிரி போஸ் காட்டாம” என்றாள் அம்மா.

ராசப்பன் சட்டையை போட்டான். அவனுடைய கன்னங்கரிய நிறத்துக்கு வெளிர்நீல கோடுபோட்ட சட்டை நன்றாகவே பொருந்தியது. ”பாத்தியா நாடாத்தியே, எப்டி இருக்கான் பாரு…”என்றாள் அம்மா. தங்கம்மை வாய் மீது கைவைத்தபடி முகம் முழுக்க சுருக்கங்கள் நெளிய சிரித்து, ” அய்யட ஆப்பிசருல்லா, போபிலே செண்ணு சோலியப்பாருலே”என்றாள்.

அம்மா, ” ராசப்பா எதுக்கும் சட்டைய போட்டே…திருவாட்டார் வரை செண்ணு லைப்ரரியில புஸ்தகம் எடுத்துக்கிட்டு வாடே மக்கா”என்றாள். ”இந்நேற்று கொண்டுவந்தது எல்லாம் படிச்சாச்சா?”என்றான் ராசப்பன். ”அப்பமே படிச்சாச்சுல்லா?” என்றாள் அம்மா. ” சோலியும் தொளிலும் இல்லைண்ணா இருந்து படிக்கிலாம்” என்றான் ராசப்பன். அம்மா ”சும்மா சொல்லாதே…நான் ராத்திரி கண்ணு முழிச்சாக்கும் படிச்சது” என்றாள். ராசப்பன் சற்று கோபத்துடன் ”என்னத்துக்கு கண்ணு முளிச்சு படிச்சணும்? பரிச்சயா நடக்குவு? தேகம் இருக்க இருப்புக்கு ஒறக்கம் ஒளியலாமா? அம்மிணி இன்னி பகல்ல படிச்சா மதி.”

அம்மா சமாதானமாக  ”செரி , இன்னி படிக்கல்ல. என் மக்க இல்ல ,இப்பம் செண்ணு எடுத்துக்கிட்டு வா” என்றாள்.”இன்னி ஒறக்கம் ஒளிஞ்சதா நான் கேக்கப்பிடாது”என்றான் ராசப்பன் அம்மாவிடமிருந்து புத்தகங்களை வாங்கியபடி. ”சத்தியமாட்டு இல்ல”

அனந்தன் ”அம்மா நானும்போட்டா?”என்றான் .”நீ அம்பிடு தூரம் நடக்கமாட்டே” என்றாள் அம்மா. ராசப்பன் போவதை முகவாயில் கைவைத்து வெகுதூரம்வரை பார்த்தபின் தங்கம்மை சிரிப்புடன் ”நீக்கம்பில போறபய போறதப்பாரு , தொரயில்லா……வெளங்கமாட்டான்”என்றாள்.

அண்ணாவும் ராசப்பனும் மாட்டையும் கன்றையும் கூட்டிக்கொண்டு சென்றார்கள். இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளும் வழக்கமே இல்லை. அனந்தன்னுக்கு அது ஆச்சரியமாக இருக்கும். இருவரும் சேர்ந்தே இருப்பார்கள்.ஊரைவிட்டு கொஞ்சதூரம் போனதுமே இருவரும் ஆளுக்கொரு பீடி பற்றவைப்பார்கள் என்று அனந்தனுக்கு தெரியும். இரவில் அண்ணா கதவை திறந்து வெளியே போய் ஆற்றுமணலில் காத்திருக்கும் ராசப்பனைக் கூட்டிக் கொண்டு அருமனைக்கு சினிமா பார்க்கப் போவதும் தெரியும். ஆனாலும் அவர்களுக்குள் அவசியமான சில சொற்றொடர்களைத் தவிர பேச்சு ஏதும் நிகழாது. சண்டையும் கிடையாது. அனந்தன் அவர்களுடன் சேர்ந்து போனால் அவனிடமும் இருவரும் ஒன்றும் பேசமாட்டார்கள். ஆனாலும் அனந்தனுக்கு அவர்களுடன் நடப்பது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். நிறையபேர் அண்ணாவிடம் ” அப்பி தூரமா?” என்று கேட்டு ஏதாவது சொல்வார்கள். ராசப்பனிடம் ”ராசப்பா ஒரு பெட்டிசன் எளுதணுமே மக்கா”என்று ஏதாவ்து கோரிக்கை வைப்பார்கள். அவர்கள் அனந்தனிடமும் புன்னகை செய்து ”கொள்ளாம் இப்பம் கொச்சப்பியும் வெளிய எறங்கியாச்சே” என்பார்கள்.

அனந்தன் சமையலறைப்பக்கமாக போனான். அம்மா வடக்குத்திண்ணையில் அறுப்பத்தி மேல் அமர்ந்து வாழைக்காய் தோல் சீவிக்கொண்டிருந்தாள். வெளியே நெல்லுப்புரை அருகே விரித்த பிரம்புப்பாயில் சூடு ஆறிய நெல்லை தங்கம்மை காலால் சிக்கிப்பரத்தினாள். அருகே காக்காய் வராமலிருக்க குடை விரித்து வைக்கப்பட்டிருந்தது. மாமரத்துக் கிளையில் இருந்த இரண்டு காகங்கள் தலையை சந்தேகமாகச் சரித்து கிழே பார்த்து கரைந்தன. சிறகை பிரித்து அடுக்கியபின் இடம் மாறி அமர்ந்து கரைந்தன.

சமையலறையில் தீயடுப்பில் செம்புருளியில் துவரம்பருப்பு கொதித்துக் கொண்டிருந்தது. சாம்பார் பிடிக்குமென்றாலும் பருப்பு கொதிக்கும் வாசனை அனந்தனுக்குப் பிடிக்காது. அவன் அம்மா அருகே அமர்ந்து வாழைக்காய் தோலைக் கையில் எடுத்தான்.”கீழே போடு. கையெல்லாம் கறையாவுயதுக்கா?” என்றாள் அம்மா.

அம்மாவின் கால்பாதங்கள் வீங்கி பளபளவென இருந்தன. அனந்தன் பாதத்தின்மீது சுட்டுவிரலால் குத்தியபோது குழி விழுந்து மெல்ல நிரம்பியது.”நோவுதா?”என்றான். ”சும்மா இருடா”

”கால் தெறம்பிச்சோ?” அம்மா அறுப்பத்தியைப் பாரமலேயே இயல்பாகத் தோல் சீவியபடி ” அம்மைக்க வயித்தில பிள்ளை இருக்கில்லா…அதாக்கும்”என்றாள். வாழைக்காய்த்தோல் சுருண்டு வந்தது.

”சின்ன பிள்ளைகளுக்கு காலு வீங்கின மாதிரி இருக்குமே” என்றான் அனந்தன். அம்மா சிரித்தபடி ”ஆமா அதாக்கும்”என்றாள்.அம்மா படிபப்டியாக சின்னப்பிள்ளை மாதிரித்தான் ஆகி வருகிறாள். கன்னமெல்லாம் சின்னக்குழந்தைகளின் கன்னம்போல ஆகியிருக்கிறது. உதடுகள் கூட. கழுத்து சற்று கறுத்திருக்கிறது.

அம்மா வாழைக்காய்களை துண்டுகளாக நறுக்கினாள். ”விழுக்குபெரட்டிக்கா அம்மா?” . அம்மா ”விழுக்குபெரட்டி ஓலன் எல்லா எளவும் வைக்கணும் காலமாடனுக்கு. கேட்டியா தங்கம்மையே ஒரு மீனோ எறச்சியோ திங்கவன் வந்தா சங்கதிகள் எளுப்பத்தில தீரும். இதிப்பம் காலன் ஓலன் புளிசேரி சாம்பாறு பப்படம் உப்பேரி… பிரதமனும் வைக்கச் சொல்லுவாவளோ என்னமோ?” என்றாள்.

”கொலமுடிவானுக்கு மண்ண அள்ளி போடணும் வாயில. நாசமாப்போவான். அவன் வம்சம் மண்ணுதின்னுல்லா போவும்!”என்றாள் தங்கம்மை.

வக்கீலுக்காக இவ்வ்வளவு சமையல். ஓலன் அனந்தனுக்கு கொஞ்சம்கூடப் பிடிக்காது. கும்பளங்காயும்  சேம்பங்கிழங்கும் சின்னதாக வெட்டிப்போட்டு தேங்காய்ப்பாலில் பெரும்பயறும் சேர்த்து கொஞ்சம்கூட புளிப்போ காரமோ இல்லாமல் ஒரு கறி. அதை சும்மா சப்பிட்டால் சப்பென்றிருக்கும். சில தாத்தாக்கள் அதை சோற்றில் குழைத்து தின்பார்கள். உப்பேரி பரவாயில்லை. சிவப்படிக்காத ஏத்தன் வாழைக்காயை வட்டவட்டமாக வெட்டி உப்புநீரில் நனைத்து பச்சைமிளகாய்போட்டு தாளித்த கொதிக்கும் தேங்காயெண்ணையில் போட்டு புரட்டி சின்ன தவலையால் கொஞ்ச நேரம் மூடிவைத்து ஆவிபறக்க மூடியை திறந்து எடுத்தால் மணமாக இருக்கும். போத்தி வீட்டில் மொந்தன்வாழைக்காய்தான் உப்பேரிக்கு சிறந்தது என்பார்கள். மொந்தன் வாழைக்காய் உப்பேரி சீக்கிரமே சவுக் சவுக் என்று ஆகிவிடும். வாழைக்காயை லேசாக வேக வைத்தபின் எண்ணைகுறைவாகச் சேர்த்து புரட்டி வேகவைத்தால் மெழுக்குபிரட்டி. வாழைக்காயை சீவி அப்படியே நேரடியாக எண்ணையில் போட்டு பப்படம் போல பொரித்து எடுத்தால் வறுத்துப்பேரி. வறுத்துப்பேரியை கொறித்தபடியே கதகளி பார்ப்பது அம்மாவுக்கு பிடிக்கும். வறுத்துப்பேரி இல்லாமல் கதகளிபார்க்க போகவே மாட்டாள். உப்பேரி சத்தியையின் பின்னணிப்படை நால்வரில் ஒருவன் என்று ஜோசியர் தாத்தா சொல்வார். கூட்டுகறி, பருப்பு, பப்படம், அவியல் நால்வரும் முன்னணிப்படை. காளன் ,ஓலன், புளிசேரி, உப்பேரி நால்வரும் பின்னணிப்படை. ”இருநால்வர் இல்லாமல் இல்லையே இல்லத்து சத்தியை” தாத்தா சொன்னார்.

அனந்தனுக்கு சமையல் பிடிக்கும். அம்மா சமைக்கும்போது மேடைமீது ஏறி அம்மி மீது அமர்ந்து மணிக்கணக்காக வேடிக்கை பார்ப்பான். ”எண்ணை தெறிக்கும் போடா”என்றாலும் நகர மாட்டான். சமையல் செய்வதற்கு முன் காய்கறிகள் எல்லாம் தின்னமுடியாதபடி கசப்பாகவும் துவர்ப்பாகவும் கறையாகவும் இருக்கின்றன. ஒவ்வொன்றாக வெந்து உருமாறி இன்னொன்றுடன் இணைந்து ஒரு கணத்தில் அந்த பழக்கமான மணம் எழுகிறது. சாம்பார் மணம்.அவியல் மணம். துவரன் மணம். உப்பேரி மணம். புளிகறி மணம். மீன்கறி மணம். அனந்தன்னுக்கு அந்த முதல் மணம் ஒரு அதிர்ச்சியைத்தான்  அளிக்கும். செங்குடிப்பொற்றையின் அச்சுதக்கணியாரின் கணியாத்தி நாராயணிக்கு அப்படித்தான் எங்கிருந்து வந்தது என்று ஆச்சரியம் அளித்தபடி புதிதாக ஒருg குழந்தை பிறந்தது. அவள் வீட்டுமுன் ஒரே கூட்டம். பத்மத்துடன் அவனும் போயிருந்தான். எல்லாம் பெண்கள். உள்ளே கசகசவென்று அழுக்குத்துணிகள்தொங்கிய அறையில் பழைய பாயில் பெரிய வயிறு உப்பி நிற்க நாராயணி மல்லாந்து கால் அகட்டி படுத்திருந்தாள். ”ஆ என்றம்மே எனிக்கு வய்யாயே”என்று கூவிக்கொண்டு தலையை அப்படியும் இப்படியும் ஆட்டினாள். திடீரென்று ஆ என்று பயங்கரமாக கூவி எழமுயன்றபோது பிற பெண்கள் பிடித்து அமுக்கினர். ”பிள்ளையள்லாம் வெளிய போங்கோ”என்று என்று ஒரு பாட்டி சொன்னாள். வெளியே பதற்றமாக நின்று பத்மத்திடம் ”கணியாத்தி செத்துபோவாளா பத்மம்?”என்று கேட்டான். கணியாத்தியின் மூன்றுவயது குழந்தை ஷீலா அவர்கள் அருகே மூக்கு ஒழுக துணியில்லாமல் வாயில் கட்டைவிரல் வைத்து சூப்பியபடி விழித்துப்பார்த்து நின்றது. விதவிதமான புரியாத ஒலிகள். அலறல், அதட்டல்கள், ஆறுதல்கள் ,கட்டளைகள் ,பிரார்த்தனைகள். துவர்ப்பான ரத்த வாசனை. சூடான உப்பான ரத்த வாசனை. திடீரென்று புத்தம் புதிதாக ஒரு குரல். நாய்க்குட்டிக் குரல் போல. விசித்திரமான குரல். அந்தக்குரல் கேட்டதும் எல்லாமே மாறி விட்டது. எல்லா குரல்களும் வேறு மாதிரி ஒலித்தன.

புதிதாக ஒன்று உருவாகி வருவது . அனந்தனுக்கு அதை நேரில் நின்று பார்க்கும்போதுகூட முழுக்க நம்பிக்கை வராது. ஒரு அவியல் எப்போது அவியலாகிறது? கடைசியாக அரைத்தவி தேங்காயெண்ணையை உருளியில் மஞ்சளாகக் குமிழி உடையக் கொதிக்கும் காய்கறிக்கலவைமீது நீவி விட்டு மூடும்போது கூட தேங்காயென்ணைமணமும் சேனைக்கிழங்கு வேகும் மணமும்தான் இருக்கும். கொஞ்சநேரம்கழித்து இறக்கி அரைத்தவி தயிரை அதன் மீது விட்டு ஒரு இளக்கு இளக்கும்போது தயிர் சூடாகும் மணம். ஆனால் ஒரு கணத்தில், அனேகமாக அந்தக்கணத்தில் அவன் மனம் வேறு எதையாவது நினைத்துக் கொண்டிருக்கும், சட்டென்று அவியல் வாசனை. அவியல் பிறந்துவிட்டது. அனந்தன் சமையல்காரனாக வேண்டும் என்று எப்போதுமே ஆசைப்பட்டான். யார் கேட்டாலும் அதைத்தான் சொல்வான். கிளாஸில் ரெத்னா டீச்சர் கேட்டபோதுகூட அதைத்தான் சொன்னான். எல்லாரும் சிரித்தார்கள்.

அப்பா உள்ளறையிலிருந்து குட்டைக்கால் கொண்ட ஆதாரப்பெட்டியை எடுத்துக் கொண்டு திண்ணைக்குச் சென்றார். அனந்தன் ஜன்னலுக்கு இப்பால் நின்று கம்பிகலைப்பிடித்தபடி எட்டிபபர்த்தான்.நல்ல கனமாக ஈட்டிமரப்பெட்டி அது. கரிய வழவழப்பான அதன் பரப்பில் மரத்தின் கோடுகள் ஆழ்ந்த அரக்குச்சிவப்பாக ஓடின. மூலைகளில் பித்தளைபிடிப்புகள். கைப்பிடியும் கீலும் பூட்டுத்தொப்புளும் எல்லாம் பித்தளைதான். அதன் சாவிகூடநல்ல பளபளப்பான பித்தளை. அது அப்பா வேலைக்குபோன நாட்களில் கிருஷ்ணபுரம் தறவாட்டு வீடு பாகம் வைத்தபோது பொன் விலைகொடுத்து வாங்கியபெட்டி. அப்பாதான் அந்த கேஸில் எழுத்துகுத்துப்பிள்ளை. அதை அப்படியே தூக்கி தண்ணீரில்போட்டால்கூட உள்ளே ஈரம் போகாதாம்.

அப்பா அதை மெல்ல திறந்தார். மட்கிய காகித மணம் அடித்தது. உள்ளே இரு அடுக்குகளாக ஆதாரக் கட்டுகள் நீளவாட்டில் மடிக்கபப்ட்டிருந்தன. அப்பா எருமைக்கொம்பாலான சட்டம் உள்ள கனத்த மூக்குக் கண்ணாடிபோட்டுக் கொண்டு சப்பணமிட்டிருந்து ஒவ்வொன்றாக எடுத்து கூர்ந்து படித்தார். ஒரு தாளில் பென்சிலால் சில தகவல்களைக் குறித்துக் கொண்டார். நீலநிறத்தில் அட்டைபோட்ட உத்தகம்தான் அப்பாவின் மெட்ரிகுலேஷன் சர்ட்டி·பிகெட் என்று அம்மா ஒருமுறை சொன்னாள். பதினொன்றாம் வகுப்பு போல அப்பா படிக்கும்போது மெட்ரிக்குலேஷன். அப்பா நான்குவருடம் தொடர்ந்து எழுதித்தான் அதை ஜெயித்தார். அந்தக்காலத்தில் ஊருக்கு ஒருவர் கூட மெட்ரிகுலேஷன் ஜெயிப்பதில்லை. அப்பாவும் நாராயணன் போத்தியும்  சோமன் பாகவதரும் சேர்ந்துதான் தொடுவட்டி கிறிஸ்டியன் ஸ்கூலில் படித்தார்கள். போத்தி எட்டாம் வகுப்புடன் நின்றுவிட்டார். பாகவதர் ஒன்பதம் வகுப்பில் சங்கீதம் படிக்கப்போய்விட்டார்.

உள்ளே அம்மா கொத்தமல்லியையும் வத்தல் மிளகாயையும் சேர்த்து எண்ணைச் சொட்டுவிட்டு வாணலியில் வறுக்கும் மணம் எழுந்தது. வறுத்த கொத்துமல்லியை தின்பது அனந்தனுக்குப் பிடிக்கும். ஆனால் அப்பாவின் பெட்டியைப்பார்க்கும் ஆசையுடன் நின்றிருந்தான். அம்மா கொத்தமல்லியை சீனச்சட்டி கொதிக்க சூடாகவே வாங்கி வைத்தாள். மிளகு கமறி அப்பா இருமுறை இருமினார். பெட்டிக்குள் இருந்து ஒரு பீங்கான் புட்டியை எடுத்தார். அது நிறைய தொட்டெழுத்துப் பேனாக்கள். கீழ்நுனி பருத்து மேல்நுனி சூம்பி கட்டெறும்பு நிறத்தில் இருந்தன. சீமை அரக்கில் செய்தவை. அந்த புட்டிக்குள் அப்பா பலவகையான நிப்புகளைப் போட்டு வைத்திருந்தார். சில நிப்புகள் வெள்ளி  சில நிப்புகள் ஈயம்.  ஒரு நிப்பு மட்டும் தங்கம். நிப்பை பேனாவில் செருகி மைப்புட்டியில் உள்ள மையைத் தொட்டு எழுதவேண்டும்.

அப்பா மைப்புட்டியை எடுத்தபோது அனந்தன் பரவசமும் பதற்றமும் அடைந்து நிற்க முடியாமல் எம்பினான். அந்தப்புட்டி எப்படிக் கவிழ்ந்தாலும் மை வெளியே சிந்தாது. நீலநிறத்தில் மீன்கொத்திக் குஞ்சு போல ஒளியுடன் இருந்தது. அது ஜெர்மனியப் புட்டி என்று அம்மா சொல்லியிருக்கிறாள். அப்பா வெகுநாள் தொட்டெழுத்துப் பேனாவால்தான் எழுதிக்கொண்டிருந்திருகிறார்.·பௌண்டன் பேனா வந்த பிறகும் மாறவில்லை. ஆனால் பிறகு நிப் கிடைக்காமலாயிற்று. அதன் பிறகுதான் அவரும் பௌண்டன் பேனாவுக்கு வந்தார். ஆனால் அதையும் அடிக்கடி மையில் முக்கித்தான் எழுதுவார். மேஜைமீது எப்போதும் திறந்த மைப்புட்டி இருக்கும்.

அப்பா பெட்டிக்குள் இருந்து சின்ன கண்னாடி சம்புடம் ஒன்றை எடுத்து அதிலிருந்து பொன்னாலான ஏழு கோட் பித்தான்களை எடுத்து ஒவ்வொன்றாக எண்ணினார். ஒருசிலவற்றை துண்டால் துடைத்தார். மீண்டும்போட்டு மூடி உள்ளே வைத்தார். மூன்று ஆதாரங்களை மட்டும் எடுத்துக்கொண்டு பெட்டியை மூடி தூக்கி உள்ளே கொடுவைத்தார். ஈஸி சேரில் அமர்ந்து அவற்றை கூர்ந்து படிக்கத் தொடங்கினார். மோவாயைத் தேய்த்தபடி சற்று யோசித்துவிட்டு, ”எடீ”என்றார். அப்பா மெல்லியகுரலில் கூப்பிட்டாலும் அம்மாவின் காதில் விழுந்துவிடும். ”ந்தா” என்று கூவியபடி அம்மா கையை முண்டு நுனியில் துடைத்துக் கொண்டு வேகமாக வந்து , போகும்போதே அவ்னைப்பார்த்து புருவத்தை சுளித்து என்ன என்று கெட்டுவிட்டு, கதவருகே நின்று ” விளிச்சீங்களா?” என்றாள். அப்பா ”ம்ம்’ என்று சொன்னபின் ஆதாரத்தையே கூர்ந்து படித்துக் கொண்டிருந்தார். அம்மா சிலநிமிடங்கள் நின்றபின் கால் மாற்றி ”விளிச்சியளா?” என்று மீண்டும் மெல்லிய குரலில் கேட்டாள். அப்பா திரும்பாமலேயே ”ம். ஒரு சுக்குவெள்ளம் போட்டு கொண்டுவா”என்றார். அம்மா திரும்பி அவனிடம் புன்னகைத்தபின் சென்றாள்.

அப்பா அந்த ஆதாரத்தில் அப்படி என்ன கூர்ந்துபடிக்கிறார் என்ற ஆர்வம் அனந்தன்னுக்கு ஏர்பட்டது. எம்பி எம்பி பார்த்தான். உருண்ட மலையாள எழுத்துக்களில் கடுக்காய் மையில் எழுதப்பட்ட எழுத்துக்கள். அவன் ஜோசியர் கடுக்காய் மை செய்வதை கண்டிருக்கிரான். ஜாதகங்களை அவர் இப்போதும் கடுக்காய்மையில்தான் எழுதுகிறார். எழுத்தாணியால் ஓலையில் எழுதுத்துதான் அதிகம். சிலர் காகிதத்தில் வேண்டுமென்று கேட்பார்கள். அவர்களுக்காக கடுக்காய் மையைத் தொட்டு முள்ளம்பன்றி முள் கூர்த்து செய்த பேனாவால் எழுதிக் கொடுப்பார். ”அததுக்குண்ணுட்டு ஒரு இது உண்டு. ஏது? சும்மா கண்ட மசியிலயும் எளுதிக்குடுத்தா ஜாதகம் வெளங்குமா?”என்றார் தாத்தா. கடுக்காயை நன்றாக உடைத்து கருக வறுத்து அரைத்து தண்ணீரில் கலக்கி நாலைந்து நாள் வைத்தபின் பழைய பானையில்போட்டு நன்றாக காய்ச்சுவார். கொதிக்கும்போது அதில் கொஞ்சம் நவச்சாரத்தையும் சேர்ப்பார். வற்றி வரும்போது கருப்பாக கெட்டியாக கஷாயம்போல் இருக்கும். அதை தொட்டுத்தொட்டு எழுதுவார். சொட்டி துணியில் விழுந்தால் என்ன செய்தாலும் அழியாது. ஆதாரங்களெல்லாம் அழியாமல் இருக்க கடுக்காய் மையால்தான் எழுதுகிறார்கள். அப்படியே எரித்து விட்டால் என்ன செய்வார்கள்?

அப்பா ஆதாரங்களை ஓராமாக வைத்துவிட்டு கருப்பாக வழவழப்பாக இருந்த ஈட்டியாலான எழுதுபலகையை ஈஸிசேரின் கைகள் மேல் வைத்து அதன் மீது  இளநீலநிறமான பேப்பரை எடுத்து விரித்து கைகளால் நன்ராக நீவினார். பக்கவாட்டில் இருந்த டெஸ்கின் இழுப்பை திறந்து பனைத்தடியில் கடைந்த கரிய ரூல்தடியை எடுத்து வைத்து கட்டைவிரலால் தடுத்துப் பிடித்து கொண்டு பெருமாள்செட்டி பென்சிலால் கோடுகள் போட ஆரம்பித்தார். ரூல்தடி அதுவே நகர கோடுகள் கச்சிதமான இடைவெளியில் சீராக விழுந்தன.

அம்மா செம்புவங்கத்தில் சுக்குநீருடன் வந்து மீண்டும் கதவருகே நின்று ”சுக்கு வெள்ளம்”என்றாள். அப்பா திரும்பவில்லை. அம்மாவின் கை சுட அவள் கைமாற்றியபடி ”சுக்குவெள்ளம் கேட்டியளே”என்றாள். அப்பா அந்தப்பக்கத்தை கோடு போட்டு முடிப்பதுவரை அம்மாவைப்பார்க்கவில்லை. ”வைக்கட்டா?” என்று அம்மா கேட்டாள். ”வச்சிட்டு போறதுக்கென்ன? கைச்சோலியாய் இருக்கது கன்ணில படாதா?” என்று அப்பா சீறினார். ஆனால் அப்பாவுக்கு அவர் முன் எதையும் வைத்துவிட்டுபோவது பிடிக்கவே பிடிக்காது. எடுத்து வெளியே வீசிவிடுவார். அம்மா ஸ்டூலில் சுக்குநீரை வைத்தாள். சற்று தள்ளிவந்து பேசாமல் காத்து நின்றாள். அப்பா ஒன்றுமே சொல்லவில்லை. அம்மா மெல்ல கனைத்தாள். அப்பா இன்னொரு தாளில் கோடு போட்டபின் சுக்குநீரை எடுத்தார். அதன் பின் அம்மா மெல்ல பின்வாங்கி உள்ளே சென்றாள்.

அப்பா கோடு போட்ட தாள்களில் அந்த ஆதாரத்தைப்பார்த்து பிரதி எடுக்க ஆரம்பித்தார் . அப்பா ஒவ்வொரு எழுத்தையும் உருட்டி உருட்டி சின்ன சின்ன படங்கள் போலத்தான் எழுதுவார். அடிக்கடி மை தொட்டு புட்டிக்குள் உதறியபடி சீரான வரிகளாக எழுதிமுடிந்தபின் பிளாட்டிங் பேப்பர் சுற்றிய இன்னொரு ரூல்தடியை அந்த தாள் மீது உருட்டி எடுத்தார். தாளை மெல்ல தூக்கி லேசாகச் சுருட்டி டெஸ்கின் அறைக்குள் போட்டபின் அடுத்த தாளை எடுத்தார். பக்க எண்ணை போட்டு முன்பக்கத்தின் தொடர்ச்சி என்று எழுதினார்.

எழுதும்போது அப்பாவின் தலை சற்று சாய்ந்து மெல்ல நடுங்கிக் கோண்டிருக்கும். ஈஸி சேருக்கு அடியில் கால்களை ஒருமாதிரி கோட்டிவைத்து தொடையை மெல்ல ஆட்டிக் கொண்டிருப்பார்.  எழுதி முடித்ததும் சுருட்டி உள்ளே போட்டபின் எழுத்துபலகையை மெல்ல தூக்கி வைத்துவிட்டு பித்தளைத்தட்டத்தை எடுத்து மடிமீது வைத்து வெற்றிலை போட்டுக்கொள்ள தொடங்கினார். அனந்தன் அவர் மீண்டும் எழுதத் தொடங்குவதை எதிர்பார்த்து பொறுமையாக நின்றான். அவனுக்கு பிறர் எழுதுவதைப்பார்ப்பது எப்போதுமே அலுப்பதில்லை. எத்தனை நேரமானாலும் கண்கொட்டாமல் பார்த்தபடி நிற்பான். அவனுக்கு பள்ளியில் அவன் எழுதுவதில் அதிக ஆர்வமில்லை. சிலேட்டில் எழுதுவது கொஞ்சம்கூடப் பிடிக்காது. வீட்டுபபடத்தை வேகமாக எழுதி விடுவான். நோட்டுகளில்கூட கிறுக்கித்தான் வைப்பான். ஆனால் அப்பா மாதிரி ஜோசியர் தாத்தா மாதிரி பெரிய காகிதத்தில் சீராக எழுதவேண்டுமென அவன் ஆசைபப்ட்டான். சமைக்கும்போது புதிதாக அவியலும் துவரனும் உருவாகிவருவதைப்போல எழுதும்போதும் புதிதாக எழுத்துக்கள் உருவாகி வருகின்றன. மணிமணியாக.

அம்மா அம்மியில் வறுத்த கொத்துமல்லி வத்தல் கூட்டை அரைக்கும் ஒலியும் மணமும் வந்தது. அனந்தன் உள்ளே போனான். அம்மா அம்மியில் சாம்பார்ருக்கு கூட்டு அரைத்துக் கொண்டிருந்தாள். பிரம்பு நிறமாக மாறிய வறுத்த வத்தலுடன் சேர்ந்து மசிந்த கொத்தமல்லி வறுவல் இனிமையான லேகியம் போல மணத்தது. அனந்தன் லேசாக தொட்டு வாயில் வைத்தான். எரிந்தது, உப்பு இல்லை. ”எல்லாத்தயும் நக்கிப்பாரு நாய்க்குட்டியில்லா? போடா”

அனந்தன் அம்மா அரைத்த கூட்டுகளைப் பார்த்தான். நொறுக்கினாற்போல தேங்காய் அவியலுக்கு. சாந்துபோல அரைத்தது கூட்டுகறிக்கு. கூட்டுகறியில் பெருஞ்ச்சீரகம் போட்டு வைப்பாள். பெருஞ்சீரகம் சேர்த்து வைத்த எந்த கறியும் ஆட்டிறைச்சிக்கறியை நினைவுபடுத்தும். ”கூட்டுகறிக்கு தேங்கா துருவியாச்சா அம்மா?” அம்மா ”இல்ல கொஞ்சம் துருவித்தாறையா? அருவட்டியில தேங்காமுறி இருக்கு பாத்துக்க ”என்றாள்.

அனந்தன் கனமான துருவியை எடுத்து போட்டு அதன்மீது குந்தி அமர்ந்து தேங்காய்முறிகளை எடுத்து துருவ ஆரம்பித்தான். அவனுக்கு அதில் நல்ல பயிற்சி. கல்யாணவீடுகளில் கறிக்குவெட்ட போகும்போது அவனைத்தான் தேங்காய் துருவும்படிச்சொல்வார்கள். முதல் தேப்ங்காய்பூவை அனந்தன் அள்ளி வாயில்போட்டான். அது தேரிப்பறம்பு தேங்காய். அதுதான் பால் ருசியாக இருக்கும். ஆற்றுக்கரைத்தேங்காய்களில் பால் சப்பென்றிருக்கும். கூட்டுகறிக்கும் ஓலனுக்கும் பாயசத்துக்கும் தேங்காய்பால் பிழியவேண்டும். ஓலனுக்கு ரொம்பக் கொஞ்சமாகப் போதும். பாயசத்துக்கு எவ்வளவு விட்டாலும் போதமால்தான் ஆகும். கனலடுப்பில் வைத்த சின்ன சீனச்சட்டியில் அம்மா துவரனை தாளித்து பித்தளைத்தட்டால் மூடி வேகவைத்திருந்தாள். அது முறுகி மணம் வந்தது. அம்மா வேகமாக வந்து அதை வாங்கி பிரிமணைமீது அப்படியே வைத்துவிட்டு வெந்நீர் குண்டானை அதில் போட்டாள்.

அப்பா பரபரப்பாக ஏதோ சொல்லும் ஒலிகேட்டு அனந்தன் அபப்டியே எழுந்து வந்து பார்த்தான். வாசலில் வக்கீல் மாதேவன்பிள்ளை தட்டு சுற்று வேட்டியும் சட்டைக்குமேல் கழுத்து திறந்து போட்ட கறுப்பு கோட்டும் தலையில் தொப்பி போன்ற தலைப்பாகையும் ஒருகையில் நீளக்கம்புள்ள குடையும்  மறுகையில் கரிய தோல்பையுமாக வந்து வாசலில் நின்று கண்களுக்கு மேல் கை வைத்து உள்ளே பார்த்தார். அப்பா எழுந்து வாய் வெற்றிலைக்கு உதடுகளை மேலே தூக்கி கிண்ணம் மாதிரி வைத்தபடி, ”வரணும் வரணும்….இவ்ளவுநேரம் வக்கீலத்தான் பாத்துட்டிருந்தேன்…”என்றார்.

”இது உனக்க வீடாடே தங்கப்பா… நல்ல காலம், நான் வீடுமாறிப்போச்சோண்ணு பாத்தேன்….போனமட்டம் வந்தப்பம் அந்த சீமைக்கொண்ணை இம்பிடு எலை இல்லாம நிண்ணுது… வீடுமாறி அந்தால அந்த பொத்தைவீட்டில செண்ணு கேறப்பாத்தேண்டே..”’என்றபடி படலை தள்ளி உள்ளே நுழைந்தார்.

உள்ளே அம்மா மெல்ல, ”பொத்தைவீட்டுல செய்த புண்ணியம், ஆமை போயி கேறாம விட்டுது”என்றாள். வக்கீல்” காலு கழுவ வெள்ளம் இருக்காடே?” என்றபடி வந்து ”ஆ இருக்கு… இருக்கட்டும் இருக்கட்டும்..”என்று  செருப்பை கழற்றிப்போட்டு பையையும் குடையையும் தலைப்பாகையையும் எடுத்து வைத்துவிட்டு மரத்தொட்டியில் இருந்து நீர் மொண்டு விட்டு கால்களை தேய்த்து கழுவினார். ஒருவகை நடனம் போல இருந்தது.

”நான் கால் கழுவாம ஒரு வீட்டில காலு வைக்க மாட்டேன் பாத்துக்க. வழியில கண்ட சனியனும் கெடக்கும். அழுக்க விடு. குளிகனும் வாதையும் ஒக்கே உண்டக்கல்லாட்டு மாறி வழியில கேறி கெடக்கும் பாத்துக்க. போறவனுக்க காலுபெட்டா சாடி பிடிச்சுப்போடும். அவனுக்க கூட செண்ணு அவன் கேறுத வீட்டில கேறிப்போடும். அதாக்கும். மூணுமட்டம் தண்ணி கோரி களுவினாக்க ஒரு வாதையும் நிக்காதுண்ணு சாத்திரம்.. நாம ஒரு வீட்டுக்குப் போனா அங்க உள்ளவுகளுக்கு நம்மால ஆன ஒரு நன்ம நடக்கணும். அல்லாம தின்ம நடக்கக் கூடாது, ஏது?  ” வக்கீல் பெருமூச்சுடன் திண்ணையில் ஏறியபடி ”முன்னமாதிரி களியல்லடே… செந்தியாண்டவா முருகா”

”இருக்கணும் வக்கீலே. சாயயோ காப்பியோ வல்லதும்?”என்றார் அப்பா. ”ஒண்ணும் வேண்டாம்டே தங்கப்பா. இப்பம் மணி பதினொண்ணாச்சு. நான் காலம்பற எந்திரிச்சதும் ஒருகப் சாய. பின்ன வைகும்நேரம் ஒரு சாய. அம்பிடுதான். நடுவில உள்ள சாயகுடி வடயும் சுகியனும் தீனி ஒண்ணும் நமக்கு கொள்ளாது. வயசாச்சுடே. வாற கன்னியிலே எனக்கு எம்பதாக்கும்…பாத்தா தோணுமா? தோணாது..ஹெஹெஹெ அதாக்கும்…” உள்ளே எட்டிப்பாத்து அனந்தனிடம் ” ஆ, சின்னவனாக்கும் இல்லியா? கண்டா ஒரு ஊக்கம் இல்ல. ஒரு நல்ல ரெட்சை ஜெபிச்சு கெட்டணும். மக்கா நீ அம்மைக்க கிட்ட செண்ணும் நல்ல காயமெல்லாம் கலக்கி பச்சமொளவு போட்டு ஒரு செம்பு மோரு கொண்டுவரச் சொல்லுடே . ஓடு ஓடு ” அனந்தன் உள்ளே ஓடினான்.

அம்மா ” வீடு தேடி வாற சனிக்கு மோரும் பாலும். நாசமா போவட்டு… ” என்றபடி அனந்தனிடமே மோர்ச்செம்பை கொடுத்து விட்டாள். அனந்தன் அதை இருகைகளாலும் தாங்கியபடி கொண்டுவந்து ஸ்டூலில் வைத்தான். வக்கீல் அப்பாவின் ஈஸி சேரில் கால் நீட்டி படுத்திருக்க அப்பா அருகே கைவைத்த மரநாற்காலியில் வேட்டியை தொடைநடுவே சுருட்டிவைத்து அமர்ந்திருந்தார்.”அம்மை எங்க மக்கா?”என்றபடி வக்கீல் மோரை எடுத்து அண்ணாந்து கடக்கடக் என்று குடித்தபின் ஏவ் என்று ஏப்பம் விட்டார்.

தங்கம்மை ” நான் வீடுவரைக்கும் ஒண்ணு செண்ணு பாத்திட்டுவாறேன் அம்மிங்கிரே. மூத்த்வன் அங்க என்ன செய்யியாண்ணு தெரியல்ல. குட்டி நாணப்பன்நாயருக்க தோட்டத்தில சொல்லிக்குபோனா. கிளவியாக்கும் ஒப்பரம் இருக்கது. வல்லதும் தின்னானோ குடிச்சானோ…”

அம்மா பெரிய பித்தளை பானையில் கஞ்சியும் இன்னொன்றில் பழங்கஞ்சியும் கொடுத்தாள். ஒரு சிறு செம்பில் சாம்பார். ”பழைய பாத்திரம் ரெண்டு அங்கிண கெடக்கு கேட்டியா?” தங்கம்மை ” கொண்டாறேன் ”என்றபடி வைக்கோல் சும்மாடுமீது பானைகளை ஏற்றிக்கொண்டாள். ”வாறன் ”என்ற பின்னர் பிடிக்கமல் சாதாரணமாக நடந்துசென்றாள். தங்கம்மை தலையிலிருந்து எதுவுமே விழாது. ” நீ கும்பாட்டம் ஆடப்போலாம்டீ ”என்று அவள் நான்குகுடங்களை மேலுக்குமேலாக வைத்து வருவதைக் கண்டபோது அம்மா சொன்னாள். ”கும்பத்த ஆடாம வச்சுக்கிட்டு குண்டியல்லா போட்டு ஆட்டுகாளுக”என்றாள் தங்கம்மை.

வக்கீல் கண்னாடியை நேரியதால் நன்றாக துடைத்து மாட்டினார். அப்பா ”பாகம் வைச்சா ஆளோகரி வீதமாத்தான் வைக்கணும்னு சொன்னா கேக்கல்ல. அப்பம் விட முடியுமா? ரெண்டில ஒண்ணு பாக்காம விட்டா மரியாதி இல்ல. அதாக்கும்”என்றார். வக்கீல் ஆதாரத்தை எடுத்து கண்ணருகே கொண்டுசென்று கூர்ந்து படிக்க ஆரம்பித்தார். .

[more]

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅறிமுகம் கடிதங்கள்