அன்புள்ள ஜெ ,
விஷ்ணுபுரம் வாசிக்கும் போது உங்களைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியாது,
பின்பு உங்களை அறிந்த பின்பு திருவடியின் தந்தையில் உங்கள் தந்தையைக்
கண்டேன், உங்களின் நெருக்கமானவர்களை உங்கள் புனைவில் மாற்றி மாற்றிக்
கொண்டு வருகிறீர்கள். டார்த்தீனியத்தில் நீங்கள் உங்கள் தந்தை எப்படி
இருக்க வேண்டும் என்று சிறு வயதில் விரும்பினீர்களோ அப்படியே வந்தார்.
இப்போது கிடா கதையில் உங்கள் அண்ணனை அப்படியே காண்கிறேன். இதில் முறை
பெண்ணிற்கு பதில் அம்மாவின் நெருக்கமான அன்பு எனக் கொண்டால் கதை அப்படியே
உண்மையாக இருக்கும் என்று படிக்கும் போது நினைத்தேன
வாசகன் புனைவு எனும் தடம் வழியாக செல்பவன். அதன் ரசிகன் மட்டுமே ,ஆனால்
புனைவாளன்,தான் நினைத்த, விரும்பிய வாழ்வினைத் தானே உருவாக்கி அதில்
வாழ்பவன். இப்படி உங்கள் புனைவின் வழியாக நீங்கள் வரைந்தெடுத்ததில்
உச்சம் நீலி .விண்ணைத் தொடும் கோபுரங்களை உடைத்து வீசிக் காலடியில் கிடத்தும்
நீலி, தூய அன்பை மட்டுமே அளிக்கும் காடு நீலி, இரவு நாவலில் வரும் அழகிய
தேவதையாக வரும் நீலி, கண்ணகிக்கு(கொற்றவை) துணையாக வரும் நீலி. நீலி
இப்போது இருந்திருந்தால் உங்களை மார்பில் வைத்துக் கொஞ்சுவாள். இப்போது
நான் நினைப்பது உங்கள் புனைவுகளை வாசிக்க முயலும் ஒருவன் முதலில் உங்களை
அறிந்து கொண்டு வாசிக்க முயலும் போது மட்டுமே ஓரளவிற்காவது முழுமையாகப்
புனைவின் அழகினை தரிசிப்பான்
ராதாகிருஷ்ணன்
அன்புள்ள ராதாகிருஷ்ணன்
எழுத்தாளனின் சுயத்தை அவனுடைய எழுத்தினூடாகத் தேடுவது சரியான முதற்கட்ட வாசிப்பாக அமையாது. வாழ்க்கைவரலாற்று விமர்சனம் என்று ஒரு நோக்கு உண்டு. படைப்புக்குள் படைப்பாளியின் வாழ்க்கையை நுணுக்கமாகத் தேடிப்பார்ப்பது அது. அதன்மூலம் அந்த ஆக்கத்தின் பின்னாலுள்ள சில ரகசியங்களைத் தெரிந்துகொள்ளமுடியும். அந்தப்படைப்பைப்பற்றி இன்னும் அதிகமாகப் புரிந்துகொள்ளமுடியும்.
ஆனால் அது ஒரு படைப்பு வெளியாகிக் காலப்போக்கில் ஒரு செவ்விலக்கியமாக அடையாளம் காணப்பட்டு உறுதியானபின்னரே நிகழவேண்டும். அதாவது அப்படைப்பின் மீதான இயல்பான முதற்கட்ட வாசிப்புகள் எல்லாமே ஏற்கனவே நிகழ்த்தப்பட்டிருக்கவேண்டும்.
இலக்கிய ஆக்கம் என்பது மிகச்சிக்கலான உளவியல் நிகழ்வு. அதன் சாராம்சமான விஷயம் எழுத்தாளனின் ஆழ்மன எழுச்சிதான். படைப்பு அதன் மொழிவெளிப்பாடு மட்டுமே. ஆனால் அதன் வெளிப்பாட்டில் எவ்வளவோ புறவிஷயங்கள் கலந்துவிடுகின்றன. எழுத்தாளனின் அகங்காரம், அவனுடைய அடிமன ஆசைகள், சமகால பண்பாட்டுக்கூறுகள், அரசியல்கள்…அவற்றை எவராலும் முழுமையாகப் பிரித்து ஆராய்ந்துவிட முடியாது.
இலக்கியம் எழுத்தாளனின் ஆழ்மன வெளிப்பாடு என்பதனாலேயே அது வாசகனின் ஆழ்மனம் நோக்கிப்பேசவே விரும்புகிறது. தன்னுடைய ஆழ்மனதை படைப்பை நோக்கித் திறந்து வைப்பவன், படைப்பு தன் கனவுகளுக்குள் ஊடுருவ அனுமதிப்பவனே லட்சியவாசகன்.
ஆகவே, நாம் படைப்புகளை வாசிப்பது அதன் ஆசிரியனைத்தெரிந்துகொள்வதற்காக அல்ல, நம்மைத்தெரிந்துகொள்வதற்காகவே
ஜெ