பி.கே.பாலகிருஷ்ணன் எழுதிய சாதியமைப்பும் கேரளவரலாறும் என்ற நூல் கேரள வரலாற்றெழுத்தின் அடிப்படைகள் மீது ஆழமான வினாக்களை எழுப்பியமையால் பெரும்புகழ்பெற்றது. இந்நூலின் சுருக்கமான வடிவத்தை நான் 1997இல் காலச்சுவடு மாத இதழில் அளித்திருந்தேன்
நிலவரி இல்லாத, சாலைகள் இல்லாத பண்டைய கேரளம் எப்படி உபரியை உருவாக்கித் தொகுத்திருக்க முடியும் என்றும் உபரி அதிகமாக இல்லாதநிலையில் எப்படி கேரளநிலத்தில் சேரப்பேரரசு இருந்திருக்கமுடியும் என்றும் பி.கே.பாலகிருஷ்ணன் வினவுகிறார்.
புராதன கேரளம்பற்றி இன்று ஆராய்வதற்கு ஆதாரமாக இருக்கும் தொன்மையான பயணிகளின் குறிப்புகள் பெரும்பாலும் நம்பத்தக்கவை அல்ல என்பது பி.கே.பாலகிருஷ்ணன் எண்ணம். அவை செவிவழிச்செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. அப்பயணிகள் கேரளத்தின் கடலோரப்பகுதிகளில் அன்னியருடன் தொடர்புகொண்டு இருந்த வணிகர்களின் குடியிருப்புகள் வழியாக மட்டுமே பயணம்செய்திருக்கமுடியும். பிற கேரளநிலப்பகுதிகளில் கிட்டத்தட்ட அரைப்பழங்குடி வாழ்க்கையே இருந்திருக்கும் என்று சொல்கிறார்.
அந்த வினாக்களுக்கான விடைகளாகப் பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டு அதனூடாகக் கேரளவரலாற்றில் பல திறப்புகள் நிகழ்ந்தன. ஆனால் பி.கே.பாலகிருஷ்ணன் கேட்ட பல வினாக்கள் இன்று பொருளிழந்துவிட்டன. நிலவருவாய் மட்டுமே ஒரு பேரரசை உருவாக்கமுடியுமென்பதில்லை. முழுக்கமுழுக்கக் கடல்வணிகம்மூலமே உபரி சேர்ந்திருக்கமுடியும். தொல்தமிழ்நாட்டில் கடல்வணிகம்தான் முதன்மை வருவாயாக இருந்திருக்கிறது.
உபரி இருந்திருக்க வாய்ப்பில்லை என்ற பி.கே.பாலகிருஷ்ணன்னின் கூற்றை திருவனந்தபுரம் பத்மநாபசாமியின் புதையல்செல்வம் இல்லாமலாக்கிவிட்டது. அது சேரர் காலம் முதலே கேரள அரசர்களிடம் இருந்துவந்த பொக்கிஷத்தில் பாதுகாக்கப்பட்ட சிறு பகுதி மட்டும்தான். சேரர்குலத்துக்கும் பிற்கால கேரள மன்னர்களுக்கும் தொடர்பில்லை என்ற வாதமும் அதன்மூலம் மறுக்கப்பட்டுவிட்டது
The_King_of_Cochin_riding_on_an_Elephant%2C_attended_by_his_Nairs.jpg
பி.கே.பாலகிருஷ்ணன் அவரது நூலில் சொன்ன ஒரு விஷயம் என் நினைவில் இருந்துகொண்டே இருந்தது. அவர் அதில் கொச்சிமன்னரின் ஒரு படத்தைக் கொடுத்திருந்தார் பதினாறாம் நுற்றாண்டின் இறுதியில் கேரளநிலப்பகுதியில் பயணம் செய்த போர்ச்சுக்கல் வணிகரும் வரலாற்றாசிரியருமான ஜான் ஹூகன் லிங்காஸ்டன் [Jan Huyghen van Linschoten (1562-1611)] வரைந்தது அது. மரவெட்டு ஓவியமாக இது பலநூல்களில் இடம்பெற்றுள்ளது. [படத்தில் உள்ள வண்ணம் பிற்பாடு சேர்க்கப்பட்டது]
படத்தில் யானைமேலிருப்பவர் கொச்சி அரசர். அவர் இடுப்பில் ஒரு வேட்டி மட்டும் அணிந்திருக்கிறார். கையில் மரத்தாலான ஒரு ஈட்டியை வைத்திருக்கிறார். தலைப்பாகை உள்ளது. கீழே இருப்பவர்கள் அவரது படைவீரர்களும் சேனாதிபதிகளும். அவர்கள் கோவணம் மட்டுமே அணிந்திருக்கிறார்கள். சிலர் பழையபாணி மஸ்கட்கள் வைத்திருக்க ஒருவரிடம் மட்டுமே வாள் உள்ளது. மிச்சபேருக்கெல்லாம் வெறும் மர ஈட்டிதான்.
இந்தப்படம் உண்மையா அல்லது மிகைப்படுத்தப்பட்டதா? இது ஒரு பாதி கற்பனையால் வரையப்பட்ட சித்திரம் என்பதை யானையின் கண்களைப்பார்த்தாலே தெரிந்துகொள்ளமுடியும். லிங்காஸ்டன் குத்துமதிப்பாக எங்கோ பார்த்ததைக் கொச்சி மன்னராக மாற்றிவிட்டிருக்கிறார். இன்று பத்மநாபசாமி ஆலயத்தில் உள்ள செல்வத்தை மட்டும் வைத்துப்பார்த்தால் பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வரும்போது போர்ச்சுக்கல் அரசை விட கொச்சி அரசும் அரசரும் செல்வம் மிக்கவர்களாக இருந்திருப்பார்கள் என்று சொல்லலாம்
பேசாமல் லிங்காஸ்டர் ஒரு வீரசைவர் என்று சொல்லி அவர்களின் வரலாற்றை நமக்குத் தோதுப்படும்படி நாம் எழுத ஆரம்பித்துவிடவேண்டியதுதான்