1 கலைச்சொல்லாக்கம் நிகழாமல் பிறசொற்களை அப்படியே கடன்வாங்கிக்கொண்டிருக்கும் மொழியில் காலப்போக்கில் மிகப்பெரிய அழிவு நிகழும். அந்த மொழியின் ஒலிநேர்த்தி இல்லாமலாகும். அந்த மொழியைக் கலையிலக்கியங்களுக்குப் பயன்படுத்த முடியாமலாகும்.
மொழி என்பதை வெறும் அன்றாடவாழ்க்கைப்பயன்பாட்டுக்கான கருவி என்பதற்கு அப்பால் சென்று யோசித்தோமென்றால் இந்த இழப்பின் அளவு புரியும். மொழி அகப்படிமங்களாக ஆகக்கூடியது. நமக்குள் சிந்தனைகளாக ஓடக்கூடியது. அதன் ஒலியழகையும் குறியீட்டுத்தன்மையையும் இழந்தால் அது நம் ஆழத்தின் மொழியாக இருக்காது.
ஃபோட்டோசிந்தஸிஸ் என்ற சொல்லைத் தமிழ்ச்சொல்லாக ஏற்க முடியாது. ஏனென்றால் அச்சொல்லில் தமிழின் ஒலியமைதி இல்லை. அத்துடன் அது தமிழின் வேறு சொற்களுடன் இணைவுகள் கொண்டிருக்கவில்லை. ஆகவே அது நமக்குள் படிமங்களாக விரிவதுமில்லை.
அதேசமயம் ஒளிச்சேர்க்கை என்ற மொழியாக்கம் முழுமையாகவே தமிழின் ஒலியில் உள்ளது. அது நமக்குள் உருவாக்கும் அர்த்தவிரிவும் காட்சிவிரிவும் அபாரமானது. ஒரு கவிதையில் ஒளிச்சேர்க்கை என்ற சொல்லே அமையமுடியும்
2 அன்னிய மொழியின் அறிவியல்சொற்களை அறிவியல்நோக்கங்களுக்காக அறிவியலாளர் பயன்படுத்தலாமே, அதற்கு இந்த விதிகளெல்லாம் எதற்கு என்று கேட்கலாம். கலையிலக்கியங்கள் எப்போதும் அறிவியல், தொழில்நுட்பம், வரலாறு ,சட்டம் என எல்லாத் துறைகளிலிருந்தும் வரும் சொற்களாலேயே அமைகின்றன. அத்துறைகளே இலக்கியத்திற்கான சொற்களை வழங்கமுடியும்.
உதாரணமாக சென்ற ஐம்பதாண்டுகளில் அறிவியலுக்காக உருவாக்கப்பட்ட சொற்கள் எப்படியெல்லாம் இலக்கியத்தில் கையாளப்பட்டுள்ளன என்று ஒருவர் ஆராய்ந்தால்போதும். அறிவியல் அதன் தேவைக்காக உருவாக்கிக்கொள்ளும் சொற்களை இலக்கியம் பலதளங்களுக்கு விரித்தெடுத்துக் கொண்டுசெல்கிறது. உதாரணம், எதிரொளிப்பு.
ஆகவே ஆங்கில அறிவியல், தொழில்நுட்பக் கலைச்சொற்களைத் தமிழாக்கம் செய்வதொன்றும் வீண்வேலை அல்ல. அவை மொழியின் இன்றியமையாத நடவடிக்கைகள்தான்
3 . கருத்துக்களை சார்ந்த கலைச்சொற்கள் மொழியாக்கம் செய்யபடவில்லை என்றால் அச்சிந்தனை தமிழுக்கு வரவேயில்லை என்றே அர்த்தம். இதை தியடோர் பாஸ்கரன் அடிக்கடி சொல்வதுண்டு. ஒரு கருத்துக்குரிய சொல் தமிழில் வரவில்லை என்றால் அக்கருத்தே தமிழ்மொழியிலும் தமிழ்நாட்டு வாழ்க்கையிலும் இல்லை என்றுதான் அர்த்தம் என்பார் அவர். ஒரு கருத்தை நாம் வாங்கிப் பரிசீலிப்பதற்கு அதற்கான சொல்லை உருவாக்கிக்கொள்வதே முதல்நடவடிக்கையாகும்
அதைக் கண்டறிந்து வழிகாட்டியவர் பாரதி. ஜனநாயகம், புரட்சி, பொதுவுடைமை போல நாம் இன்று நம் வாழ்க்கையின் அடிப்படைகளாகக் கொண்டுள்ள எல்லாக் கருத்துக்களும் மொழியாக்கம் செய்யப்பட்டு இங்கேவந்த கலைச்சொற்கள்தான்.
4.எல்லாச் சொற்களுக்கும் இடுகுறித்தன்மை உண்டு. இடுகுறித்தன்மையே இல்லாத முழுமையான காரணப்பெயர்களுக்கான முயற்சி அபத்தமானது. காரணப்பெயர்கள் கூடக் காலப்போக்கில் இடுகுறிப்பெயர்களாக மாறக்கூடும்
உதாரணம், சிறுகதை. அது உருவானபோது அது காரணப்பெயர்தான். இன்று அப்படி அல்ல. சிறுகதை என்பது இன்று சிறிய கதை அல்ல. அது பலசமயம் சிறியதாக இருப்பதில்லை, அதில் கதையும் இருக்கவேண்டியதில்லை. அதன் இலக்கணமே வேறு. ஆகவே உடனே அந்தச்சொல்லை மாற்றியாகவேண்டியதில்லை. முரண்முடிவுக்கதை என்றோ ஈற்றுத்திருப்பவிவரணை என்றோ மீண்டும் மொழியாக்கம்செய்யவேண்டியதில்லை. அச்சொல் அதைக்குறிக்கும் என்றால், அதைத் தமிழ் மொழிச்சூழல் ஏற்றுக்கொண்டுவிட்டால், அதுதான் அதன் பெயர்.
பெரும்பாலான பெயர்கள் ஒரு கருத்தோ பொருளோ அதன் ஆரம்பநிலையில் இருக்கையில் போடப்படுகின்றன. பின்னர் அக்கருத்தோ பொருளோ வளர்ந்து விரியும்போது அந்தப்பெயரின் அர்த்த எல்லைகளைத் தாண்டிச்செல்லக்கூடும். அந்த வளர்ச்சிகளுக்கேற்ப அச்சொல்லை மாற்றிக்கொண்டிருப்பது முட்டாள்தனம்.
5. ஆகவே ஏற்கனவே தமிழாக்கம்செய்யப்பட்டுவிட்ட ஒரு சொல்லை, அல்லது தமிழாக வேரூன்றிவிட்ட ஒரு சொல்லை அது பொருத்தமாக இல்லை என்பதனாலும் எல்லா அர்த்தங்களையும் குறிக்கவில்லை என்பதனாலும் மாற்றிவிட்டு இன்னொரு சொல்லை உருவாக்குவது தெவையற்றது. அது கலைச்சொல்லாக்கத்தை கேலிக்கூத்தாக ஆக்கிவிடும். உண்மையில் அதைத்தான் இன்று பலர் செய்துவருகிறார்கள்
உதாரணம் நாவல். அது ஒரு திசைச்சொல். அதைப் புதினம் என்று திரும்ப மொழியாக்கம் செய்யவேண்டியதில்லை.
6. ஏற்கனவே ஒரு சொல் புழக்கத்தில் இருக்குமென்றால் அதை ஏற்றுக்கொள்வதே சரியானது. அச்சொல் இரு காரணங்களால்தான் மாற்றப்படவேண்டும். அது மேலதிக சொல்வளர்ச்சிக்கு உகந்ததாக இல்லாமலிருக்கும்போது. தமிழின் உச்சரிப்புக்கு ஒவ்வாததாக இருக்கும்போது.
என்னைப்பொறுத்தவரை ஒரு கலைச்சொல் முன்னதாக ஒருவரால் கையாளப்பட்டிருக்குமென்றால் அதைத் திரும்பப் பயன்படுத்தவே செய்வேன். இன்னொன்றை நானே உருவாக்கிக்கொள்ளமாட்டேன். அப்படி ஆளுக்கொரு கலைச்சொல்லை உருவாக்கிக்கொண்டால் அதன்பின் தொடர்புகொள்ளலே நிகழாது. கண்ணைக்கட்டிக்கொண்டு தொட்டுவிளையாடும் ஆட்டம்தான் நிகழும்
[குழுமவிவாதத்தில் இருந்து]
கலைச்சொற்கள்