கம்பன் நிகழாத களங்கள்

அன்புள்ள ஜெ,

வணக்கம்!

கவிச்சக்ரவர்த்தி கம்பன் எழுதிய “சரஸ்வதி அந்தாதி,” “ஏர் எழுபது”ஆகிய நூல்களைப் படித்துக் கொண்டிருந்தேன். இதில் கம்பனின் கவிதா விலாசமோ, ஆழ்ந்த கவிப்பிரயோகமோ எனக்கு தென்படவில்லை.

இது குறித்து என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் ஒரு கருத்தைச் சொன்னார். அதாவது, “இயற்கை அல்லது பிரபஞ்ச சக்தி தன்னைத்தானே எழுதிக்கொள்ள யாராவது ஒரு நபரைத் தேர்ந்தெடுக்கும். அவர் மூலமாக அது தன்னை எழுதிக்கொள்ளும். இது இலக்கியத்திற்கு மாத்திரமல்ல, அறிவியல், தொழில், விளையாட்டு, கலைகள்… என சகல துறைகளுக்கும் பொருந்தும். ஒரு எழுத்தாளனுக்குப் பேனா எப்படியோ அப்படித்தான் பிரபஞ்ச சக்திக்கு மனிதன். கம்பன் – பாரதி- கண்ணதாசன் –புதுமைப்பித்தன் –ஜெயமோகன் வரை இதுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது” என்று சொன்னார் .

யோசித்தால் இதில் எங்கேயோ ஒரு பொறி இருப்பது போலவும் தோன்றுகிறது. இது உண்மையா? அப்படித்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறதா?

எம்.எஸ்.ராஜேந்திரன்

***

அன்புள்ள ராஜேந்திரன்,

உங்கள் நண்பர் சொன்னது ஒருவகையான கவித்துவநவிற்சி. ஆனால் இவ்விஷயத்தை நடைமுறை நோக்குடன் கூர்ந்து அவதானித்தால் சில விஷயங்கள் கண்ணுக்குத் தட்டுப்படுகின்றன.

நான் நேற்று மலையாளத் திரைவிமர்சகர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். ‘மலையாளத் திரையுலகின் மிகப்பெரிய இயக்குநர் என்றால் பரதன்தான். ஆனால் அவர்தான் மலையாளத்திலேயே மோசமான சில படங்களை எடுத்திருக்கிறார்’ என்றார்.

எனக்கு பரதனைத் தெரியும். லோகியுடன் சென்று அவரைச் சந்தித்திருக்கிறேன். அப்போது ‘சுரம்’ என்ற படத்தை எடுத்துக்கொண்டிருந்தார். வந்து அமர்ந்தவர் ‘ஒரு நசிச்ச படம்’ என்றார் சலிப்புடன். அப்படித்தான் இருந்தது அந்தப்படம். மலையாளத்தில் சொல்லப்போனால் பெற்றம்மை சகிக்காத படம்.

என்ன நடக்கிறது? படம் ஆரம்பித்ததுமே பரதனுக்கு ஒரு வேகம் சுழன்றேற வேண்டும். அவர் வெறிபிடித்ததுபோலப் பணியாற்றுவார். அவரது வேகத்தை அந்தக்குழாமில் டீ கொண்டுகொடுக்கும் பையனுக்குக்கூடப் பற்றவைப்பார். அந்த வேகத்தில் அவர் சாதிப்பவை அவரே அறியாதவை. அவரை மீறியவை என்றுகூடச் சொல்லலாம். பல அற்புதமான பரதன்படங்கள் நம்பமுடியாத குறைந்த செலவில் மிகச்சில நாட்களில் எடுக்கப்பட்டவை. காட்சியமைப்பின் ஒழுங்கும் அழகும் கச்சிதமும் முழுமையும் கொண்டிருக்கும்.

அப்படி ஒருவேகம் சில படங்களில் நிகழ்வதில்லை. சிலசமயம் வேகத்துடன் ஆரம்பிக்கும் படம் சிலநாட்களிலேயே அப்படியே படுத்துவிடுகிறது. சிலசமயம் ஆரம்பத்திலேயே அந்தவேகம் இருப்பதில்லை. ஆனால் வலிந்து உருவாக்கிக்கொண்டு படம் தொடங்கப்படும். அது மேலெழாது. அப்படிப்பட்ட படங்களில் பரதன் கிட்டத்தட்ட பூஜ்யம், அல்லது அதற்கும் கீழே. ஓர் எளிய இணை இயக்குநர் கூட அதைவிட மேலான படத்தை இயக்கியிருப்பார் என்று தெரியும். பரதனின் தொழில்நுட்பத்தேர்ச்சியும் நீண்ட களஅனுபவமும்கூட அந்தப்படங்களில் இருக்காது.

இதைப் பல பெரும் கலைஞர்களின் ஆக்கங்களில் பார்க்கலாம். ஜானகிராமனின் பல கதைகள், இங்க்மார்பர்மானின் பல படங்கள் அந்த மேதைகளுடன் இணைத்துச் சிந்திக்கவேமுடியாதவை. தல்ஸ்தோய் கம்பனுக்கு நிகரானவர், ஆனால் பத்தாம்கிளாஸ் துணைப்பாடநூல் தரத்துக்குச் சில கதைகளை எழுதியிருக்கிறார்.

ஆகவே ஏர் எழுபதும் சடகோபர் அந்தாதியும் கம்பனே எழுதியிருக்க வாய்ப்புள்ள ஆக்கங்களே. அப்போது கம்பன் அவரிடம் நிகழவில்லை, அவ்வளவுதான்.

எழுத்தின் தருணத்தைக் கவனிக்கையில் இது புரிகிறது. எல்லா நல்ல எழுத்தாளர்களும் இதை உணர்ந்திருப்பார்கள். படைப்பூக்கத்தின் ஒரு கணத்தில் எந்த முயற்சியுமில்லாமல் எழுத்து நிகழ்கிறது. மொழி கூர்மையும் அழகும் கொண்டதாக அமைகிறது. படிமங்கள் புத்தம்புதியதாக நிகழ்கின்றன. கதைக்கட்டுமானம் மிக இயல்பாக ஒன்றுடன் ஒன்று பொருந்தி உயிருள்ள ஒரு அமைப்பாகப் பிறந்துவருகிறது. மொழியில் அதுவரை இல்லாத வழிகள் பிறக்கின்றன. அப்போது எதுவுமே சிரமம் அல்ல.

நான் என்னுடைய எல்லா நல்ல கதைகளையும் எந்தவிதமான திட்டமிடலும் இல்லாமல் தற்செயலாக ஆரம்பிக்கும் ஒரு வரியிலிருந்து ஆரம்பித்து ஒரேவீச்சில் எழுதிமுடித்திருக்கிறேன். ஏராளமான சிக்கலான உள்ளடுக்குகள் கொண்ட ‘வெறும்முள்’ கூட அப்படி ஒன்றரைமணி நேரத்தில் எழுதப்பட்ட கதைதான். காடு அதேபோல வெறும் பதினைந்துநாளில் எழுதப்பட்டதுதான். ஏழாம் உலகம் ஒரே வாரத்தில் எழுதப்பட்டுத் திரும்பப் படித்துக்கூடப் பார்க்காமல் அடுத்தவாரம் அச்சில் வெளிவந்த நாவல்தான். அந்த வேகம் எல்லாவகைக் கட்டுமான நுட்பங்களையும் நிகழ்த்துகிறது.

ஒரு பூவின் பொறியியல் கட்டுமானத்தை எந்த மகத்தான கட்டிடத்திலும் பார்க்கமுடியாது என்பார் லாரிபேக்கர். கலையின் கட்டுமானத்தொழில்நுட்பம் கட்டிடம் எழுவது போன்றதல்ல, பூ விரிவது போன்றது. பிற்பாடு நாமே அதை வியந்து வியந்து வாசிக்கக்கூடும் ஆனால் அந்த வேகம் நிகழாதபோது நம் மொழி பிழைகளுடன் உயிரின்றிக் கிடப்பதைக் காணலாம். சிலகடிதங்களில் குறிப்புகளில் மொழி என்னைக் கைவிட்டிருப்பதைக் கண்டு வியந்திருக்கிறேன். நான் கற்றுக்கொண்டவை என எதுவுமே இலலையோ என்ற எண்ணம் எனக்கு ஏற்படும்.

அதே நிலையை மொழியை எண்ணி எண்ணி எழுதும் சுந்தர ராமசாமியின் கடிதங்களிலும் காணலாம். சும்மா எழுதிப்போடும் பழக்கமுள்ள அசோகமித்திரன் கடிதங்களிலும் காண்கிறேன். இந்த விஷயம் வணிகநோக்குடன் எழுதக்கூடியவர்களிடம் இல்லை. அவர்களின் எழுத்து ஒரு தொழில்நுட்பம் மட்டுமே. அதை அவர்கள் ஒவ்வொருமுறையும் சரியாக நிகழ்த்துவார்கள். பிழைகளே இருக்காது. அதேசமயம் புதியதாக எதுவும் நிகழவும்செய்யாது. பூத்தொடுப்பவனுக்கும் இறைச்சிவெட்டுபவனுக்கும் கையில் தொழில் படிந்திருப்பது போலத்தான் அது.

ஆனால் கலை ஒருபோதும் ஒரு பயிற்சியோ பழக்கமோ அல்ல. காரணம் கலை நேரடியாகவே ஆழ்மனதுடன் தொடர்புள்ளது. மொழியை ஆழ்மனத்துடன் உரையாடக்கூடிய, ஆழ்மனதை சீண்டக்கூடிய ஒன்றாக ஆக்கிக்கொள்வதே எழுத்தாளன் அடையும் பயிற்சி எனலாம்.

எனவே வழக்கமான மொழிப்பயிற்சி எழுத்தாளனை உருவாக்குவதில்லை. சொல்லப்போனால் முறையான இலக்கணப்பயிற்சி மோசமான எழுத்தாளனையே உருவாக்கும். எழுத்தின் புறவயமான கட்டுமானத்தை கவனத்தில் கொண்டானென்றால், அதைத் தவறாத பயிற்சியாக ஆக்கிக்கொண்டான் என்றால், ஒருவனால் நல்ல உரைநடை எழுதமுடியாது. தமிழில் உரைநடை இலக்கணத்தை உருவாக்கியவர்களான ஆறுமுகநாவலர், பின்னத்தூர் நாராயணசாமி அய்யர், அ.கி.பரந்தாமனார் போன்றவர்கள் படுகேவலமான உரைநடை கொண்டவர்கள். இதற்கு விதிவிலக்கே இல்லை.

ஏனென்றால் உண்மையில் மொழி இந்த புறவயக்கட்டுமானம் அல்ல. இலக்கணமோ ஒலித்தொகையோ அல்ல. அது உள்ளே நிகழும் ஒரு குறியீட்டுச்சரடு. மொழியைப் பிரக்ஞையில் இருந்து மேலும் ஆழத்துக்குக் கொண்டுசென்று கனவுக்குள் நிலைநிறுத்துவதன் விளைவே இலக்கியம். வேறுவகையில் சொல்லப்போனால் சொற்களுடன் எந்த அளவுக்கு நினைவுகளும் உணர்வுகளும் தொடர்புகொண்டுள்ளன என்பதே எழுத்தாளனை உருவாக்குகிறது.

பெரும்பாலான எழுத்தாளர்களுக்குச் சொற்கள் உள்ளூர காட்சித்துளிகளாகவே இருக்கின்றன. அந்த இணைப்புகளே அவனுடைய ஆளுமையைத் தீர்மானிக்கின்றன. அவற்றுக்கு அவனுடைய சொந்த வாழ்க்கை மற்றும் மனஇயல்பு சார்ந்த தர்க்கம்தான் இருக்கும். அதை அவன் படைப்புகளே வெளிப்படுத்த முடியும், அவனால் விளக்கமுடியாது. இந்த விளக்கமுடியாத தன்மையே இலக்கிய ஆக்கத்தை இன்றுவரை ஒரு புதிர்ச்செயல்பாடாக நிலைநிறுத்தி வருகிறது.

நான் இலக்கிய வாசிப்பை ஆரம்பித்தபின் இந்த முப்பதாண்டு காலத்தில் ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ், ஆர்தர் கோஸ்லர் முதல் ரோலான் பார்த், ழாக் தெரிதா. வி.ராமச்சந்திரன் வரை பத்துவருடத்துக்கு ஒருமுறை படைப்பியக்கத்துக்கு ஒரு புதியவிளக்கம் வந்துகொண்டே இருக்கிறது. இன்னும்கூட ஏராளமாக வரக்கூடும். ஆனால் அந்த மர்மம் அப்படியேதான் நீடிக்கும்.

அந்த மர்மம் கம்பராமாயணத்தின் உருவாக்கத்தில் உண்டு. அதாவது கம்பராமாயணத்தை மாபெரும் கலைப்படைப்பாக ஆக்கிய அதே காரணங்கள்தான் ஏர்எழுபது இலக்கியமாக ஆகவிடாது செய்தன என்று சொல்லலாம்.

அப்படியே உங்கள் முதல்வரிக்கும் வரமுடியும். கலைஞனின் ஆழ்மனம் என்பதை ஒரு சமூகத்தின் கூட்டுஆழ்மனத்தின் வெளிப்பாட்டுமுனை என்று கொள்ளலாம். ஒரு காலகட்டத்தின் திறப்புத்துளை என்று சொல்லலாம். அப்படியென்றால் அவன் வழியாக நிகழ்வது அவனைவிடப்பெரிய ஒன்றுதான். அவன் அவனே அறியாத தெய்வங்கள் வந்து ஆடிச்செல்லும் உடலும் நாவும் மட்டும்தான்.

ஜெ

மறுபிரசுரம் முதற்பிரசுரம்Mar 22, 2013

முந்தைய கட்டுரைவி.கிருஷ்ணசாமி ஐயர்
அடுத்த கட்டுரைதிருச்செந்தாழை- எம்.கோபாலகிருஷ்ணன்