கீதையை எப்படிப் படிப்பது? ஏன்?

அன்புள்ள ஜெயமோகன்,

பகவத் கீதையைப்பற்றி இப்போது நடந்துவரும் விவாதங்களை கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்துமதத்தின் பிரதான நூலான பகவத் கீதை ஒரு சாதிவெறிபரப்பும் நூலா? சுயநலத்துக்காக கொலை செய்வதை அது வலியுறுத்துகிறதா? என்னைப்போன்றவர்களுக்கு இந்தவகையான சர்ச்சைகள் மிக்க குழப்பத்தை அளிக்கின்றன. கீதையைப்பற்றி இப்போது தமிழில் மிகவும் எதிர்மறையான பார்வையை அளிக்கும் நூல்கள் பல வந்துள்ளன. அவற்றைப்படித்துவிட்டுச் சிலர் ஏளனமும் கண்டனமும் செய்கிறார்கள். பகவத் கீதை உரைகளில் அதற்கான பதில் உண்டா? அவற்றில் எது சிறப்பானது? எப்படி அவற்றைப் படிப்பது? வழிமுறைகள் என்னென்ன? உங்கள் பதில் எனக்கு தனிப்பட்டமுறையில் உதவியாக இருக்கும் என்று படுகிறது. ‘இந்துஞானமரபில் ஆறுதரிசனங்கள்‘ தெளிவான மொழியில் திட்டவட்டமான பார்வையை அளிப்பதாக இருந்தது, அதேபோல விளக்கமாக எதிர்பார்க்கிறேன்.

எஸ். விவேகானந்தன்

சென்னை

***

அன்புள்ள நண்பர் விவேகானந்தன் அவர்களுக்கு,

உங்களை தனிப்பட்டமுறையில் எனக்கு தெரியாதென்றாலும் வாசகனாக நீங்கள் என் மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு நன்றி. இந்த நம்பிக்கையானது என் படைப்புமொழிக்கு கிடைக்கும் அங்கீகாரம் மட்டுமே என்று எடுத்துக் கொள்கிறேன். இவ்விஷயத்தில் என் கருத்துக்கள் பெரும்பாலும் நான் முன்னோடிகளாகவும் வழிகாட்டிகளாகவும் கொண்ட மனிதர்களின் சிந்தனைகளின் கண்டடைதல்களின் நீட்சிகள் அல்லது வளர்ச்சிகளே. நான் கற்றவற்றை என் மொழியில் தொகுத்துக் கொள்கிறேன். என் மொழியை மிகுந்த உத்வேகத்துடன் பழகியிருப்பதனால் என்னால் நான் எண்ணுவதை வார்த்தை வரிசையால் பின்தொடர இயல்கிறது. என் எண்ணங்களில் நான் என் தேடலுக்கு அந்தரங்கமாக விசுவாசமாக இருக்கிறேன். என் ஆழத்தை திருப்திசெய்யாத ஒரு விடையை அக்கணமே தூக்கிவீசவும், அதில் ஏற்படும் அனைத்து இழப்புகளுக்கும் தயாராக இருக்கவும் முயல்கிறேன். இந்தப் பின்னணியில் என் சிந்தனைகள் முக்கியத்துவமுள்ளன என்பதே என் எண்ணமாகும்.

தங்கள் வினாவைப்போன்ற இருபத்திமூன்று கடிதங்கள் எனக்கு வந்துள்ளன. இது ஒட்டுமொத்தமான பதில். ஆகையினால் இப்பதில் சற்று நீளமாக, தாங்கள் கேட்காத சிலவற்றையும் அடக்கியவையாக இருப்பதைப் பெரிதாக எண்ணமாட்டார்கள் என்று என்ணுகிறேன். முதலில் இப்போது வந்துள்ள இவ்வார்வம் நம் செய்திஊடகங்களுக்கும் நாம் அளிக்கும் மிதமிஞ்சிய முக்கியத்துவத்தையே காட்டுகிறது. இத்தனை முக்கியத்துவம் அளிக்கப்படும் அளவுக்கு அவை தரமானவையா, நல்ல நோக்கங்கள் கொண்டவையா, பொறுப்பானவையா என்பது நாம் சிந்திக்கவேண்டிய விஷயமாகும். நமது அடிப்படையான வினாக்களைக்கூட, அதற்கான தேடல்களைக்கூட நாம் அன்றாடச் செய்திஊடகப் பரபரப்புகளை ஒட்டி வந்தடைவது சரியானதாகுமா ?

சரி, இவ்விஷயங்களைப்பற்றி பேசுவதற்கு இது ஒரு முகாந்திரம் என்றே கொள்வோம்.

நான் என் கீதையை நியாயப்படுத்த முயலவேண்டும்?

அவசியமே இல்லை. ஒரு சிந்திக்கும் தனிமனிதனாக நான் தூக்கிச்சுமக்கவேண்டிய நூல் என்று ஏதும் இல்லை. நான் நியாயப்படுத்தியாகவேண்டிய எந்தநூலும், எந்த தத்துவமும் இல்லை. இந்தச் சுதந்திரத்தையே சிந்திக்கும் ஒருவன் அடிப்படையான விதியாக தனக்கு விதித்துக் கொள்ளவேண்டும். உலகிலுள்ள எந்த நூலைச்சார்ந்தும் என் இருப்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கவில்லை. எதன் மீதும் நான் விட இயலாத பிடிப்பு கொண்டிருக்கவில்லை. அந்தரங்கமாகச் சொல்லப்போனால் என் சொந்த படைப்புகள், இன்னும் குறிப்பாக ‘விஷ்ணுபுரம் “பின்தொடரும்நிழலின் குரல் ‘ என்ற இருநாவல்கள் ஆகியவற்றைச் சார்ந்தே எனக்கு அப்படி ஒரு பிடிப்பு உள்ளது. அது அசட்டுத்தனமானது என நான் அறிவேன். ஆனால் மனம் அதை ஏற்க மறுக்கிறது. இன்னும் சற்று வயதாகும்போது அப்பிடிப்பும் என்னிடமிருந்து போய் நான் மேலும் சுதந்திரம் அடையலாம்– ஜெயகாந்தனைப்போல. அது ஒரு நம்பிக்கை.

அதைப்போல ஓர் இந்துவாக நான் நியாயப்படுத்தியாகவேண்டிய நூல் அல்லது தத்துவம் அல்லது ஆளுமை என எதுவும் இல்லை. ஓர் இந்துவாக நான் இருப்பதற்குக் காரணம் இந்த சுதந்திரமே. வேதங்களோ, உபநிடதங்களோ, கீதையோ, மகாபாரதமோ, சைவத்திருமுறைகளோ, ஆழ்வார் பாடல்களோ எவையுமே ஓர் இந்துவுக்குக் கடைசிச் சொற்கள் அல்ல. இவையெல்லாம் முற்றாக அழிந்தாலும், நித்ய சைதன்ய யதி வரையிலான ஆசிரியர்களின் அனைத்துச் சொற்களும் முற்றாக அழிந்தாலும் இந்துஞானமரபு அழிவடையாது.

இந்துஞானமரபு என்பது இரு அம்சங்களினால் ஆனது. ஒன்று : அது தனிமனிதனும் சமூகமும் தனித்தனியாகவும் கூட்டாகவும் தன் ஆன்மீகமான தேடலை நிகழ்த்துவதற்கான ஏராளமான சாத்தியங்களை உருவாக்கி திறந்து வைக்கிறது. இரண்டு : ஆன்மீகத்தேடலை நிகழ்த்துவதற்கு அவசியமான உருவகங்களை,படிமங்களை ஏராளமாக நம் முன் திறந்து வைக்கிறது. அவ்வம்சங்களே இம்மரபின் அடிப்படைகளை ஆக்குகின்றன. ஏராளமான நூல்களோ, தத்துவத்தரப்புகளோ, மாறுபட்ட வழிபாட்டுமுறைகளோ அல்ல.

இன்றுவரை இந்துஞானமரபு உருவாக்கிய அனைத்தையும் முழுமையாக நிராகரித்து நான் எனக்கென ஒரு தனிமதத்தை உருவாக்கிக் கொள்ள முடியும், அதன் மூலம் என் நிறைவையும் விடுதலையையும் அடைய இயலுமென்பதே இக்கணம்வரையிலான இம்மரபின் வரலாறு காட்டும் உண்மையாகும். அதற்கான சாத்தியங்களினாலான ஒரு பெரும் வெளியையே நாம் இந்துஞான மரபு என்கிறோம்.

இந்துஞானமரபை ஒரு மதமாக எண்ணுவது முதல் பிழை. அதை மதங்களும் தத்துவங்களும் அடங்கிய ஒரு தொகையாகவே காணவேண்டும். அப்படித்தான் அது எக்காலத்திலும் காணப்பட்டும் வந்தது. அம்மரபு ஒரு மதமாக அடையாளம்காணப்பட்டதும் சட்டபூர்வமாக வகுக்கப்பட்டதுமெல்லாம் மிகவும் பிற்காலத்தைச் சேர்ந்தவை. ஆகவே பகவத்கீதையை ஒட்டுமொத்த இந்துஞானமரபின் மூலநூலாகக் கருதுவதும் சரி, அதை பிற மதமூலநூல்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதும் சரி, முற்றிலும் தவறானது.

அப்படியானால் கீதை ஒரு சாதாரண நூலா ? அல்ல. அது தத்துவ நூல்களில் அடிப்படையானது. அதாவது ஆதாரநூல். அதிலிருந்து சிந்தனைகளை வளர்த்தெடுக்க இயலும். சிந்தனைகளுக்கு அது மூலமும் ஆகும். ஆனால் அது சொல்வதனால் மட்டுமே ஒன்று உண்மை ஆகிவிடாது.

இந்துஞானமரபில் பகவத் கீதையின் இடம் என்ன?

இந்து என்ற சொல் மிகப்பிற்காலத்தையது என்பதை நாம் அறிவோம். முன்பு சனாதன தர்மம் [தொன்மைக்கால வழி] என்றும் பிற சொற்களாலும் இது வழங்கப்பட்டது. பண்டைய நூல்களை அடிப்படையாகக் கொண்டும், இன்றும் வழங்கும் சைவ வைணவ குருகுல அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டும் இதன் கூறுகள் கீழ்க்கண்டவாறு வரையறைசெய்யப்பட்ட்டிருப்பதைக் காணலாம். சுருதிகள் அல்லது வேதங்கள் பொதுவாகச் சொல்லப்படும் அடிப்படைகள். அதற்கு மேல் 1] ஷன்மதம் 2] ஷட் தர்சனம் 3] பிரஸ்தானத்ரயம். அதாவது ஆறுமதங்கள், ஆறு தரிசனங்கள், மூன்று தத்துவஇயக்கங்கள் ஆகியவை. [பிரஸ்தானம் என்றால் இயக்கம், அமைப்பு, பயணம் ஆகிய பொருட்கள் உண்டு]

சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், செளரம், காணபத்யம் ஆகியவையே ஆறுமதங்கள். சாங்கியம் யோகம் நியாயம் வைசேஷிகம் பூர்வ மீமாம்சை உத்தர மீமாம்சை ஆகியவை ஆறு தரிசனங்கள். உபநிஷதங்கள், பிரம்ம சூத்ரம், கீதை ஆகியவை அடங்கியது மூன்று தத்துவங்கள்.

இன்றும் எந்த ஒரு மரபான குருகுலத் தத்துவக் கல்வியிலும் இவற்றை கற்றுத்தேறியபிறகே கல்வி முழுமையாக ஆனதாகக் கருதப்படுகிறது. அதன் பிறகு கற்றவற்றை ஏற்கவும் மறுக்கவும் செய்யலாம். ஒரு சைவ மடம் கீதையை முழுக்க நிராகரிக்கவே கற்பிக்கும் என்பது ஆச்சரியமல்ல. எனக்கு கீதையை முதலில் அறிமுகம் செய்த என் பெரியப்பா கடுமையான நாத்திகர். [ஜடவாதி].

இந்துஞானமரபின் மூலநூல் உண்டா?

மூலநூல் [Canon] என்ற கருதுகோள் செமிட்டிக் மதங்களில் மிக முக்கியமான ஒன்று. மூலநூல் ஒரு மதத்தை தெளிவாக வரையறை செய்கிறது. அதையும் அம்மதத்தையும் பிரிக்க இயலாது. அம்மதத்தில் உள்ளவர்களுக்குமுன் திட்டவட்டமாக இது சரி இது தவறு, இது உண்மை இது பொய் என்று வகுத்து அவற்றை மாற்றமில்லா விதிகளாக முன்வைக்கிறது அது. பல மதங்களுக்கு அது இறைவைனின் வார்த்தை. அல்லது இறைவனிடமிருந்து அம்மத நிறுவனர் நேரடியாகப் பெற்றுக்கொண்டது. ஆகவே அதை மாற்றவோ மறுபரிசீலனை செய்யவோ ஆராய்ந்து பார்க்கவோ அம்மதத்தை ஏற்பவர்களுக்கு உரிமை இல்லை. அவர்கள் அதை முழுமையாக நம்பி ஏற்கவேண்டும். கிறித்தவர்களுக்கு பைபிளும் இஸ்லாமியர்களுக்கு குர்- ஆனும் மூலநூல்கள்.

மூலநூல் இருவகைப்படுகிறது. ஒரு நிறுவனரால் உருவாக்கப்பட்ட மதங்களுக்கு அந்நிறுவனரின் சொற்கள் மூலநூலாகின்றன. யூதமதம் போன்ற காலப்போக்கில் திரண்டுவந்த மதங்களுக்கு மரபிலிருந்து திரண்டுவந்த காபாலா போன்ற தொகைநூல்கள் மூலநூலாகின்றன.

இந்துஞானமரபில் மூலநூல்வாதத்தை முன்வைக்கக் கூடிய தரப்பு ஒன்றே. அதை பூர்வமீமாம்சை என்று ஆறுதரிசனங்களில் ஒன்றாக வரையறை செய்திருக்கிறார்கள். அவர்கள் வேதங்களை மட்டுமே மூலநூலாகக் கொள்கிறார்கள். வேள்விச்சடங்குகளை முதன்மைப்படுத்துவது இம்மரபு. இந்துஞானமரபில் தத்துவார்த்தமாக இதற்கு முக்கியத்துவம் ஏதும் இல்லை என்பதை வாசிக்க ஆரம்பித்ததுமே அறியலாம். இந்திய நிலப்பரப்பில் காலப்போக்கில் பெரும் செல்வாக்குபெற்று ஒரு சக்தியாக எழுந்த புரோகிதவர்க்கத்தின் மதம் இது.

பூர்வமீமாம்சை இந்திய நிலப்பரப்பெங்கும் பரவி, இந்துமெய்ஞானமரபின் பல தளங்களுக்குள் ஊடுருவியது. அதற்கு பல அரசியல் காரணங்கள் உள்ளன. அத்துடன் பிறதரப்புகளை எதிர்க்காமல் அவற்றில் ஊடுருவுகிற அதன் உத்தியும் ஒருகாரணம்.

வேறு எந்நூலும் இந்துஞானமரபில் மூலநூல்களாகச் சொல்லப்பட்டதில்லை. வேதங்களை பிற இந்துமதத்தரப்புகள் மூலநூலாகக் கொள்ளவுமில்லை. பல உபநிடதங்கள் வேதங்களை நிராகரிக்கின்றன. வேதங்களை அடியோடு வெட்டிவீழ்த்தும்படி கீதையில் கிருஷ்ணர் அர்ச்சுனனுக்குச் சொல்கிறார். அக்குரலை காந்தி எதிரொலிப்பதைக் காணலாம். பின்னர் காலப்போக்கில் புரோகிதர்கள் பெற்ற மத அதிகாரம் காரணமாக வேதங்கள் ஒரு முக்கியமான ஞானமையமாக பல மதங்களால் ஏற்கப்பட்டது.

பலசமயம் இது திரிபுகள், வலிந்த விளக்கங்கள் மூலம் நிகழ்த்தப்பட்டது. உதாரணமாக சாங்கியம், வைசேடிகம் ஆகியவை மூன்றுவகை அடிப்படை அறிதல்முறைகளை [பிரமாணம்] அடிப்படையாகக் கொள்கின்றன. அவை புலன்வழியறிதல் [பிரத்யட்சம்] ஊகம் [அனுமானம்] சுருதி [சொல்லிகேட்டது] என மூன்று. இவற்றில் சுருதி என்று அவை முன்னோர் சொல்லையே உத்தேசிக்கின்றன. பிற்பாடு இது விளக்கங்கள் மூலம் வேதங்களாக மாற்றிப் பொருள் கொள்ளப்பட்டது. விளைவாக சாங்கியம் வேதத்தை ஒப்புகிற தரிசனமாக ஆயிற்று. இது பல நூற்றாண்டுக்காலம் நடந்த ஒரு பெரும் இயக்கம். இதன் விளைவாகவே வேதம் மூலநூல் என்ற பிரமையை இந்துஞானமரபு மேலோட்டமான நோக்கில் அளிக்கிறது. சற்று உள்ளே சென்று நோக்கினால்கூட அப்படி இல்லை என்று அறியலாம்.

இந்தியாவில் உருவான நிறுவப்பட்ட மதங்களான பெளத்தம்,சமணம் ஆகியவை கூட அந்நிறுவனரின் சொற்களை மூலநூலாகக் கொள்ளவில்லை. பெளத்த மரபில் ஆதார நூல்களாக புத்தரின் சொற்களின் தொகைகளான சுத்த பிடகம் வினய பிடகம் [ஞானத்தொகை, நெறிமுறைத்தொகை] ஆகியவை முன்வைக்கப்பட்டாலும்கூட அவை மூலநூல்களாகக் கருதப்படவில்லை. அவை தொடக்கப்புள்ளிகள் மட்டுமே. குறிப்பாக சுத்த பிடகம் முற்றிலும் தத்துவார்த்தமான கூற்றுகள் அடங்கியது. புத்தர் நம்பும்படி ஆணையிட்டவரல்ல, சிந்திக்கும்படி அறைகூவினவர் என்பதே இதற்குக் காரணம்.

இந்துஞானமரபுக்கு என்று ஒரு மூலநூல் இல்லை. அதன் முக்கிய நூல்கள் அனைத்துமே விவாதத்துக்குரிய தத்துவநூல்களோ பக்திநூல்களோ மட்டும்தான். அவை நெறிமுறைகளைச் சொல்பவை அல்ல. நெறிமுறைகளை முன்வைப்பவை ‘ஸ்மிருதிகள் ‘ எனப்பட்டன. அவற்றுக்கு இரண்டாமிடமே அளிக்கப்பட்டது. அவை மாறும் உண்மைகளைச் சொல்லும் உலகியல் நூல்கள், ஆகவே காலத்துக்கு ஏற்ப மாற்றப்படவேண்டியவை என்பதே மரபு வகுத்தமுறை. மனு ஸ்மிருதி அவற்றில் கடைசியானது. [அம்பேத்கர் வகுத்த இந்திய அரசியல்சட்டம் அதற்கு அடுத்தது என்று ஓர் உரையில் ஸ்வாமி சித்பவானந்தர் சொல்லியிருக்கிறார்] அதற்கு முன் நாரத ஸ்மிருதி அதற்கும் முன் யம ஸ்மிருதி என பல நெறித்தொகைகள் இருந்திருக்கின்றன. அவை மூலநூல்களாகக் கருதப்படவில்லை. காலமாற்றத்தில் சாதாரணமாக அவை வழக்கொழிந்தன.

மூலநூல் இன்றியமையாத ஒன்றா? எதற்காக மூலநூல்கள் தேவைப்படுகின்றன?

உலகில் வாழ்பவர்களில் மிகச்சிலர் தவிர வாழ முயல்பவர்களே ஒழிய வாழ்வை அறிய முயல்பவர்களல்ல என்பதை நாம் அறிவோம். பெரும்பாலானவர்களுக்கு தங்கள் வாழ்க்கையை ஏற்கனவே உருவாகி திடம் கொண்டுள்ள பாதையில் நடத்திச்செல்லவே விருப்பம். அதுதான் அவர்களால் முடியும். தங்கள் செயல்களைப் பற்றி சிந்திப்பதோ அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதோ அவர்களால் இயலாது. அத்தகையோருக்கு திட்டவட்டமான பாதையைக் காட்டும் மூலநூல்கள் தேவையே. இது சரி -இது பிழை, இப்படிச்செய்க என்ற ஆணைகள் மட்டுமே அவர்களுக்கு குழப்பமில்லாமல் வழிகாட்டும். சொற்கமும் நரகமும் பாவபுண்ணியங்களும் சேர்ந்துதான் அவர்களை நடத்த இயலும்.

நான் பலவருடங்கள் தேடலுடனும், கண்ணீருடனும் நான்கு மதங்களின் மூலநூல்களை கற்றுள்ளேன். இன்றும் அவை என் மேஜைமீது உள்ளன. என் கருத்தில் அவை அனைத்துமே பெருங்கருணை, உலகைத்தழுவ முனையும் நீதியுணர்வு ஆகியவற்றின் மகத்தான வெளிப்பாடுகளே. பைபிளையோ,குர் ஆனையோ, தம்ம பதத்தையோ, கிரந்த் சாகிப்பையோ ஆழமான மனநெகிழ்வும் கனிவும் இன்றி என்னால் வாசிக்க இயன்றதில்லை. வாழ்க்கையின் பல தருணங்களில் அவை எனக்கு பலவகைகளில் தேவைப்பட்டிருக்கின்றன. குறிப்பாக பைபிள் என் நெஞ்சில் ஓர் அணையா ஒளியாக உள்ள நூல்.

ஆனால் ஞானத்தேடல் கொண்ட ஒருவனை ஒருபோதும் ஒரு மூல நூலும் திருப்தி செய்யாது. அவனது ஞானம் அவனே அறிந்துகொண்ட ஒன்றாகவே இருக்கும். நூல்கள் அவனது பாதை ஒளிகளே ஒழிய அவன் சென்று சேரும் இறுதி வெளிச்சம் அல்ல. ஏனெனில் மண்ணில் இதுவரை உருவான எந்த நூலும் இறுதி நூல் அல்ல. ஒரு நூல் பிரபஞ்ச இயக்கத்தை விளக்குமளவு பிரபஞ்சம் சிறியதோ எளியதோ அல்ல. ஒரு மனிதனுக்கு தன் ரகசியத்தை முற்றாகச் சொல்லிவிடுமளவுக்கு அப்பிரபஞ்சத்தின் மனம் சிறுமைகொண்டதுமல்ல. ஒரு நூலை இறைவனின் சொற்களாகக் காண்பதும், அதை எக்காலத்துக்கும் எல்லாருக்கும் உரியதாக நம்புவதும்தான் மூடநம்பிக்கைகளில் தலையாயது என ஒரு ஞானத்தேடல் கொண்ட மனிதன் ஆழமாக அறிவான் என்றே நான் நினைக்கிறேன். அது எந்நூலாக இருப்பினும் சரி. கீதையோ, குர் ஆனோ, பைபிளோ அல்லது மூலதனமோ.

ஒரு வைணவ ஞானியிடம் ஒரு முமுட்சு [ஞானத்தேடல்கொண்டவன்] வந்து தனக்கு வழிகாட்டும்படிக் கோருகிறான் என்று கொள்வோம். அவர் முதலில் அவனுக்கு நெறிமுறைகள், கைங்கரியம் [சேவை] ஆலய வழிபாடு ஆகியவற்றையே உபதேசிப்பார். அவன் மீண்டும் வந்து அவற்றில் தான் நிறைவடையவில்லை, தனக்கு வினாக்கள் உள்ளன என்றால் அவனுக்கு பக்தி இலக்கியங்களை காட்டுவார். அதிலும் தன் தேடல் நிறைவுகொள்ளவில்லை என்று சொன்னால் மட்டுமே அவனை கீதைக்குள் கொண்டுவருவார். அதன் வழியாக வேதாந்தத்தின் வெளியைக் காட்டி இனி உன்பாதையை நீயே உருவாக்கு என்பார். [’மேலான உண்மை எதுவென நாமிருவரும் சேர்ந்து தேடுவோம் வா ‘ என்பதே குரு சீடனுடன் சேர்ந்து சொல்லும் பிரார்த்தனை என்கிறது கடோபநிடதத்தின் புகழ்பெற்ற முதல்வாக்கியம்.] இதுவே இந்துஞானமரபின் முறைமையாக உள்ளது.

முதலிரு தளத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே மூலநூல்களின் தேவை உண்டு. மூலநூல்மதங்கள் முதலிரு தளத்துடன் நின்றுவிடுபவை. இந்து ஞான மரபும், பெளத்த ஞான மரபும்,கன்பூஷிய ஞான மரபும், தாவோ மரபும் மட்டுமே அடுத்த தளங்களுக்கு வாசல் திறந்து தருபவை என்பதே என் இருபதாண்டுகால தேடலின் விளைவாக நான் கற்றது.

ஒரு நம்பிக்கையாளனிடம் ஞானத்தேடல்கொண்டவன் விவாதிக்க இயலாது. அவர்கள் இயங்கும் தளங்கள் வேறு. அவர்கள் உரையாட எதுவுமே இல்லை. அதிகபட்சம் ஒரு புன்னகையுடன் தேடல் கொண்டவன் நம்பிக்கையாளனிடமிருந்து விலகி நகர்ந்துவிடவேண்டும் என்றே சொல்லப்பட்டிருக்கிறது.

அதேசமயம் நம்பிக்கையாளன் ஞானத்தேடல்கொண்டவனைவிட கீழானவன் இல்லை. அவ்வெண்ணம் விவேகானந்தருக்கு வந்தபோது ராமகிருஷ்ண பரமஹம்சர் ‘சைதன்ய மகாபிரபு பக்தர்தானே ? ‘ என்று கேட்டு அவரைக் கடுமையாகக் கண்டித்ததை எம் எழுதிய ராமகிருஷ்ணர் வரலாற்றில் காண்கிறோம். பொதுவாக பக்திமரபு ஞானத்தைவிடவும் அதிகமான முக்கியத்துவத்தை பக்திக்கு அளிக்கிறது.

எல்லா வழிகளும் இலக்காக்குவது ஒன்றையே. ஒருவன் எதில் நிறைவுகொள்கிறான் என்பது அவனது இயல்பைச் சார்ந்தது. குருவி தாழப்பறக்கலாம். வல்லூறு மேலே பறக்கலாம். இரண்டும் பறப்பது வானிலெயெ. வானம் இரண்டிலிருந்தும் சமதூரத்தில்தான் உள்ளது.

கீதையை எப்படி அணுகவேண்டும்?

நித்ய சைதன்ய யதி அவரது பேட்டியில் சொன்ன ஓர் அனுபவம். அவர் கொல்லத்தில் தத்துவ ஆசிரியராக வேலைபார்த்தபோது ஒரு பேருரைக்காக அங்கு நடராஜகுரு வந்திருந்தார். நித்யா அவருக்கு உதவிக்காக நியமிக்கப்பட்டிந்தார். நித்யா கையில் வைத்திருந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் ஆங்கில கீதை உரையை வாங்கி முதல்வரியைப்படித்துவிட்டு நடராஜகுரு அதை கார் ஜன்னல்வழியாக தூக்கிவீசினார். காரை நிறுத்தி ஓடிப்போய் அதை எடுத்து மீண்ட நித்யா கடுமையாகக் கோபித்துக் கொண்டார். நடராஜ குரு அதன் முதல் வரியை வாசிக்கச் சொன்னார். “கீதை இந்து மதத்தின் முக்கிய நூல் ” என்றிருந்தது. “மூன்று தத்துவம் என்றால் எவை ? ” என்றார் நடராஜகுரு. நித்யா சொன்னார். “தத்துவம் என்றால் என்ன ? ” என்றார் நடராஜகுரு மீண்டும். ” உண்மையை விவாதம் மூலம் வகுத்துகொள்வதற்கான முயற்சி “. “அப்படியானால் எப்படி கீதையை இவர் மதநூல் என்கிறார் ? ‘ அக்கேள்விக்கான பதிலை நித்யா பிறகு டாக்டர் ராகாதிருஷ்ணனிடம் கேட்டதாகவும் அவரால் பதில் சொல்ல இயலவில்லை என்றும் அப்பேட்டியில் சொல்கிறார். அது ஒரு தொடக்கமாக அமைந்து நித்யா தன் ஆய்வுகளை முன்னெடுத்துச் சென்றார்.

இதற்குப் பின்னால் ஒரு கலாச்சாரக் காரணம் உள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிறித்தவ மதம் அமைப்புசார்ந்து நோக்கினால் மிக நவீனமான ஒரு மதமாக இருந்தது. அது பைபிள் என்ற மூலநூல் சார்ந்து திட்டவட்டமான தத்துவ ஒருங்கமைவு கொண்டிருந்தது. சர்ச் என்ற மையமும் கிளைகளுமாக விரியும் நிறுவன அமைப்பு மேலும் உறுதியை அதற்கு அளித்தது. அதனுடன் ஒப்பிடும்போது அன்று இந்துஞானமரபு சிதைவுற்று சிதறிப்பரந்து கிடந்தது. பொதுவாக நம்பிக்கைகளே ஞானமாகவும் சடங்குகளே மதமாகவும் இருந்தன. அச்சூழலில் இந்து மத மறுமலர்ச்சிக்கு வழியமைத்த முன்னோடிகளான ராஜா ராம் மோகன் ராய், [பிரம்ம சமாஜம்] சுவாமி தயானந்த சரஸ்வதி [ஆரிய சமாஜம்] போன்றவர்கள் கிறித்தவ மதம்போல இந்துமரபையும் திட்டவட்டமான ஒன்றாக வரையறைசெய்ய விரும்பினர். இதன் விளைவாக இந்து ஞானமரபுக்குப் பொதுவானதாக மூலநூல்கள் தேவை என்ற எண்ணம் ஏற்பட்டது. வேதங்கள், உபநிடதங்கள் முதலியவை அவ்வாறு விளக்கமளிக்கப்பட்டு முன்னிறுத்தப்பட்ட போதிலும் கீதை காலப்போக்கில் அவ்விடத்தை பெற்றது. அதற்கான காரணத்தை பிறகு சொல்கிறேன். இவ்வாறுதான் கீதையை மதமூலநூலாகக் கொள்ளும் போக்கு தோன்றியது.

கீதையை மதநூலாகக் கொள்ளுவது அதை விவாத தளத்திலிருந்து நம்பிக்கையின் தளத்துக்கு நகர்த்தும் முயற்சி என்ரு கருதியே நடராஜ குரு அதை கடுமையாக எதிர்க்கிறார். கீதை ஒரு தத்துவ நூல். கற்பதற்கும் விவாதிப்பதற்கும் உரியது. கீதை முத்தத்துவ அமைப்பின் இறுதிநூல் என்பதைக் கண்டோம். அது ஒரு தத்துவநூல் என்பதற்கான உறுதியான ஆதாரம் அந்நூலே. அதன் முதல் அத்யாயம் சாங்க்ய யோகம் எனப்படுகிறது. இங்கு சாங்கியம் என்ற சொல் தத்துவ சிந்தனை என்றே பொருள்படுகிரது. [சங்கிய : எண்ணிக்கை.]அதாவது அது தத்துவத்திலிருந்து தொடங்கி மேலே செல்கிறது.

கீதை இறைவடிவமாகச் சொல்லப்படும் கிருஷ்ணன் புராணகதாநாயகனாகிய அர்ச்சுனனுக்குச் சொல்லும் வடிவில் உள்ளது. அதாவது அதன் கூற்றுகள் இறைவனின் கூற்றுகளாகவே முன்வைக்கப் படுகின்றன. ஆனால் அந்நூல் பிற மதநூல்களைப்போல எதையுமே ஆணையிடவில்லை. தன்னை அப்படியே நம்பும்படி அது கோரவில்லை. அது வாதிடுகிறது. மீண்டும் மீண்டும் ‘நான் சொல்வதை யோசித்துபார் ‘ என்கிறது. ஆராயும் நோக்குடன் தன் அனுபவதளத்தையும் தன் கல்வியையும் கருவியாகக் கொண்டு ஒருவன் கற்க வேண்டியநூல் கீதை.

கீதையை இப்போது படிப்பது எப்படி ?

தொடர்ந்து என் வாசகர்களில் ஒரு சாரார் கீதையை படிக்க ஆரம்பித்து ஐயங்களை எனக்கு எழுதுவதுண்டு என்பதனால் அவற்றிலிருந்து நான் உருவாக்கிய ஒரு பொதுவான வாசிப்புமுறைமையைச் சொல்கிறேன். கீதை பலவாறாக பல நோக்கில் விளக்கப்பட்டுவரும் நூல். அதற்கான இடம் அதில் உள்ளது. காரணம் அது ஒரு தத்துவநூல். விவாதத்துக்கு உரியது. உங்கள் வாழ்க்கைநோக்கில் ஆராய்வதற்குரியது. ஆகவே ஏதேனும் ஓர் உரையை நம்பி வாசிப்பது தவறானதாக ஆகக் கூடும். உதாரணமாக ஜெயதயால் கோயிந்தகா வின் கொரக்பூர் உரை மிக மிக வைதிக, சாதிய நோக்கு கொண்ட ஒன்று. அதை நான் நிராகரிக்கிறேன். ஹரே ராம ஹரே கிருஷ்ண இயக்கத்தின் நிறுவனரான பிரபுபாதரின் உரை கீதையை ஒரு மூலநூலாக, கிட்டத்தட்ட பைபிள் போல மேலைநாட்டு ருசிக்காக விளக்க முயல்வது. அவரை ஒரு ஞானி என்றே எண்ணுகிறேன். ஆனால் அவரது உரை எனக்கு ஏற்புடையது அல்ல. வைணவ அறிஞர்களில் பலரும் கீதையை வெறும்பக்தியை சரணாகதியைச் சொல்லும் நூல் என்று விளக்குவதுண்டு. அதுவும் எனக்கு ஏற்புடையதல.

தமிழில் முதலில் வாசிக்க ஆரம்பிக்க வேண்டிய நூல் சுவாமி சித்பவானந்தரின் பெரும்புகழ்பெற்ற கீதை உரைதான். [கவனிக்க அது ராமகிருஷ்ண மடம் வெளியீடல்ல. சித்பவானந்தரின் மடம் வெளியீடு. திருச்சி [திருப்பராய்த்துறை] மதுரை [திருவேடகம்] மடங்கள் வெளியிடுகின்றன. கூடவே பாரதி அல்லது கண்ணதாசனின் உரையையும் வைத்து கொள்ளுங்கள். முன்னது விளக்குவதற்கு பயன்படும். சித்பவானந்தர் நூலில் உள்ள ராமகிருஷ்ண பரம ஹம்சரின் உதாரணகதைகள் கீதையை மிகத்துல்லியமான முறையில் புரியவைப்பவை. பாரதி,கண்ணதாசன் போன்ற கவிஞர்கள் நம் நினைவில் தங்கும் அரிய சொல்லாட்சிகளை அளிப்பார்கள். இன்னும் ஏதேனும் ஒரு கீதை உரையை, அன்றாட வாழ்விலிருந்து கீதையை அணுகும் ஒருவரின் உரையை சேர்த்துக் கொள்வது நல்லது. என் நோக்கில் வினோபாவின் கீதைப்பேருரை. ஒரே சூத்திரத்தை அனைத்திலும் படியுங்கள். உங்கள் வாழ்க்கையை ஒட்டி சிந்தியுங்கள். ஒருநாள் ஒரு சூத்திரம் போதும்.

அதன் பின் கூடவே ஓஷோவின் கீதை உரையை படியுங்கள். அந்தப் பெரும் கலகக்காரன் நீங்கள் எப்படியெல்லாம் சிந்திக்கிறீர்களோ அதையெல்லாம் உடைத்து கலக்கிவிடுவார். ‘ஆன்மீக ‘ உரை நடுவே நான்கு செக்ஸ் ஜோக்குகள் இருப்பது ஒரு நல்ல விடுதலை. அது உங்களை புதிய இடங்களுக்கு கொண்டுசெல்லும். மரபான எந்த முறையில் நீங்கள் சிந்தித்தாலும் ஓஷோ தடுத்துவிடுவார். எளிய முடிவுகளுக்கு வர அவர் விடமாட்டார். மெல்ல நீங்களே உங்கள் சொந்த உரையினை அடைவீர்கள். அதுவே உங்களுக்கு உரிய உரை. காரணம் பிற எவருக்கும் இல்லாத ஒன்று உங்களிடம் உள்ளது — உங்கள் வாழ்க்கை. பிறநூல்களுக்கும் கீதைக்கும் உள்ள வேறுபாடே இதுதான். அவை ‘மக்களை ‘ நோக்கி பேசுகின்றன. கீதை மனிதனை, ஒரு தனி மனதை நோக்கிப் பேசுகிறது.

ஆங்கிலத்தில் பலநூல்கள் உள்ளன. என் தேர்வு நடராஜகுருவின் கீதை உரை. அவரது மறுதரப்பான டாக்டர் ராதாகிருஷ்ணனின் உரை. நவீன உரையான சுவாமி சின்மயானந்தரின் உரை. நடைமுறைத்தளத்தில் காந்தியின் கீதை உரையாடல்கள். பிறகு ஓஷோ.

கீதையை படிப்பது ஆராய்வதற்காகவே. வணங்குவதற்கல்ல. பக்திப்பரவசமாகப் படிக்கவேண்டியதில்லை. ஓஷோ சொன்னதுபோல கமோட் மேடையில் அமர்ந்து படித்தால் இன்னும் மேலாகப் புரியக்கூடும்.

கீதை வருணாசிரமத்தை முன்வைக்கும் நூலா?

எந்த ஒரு நூலையும் இப்படி ஒற்றைவரியில் குறுக்குவது என்பது அறிவார்ந்த நாணயமின்மையே. ஈ.வே.ரா. தொடங்கிய திராவிட இயக்கம் கடந்த ஐம்பது வருடங்களாக நூல்களை குறுக்குவது, திரிப்பது, வாசிக்காமல் வசைபாடுவது என்ற அளவிலேயே தன் இயக்கத்தை நடத்திவந்துள்ளது. தன் சார்பில் வலுவான ஒரு நூலைக்கூட உருவாக்க முடியாத மலட்டு இயக்கமாக அது ஆனமைக்குக் காரணமும் இதுவே. தனக்கு சற்றும் தெரியாத விஷயங்களை வசைபாட தனக்கு உரிமை இருப்பதாக எண்ணியவர் ஈ.வே.ரா. அவர் உருவாக்கிய அந்த மரபு இன்றுவரை தொடர்ந்து தமிழ்ச்சூழலில் ஆக்கபூர்வமான விவாதங்கள் ‘தலைமறைவாகவே ‘ நிகழ முடியும் என்ற நிலையினை உருவாக்கியுள்ளது.

இதேபாணியில் குறளை ஏன் குறுக்கக் கூடாது? ” தெய்வம் தொழாஅள் கணவன் தொழுதெழுவாள் பெய்யென பெய்யும் மழை” ஆகவே குறள் ஓர் ஆணாதிக்க வெறி பரப்பும் நச்சு நூல். இழிசினரை இலக்கணம் வகுத்து சமூகவாழ்வில் இருந்தே விலக்கிய சாதிவெறி நூல் தொல்காப்பியம். உடன்கட்டையேறுவதையும் போர்வெறியையும் வலியுறுத்தும் நூல் புறநானூறு. விபச்சாரத்தைப் பரப்புபவை அகத்துறை நூல்கள். பெண்ணடிமை நூல் சிலப்பதிகாரம். இதெல்லாம் சரியா? ஏற்க இயலுமா ? உண்மையில் ஈ.வே.ரா இப்படித்தான் பேரிலக்கியங்களைப் பார்த்தார். அவரைத் தொடர்ந்து இப்படியெல்லாம் கருதும் பலர் நம்மிடையே உள்ளனர் என்பதையும் நாம் அறிவோம். ஆனால் இவையெல்லாம் குறுக்கல்நோக்குகள் மட்டுமே.

ஒரு நூலை அதன் ஒட்டுமொத்தத்தை வைத்து, அது உருவான காலகட்டத்தை வைத்து, பண்பாட்டுக்கு அதன் பங்களிப்பை வைத்து மட்டுமே அளவிடவேண்டும் என்பதே அறிவார்ந்த நாணயமாகும். அரசியல் நோக்குடன் வெறுப்பை உருவாக்கும்பொருட்டு சொற்களை திரித்தும் உள்நோக்கம் அளித்தும் கிளப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அறிவுத்தேடல்கொண்டவன் எந்தவிதமான மதிப்பும் அளிக்கமாட்டான். இக்குற்றச் சாட்டுகளை கிளப்புபவர்களிடமுள்ள அப்பட்டமான பாரபட்சமே அவர்களை வெளிக்காட்டும் அடையாளமாகும்.

வருண அமைப்பும் சாதியமைப்பும் ஒன்றுதான் என்பது ஆரம்பகட்ட இந்தியவியலாளர்கள் போதிய அளவுக்கு நூல்களையோ இந்தியச் சூழலையோ ஆராயாமல் உருவாக்கிய முதிர்ச்சியற்ற கருத்தாகும். வெள்ளையன் கருத்தை உணடு கக்குவதே சிந்தனை என்று நம்பும் நம்மில் பலர் இன்றும் அதை ஒரு மாறாமந்திரம்போலச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அக்கருத்து ஐம்பதுவருடம் முன்பே அறிவுத்தளத்தில் முற்றாக மறுக்கப்பட்டுவிட்டதை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. குறைந்தபட்சம் டி டி கோசாம்பி போன்ற ஒரு மார்க்ஸிய சிந்தனையாளரின் கருத்துக்களைக் கூட அவர்கள் அறிந்திருப்பதாகத் தெரியவில்லை. அவ்விவாதங்களுக்குள் செல்ல நான் இங்கு முயலவில்லை.

வருணம் என்பது ஆரியர்கள் தங்களை தொழில்முறை சார்ந்து பிரித்துக் கொண்ட அடையாளம். மனு ஸ்மிருதிக்கு முந்தைய யம ஸ்மிருதியில் சூத்திரனுக்கும் வேதம் ஓதும் உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது என்பதிலிருந்து வருணம் என்பது ஒடுக்குமுறை சார்ந்த ஒரு பகுப்பாக இருக்கவில்லை, வசதிகருதிய அமைப்பாகவே இருந்திருக்கிறது என்று ஊகிக்கலாம். அது பிறப்படையாளமாக எப்படி எப்போது ஆயிற்று என்பதெல்லாம் சிக்கலான வினாக்கள்.

சாதி என்பது வருணங்கள் மேலும் மேலும் பிரிந்து உருவான ஒன்றல்ல. ஆகவே அது மேலிருந்து கீழ்நோக்கி செலுத்தப்பட்ட கருத்தியலால் உருவாக்கப்பட்ட ஒன்றும் அல்ல. இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான ஜாதிகளையும் உள்சாதிகளையும் வருணக் கொள்கை மூலம் புரிந்துகொள்ள இயலாது என்பதே உண்மையாகும். அப்படி ஒரு இனக்குழுவின் கருத்தியல் இத்தனை பெரிய அமைப்பை உருவாக்கி இத்தனை வருடம் நிலைநிறுத்தியதென்றால் அவ்வினக்குழு மனிதர்களே அல்ல கடவுள்கள், உலகை ஆள்வதற்கு அவர்களே தகுதிபடைத்தவர்கள் என்பார் கேரள வரலாற்றசிரியர் பி.கெ.பாலகிருஷ்ணன் கிண்டலாக.

உலகமெங்கும் உள்ள இனக்குழு என்ற அமைப்பின் இந்திய வடிவமே சாதிகள். முதலில் குலம், அது தொகுக்கப்பட்டு குலக்குழுக்கள், பிறகு இனக்குழுக்கள் என வளரும் சமூக அலகுகள்தான் சாதி ஆகின்றன. உண்மையில் இந்தியாவில் சாதி என்பது ஒரு பொது உருவகமே. நான் தேவர் என்று ஒருவர் சொன்னால் அடுத்த வினா தேவரில் யார் என்பதே. மறவர் என்றால் அதற்குள் என்ன கூட்டம் என்ற வினா எழும். கொண்டையன்கோட்டை என்றால் அதற்குள் எந்த குடும்பம் என்று கேள்வி உருவாகும்.

சமூக உருவாக்கம் நடப்பதற்கேற்ப அதிகாரப்படிநிலை உருவாகிறது.அது சாதிகளை மேல்கீழாக அடுக்கிக் கட்டுகிறது. இதுவே டி. டி. கோஸாம்பி அளிக்கும் சித்திரமாகும். இந்த அதிகாரப் படிநிலையை உருவாக்கும் பல கூறுகளில் ஒன்றாக பிராமணியம் வருணக் கொள்கையை வளர்த்தெடுத்தது என்று கோஸாம்பி சொல்கிறார். இன்றைய நாட்டரியல் ஆய்வுகள் சாதிகளின் சமூகநிலையில் பொருளியல் மற்றும் வரலாற்றுக் காரணங்களுக்கு ஏற்ப ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து நிகழ்வதையும், சிறிய சாதிகள் இணைந்துபெரியசாதிகள் உருவாவதையும் தெளிவாகவே அடையாளம் காட்டுகின்றன.

ஆகவே வருணம் என்ற சொல்லை உடனடியாக சாதி ஒடுக்குமுறையுடன் தொடர்புபடுத்திக் கொள்வது மிக மிக முதிராத நோக்கேயாகும். வருணம் என்ற கருத்து ஆரம்பகட்ட நூல்களில் மனிதர்களுக்கு இடையே அடிப்படை இயல்பு சார்ந்து உள்ள வேறுபாட்டை சுட்டவே பெரிதும் கையாளப்பட்டுள்ளது. வைதிகமரபைச் [வேதங்களை அடிப்படையாகக் கொண்டது வைதிக மரபு] சேர்ந்த நூல்கள் மட்டுமல்ல வைதிக மரபை கடுமையாக எதிர்க்கும் உலகியல் நோக்குள்ள சாங்கியம் வைசேடிகம் முதலிய மரபுகளின் நூல்களும்கூடத்தான் இவ்வாறு சுட்டுகின்றன. சத்வ குணம் [செம்மைத்தன்மை] கொண்டவர்கள் பிராமணர்கள் என்றும் ராஜஸ குணம் [செயலூக்கம்] கொண்டவர்கள் ஷத்ரியர்கள் என்றும் தாமஸகுணம் [ஒடுங்கும்தன்மை] கொண்டவர்கள் சூத்திரர்கள் என்றும் ராஜஸ தாமஸ குணங்களின் கலவை வைசியர்கள் என்றெல்லாம் இந்நூல்களில் நாம் காண்கிறோம்.

இந்நோக்கை சாதி உருவாக்க நோக்கு என்று ஒருவர் சொல்லலாமென்றால் ‘அந்தணர் என்போர் அறவோ மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்’ என்ற குறளை ‘பிராமணர்கள் எல்லாரும் பிற உயிர்களுக்கு கருணை காட்டி வாழும் அறவோர் ஆவர்’ என்று நான் வாசித்து குறளை ஏன் ஒரு ‘பார்ப்பனிய நச்சு’ நூலாகச் சொல்லக் கூடாது? இப்பகுப்பானது மனித இயல்பின் சிக்கலைப் புரிந்துகொள்வதற்கான ஒரு கருவியாக இந்து ஞான மரபில் பலகோணங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சாங்கியம் போன்ற உலகியல் தத்துவங்கள் முக்குணங்களின் விளையாட்டாகவே இயற்கையின் பெரும் இயக்கத்தினை விளக்குகின்றன. நாதம், ருசி, உடலியக்கம் [வாதம், பித்தம்,கபம்] ஆகியவை கூட இவ்வாறே விளக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

கீதை இந்நோக்கிலேயே “நான்கு வருணம் என் ஆக்கம். இயல்பு செயல் ஆகியவற்றின் அடிப்படையில் பகுக்கப்பட்டது” [சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குணகர்ம விபாகஸ] என்று வகுத்துரைக்கிறது. கடந்த அரை நூற்றாண்டாக இச்சூத்திரத்தின் முதல் வரி மட்டுமே இங்கு மேடைமேடையாக முழங்கப்பட்டு கீதையில் கிருஷ்ணன் சாதிகளை அவரே உருவாக்கியதாகச் சொல்கிறார் என்று காட்டப்பட்டுள்ளது. ‘தமிழ் காட்டுமிராண்டி பாஷை ‘ என்று ஈ.வே.ரா சொன்னாரே என்று கேட்டால் அவர் சொன்ன நோக்கம், தருணம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் அதைப் பார்க்கவேண்டும் என்பவர்கள் மறுதரப்பை அணுகிய முறை இது. இரண்டாம் வரி திட்டவட்டமாக பிறப்புசார்ந்த சாதிப்பிரிவினைக்கு எதிரானது என்பதை எவரும் உணரலாம்.

கீதை ஏன் மக்களை பகுக்கிறது?

கீதை ஒட்டுமொத்த மானுடகுலத்துக்கும்,காலமுழுமைக்கும், பொருந்தக்கூடிய ஒரே மாறா வழிமுறையைச் சுட்டும் மதநூல் அல்ல. அது பிரபஞ்சத்தையும், வாழ்க்கையையும், மனிதர்களையும் விளக்க முயலும் தத்துவநூல். மனிதர்கள் தங்கள் இயல்பிலேயே பன்மைத்தன்மை கொண்டவர்கள் என்பதும், எந்த ஒரு விஷயமும் ஒருவருக்கு சரியாக இருப்பது பிறருக்கு சரியாக இருக்காது என்பதும் இந்துஞான மரபின் எல்லா கிளைகளுக்கும் எல்லா அறிவியல் கோட்பாடுகளுக்கும் பொதுவாக உள்ள கருத்து. ஆகவே எல்லா தளத்திலும் பன்மைத்தன்மையை வலியுறுத்துவதும் எல்லா கூறுகளையும் பொதுவாக உள்ளடக்க முயல்வதும் இந்துஞானமரபின் எல்லா சிந்தனைகளிலும் காணப்படும் அம்சமாகும். கீதை மட்டுமல்ல பிரம்மசூத்திரமும் உபநிடதங்களும் கூட அப்படித்தான். ‘எல்லா ஆறுகளும் கடலையே சேர்கின்றன எல்லா அறிதல்களும் பிரம்மத்தை ‘ என்ற சாந்தோக்ய உபநிடத தரிசனம் நாம் அறிந்ததே

ஓர் ஆயுர்வேத அல்லது சித்த மருத்துவரிடம் நாம் சென்றால் அவர் முதலில் நம் உடலை அடையாளப்படுத்த முயல்வார். பித்த உடல், வாத உடல், கப உடல் என்று. அதன் பிறகு நம் தொழிலையும் சூழலையும். ஆயுர்வேதியான என் பெரியப்பா நோயாளியின் இடம் கடற்கரை நிலமா மலைநிலமா வயலா என்ற கேள்வி கேட்காமல் சிகிழ்ச்சையை ஆரம்பிக்கவே மாட்டார். இப்பிரிவினை போன்ற ஒன்றே இயல்பு, செயல் ஆகியவற்றின் அடிப்படையில் கீதை பிரிக்கும் பிரிவினையும் கீதை காட்டும் வழிகள் பலவாறாகப் பிரிந்து கிடப்பதை இந்நோக்கிலேயே புரிந்துகொள்ள முடியும். கர்ம யோகம் ஒருவருக்கு சரியாகுமென்றால் பக்தியோகம் இன்னொருவருக்கு உவப்பாகும். மோட்ச சன்யாஸ யோகமன்றி எதிலும் முழுமைபெறாதவராக ஒருவர் இருக்கக் கூடும். இது முழுக்க முழுக்க ஒருவரின் இயல்பு மற்றும் அவர் ஈடுபட்டு வரும் துறை ஆகியவற்றைச் சேர்ந்தது. அடங்காத உத்வேகம் கொண்ட ஒரு மன்னனுக்கு மோட்ச சன்யாச யோகம் பொருந்தாது. கீதை வழிகளை ஆணையிடவில்லை, கட்டாயபப்டுத்தவில்லை. சிபாரிசு செய்கிறது. துல்லியமான வழிமுறைகளை அளிக்கிறது. ஏன், அதற்குரிய உணவுமுறை குறித்துகூட அது விளக்குகிறது. இப்படிப்பட்ட மாறுபட்ட வழிகளை சுட்டும்பொருட்டே ; மனிதர்கள் மாறுபட்டவர்கள், அவர்களின் தேவைகளும் மாறுபட்டவை என்று விளக்கும் முகமாகவே, அந்த சூத்திரம் வருகிறது.அங்கிருந்து கீதையின் விவாதம் மிக மிக விரிவாகப் பரந்துசெல்வதைக் காணலாம்.

கண்டிப்பாக இந்த சூத்திரம் சாதிய மனநிலை கொண்டவர்களால் சாதியை நியாயப்படுத்தும் வரியாக விளக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்படி விளக்கப்படாத நூலே உலகில் இல்லை. ‘ அந்தணர் என்போர் அறவோர் ‘ என்ற வரியும் அதேபோல சாதியவரியாக விளக்கப்பட்டுள்ளது.கீதையின் ஒட்டுமொத்தத்தில் அவ்வரி பெறும் அர்த்தத்தையும் முக்கியத்துவத்தினைக் கொண்டுதான் நாம் அதைப் புரிந்துகொள்ளவேண்டும். அதுவே எந்நூலுக்கும் உகந்ததாகும்.

இன்னொன்றும் சொல்லவேண்டும். இந்தியாவின் பண்டைய நூல்கள் பல்லாயிரம் வருடப்பழக்கம் உள்ளவை. அவை மீண்டும் மீண்டும் எழுதி பிரதியெடுக்கப்பட்டு சேமிக்கப்பட்டவை. அச்சும் நூலாக்கமும் உருவான பிறகு வந்த நூறுவருடப் பழக்கம் கொண்ட நூல்களிலேயே [உதாரணம் பாரதி பாடல்கள்] இடைச்செருகல்கள் திரிபுகள் உள்ளன என்னும்போது பண்டைய நூல்களின் ஒருவரியைப்பிடுங்கி ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது ஆபத்தானது.

மேலும் இவை எவையுமே ‘ ஒருவரிகூட மாற்றப்படக் கூடாத ‘ இறைவனின் சொற்கள் அல்ல. ஆகவே இவற்றில் ஒருவர் தனக்கு பொருந்துவதை எடுத்துக் கொள்ளலாம். பிறிதை நிராகரிக்கலாம். ஒட்டுமொத்தமாகக் கூட நிராகரிக்கலாம். ஆனால் வாசித்து ஆராய்ந்து அறிந்தபிறகு அதைச்செய்யவேண்டும் அவ்வளவுதான். கீதைக்கும், பாதராயணரின் பிரம்மசூத்திரத்துக்கும், ஆதிசங்கரரின் விவேகசிந்தாமணிக்கும், உபநிடதங்களுக்கும் உரைகள் எழுதிய நித்ய சைதன்ய யதி கணிசமான இடங்களில் மூல ஆசிரியர்களை மறுத்து வாதாடுவதையும் சில கருத்துக்களை முற்றாக நிராகரிப்பதையும் காணலாம். இந்துஞானமரபு நித்யாவை இன்னொரு குருவாகவே கொண்டாடுகிறது. அவர் கருத்தை சற்றும் ஏற்காத வைதிகர்கூட அவரை அங்கீகரிக்கிறார்கள்.

கீதை ‘ஆயுதமேந்திய பிரதி’யா? [Text with weapon]

தெளிவாக அடையாளங்களையும் நெறிகளையும் வரையறை செய்யும் ஒரு நூல் ஒரு தரப்பினரால் முக்கியமான நூலாகக் கருதப்படும்போது அது ஆயுதமேந்திய நூலாக ஆகிறது. மாற்றுத்தரப்புக்கு எதிராக அது அழிவை உருவாக்குகிறது. உலகில் இன்றுவரை உருவான எல்லா மத நூல்களும் ஆயுதமேந்திய நூல்களே. எல்லா நெறிமுறை நூல்களும் ஆயுதமேந்திய நூல்களே. குர் ஆன், மூலதனம், பைபிள், மனுஸ்மிருதி, காபாலா எல்லாமே ஆயுதமேந்திய பிரதிகளே. பூமி மீது அவை பெரும் மானுட அழிவை உருவாக்கியுள்ளன. கருணையை மட்டுமே சொன்ன புத்தரின் தம்மபதம் கூட ஆயுதமேந்துவதை நாம் இலங்கையில் காண்கிறோம்.

ஆனால் அது அந்நூல்களின் நேரடி விளைவல்ல. திட்டவட்டமாக ஓர் அடையாளம் அல்லது அமைப்பு உருவாக்கப்படுமென்றால் அதை உடனடியாக அதிகாரசக்திகள் பயன்படுத்திக் கொள்கின்றன. தங்களை ஒருங்கிணைக்கவும் பிறரை வெறுக்கவும் பயன்படும் கருவிகளாக அந்நூல்களை ஆக்குகின்றன. அழிவு தொடங்கிவிடுகிறது. இந்நூல்கள் உருவாக்கும் ஆக்கம் போலவே அழிவும் முக்கியமான சிந்தனைப்பொருளே. ஆகவே அடையாளங்களை வகுத்துரைக்கும் நூல்களை, விதிகளையும் தண்டனைகளையும் குறிப்பிடும் நூல்களை இந்த ஜனநாயக யுகத்தில் கவனமாகவே அணுகவேண்டியுள்ளது.

நீதிநூலாக இருப்பினும் திருக்குறள் அடையாளங்களை உருவாக்குவதல்ல. விதிகளை வகுப்பதுமல்ல. ஆகவேதான் அதை நான் உலகப்பொதுமறை என்று எண்ணுகிறேன். கீதையை நீங்கள் படிக்கலாம். அது ஏற்பவர்கள் ஏற்காதவர்கள். நம்புகிறவர்கள் நம்பாதவர்கள் என்ற இறுதி அடையாளம் எதையேனும் வகுக்கிறதா என்று ஆராயலாம். அது மாறா நெறிகளையும் விதிகளையும் வகுக்கிறதா என்று கவனிக்கலாம். அது சொல்வதெல்லாம் மனிதர்களின் இயல்புகளைப்பற்றியும், வழிமுறைகளைப் பற்றி மட்டுமே. அதில் உள்ளவை தத்துவ அவதானிப்புகள் மட்டுமே. அப்படி ஏதாவது அடையாளப்படுத்தல் கீதையில் இருந்தால் அதை நிராகரிகக்லாம். நெறிகள் சொல்லப்பட்டிருந்தால் நீங்கள் விரும்பாவிட்டால் மறுக்கலாம். நிராகரிக்கும் உரிமையை அளிக்கும் நூல் அது.

கீதை என்றுமே ஒரு ஆயுதமேந்திய பிரதியாக இருந்தது இல்லை. அது உயர்தத்துவ தளத்தில் மட்டுமே புழங்கியது. அர்ச்சுனனுக்கு ஏற்பட்டதுபோல உண்மையான ஒரு தத்துவவச்சிக்கல் [விஷாத யோகம்] உருவாகி, தேடி வருபவர்களுக்கு மட்டுமே அது கற்பிக்கப்பட்டது. தமிழ் உள்ளிட்ட பல இந்தியமொழிகளில் அது பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் மொழியாக்கம் செய்யயப்ட்டது, அதாவது இந்து மறுமலர்ச்சியின்போது. இந்து மதமரபுகளில் பல கீதையை நிராகரிப்பவை. உதாரணமாக சாக்தேய மததைச்சேர்ந்த என்குடும்பம் கீதையை ஏற்கக் கூடியதல்ல.

நிராகரிக்கும் உரிமையை வழ்ங்கும் ஒரு நூல் எப்படி ஆயுதமேந்திய நூலாக ஆக முடியும் ? இந்து ஞானமரபில் ஆயுதமேந்திய நூல்கள் நெறிமுறைநூல்களே. அர்த்த சாஸ்திரம். மனுஸ்மிருதி போன்றவைதான்.

கீதை கொலையை நியாயப்படுத்தும் நூலா?

உலக இலக்கியத்தில் இன்றுவரை எழுதப்பட்ட மாபெரும் படைப்புகளில் பெரும்பாலானவற்றை கொலையை வலியுறுத்துபவை என்று நிராகரிிக்க முடியுமென்றால்தான் இக்கேள்வியை சாதாரணமாகக் கூட கேட்க இயலும். வீரம் என்றுமே பண்டையவாழ்வின் மாபெரும் விழுமியமாக இருந்துவந்துள்ளது. ஒரு மனிதனின் உச்சகட்ட சாத்தியம் வெளிப்படுவது வீரத்திலேயே என்பதனால்தான் அது அத்தனை முக்கியப்படுத்தப்பட்டுள்ளது. தாந்தேயின் ‘டிவைன் காமெடி ‘யை நினைவுகூருங்கள். துறக்கத்தையும் நரகத்தையும் ஆழக்காணச் செல்வது முற்றும் துறந்த ஞானி அல்ல, கையில் வாளும் நெஞ்சில் தீரமும் கொண்ட பெளராணிக வீரனான யுலிஸஸ்தான். இன்று வீரம் என்பதன் பொருள் மாறுபடக் கூடும். கீதையின் முதல்தளம் அக்கால விழுமியங்களில் வேரூன்றி நிற்கிறது. அது ‘எக்காலத்துக்கும் உரிய வரிகள் மட்டுமே கொண்ட’ மதநூல் அல்ல.

போரைப்பற்றிச் சொல்வதனால் நிராகரிப்பதென்றால் முதலில் முற்றாக நிராகரிக்கவேண்டிய நூல் குர் ஆன் தான். அதில் ஏராளமான வரிகள் போரைப்பற்றியவையே. நபி தாமே ஒரு மாபெரும் போராளியாக இருந்தவர். அப்போர் கூட ஒரே இனத்துக்குள் ஒரே இனக்குழுவுக்குள் நிகழ்ந்த போர்தான். ஏசுகூட ” பூமிக்கு சமாதானத்தைக் கொண்டுவந்தேன் என்று எண்ணாதேயுங்கள். சமாதானத்தையல்ல பட்டயத்தையே [பட்டாக்கத்தி] கொண்டுவந்தேன்.எப்படியெனில் மகனை தந்தைக்கும் சகோதரனை சகோதரனுக்கும் எதிராக திருப்பவந்தேன்” என்று பைபிளில் சொல்கிறார். வாழ்க்கையை ஒரு பெரும்போராக உருவகிக்கும் நோக்கு அக்காலகட்டத்துக்கு உரியது.

போரைப் பற்றிப் பேசாத பெரும் ஞானநூல்கள் இரண்டே மதங்களில்தான் உள்ளன. பெளத்த சமண மதங்களில். ஆனால் அவை ஒருவகையில் வாழ்க்கையின் யதார்த்தத்தை நிராகரிப்பவை. மெய்ம்மையை துறவின்மூலமே அறிய முடியும் என்று அவை கூறியது இதனாலேயே போலும்.

கீதை அதன் அமைப்பில் உபநிடதங்களைச் சார்ந்தது. உபநிடதங்கள் ஓர் அழகிய கதையை முன்னிலைப்படுத்தி அதில் நாடகத்தனமான ஒரு தருணத்தை உருவாக்கி அங்கு தங்கள் தத்துவ விவாதத்தைப் பொருத்தியுள்ளன என்பதைக் காணலாம். போர்முனையில் ஆழ்ந்த தர்மசங்கடத்துக்கு ஆளான பெருவீரனுக்கு கீதை சொல்லப்படுவது என்பது அத்தகைய ஒரு நாடகச் சந்தர்ப்பமே. கீதையை பயிலும் ஒருவர் அதன் மிகச்சிக்கலான, நுட்பமான தத்துவ விவாதத்தை அத்தகைய ஒரு நாடகத் தருணத்தில் பொருத்துவதன் அவசியத்தை புரிந்துகொள்ள முடியும். அதை பிறகு சொல்கிறேன்.

உபநிடதங்கள் ஏற்கனவே சொல்லப்பட்ட வாய்மொழிக்கதைகளில் இருந்து தங்கள் நாடகத்தருணங்களைக் கண்டடைகின்றன. அக்காலத்தில் இதிகாசங்கள் அத்தனை முக்கியத்துவத்துடன் இருந்திருக்காது என்று படுகிறது. கீதையின் காலகட்டம் குறைந்தது ஐந்து நூற்றாண்டு பிந்தையது.அப்போது இதிகாசங்கள் ஆழ வேரூன்றிவிட்டிருந்தன. குறிப்பாக மகாபாரதக்கதை கிராமம்தோறும் நிகழ்த்துகலையாக கொண்டுசெல்லப்பட்டிருக்கக் கூடும். ஆகவே கீதை மகாபாரதத்தின் தருணத்தை எடுத்துக் கொண்டிருக்கிறது. மகாபாரதத்தில் கீதைபோலவே பீஷ்மகீதை, விதுர நீதி போல பத்துக்கும் மேற்பட்ட தனித்தனி தத்துவ நூல் இணைப்புகள் உள்ளன. அவற்றில் செளனகன் சொல்லும் நாத்திக நூலும் அடக்கம்.. இந்த உத்தி மிக வெற்றிகரமானது என்பதில் ஐயமில்லை. கீதை இன்று இந்தியாவெங்கும் வேரோடிப் பரவியுள்ளமைக்கு அந்த மகாபாரதச் சந்தர்ப்பம் ஒரு முக்கியமான காரணம்.

உபநிடதங்கள் பொருத்தப்பட்டுள்ள கதைகள் அனைத்துமே அவை பேசும் தத்துவத்துக்கு ஏற்ப குறியீட்டுத்தன்மை கொண்டவை என்பதை சாமானிய கதைகேட்பாளர்கள் கூட அறிந்திருப்பதை நான் நேரில் அறிந்திருக்கிறேன். அச்சந்தர்ப்பத்தின் கவித்துவத்தை உணர்வதற்கு இலக்கிய அறிமுகம் இல்லையென்றால் குறைந்தபட்சக் கற்பனைவளமாவது தேவை. அதை ‘அப்படியே’ எடுத்துக் கொண்டு விவாதிக்கும் நம் ‘அறிவுஜீவி’கள்’ ஏதாவது ஒரு பேரிலக்கியத்தையாவது அதன் செவ்வி உணர்ந்து அனுபவித்தமைக்குத் தடையம் உண்டா என்ன ? கம்பராமாயணத்தை விடுங்கள், திருக்குறளை அவர்கள் அணுகிய விதம் என்ன ? அவர்களிடம் இதைமட்டும் எப்படி எதிர்பார்க்க இயலும் ?

ஒரு விழியிழந்தவனுக்கு ஒரு சொல்வல்லுநன் உருவாக்கிய ‘சொல்நிலக்காட்சி ‘ யே கீதை என்பதே அதன் முக்கியமான கவித்துவம். இருபக்கமும் விரியும் கோபம் கொண்டு கொந்தளிக்கும் பெரும்படைகளின் சந்திப்பு எல்லைக்கோட்டில் அது சொல்லப்படுகிறது என்பது இன்னொரு முக்கிய படிமம். அந்த ரதம் [அதை ஓட்டுபவன் எதிலும் எப்போதும் ஈடுபடாதவன், செயலாற்றுபவனுக்கோ ரதம் மீது கட்டுப்பாடே இல்லை] இன்னொரு படிமம். இப்படிமங்கள் அந்நூலின் மையமான நோக்குக்கு எந்த வகையில் ஆழத்தை அளிக்கின்றன என்பது சிறிதளவு இலக்கிய ரசனை இருந்தால்கூட அறிய முடியும்.

கீதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் ‘கொலை’ என்பதை இப்பின்னணியில் ஒரு கவித்துவ உருவகமாகவே கொள்ள முடியும். ஆகவேதான் அகிம்சையை முன்வைத்த காந்திக்கும் வினோபாவேக்கும் அந்நூல் வழிகாட்டியாக ஆனது. கீதை சொல்லும் கொலை உண்மையில் என்ன என்பதைப்பற்றி எல்லா கீதை உரைகளிலும் மீண்டும் மீண்டும் பேசபட்டுள்ளது. சுவாமி சித்பவானந்தரின் கீதை உரையில் ‘கொலை நூலா?’ என்ற தலைப்பில் ஒரு கிளைத்தலைப்பே உள்ளது. அவற்றை விடுவோம். கீதையிலேயே மீண்டும் மீண்டும் ‘செயல்’ [கர்மம்] என்றே அர்ச்சுனனிடம் சொல்லப்படுகிறது. பொதுவாக மானுடன் செய்யவேண்டிய செயல் என்பதையே அக்கவித்துவச் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப ‘போர் புரிதல்’ என்று அது சொல்கிறது என்பதை அறிய கீதையை சாதாரணமாகப் புரட்டிப்பார்த்தாலே போதும்.

மேலும் மானுடன் தன் வாழ்வில் ஆற்றியாகவேண்டிய பல்லாயிரம் செயல்களில் இந்த விவாதத்துக்கு குறியீடாகப் போர் எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பது இரண்டு காரணங்களினால் என்பதை பொதுப்புத்தியினாலேயே உணரமுடியும். போர் ஒரு மனிதனின் உச்சமும் சாரமும் வெளிப்படும் தருணம். கோழைத்தனமோ வீரமோ. மகாபாரதமும், ராமாயணமும், புறநாநூறும், இலியட்டும், ஒடிஸியும் போரை பற்றி பேசுவது இதனாலேயே. போர் என்ற செயலின் விளைவுகள் உடனடியானவை. தீவிரமானவை. வாழ்வா சாவா என்ற தளத்தைச்சேர்ந்தவை. ஆகவே அது ஒட்டுமொத்தமாக செயலாற்றுதலின் குறியீடாக ஆக ஏற்றது.

இரண்டாவதாக போர் என்பதே குறியீட்டு அளவில் முடிவற்ற வாழ்க்கைப்போராட்டத்தின் குறியீடு. உலகின் எல்லா மொழியிலும் வாழ்க்கைப் போராட்டம் இந்த ஜனநாயக யுகத்தில்கூட போர் சார்ந்த தனிச்சொற்களாலேயே குறிப்பிடப்படுகிறது. கீதையை படிக்கும் ஒருவன் செயல் என்று அது குறிப்பிடுவது எந்தெந்த தளங்களில் விரிவுகொண்டு அதன் தரிசனத்தை விளக்குகிறது என்பதை தெளிவாகவே காணமுடியும். அது ஒரு வாசகன் தன் அனுபவங்களை முன்வைத்து சிந்தித்து அறியவேண்டிய ஒன்றாகும்.

கீதை ஏன் செயலாற்றுதலை முக்கியப்படுத்தவேண்டும்?

கீதை செயலாற்றுவதை முன்வைப்பதாக உள்ளமைக்கு ஒரு விரிவான தத்துவப் பின்புலம் உள்ளது. அது முத்தத்துவ அமைப்பில் இறுதியானது என்றேன். பிற தத்துவங்களான உபநிடதங்களும் சரி, பிரம்ம சூத்திரமும் சரி வேதாந்தத்தை முன்வைப்பவை. வேதாந்தம் உயர்தத்துவத்தின் சிறப்புண்மையை முன்வைப்பது. ஒட்டுமொத்தமாகப் பிரபஞ்ச இயக்கத்தின் சாரம் நோக்கி கண்திறக்கும் உயர்தத்துவம் எதுவானாலும் அது உடனடியாக நம்மில் நிகழ்த்தும் விளைவு அன்றாட உலகியல் வாழ்வின் சவால்களில் போட்டிகளில் அவநம்பிக்கையை உருவாக்குவதேயாகும். ஆகவே உண்மையை சிறப்புண்மை, பொதுஉண்மை என இரண்டாகப் பிரிப்பது அவசியமாகிறது. உண்மையில் ஆதி உபநிடதங்களில் இப்பிரிவினை தெளிவாக நிகழ்த்தப்படவில்லை. அதைச் செய்தவர்கள் பெளத்தர்கள். குறிப்பாக நாகார்ச்சுனர். விசேஷசத்யம், சாமான்யசத்யம் அல்லது வியவகாரிக சத்யம் பரமார்த்திக சத்யம் என இது குறிப்பிடப்படுகிறது.

இதை இன்று விளக்குவது எளிது, காரணம் நவீன இயற்பியல் இதை சாதாரணமான தகவலாக இன்று மாற்றியுள்ளது. பொருள் என்பது உயர்பெளதிக தளத்தில் என்ன அர்த்தம் கொள்கிறதோ அவ்வர்த்தமல்ல அன்றாட வழக்கில். முதலில் உள்ளது சிறப்புண்மை. இரண்டாவது பொது உண்மை. நாகார்ச்சுனர் சொல்லும் சூன்யம் என்பது சிறப்புண்மை. அவரால் சுவடியில் எழுத்தாணி வைத்தே எழுதமுடியும் மூச்சுக்காற்றால் எழுத முடியாது என்பது பொது உண்மை. கீதை பெளத்தத்துக்கு பிறகு உருவானது. பெளத்தம் ஆதிவேதாந்தத்துக்கு அளித்த சவால்களை எதிர்கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகர முயன்றது அது.

நாம் தத்துவசிந்தனை இல்லாதவர்கள் என்றாலும்கூட சிறப்புண்மையின் கீற்றை நம் வாழ்வில் அவ்வப்போது அறியத்தான் செய்கிறோம். மரணங்களில், ஆழ்ந்த தனிமையில், ஏன் சிலசமயம் இசைகேட்கும்போதுகூட. கும்பகோணம் விபத்து நிகழ்ந்தபிறகு ஒரு வாசகர் எனக்கு ஒரு மிக நீண்ட கடிதம் அனுப்பியிருந்தார். வாழ்க்கை குறித்தும் கடவுள் குறித்தும் அவருக்கு இருந்த எல்லா நம்பிக்கைகளும் நொறுங்கி ஆழமான அவநம்பிக்கை ஒன்றை அவர் அறிந்த நேரம் அது. ஈழப்பிரச்சினை சார்ந்து அப்படி ‘ஒன்டுக்கும் ஒரு அர்த்தமும் இல்லை ‘ என்று எனக்கு மனமுடைந்து எழுதியவர்களின் பெரிய பட்டியல் உள்ளது. நான் அவர்களிடம் சொல்வது ஒன்றுதான். “நீங்கள் உணரும் அர்த்தமின்மை எளிய உலகியல் தளத்தில் நீங்கள் உருவாக்கியுள்ள விதிகள் மற்றும் காரண காரிய ஒழுங்குகள் ஆகியவை சிதறுவதன்மூலம் தெரியவரும் அர்த்தமின்மையே. அதற்குமேல் இன்னொரு பெருவிதியும் பேரொழுங்கும் ஏன் இருக்கக் கூடாது? அதை நீங்கள் உணர்ந்தால் அதன் அடிப்படையில் இவ்வுலகியல் தளத்தை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியுமா?” பொதுவாக நான் நூல்களை சிபாரிசு செய்வதில்லை, செய்தால் கீதையையே குறிப்பிடுவேன்.

நான் நாவல் எழுதுகிறேன். அதை ஒரு சாதனையாக எண்ணுகிறேன். அதை பிறர் பாராட்டுகையில் மகிழ்கிறேன். அதில் மேலும் வெற்றிகளுக்கு திட்டமிட்டு முயல்கிறேன். பெரும் கனவுகளுடன் என் உதிரத்தை ஆவியாக்கி உழைக்கிறேன். ஆனால் ஒரு கணம் விலகி இப்பிரபஞ்சப் பெருவெளியை, அதன் ஒரு கொப்புளத்துளியான பூமியை, அதில் குமுறும் உயிர்வாழ்க்கையை, அதன் பிரக்ஞை என்னும் பெரும் பிரவாகத்தை காண்பேன் என்றால் என் செயல் அபத்தமாக, மாயையாகவே தெரியும். அதன் பிறகு நான் எதுவுமே எழுத இயலாது. இந்த உத்வேகம் இல்லாமலாகும். இதுவே உயர்தத்துவ நோக்கு எப்போதும் நிகழ்த்தும் மனநிலையாகும்.

வேதாந்தத்தில் இருந்த முக்கியமான விடுதல் அது உயர்தத்துவ நோக்கை மட்டுமே முன்வைக்கிறது என்பதே. ‘பிரக்ஞையே பிரம்மம்’, ‘நானே பிரம்மம் ‘, ‘இவையெல்லாமே இறைவடிவங்களே’ போன்ற அதன் அடிப்படைத்தரிசனங்கள் ஓர் உச்சநிலைப் பார்வையைச் சார்ந்தவை. அன்றாட உலகியல் வாழ்க்கையில் அவற்றின் இடம் மிகக் குறைவானதேயாகும். மேலே சொன்னபடி பெரும்பாலான உயர்தத்துவ நோக்க்குகளைப்போல அதுவும் செயலின்மைக்குக் கொண்டுசெல்லக் கூடியது. இக்காரணத்தால்தான் வேதாந்தம் தத்துவஞானிகளுக்கு இடையே ஒடுங்கி நிற்கநேர்ந்தது. சமீபகால ஞானியரில் ஜெ கிருஷ்ணமூர்த்தி அத்தகைய ஒரு செயலின்மையை உருவாக்குவார் என்பது என் அவதானிப்பு.

இந்த குறைபாட்டை கீதை களைகிறது. பெளத்தத்திலிருந்து இருவகை உண்மைகள் குறித்த நோக்கை அது பெற்றுக் கொண்டு அவ்விரு உண்மைகளும் ஒன்றை ஒன்று நிரப்பும் முறையை முக்கியப்படுத்துகிறது. ஒரு நுனியில் பிற அனைத்தையுமே அபத்தமாகக் காணும் அளவுக்கு நுட்பமான உயர்தத்துவ தரிசனத்தைக் கொண்டிருக்கிறது அது. மறு நுனியில் அன்றாட வாழ்க்கையின் செயல்பாடுகளை திறம்படச்செய்வதெப்படி என்ற தளத்தில் நிற்கிறது. இரு எல்லைகளையும் அது இணைக்கிறது. அதன் தத்துவார்த்தமான பங்களிப்பே இவ்விணைப்பு தான். உயர்தள தத்துவ தரிசனம் எப்படி உலகியல்வாழ்க்கையை அர்த்தப்படுத்த முடியும் என்ற கோணம் அதில் அழுத்தம் பெறுகிறது. அதேபோல ஒவ்வொரு உலகியல் தருணத்திலும் உயர்தள தத்துவதரிசனம் உள்ளுறைந்திருப்பதை அது காட்டுகிறது. ஆகவேதான் பிரம்மசூத்திரமோ, எந்த ஒரு உபநிஷத்தோ பெறாத முக்கியத்துவத்தை கீதை பெற்றது. கீதை ஒரு வைணவ நூலாக இருந்திருக்கவேண்டும், ஆனால் வேதாந்தநூலாக அறியப்பட்டு பொதுநூலாக முதன்மை பெற்றது.

கீதையின் நாடக அமைப்பும் குறியீடும் இவ்வகையில்தான் முக்கியமானவை. அதைத்தான் முன்பே சொன்னேன். அர்ச்சுனன் உறவினரைக் கொல்வது தவறு என்று உணர்வது அறியாமை அல்ல. உலகியல் நோக்கில் அது ஒரு விவேகம். அவன் சொல்வது ஒரு பொது உண்மை. அதற்கு எதிராக சிறப்புண்மையை முன்வைக்கிறது கீதையின் மையம். இருவகை உண்மைகளின் உரையாடல் அது. உலகியல் உண்மையை முன்வைப்பவனை ஒரு பெருவீரனாக காட்டுவது கவித்துவமானது மட்டுமல்ல கீதை உருவான காலகட்டத்தின் விழுமியத்துக்கு ஏற்றதுமாகும். அதில் “செயலாற்றுக ! செயலாற்றுக ! ” என்று ஊக்கும் பார்த்தசாரதி ஒரு செயலையும் ஆற்றுவதில்லை, செயலாற்றுபவனின் ரதத்தை ஓட்டுவதைத்தவிர. இதுதான் கீதையின் குறியீட்டமைப்பு. சிறப்புண்மையை அறியும்போது தான் அத்தளத்தில் மட்டும்தான் பொது உண்மை உண்மையல்லாததாக ஆகிறது.

செயலூக்கம் கொண்ட உயர்தத்துவ நோக்கை முன்வைத்த காரணத்தினால்தான் பதினெட்டாம் நூறாண்டு இந்துமறுமலர்ச்சியின்போது கீதை பிற நூல்களைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் பெற்றது என்பதுதான் உண்மை. செயலூக்கம் கொண்ட நவீன வேதாந்தத்தின் நூலாக அது மாறியது. நவீன வேதாந்திகளான விவேகானந்தர், நாராயணகுரு, தாகூர், நடராஜ குரு போன்றவர்கள் அந்நூலை முக்கியமானதாக எண்ணியமைக்குக் காரணம் அதுவே. திலகர், காந்தி, வினோபா போன்ற அரசியல் செயல்வீரர்களுக்கு அது வழிகாட்டியாகியது. வேதாந்தத்தின் மாயாவாதத்தை கண்டித்து நிராகரிக்கும் பாரதி கீதைக்கு உரை எழுதினான் என்பது புரிந்துகொள்ளக் கூடியதேயாகும்.

எனக்கு கீதை எப்படி வழிகாட்டியது?

ஒரு பேரிழப்பின் முன் கையாலாகதவனாக நிற்கையில் உயர்தத்துவம் அளிக்கும் பிரபஞ்ச தரிசனம் எத்தகைய ஆறுதல் அளிக்கும் என என் வாழ்க்கையை முன்வைத்து நான் சொல்ல முடியும். என் பெற்றோரின் மரணம் அளித்த மாபெரும் வெறுமையில் இருந்து வேதாந்தம் வழியாகவே மீண்டேன். வேறு எந்நூலும் அந்த ஊக்கத்தை அளிக்கவில்லை. அதே தரிசனம் அன்றாடவாழ்வில் ஊக்கமில்லாமல் ஒதுங்கவும் செய்யும் என்பதையும் நான்காண்டுகால சொந்த அனுபவத்திலிருந்து நான் சொல்ல முடியும்.

அவ்வுயர்தத்துவ தளத்திலிருந்து செயலை நோக்கும்போது உருவாகும் சமநிலை செயலை மேலும் உக்கிரமாகச் செய்யத்தூண்டும் என்பதை கீதை எனக்குச் சொன்னது. சுய உடைவின் எல்லையிலிருந்து மீட்டு என்னை ஆக்கபூர்வமான தளத்துக்குக் கொண்டு வந்தது கீதையே. செயலில் குன்றாத ஆற்றலை எனக்கு அதுவே அளித்தது. நான் கீதையைப்பற்றிச் சொல்வதென்றால் அது மருந்தை உண்டு பயன் கண்டவன் அம்மருந்து குறித்து சொல்வது போன்றதே. குன்றாத செயலூக்கம் பற்றி பேசும் தகுதி கொண்டவர்களில் நானும் ஒருவன் என்பதை அதிகம்பேர் மறுக்கமாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.

கீதை நான் செல்லும் பயணத்தில் ஒரு முக்கியமான வழிகாட்டிப்பலகை. எல்லா நூல்களும் வழிகாட்டிப்பலகைகளே. அவற்றையெல்லாம் பெயர்த்தெடுத்துக் கொண்டு நான் நடக்கமாட்டேன். நான் சென்றுசேரும் இடத்தில் வழிகாட்டிகளும் பாதைகளும் இருக்காது. காரணம் அங்கு திசைகளே இருக்காது.

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் 2004

முந்தைய கட்டுரைகாடு – ஒரு வாசிப்பும் மறு வாசிப்பும்- கலைச்செல்வி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-23