ஜெ,
இந்த கதை ‘சீசனிலேயே’ எனக்குப்பிடித்த கதை ‘வெறும்முள்’ . அறம் வரிசைக் கதைகளில் ஒரு ஒருமை இருந்தது. மயில்கழுத்து மட்டும்தான் கொஞ்சம் வேறுபட்டு நின்ற கதை. அவை எல்லாமே ஒரேபோன்று உணர்ச்சிகரமான, நேரடியான கதைகள். ஆனால் இந்த வரிசைக்கதைகளில் உள்ள ‘வெரைட்டி’ என்னை வியக்க வைக்கிறது. ஒவ்வொருகதையும் ஒவ்வொரு வகை. நிலம் போன்ற எளிமையான கட்டமைப்புள்ள கதை ஒருபக்கம். அம்மையப்பம் போல சிக்கலான குறியீடுகள் கொண்ட கதைகள் இன்னொரு பக்கம். கலைடாஸ்கோப் சுழன்றுகொண்டே இருக்கிறது.
வெறும்முள் எங்கெங்கோ கொண்டுசெல்கிறது. ஏழெட்டுமுறை வாசித்தபிறகுதான் இந்தக்கடிதத்தை எழுதுகிறேன். நான் இனியும்கூட இந்தக்கதையை உள்வாங்கிக்கொள்ளவில்லையோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. கிறித்தவர்கள் இன்னும்கூட நுட்பமாக இந்தக்கதையை உள்வாங்கமுடியும் என்று நினைக்கிறேன்
ஏசுகிறிஸ்துவின் தலைமீது மனிதர்கள் சூட்டிய முள்முடி செசபான் முள்ளால் ஆனது. மனிதர்களின் அகங்காரம் மற்றும் அறியாமையின் முள் அது.
இவற்றை அவர்கள் ஃபில்ஃபிலீ என்கிறார்கள். வெறும்முள் என்று இதற்கு அர்த்தம் என்றான் ஒரு மொழிபெயர்ப்பாளன். அபிசீனியர்களின் கனத்த மொழியில் அது பெரிய வசை. அகங்காரம் மட்டுமே கொண்ட சாரமற்ற மனிதனைச் சுட்டும் சொல் அது. வசந்தத்தில் இந்த முட்செடி புன்னகை செய்கிறது. ஆனாலும் எச்சரிக்கையாக இலைகளுக்குள் முட்களை நிரப்பிவைத்திருக்கிறது. அது வஞ்சகச்செடி என்கிறார்கள் சமாரியர்கள். அதன் பசுமை கவர்ந்திழுக்கிறது. அதை நோக்கிச்செல்லும் கழுதை சற்று கவனக்குறைவாக இருந்தாலும் வாயை ரணமாக்கிக்கொள்ளும். அதில் உடைமாட்டிக்கொண்ட வழிப்போக்கன் இன்னொருவர் உதவாமல் விடுபடமுடியாது.
என்று நேரடியாகவே கதை அதன் மையத்தைச் சுட்டிவிடுகிறது. விதவிதமான வெறும் முட்களைச் சுமந்துகொண்டிருக்கும் மனிதர்களைக் கதாபாத்திரமாக அறிமுகம் செய்கிறது கதை. அழகி என்ற அகங்காரம் ரெபெக்காவுக்கு. கலைஞன் என்ற அகங்காரம் தாமஸுக்கு. செழியனுக்கோ தத்துவஞானி என்ற அகங்காரம்
அந்த முட்களுடன் அவர்கள் கிறிஸ்துவை நோக்கிச்செல்லவே முடியாது. களங்கமற்ற குழந்தையைக் கண்டதும் பிற மூன்று ஞானிகளும் மண்டியிடுகிறார்கள். ஆனால் செழியனால் மண்டியிடமுடியவில்லை.
‘ஏன்?
‘ஏனென்றால் நான் அவன்முன் மண்டியிடவில்லை’
என்ற அற்புதமான paradox மூலம் கதையின் அகம் சொல்லப்பட்டுவிட்டது. அவனைப்பார்த்தாலும் மண்டியிட முடியாது போன அகங்காரத்தால் மறைக்கப்பட்டு அவனை தரிசிக்காமல் போய்விட்டான் செழியன். [சந்தேகமில்லை அவன் முக்கடல்சங்கமத்திலிருந்துதான் வந்திருக்கமுடியும் )))]
முட்களில் சிக்கி செழியன் நின்றுவிட தன்னுடைய பெரும் பாவச்சுமையை உதறிவிட்டு முட்களை கிழித்துத்தாண்டி ஏசுவை அடைகிறான் ஐசக்.ஐசக் என்ற பேருக்கு அராமிக் மொழியில் ‘இறுதிப்புன்னகைக்கு உரியவன்’ என்று பொருள்.கடைசிவரை கானானை விட்டு வெளியேறாமலிருந்த ஐசக்கை உறுதியான நம்பிக்கையின் குறியீடாகக் கொள்கிறார்கள் கிறித்தவர்கள்
ஆனால் தாமஸ் அப்படியல்ல. அவன் கிறித்துவை சந்தேகப்பட்டவன். ஆகவே சந்தேகத்தாமஸ் என்று அழைக்கப்பட்டான். சஞ்சலம் மற்றும் துரோகத்தின் அடையாளமாக கொள்ளப்படுபவள் ரெபெக்கா. எல்லாப் பெயர்களும் கவனித்துப் போடப்பட்டிருக்கின்றன
ஐசக் கிறிஸ்துவை நோக்கிச்செல்லும்போது உடல்முழுக்க ரத்ததுடன் புதியதாகப்பிறந்தவன்போலத்தான் செல்கிறான். அவன் கிறிஸ்துவில் மறுபிறப்பு எடுக்கிறான் என்று தோன்றுகிறது. கூடவே ‘எனக்குப்பின்னால் வரக்கூடியவன் ரத்தத்தால் ஞானஸ்நானம் அளிப்பான்’ என்ற யோவானின் வரிகளும் நினைவுக்கு வருகின்றன.
பலமுறை நீங்கள் எழுதிய கதைதான். ஞானமும் மெய்ஞானமும் முரண்படக்கூடிய புள்ளி. ஞானத்தின் உச்சியிலே அகங்காரத்தைக் கொஞ்சம் கழற்றிவைக்காவிட்டால் அதுவே பெரிய சுமையாக ஆகிவிடும். ஈராறுகால்கொண்டெழும் புரவியின் கதையும் இதுதான். இந்தக்கதை அதே கேள்விகளைக் கிறிஸ்துவின் சன்னிதானத்திலே எழுப்பிக்கொள்கிறது.
கதைமுழுக்க வழிந்துகொண்டே இருக்கும் யாயின் மதுவும் சுழன்றடிக்கும் புழுதிக்காற்றும் ஒரு பெரிய மயக்கத்தை அளிக்கின்றன. புழுதிக்காற்று அன்றாடவாழ்க்கை. யாயின் அதை மறைக்க மனிதன் கொள்ளும் மாயைகள். யாயின் விழுந்து மூடாவிட்டால் பாலைவனம்போல மனமும் புழுதி பறக்க ஆரம்பித்துவிடுகிறது
கழுதைமேல் ஏறிச்செல்லும் கிறிஸ்து அழியாத ஓர் ஓவியம். அவரது பாதங்கள் மட்டுமே தெரிகின்றன. அதுவே போதும். அழமான மலர்ப்பாதங்கள் அல்ல, புழுதிபடிந்த காய்த்துப்போன பாட்டாளியின் பாதங்கள் அவை
சண்முகம்
அன்புள்ள சண்முகம்
நன்றி
இந்த வரிசைக்கதைகளில் மிகக்குறைவாக வாசிக்கப்பட்ட கதை இதுதான்.
அ.முத்துலிங்கம் ஒரு கடிதம்போட்டிருந்தார். பூனாவிலிருந்து காட்சன் தொலைபேசியில் அழைத்துச்சொன்னார். சிறில் அலெக்ஸ் மற்றும் உங்கள் எதிர்வினைகளுக்காகக் காத்திருந்தேன்
ஜெ
எங்கெங்கோ பறந்து போகும் ஒரு கனவுப் பறவை திடீரென்று நினைவு வந்து
கீழிறங்கியது போலிருந்தது. காட்சி வெளி மிக அன்னியோநியமாய் உணர்ந்தேன்.
ஜெ, இக்கதையின் சிறுகதை சாத்தியத்தை மறுத்து ஒரு பெரிய
நாவலாக்கியிருந்தால் இன்னொரு காடு நமக்குக் கிடைத்திருக்கும்.
பாலா
அன்புள்ள பாலா
நாவலையும் கதையையும் நாம் தீர்மானிக்கமுடியாது. அவை தீர்மானிக்கவேண்டும். இது சிறுகதைதான். ஏனென்றால் இது முடிந்தபின் வாசகர் மேலேசெல்லும் திசை, திறப்பு, ஒன்று மட்டுமே
ஜெ