வெண்கடல் – கடிதங்கள்

ஆசிரியருக்கு,

வணக்கம். வெண்கடல் அற்புதமான கதை. கண் கலங்க வைக்கும் கதை. ஆணுலகம் பெண்ணுக்கு வரையறை சொல்லும் பொழுது, குழந்தையால் தாயின் கடைக்கண் எங்கு செல்லும் என சொல்ல முடிகிறது. வளரும் பொழுது எங்கோ இழந்து விடுகிறோம். அம்மா என்பவள் அன்பொன்றாலே நிறைந்தவள் என சொல்லியது. ஆண் புத்திசாலி ஆகிறான், காதலிக்கின்றான், உழைக்கின்றான், ஆனால் அம்மா ஆவதே இல்லை. அவள் கடைக்கண் அன்பை கண்டுகொள்ளும் வல்லமை வேண்டியதன் அவசியம் இந்தக் கதையில் உண்டு.

நாவால் வருடும் காளி, எந்த வேளையிலும் பிள்ளைக்கு உணவு நீட்டும் பெரியம்மா, பெற்ற மகளின் துன்பத்திலும் பேரப் பிள்ளையை நேசிக்கும் கிழவி, கடும் பிணியிலும் பிள்ளையைக் கண்டு கண்ணொளிருந்து பின் அட்டைக்கும் இரக்கம் தரும் பெண், பிள்ளை தின்னும் சின்னம்மையும் , பிள்ளை ஏந்தும் பெரியம்மையாகவும் இருக்கும் பகவதி கோவில் என வருடிச் செல்லும் கதை.

அன்புடன்,
நிர்மல்

அன்புள்ள நிர்மல்,

ஒரு கணத்தை பிடிக்க முயல்கையில் அதனுடன் இணைந்த எல்லாமே சேர்ந்து கைக்கு வரும் நிகழ்வுதான் இப்படிமங்கள்.

ஜெ

அன்புள்ள ஜெமோ,

வெண்கடல் சமீபத்தில் உங்கள் கதைகளுக்கு வந்த சிறந்த தலைப்புகளில் ஒன்று. முன்பு வந்த தலைப்புகளில் மயில்கழுத்து எனக்குப்பிடித்த தலைப்பு. எளிமையான, உணர்ச்சிகரமான ஒரு தருணமாக மட்டுமே நின்றிருக்கவேண்டிய கதை உங்கள் நுணுக்கமான சித்திரங்களால் பெரிய ஒரு ஓவியம்போல விரிந்துவிட்டது. அந்த அன்னையை நீங்கள் கருப்புநிறப்பெண்ணாகவே காட்டுவீர்கள் என நினைத்தேன். உங்களால் வெள்ளைநிறமான ஒரு அம்மாவை கற்பனை செய்ய முடியாது இல்லையா? ஆகவேதான் எருமைகள். எருமையின் கண்களுடன் அந்தப் பெண்ணின் கண்ணை ஒப்பிடும் இடம். எருமை மடியில் தொட்டதுமே பால் சொரியும் கருணை. கதை விரிந்துகொண்டே செல்கிறது. கருமைக்குள் நிறைந்திருக்கும் பாற்கடல்தான் கதை. கடல் முலைகள் வழியாக மட்டுமல்ல கைவிரல்கள் வழியாகவும் கண்கள் வழியாகவும் உதடுகள் வழியாகவும் பொழிந்துகொண்டே இருக்கிறது.

வாழ்த்துக்கள் ஜெ, இந்த நாளை அழகாக ஆக்கிவிட்டீர்கள்.

சிவராம்

அன்புள்ள சிவராம்,

ஆம், என்னைப் பொறுத்தவரை இது எழுதிமுடியாத ஒரு கதைதான்.

ஜெ

அன்புள்ள ஜெ,

வெண்கடல் மிகச்சிறப்பான கதை. வாசிக்கவாசிக்க தீராத கதை. அந்தத் தைலம் காய்ந்து பொங்கி உருவாகி வருவதுபோலவே கதையும் மெல்ல உருவாகி வந்தது.

அம்மா பிள்ளைக்குக் கடைக்கண் கொடுப்பதில்லை. முழுப்பார்வையும் அதற்குத்தான். மொத்த பிரபஞ்ச சிருஷ்டியையும் கடைக்கண்ணால் நிகழ்த்துகிறாள்.

நன்றி

சண்முகம்

அன்புள்ள சண்முகம்,

இந்தக்கதை எழுதியதுமே உங்கள் கடிதத்தை எதிர்பார்த்திருந்தேன்.

நன்றி

ஜெ

முந்தைய கட்டுரைஇலங்கைத் தமிழரும் மாணவர்களும்
அடுத்த கட்டுரைமுதுமை-கடிதங்கள்