அம்மையப்பம், நிம்மதி – கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

கோவையில் பேசும்போது கல்பற்றா சொன்னார், “கவிதையில் ஒரு wit இருக்கவேண்டும்”

இதைக் கேட்ட பிறகு வாசிப்பவற்றில் எல்லாம் ‘wit’ ஐ தேடிக்கொண்டிருக்கிறேன்.

அவரது ‘நிம்மதி’யை வாசித்த போது, படைப்பில் உள்ள ‘wit’ ஐ ரசித்துக் கொண்டிருக்கும்போதே காலடியில் உலகம் நழுவி நம் நிம்மதியை தொலைக்கும் கணங்களே கவிதைக் கணங்கள் என்று கண்டுகொண்டேன்.

என்ன மாதிரியான ஒரு கவிதை!! புன்னகைக்க வைத்து சாகடிக்கும் ஒரு கவிஞன் !!


ஸ்ரீனிவாசன்

அன்புள்ள ஸ்ரீனிவாசன்,

கல்பற்றா நாராயணனின் இக்கவிதை, நுணுக்கமான புதுக்கவிதை, இவ்வருடத்திய பிளஸ் டூ மலையாளம் கேள்வித்தாளில் ஒரு கேள்வியாக உள்ளது. சிலபஸில் இல்லை. மாணவர்கள் புரிந்துகொண்டு எழுதுவதற்கான கேள்வி.

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

அம்மையப்பம் சிறுகதை படித்தேன். ஒரு மகத்தான சிறுகதை என்பதைத்தாண்டி வாசிப்பிற்கான ஒரு பயிற்சியாகவும் இதை கொள்ளமுடியும். முதல் முறை படித்தபொழுது இத்தனை ஆழமாக இது உள்ளே செல்லவில்லை. வாசகர்களின் கடிதங்கள் அதிலிருந்த சில நான் கவனிக்காத படிமங்களைக் காட்டிசென்றது. மீண்டும் படித்ததில் அவை எல்லாம் பிடிகிடைத்தன. இன்னும் எத்தனை எங்கள் யாருக்கும் பிடிபடாததாக இருக்கிறதோ? இந்த உடனடி எதிர்வினைகள் புதிய வாசகர்களுக்கு ஒரு பட்டறை போல அமைவது உங்கள் தளத்தின் சிறந்த அம்சம். இதை 10 வருடங்களுக்கு முன் யோசித்துப் பார்த்திருந்திருக்க முடியுமா? இல்லை மரபான நூல்கள் அல்லது இதழ்கள் வழிதான் இது நடந்திருக்குமா?

பொருளாதார வெற்றி மட்டும் அடைய ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களின் நடுவில் தன் வாழ்வை தொலைத்து, கலையை மறைத்து இவர்கள் படும் பாடுகள் தாண்டி இந்தக் கதையில் இரு விஷயங்கள் என்னைக் கவர்ந்தன.

ஒன்று கலைஞனின் ஞானச் செருக்கு. அது ஒன்றுதான் அவனை புற வாழ்க்கையின் சிறுமைகள் தாண்டி, சிரமங்கள் தாண்டி அவனை வாழவைத்துக்கொண்டு இருக்கும் உயிர் நாடி போலும். நீங்கள் போடும் இந்த உணவு பிச்சை இல்லை, பிச்சை போட்டதாக எண்ணி புண்ணியம் தேடவேண்டாம். இது கூலி தான் என்று உணர்த்தத் தவிக்கும் மனம் அந்த ஞானச் செருக்கின் குழந்தைதானே? அப்போது கூட ‘சும்மா கூலி வாங்குதது ஆசாரி தர்மமில்லை’ என்று அதையும் கூலியாகத்தான் பார்க்கிறார்.

இரண்டு, அவன் ஞானத்தின் மீதான மற்றவர்களின் பயம். அப்பா வீட்டைவிட்டுக் கிளம்பும் போது மொத்த வீடே அவராக மட்டுமே இருக்கும். அவரை கிளப்புவதற்காகவே மொத்த வீடும் இயங்கும். வீட்டு நாய்கூட வாசற்படியில் குந்தி அமர்ந்திருக்கும். ஆனால் அவருக்கு கிறுக்கன் ஆசாரியைக் கண்டு பயம். தன்னைத் திட்டியது பற்றி அப்பொழுதே ஒன்றும் கேட்க முடியவில்லை அவரால். ஆசாரி வீட்டிற்கு சோறு கேட்டு வந்தபொழுதுதான் கேட்கமுடிந்தது!

ஆசாரி திட்டியது உண்மை என்பது அவருக்குத் தெரிகிறது. ’எல்லாம் உள்ளுக்குள்ள இருக்கப்பட்டதுதான்.’ என்று ஆசாரி சொல்லும் போது, அப்பாவால் ஒன்னும் சொல்ல முடியவில்லை. ‘’மனுஷனுக்குள்ள ஏளு பிசாசுண்டுண்ணுல்லா கதை?’ என்ற இரண்டாம் பாகத்தை நகைச்சுவையாக்கி தப்பித்துக்கொள்கிறார். திட்டியது என்னவென்றோ, அது உண்மையா என்றோ தெரியாவிட்டாலும், அந்த நிமிடம் ஆசாரி அப்பாவின் மனசாட்சியாய் நிற்பது தெரிகிறது. கலைஞனின் ஒரு முக்கிய கடமையல்லவா அது? (உங்களின் நிறைய எழுத்துக்கள் கூட அப்படித்தான்).

பின்ன ஆசாரியில்லா, வித்தைக்காரனுல்லாண்ணு நானும் ஒண்ணு பொறுத்தேன்…’ என்று தங்கம்மை சொல்லும்போது அவள் பயம் தெரிகிறது. கலை மீதான சாமானியனின் பக்தி அது. இதை நான் ஊரில் சாதாரணமாக பார்க்க முடியும். பெண்கள் வெகு சுலபமாக ஒரு கலைஞனை கலைஞசனாக ஏற்றுக் கொண்டுவிடுகிறார்கள். ஆண்களின் கௌரவம் அதை ஒத்துக்கொள்ள தடுக்கிறது.

அம்மாவுக்கு ஆசாரி மீது மதிப்பும், பாசமும்தான். அம்மாக்களுக்கு மற்றவர் முகம் வழி தெரிவதெல்லாம் அவர்களின் வயிறுதான் போலும். வருடங்கள் முன்பு விட்டுச்சென்ற அவர் மனைவிகூட வீட்டில் வைத்து சோறுதான் போடுகிறார்.

அருமையான இந்தக் கதைக்கு மீண்டுமொரு நன்றி.

அன்புடன்,
கெளதம்

அன்புள்ள கௌதம்,

ஆசாரி செய்வது ஏணி. இவ்வுலகில் ஏணிதான் எல்லாமே, இல்லையா? அதன் இரு கோடுகளை இணைப்பதுதான் அவரது சவாலே.

ஜெ

முந்தைய கட்டுரைஉலகின் மிகப்பெரிய வாழைப்பழம்
அடுத்த கட்டுரைகோணம் அரசு பொறியியல் கல்லூரி நிகழ்ச்சி-படங்கள்