ஃபைல்கள்

நீங்கள் அரசுப்பணியில் குமாஸ்தாவாக நுழைந்து கையெழுத்திட்டு முடிந்ததும் பேனாவை பையில் செருகிப் பாவமாக நிற்க அதிகாரி ”இந்த ஃபைல்களையெல்லாம் எடுத்திட்டுபோய் படிச்சுப்பாருங்க” என்றார். நீங்கள் சுற்றுமுற்றும் பார்க்கிறீர்கள். அப்படி எதுவும் கண்ணில் படுவதில்லை. ”என்ன? ஃபைல் சார்?” அதிகாரி புன்னகை செய்து ”இதெல்லாம் ஃபைல்தான்” என்றார்

நீங்கள் அதற்குமுன் சினிமாக்களில்தான் ஃபைல்களைப் பார்த்தது. ”மிஸ்டர் ராஜா, நீங்க கண்டுபிடிக்கவேண்டிய அந்த இண்டர்நேஷனல் குற்றவாளியோட எல்லா டீட்டெயிலும் இந்த ஃபைலிலே இருக்கு” என்று மேஜர் சுந்தரராஜன் சொல்லி ஒரு அழகான அட்டைமடிப்பை நீட்டுவார். இவையோ நான்குபக்கமும் சுருண்டுகொண்டு நிறம் மங்கிய காகிதங்கள் மர்மமான ஏதோ காரணத்தால் ஒன்றாக இணைந்திருப்பதாகத் தெரிகின்றன.

அதன்பின்னர் சீனியர் உங்களுக்கு ஃபைல் என்றால் என்ன என்று சொல்லித் தருகிறார். அரசாங்கத்தில் ஃபைல்கள் ஆங்கிலேயர் காலம்முதல் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. காகிதங்களை இரு அட்டைக்குள் உள்ள ஒரு முள்கயிற்றில் கோர்த்துப் போடுவதே கோப்பு எனப்படுகிறது .காகிதங்கள் தொலைந்துபோகாமலிருக்கவே அவை சேர்த்துக் கட்டப்படுகின்றன. பழைய கதை நினைவிருக்கலாம், சாகக்கிடந்த தந்தை தனயர்களுக்கு சொன்னது. தனித்தனிச் சுள்ளிகளை உடைப்பது எளிது. சேர்த்துக்கட்டினால் எவராலும் உடைக்கவே முடியாது. கோர்த்துப் போடப்பட்ட காகிதம் தனியாகத் தொலையாது.

அரசாங்கத்தைப் பொறுத்தவரை காகிதம் தொலைந்தால் ரகளைதான், பைல் தொலைந்தால் அது நடைமுறை. ஃபைல்கள் இரு பகுதிகளாக ஆனவை. ஒருபகுதி வலதுகைப்பக்கம் எல்லாக் காகிதங்களையும் கோர்த்து உப்பிக் கொண்டே இருக்கும். இடக்கைப்பக்கம் உள்ள தாள்களில் வலப்பக்கம் கோர்க்கப்பட்ட காகிதங்களின் எண்ணும் குறிப்பும் இருக்கும். அவற்றைப் பார்த்த அதிகாரியின் கையெழுத்தும் மற்ற குறிப்புகளும் இங்கே பொறிக்கப்படும்.

ஒரு ஃபைலின் முக்கியமான இன்னொரு அம்சம் அதன் பெயர். அந்த பைல் எந்தத் துறையைச் சேர்ந்தது, எந்த விஷயம் சார்ந்தது, எந்த வருடத்தையது, எந்த எண் கொண்டது ஆகிய நான்குபகுதிகளின் இணைப்பே பெயராகும். அப்பெயர் நடைமுறையில் சுருக்கப்பட்டு ‘ஈ’ என்றும் ‘டீ’ என்றும் அழைக்கப்படுவதைப் புதிதாக வருபவர்கள் கண்டு குழம்புவது தினமும் பழந்தின்று கொட்டையை வீட்டுக்குக் கொண்டு சென்றபடியே இருக்கும் சீனியர்களுக்கு இன்பமளிப்பது. “ஏயில போய் டீய வாங்கி ஈய போட்டுட்டு வா!”

எந்தக் காகிதத்தை எந்த ஃபைலில் போடவேண்டும் என்ற பிரித்தறிவே ஓர் இளம் குமாஸ்தாவின் முதல் திறன் ஆகும். மாற்றிப்போட்டுவிட்டாலும் உரிய குறிப்புகளுடன் அதை சரிசெய்தல் பணிமுதிர்வு கொள்வதன் அடையாளம். குறிப்புகளைத் தவறாக எழுதினாலும் சாரத்தை நினைவில் வைத்திருத்தல் பணிமூப்பரின் இயல்பு. எங்கே எதைப்போட்டாலும் இந்தியாவுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை என்று உணரும்போது நாம் ஓய்வுபெறும் நிலையை அடைகிறோம்.

ஓர் அலுவலகம் என்பது ஃபைல்களை நகர்த்துவதற்கான ஓர் அமைப்பு. ஆனால் நல்ல அலுவலகம் ஃபைல்கள் நகராமலேயே வேலைசெய்யும். ஃபைல்கள் வைரஸ் போல தன்பெருக்கித்தனம் மிக்கவை. ஓர் அலுவலகத்தில் பத்து ஃபைல்கள் இருந்தால் அந்தப் பத்து பைல்களைப் பற்றிய இன்னொரு ஃபைலை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. பத்து ஃபைல்களின் பெயர் உள்ளடக்கம் மற்ற விவரங்களை அவற்றில் தெளிவாகப் பதிந்து வைத்தால் ஃபைல்கள் தொலைந்துபோகும் போது எந்த ஃபைல் தொலைந்து போயிற்று என எளிதில் கண்டுபிடிக்கலாம். அப்போதுதான் தொலைந்துபோன ஃபைல்கள் பற்றித் தனியாக ஒரு ஃபைல் திறக்க முடியும்.

அலுவலகம் என்றால் அதற்கு மேல் அலுவலகமும் கீழ் அலுவலகமும் கண்டிப்பாக இருக்கும். ஆகமேலே இருக்கும் அலுவலகமும் ஆகக்கீழே இருக்கும் அலுவலகமும் அலுவலகங்களே அல்ல. கீழிருந்து அறிக்கைகளைப் பெற்று மேலே அறிக்கைகளை அனுப்புவதையும் மேலிருந்து வரும் அறிவிக்கைகளைக் கீழலுவலகத்துக்கு மறித்தனுப்புவதையும் ஓர் அலுவலகத்தின் சுவாசம் எனலாம்.கீழிருந்து கிடைக்கும அறிக்கைகளை ஒன்றாக்குவதும் மேலிருந்து கிடைக்கும் அறிக்கைகளைப் பலவாக்குதலும் நுரையீரலின் பணிகள். மார்ச் மாதம் அலுவலகங்களுக்கு ஆஸ்துமா ஏற்படுவது வழக்கம்.

மேல் அலுவலகங்கள் கீழ் அலுவலகங்கள் மேல் வேறுவகை வாயுக்களை உமிழ்வதும் உண்டு. ஃபைல்களில் குறிப்பெழுதுவது குமாஸ்தாக்களாலும் குட்டிஅதிகாரிகளினாலும் ஆரம்பகாலத்தில் மிக விருப்புடன் செய்யப்படுகிறது. அழகிய கையெழுத்துடனும் தேர்ந்தெடுத்த சொல்லாட்சிகளுடனும் துணிந்தவரென்றால் மேற்கோள்களுடனும் இவை எழுதப்பட்டு வரலாறாகப் புதைக்கப்படுகின்றன. காலம்செல்லச் செல்ல எதிர்வீட்டுக் கன்னிக்கு காதல்கடிதம் எழுதி நம் சட்டைப்பையிலேயே வைத்திருப்பது போல நாம் மட்டுமே அறிந்து நமக்குநாமே புன்னகை செய்யும் ஓர் இன்பம் அது என்று அறிய நேர்கிறது. அனுபவமுள்ள குமாஸ்தாக்களின் குறிப்புகள் ஒருவகை அடையாளங்கள் போல. அவை என்னவென எல்லாருக்கும் தெரியுமென்றாலும் யாராலும் படிக்க இயலாது.

ஃபைல்களின் கடிதங்களை இந்தியாவில் பிரிட்டிஷ் ஆங்கிலத்திலேயே எழுதுகிறார்கள் என்பது ஓர் ஆய்வாளரின் கண்டுபிடிப்பு.”தங்கள் மேலான கவனத்துக்கும் அதன்பிரகாரமான உரிய நடவடிக்கைக்குமாக உரியமுறையில் தொகுக்கபப்ட்ட தகவல்களுடன் முன்வைக்கப்படும் அதிகாரபூர்வமான பரிந்துரையை இக்கடிதத்துடன் இணைத்தனுப்புவதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்பது போன்ற நடையில் பழைய பிரிட்டிஷ் மிடுக்கு இருக்கத்தான் செய்கிறது. நான்கு வரிக்கு ஒருமுறை ஒருசொல்லை மட்டும் படித்துச் சென்று ஒரு கடிதத்தை சற்றும் பிழையில்லமால் புரிந்துகொள்ள முடியும் என்றால் மட்டும்தான் அது பிரிட்டிஷ் ஆங்கிலமாகும்.

ஆனால் நாம் பிரிட்டிஷார் மீது மானசீகமான அடிமைத்தனத்துடன் இருக்கிறோம் என்பது பொய். அவை உண்மையில் பிரிட்டிஷாராலேயே எழுதப்பட்டவை. கடிதங்களை முந்தைய கடிதங்களை நோக்கி அப்படியே பிரதி எடுப்பதே அலுவலக மரபு. பிரிட்டிஷார் பிரிட்டிஷ் ஆங்கிலம் எழுதாமல் வேறு என்ன எழுதுவார்கள்? தொன்மையான அலுவலகங்களில் நூறாண்டு கண்ட எழுத்துப்பிழைகள் உள்ளன என்றும் அவற்றுக்கு விழாவே எடுக்கலாமென்றும் சொல்லப்படுகிறது. ஓர் அலுவலகத்தில் புழக்கத்திலிருந்த விடுப்புச் சிபாரிசான ‘Relieve with prostitute’ என்ற சொல்லாட்சி இப்படிப்பட்ட ஒரு பிழையாகவே இருக்க வேண்டும்.

ஃபைல்மொழி என்பது ஒரு அரசாங்கமறியும் ஒரு தனி மொழி. நேரடியாகச் சொல்லும் ஒரு சொற்றொடர் வளைந்த பொருள் கொள்வதும் வளைந்த சொற்றொடர் நேர்பொருள் பெறுவதும் இத்தளத்தின் இயல்பாகும். ‘டிஸ்மிஸ்’ என்றால் சுருக்கமாகச் சொல்லமுடியுமா என்று பாருங்கள் என்றும் இந்த கருத்துப்பரிமாற்றம் உசிதமான நிறைவை நெருங்கிவிட்டதாக இதனால் தெரியப்படுத்தப்படுகிறது என்பது ‘பொத்திட்டுப் போ’ என்றும் பொருள்படுகிறது.

ஃபைல்களின் சிறப்பியல்பு என்ன என்றால் ஃபைல்கள் அதிகரிக்கும்தோறும் அவை மேலும் அதிக ஃபைல்களுக்கான தேவையை உருவாக்குகின்றன என்பதே. அத்தனை ஃபைல்களையும் பட்டியல் இட்டு, அட்டவணையிட்டு, அவற்றின் போக்குவரவுகளைக் குறித்துவைக்க ஃபைல்கள் தேவை என்பதே காரணம். அப்படிக் குறித்துவைத்த ஃபைல்கள் அதிகரிக்கும்போது அவற்றைப்பற்றியும் அதேபோல ஃபைல் தேவையாகிறது.

மேலும் ஃபைல்களின் இன்மை என்பதும் ஒரு ஃபைலே என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தொலைந்துபோன ஃபைல் பற்றிய கடிதங்கள், விசாரணைகள், விளக்கங்கள், மறு விளக்கங்கள், நிராகரிப்புகள், மேல்நடவடிக்கைகள், முறையீடுகள்,மேல்முறையீடுகள் சிபாரிசுகள், எச்சரிக்கைகள், தண்டனைகள்– இவை ஒவ்வொன்றுக்கு நடுவிலும் குறைந்தது நான்கு நினைவூட்டல்கள்– ஆகியவை அடங்கிய ஃபைல்கள் பெரும்பாலும் முந்தைய ஃபைலை விடப் பெரிதாக அமைவதுடன் பல்கிப்பெருகுவதும் வழக்கமாகும்.

பழைய ஃபைல்கள் பொதுவாக அழிக்கப்படுவதில்லை. அவை டிரேயில் இருந்து பீரோவுக்கும் பீரோவிலிருந்து உள்ளறைக்கும் அங்கிருந்து குடோனுக்கும் செல்கின்றன. இவற்றை முறையே ஓர் அலுவலகத்தின் மேல்மனம், ஆழ்மனம், நனவிலி என்று சொல்லலாம். மூன்றும் ஒன்றின் வேறுவடிவங்களே. எநத நடவடிக்கையும் முந்தைய உதாரணத்தைப் பின்பற்றியே அமைய வேண்டுமென்பது அரசு விதி என்பதனால் இவை எப்போதும் தேவையாகலாம். முன்னுதாரணம் கிடைக்கும்வரை நடவடிக்கை ஒத்திப்போடப்படுவது வழக்கம். பலமாதத் தேடலுக்குப் பின்னர் அதேபோல ஒத்திபோடப்பட்ட முன்னுதாரணம் கண்டடையப்படுகிறது.

அரசுக் கடிதங்கள் எப்போதும் மூன்று பிரதிகள் கொண்டவை. தன்மை, முன்னிலை, படர்க்கை. ஒரு பிரதி தனக்கு. இன்னொரு பிரதி அனுப்பப்படுபவருக்கு. மூன்றாம் பிரதி கண்டும் காணாமலும் எங்குமுள பரம்பொருளுக்கு. எல்லாக் கடிதங்களையும் கார்பன்தாள் வைத்துப் பிரதியெடுப்பது அரசு வழக்கம். கார்பன்தாளைப் பலநூறுமுறை பயன்படுத்துவதும் அதன்பின் அடுத்த மேஜை குமாஸ்தா தூக்கிப் போட்ட பழைய கார்பன்தாளை வாங்கி எழுதுவதும் வழக்கமேயாகும். ஒருமுறை முதலிரு பிரதிகளும் அனுப்பப்பட்டு எஞ்சிய அலுவலகப் பிரதியில் ஒரு குறிப்பைச் சேர்க்க அதிகாரி சொன்னதும் அதற்கும் இரண்டு கார்பன்தாள் வைத்து எழுத முற்பட்ட ஒரு குமாஸ்தா அதற்காக அரசுவிருதைப் பெற்றார் என்பார்கள்.

பின்னர் ‘காகிதமில்லா நிர்வாகம்’ வந்தது. அலுவலகங்களில் கணிப்பொறி வந்தமர்ந்தது. எல்லா ஃபைல்களையும் கடும் ஓவர்டைம் செய்து கணிப்பொறியில் ஏற்றியதுமே காகித ஃபைல்கள் கடினமாயின. கணிப்பொறி ஃபைல்கள் மெல்லியலாளாயின. சக்தி இல்லையேல் சிவம் இல்லை. ஆகவே எல்லாக் காகிதமும் கணினியில் உடனே ஏற்றப்பட்டது. ஆனால் சக்தியை நம்ப முடியாது. எனவே எல்லாக் கணினி ஃபைல்களும் காகிதத்தில் அச்சிடப்பட்டு வன் ஃபைல்களாக ஆக்கப்பபட்டன.

ஃபைல்கள் மும்மடங்கு குவியவே அதைப்பற்றி மேலலுவலக விசாரணை நடைபெற்று அதற்கான ஃபைல்கள் மேலும் குவிந்தன. காகிதமில்லா அலுவலகம் பற்றிய கருத்துக்கள் ஆலோசனைகள் மேலாலோசனைகள் சிபாரிசுகள் பரிந்துரைகள் குறிப்புகள் சுற்றறிக்கைகள் எல்லாம் வன்பிரதி செய்யப்பட்டு ஃபைல்களாகத் தொகுக்கப்பட்டன. இப்போக்கு மெல்ல மெல்ல ‘நிர்வாகமில்லாக் காகிதம்’ என்ற நிலையை அடைந்தபோது மேற்கொண்டு என்ன செய்வது என்ற வினா எழுந்து பல்வேறு சிபாரிசுகள் வந்தன.

மிக எளிய வழிமுறையாக ஒட்டுமொத்தமாகக் கொளுத்திவிடலாமென்று சொல்லப்பட்டாலும் அதற்கு தீப்பெட்டி மண்எண்ணை வாங்குவதில் தொடங்கி பலவற்றுக்கும் டெண்டர் விடவேண்டும் என்பதும் கொளுத்தப்பட்ட ஃபைல்களின் பெயர் உள்ளடக்கம் அனைத்தையும் அட்டவணையிட்டு அவற்றைக் கணினியில் ஏற்றி அந்த மென்ஃபைல்களுக்கு வன்ஃபைல்கள் எடுக்க வேண்டும் என்பதும் அவற்றுக்கான புது ஃபைல்கள் திறக்க வேண்டும் என்பதும் கருத்தில் கொள்ளப்பட்டுத் திட்டம் மறுபரிசீலனைக்கு உள்ளாகியதாக சொல்லப்படுகிறது.

ஃபைல்கள் நடுவே நுழையும் நீங்கள் முதலில் அவற்றின் ஒழுங்கையும் முறையையும்கண்டு மகிழ்ந்து அவற்றை சொந்தவாழ்க்கையில்கூட தீவிரமாகச் செயல்படுத்த முயல்கிறீர்கள். பணி சற்று நீண்டபின் ஃபைலிங் என்பது நிகழ்ந்தேயாக வேண்டிய ஓர் இன்றியமையாமை என்று புரிந்து அதிலிருந்து மீள உங்கள் ஆத்மாவால் துடிக்கிறீர்கள். அப்படித் துடிப்பதும் ஓருவகை அன்றாட அலுவலகப் பணியே என்று புரியும்போது அமைதியடைந்து ஃபைல்களை எதிர்கொள்ள சிறந்த வழி என்பது உதாசீனமே என்று உணர்ந்துகொள்கிறீர்கள்.

மேலும் சில ஆண்டுகள் கழிந்து அனிச்சைச்செயல்பாடாக ஆன ஒன்றே முற்றிலும் உதாசீனப்படுத்தப்பட முடியும் என்று உணர்கிறீர்கள். அதற்குப்பின் ஒன்றும் செய்யமுடியாது. குமாஸ்தாவாக ஓய்வுபெற்று இருபது வருடமான சிவகோலப்ப பிள்ளைப் பாட்டா டாக்டரிடம் சென்று ‘Files ஆபரேஷன்’ செய்துகொள்ள முயன்றதே இதற்கு ஆதாரமாகும்.

முந்தைய கட்டுரைஸ்மிருதிகள் பற்றி மீண்டும்…
அடுத்த கட்டுரைஅந்த முந்நூறு பேர்