வெறும்முள் [புதிய சிறுகதை]

சமேரியாவில் கோடைகாலத்தில் மது அருந்தாதவர்களை சோம்பேறிகள் என்கிறார்கள். இந்த பித்துப்பிடிக்கவைக்கும் வெயிலையும் அலையலையாகக் கிளம்பும் தூசுப்படலத்தையும் எதிர்கொள்ள ஒரேவழி குளிர்ந்து புளித்து நுரைத்துக் குமட்டச்செய்யும் யாயினை மண்குவளை நிறைய வாங்கி குடலை நிறைத்துக்கொள்வதுதான். அந்த கடும்துவர்ப்பு நாக்கில் குழைகையில் அபிசீனியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட உலர்ந்த மிளகாயை நரநரவென்று கடித்துக்கொண்டு கண்ணீர் மல்கலாம். மெல்ல மெல்ல நம் உடல் குளிர ஆரம்பிக்கிறது. வெப்பத்தில் உலர்ந்து பறந்த எண்ணங்கள் ஈரமாகிப் படிய ஆரம்பிக்கின்றன. அதன்பின் நம்மால் வேலைசெய்ய முடியும். சிந்திக்க முடியும்.

சமேரியாவின் இந்தச்சிறிய ஊருக்கு ஈன் ஷெவா என்று பெயர். ஏழு ஊற்றுக்கள். வரிசையாக அமைந்த ஏழு ஊற்றுகளைச்சுற்றி இந்த ஊர் உருவாகி வந்திருக்கிறது. அந்த ஊற்றுக்களைக் கண்டுபிடித்த அராபியர் இந்த ஊரை அவர்கள் மொழியில் டாப்கா என்று அழைத்தனர். இது புகழ்பெற்ற ஒட்டகப்பாதையின் ஓரத்தில் இருக்கிறது. நூற்றாண்டுகளுக்கு முன்பு சீனாவிலிருந்து பட்டையும் பாப்பிரஸையும் பாரதத்தில் இருந்து மயில்தோகைகளையும் சந்தனத்தையும் சுமந்துகொண்டு துருக்கிக்குச் செல்லும் ஒட்டகக்கூட்டங்கள் இந்த சிறிய பாலைவன ஊற்றுக்களின் அருகேதான் சுமையிறக்கின. அங்கே இரண்டாள் ஆழத்தில் தோண்டப்பட்டுக் கற்கள் அடுக்கிக் கரையிடப்பட்ட ஊற்றுகளுக்குள் எப்போதும் இளஞ்செந்நிறமான தண்ணீர் கலங்கிய ஒற்றைக்கண் போலக் கிடக்கும். கற்படிகளில் இறங்கித் தங்கள் கொப்பரைகளில் நீரை அள்ளி குடித்தபின் ஒட்டகங்களுக்கும் கொடுத்து அருகிலேயே ஓய்வெடுத்தனர் வணிகர்கள் .

உண்மையில் இது யாயின் விற்பதற்காகவே உருவாகிவந்த ஒரு இடம். அராபிய, சீன வணிகர்களுக்கு யாயினை விற்பதற்காகத் தொலைதூரத்தில் ஜுடாயாவில் இருந்து யூத வணிகர்கள் இங்கே வர ஆரம்பித்தார்கள். மெதுவாக இது ஒரு கிராமமாக ஆயிற்று. மதுக்கடைகளாலான கிராமம் இது. மரப்பலகைகளைக் கற்கள் மீது போட்டு உருவாக்கப்பட்ட கரடுமுரடான இருக்கைகளும் ஈச்சைமர ஓலைகளைக் கொண்டு கட்டப்பட்ட தாழ்வானகூரைகளும் கொண்ட சிறிய விடுதிகள். விடுதிகளுக்குப்பின்னால் விடுதிக்காரனின் குடும்பம். பலசமயம் நிறையப்பெண்கள் அங்கே இருப்பார்கள். அவர்களும் புளித்து நுரைக்கும் யாயினைப்போன்றவர்கள். காசுக்கு வாங்கப்படுபவர்கள்.

ஆனால் இன்றுகூட இங்கே யாயினை செய்வதற்கு எவருமில்லை. யாயினுக்கு நல்ல தரமான மாவு தேவை. பார்லியை அரைத்து நீரில் சேர்த்து வருடம் முழுக்க புளிக்கச்செய்து அதை எடுக்கிறார்கள். அதைச்செய்ய தொலைதூரத்துக்கிராமங்களில் அதற்கென்றே வாழும் மக்கள் இருக்கிறார்கள். தலைமுறை தலைமுறையாக அதைச்செய்பவர்கள் அவர்கள். உடைகளில் மூச்சில் சொற்களில் சிந்தனையில் எல்லாம் யாயினின் புளிப்பு கொண்ட மக்கள். அவர்களின் கிராமங்கள்கூட புழுதிபடிந்த பாலைநிலத்திற்குள் எங்கோ புதைக்கப்பட்ட ஊறல்கலங்கள் போல மறைந்துகிடக்கின்றன

அகழ்ந்து எடுக்கப்பட்ட யாயின் மண்வீச்சத்துடன் மரப்பீப்பாய்களில் கொண்டுவரப்படும். கழுதைவண்டிகள் ஏற்றி வரும் புதிய யாயினுக்கு சக்கரவர்த்திகளுக்குரிய வரவேற்பு அளிக்கப்படும். அதன்பின்னால் கின்னார் வாத்தியத்தின் நரம்புகளை சுண்டி கனத்த குரலில் அதன் புகழைப் பாடியபடி நாடோடிக்கவிஞர்கள் வருவார்கள். பெண்களும் சிறுவர்களும் நடனமிடுவார்கள். அந்த வண்டி ஊருக்குள் நுழைந்ததும் உகாவ் குழாய்கள் வானோக்கி எழுந்து பிளிறல் ஒலியுடன் வரவேற்கும். யாயின் பீப்பாயில் எஞ்சும் கன்னங்கரிய அடிமண்டிக் கலங்கல் நாட்கணக்காக சுமை ஏந்தி நடக்கும் ஒட்டகங்களுக்கு சிறந்த மருந்து. அவை சொக்கிச்சரியும் இமைகளுடன் கழுத்துக்களைக் குழைத்து மணலில் சரியும். தூங்கி விழிக்கையில் புதியதாகப் பிறந்தவை போலிருக்கும். யாயினின் வாசனை அவற்றுக்குத்தெரியும். மூத்த தந்தைஒட்டகம் பர்ர் என்று ஒலித்து தன் விருப்பத்தைத் தெரிவிக்கும். அடக்கமான பெண் ஒட்டகங்கள் மணலில் கனத்த குளம்புகளை பொத் பொத் என உதைத்து நாசி கூர்ந்து பிடரியைச் சிலித்துக்கொள்ளும்

சுற்றிலும் செந்நிறத்தூசியே காற்றாகவும் வானாகவும் நிலமாகவும் பரந்துள்ள இந்தப் பாழ்வெளியில் இப்படி ஒர் ஊற்று இருப்பது அதிசமயம்தான். இந்த மண்ணுக்கு அடியில் மிக ரகசியமான ஒரு ஆறு ஓடுகிறது என்று கிழக்கே பனிமலைகளுக்கு அப்பாலிருக்கும் பாரதநாட்டில் இருந்து வந்த ஒரு நீர்நிபுணன் ஒருமுறை சொன்னானாம். அந்த நதிக்கு மேல் செஸபான் மரங்கள் வரிசையாக வளர்ந்திருப்பதை தொலைவில் காற்றிலரித்த மணற்பாறைகளுக்குமேலே நின்று பார்த்தால் பாலைநிலத்தில் விழுந்து கிடக்கும் ஒரு பச்சைத்துவாலை போல தெரியும். செஸபான் மரங்களைத்தான் இப்பகுதிக்கே உரிய தாவரம் என்று சொல்லவேண்டும்.

குட்டையான முள்மரங்கள் அவை. நீரற்ற பச்சை இலைகளும் எதிரும்புதிருமாக வளரும் கிளைகளும் கொண்டவை. வசந்தகாலத்தில் தளிர்விட்டுப் பச்சைக்குவியல்களாக நிற்கும். இலையுதிர்காலத்தில் சுள்ளியை நட்டுவைத்தது போல ஆகிவிடும்.. அக்காலகட்டத்தில்தான் அபிசீனியர்கள் வருவார்கள். அவர்கள் ஒருபோதும் இந்த மரங்கள் பசுமையாக இருந்ததைப் பார்த்திருக்கமாட்டார்கள். இவற்றை அவர்கள் ஃபில்ஃபிலீ என்கிறார்கள். வெறும்முள் என்று இதற்கு அர்த்தம் என்றான் ஒரு மொழிபெயர்ப்பாளன். அபிசீனியர்களின் கனத்த மொழியில் அது பெரிய வசை. அகங்காரம் மட்டுமே கொண்ட சாரமற்ற மனிதனைச் சுட்டும் சொல் அது. வசந்தத்தில் இந்த முட்செடி புன்னகை செய்கிறது. ஆனாலும் எச்சரிக்கையாக இலைகளுக்குள் முட்களை நிரப்பிவைத்திருக்கிறது. அது வஞ்சகச்செடி என்கிறார்கள் சமாரியர்கள். அதன் பசுமை கவர்ந்திழுக்கிறது. அதை நோக்கிச்செல்லும் கழுதை சற்று கவனக்குறைவாக இருந்தாலும் வாயை ரணமாக்கிக்கொள்ளும். அதில் உடைமாட்டிக்கொண்ட வழிப்போக்கன் இன்னொருவர் உதவாமல் விடுபடமுடியாது.

நான் கோடைகாலத்தை விரும்பக்கூடியவன். சமாரியாவின் குளிர்காலம் எனக்கு பிடிப்பதில்லை. என் உடலுக்கு குளிர் அழுக்கான ஈரக்கம்பிளியைக்கொண்டு என்னை அழுத்திச் சுற்றிக்கட்டுவதுபோலிருக்கும். இலையுதிர்காலத்தில் காற்று மண்ணை அள்ளிக் கொட்டிக்கொண்டே இருக்கும். மண்கலக்காமல் ஒரு கோப்பை புளித்தகாடியைக்கூட நாம் குடிக்கமுடியாது. அன்றெல்லாம் இந்த மதுக்கிராமமே காலியாகக் கிடக்கும். பீப்பாயைத் திறக்கவே வணிகர்கள் தயங்குவார்கள். ஒற்றைநாணயங்களுக்காகச் சபலப்பட்டு திறக்கப்பட்ட பீப்பாய்களின் ஆன்மா பூசணம்பூத்து நாறும். ஆனால் வசந்தகாலத்தில் இங்கே பெரிய நெரிசல் இருக்கும். கின்னார் வாசித்தபடி கவிஞர்களும் இளம்வணிகர்களும் வேசிகளும் எங்குபார்த்தாலும் அமர்ந்திருப்பார்கள். கண்மூடித்தனமாகக் குடிப்பார்கள். குழறல்களும் போதைச்சிரிப்புகளும் எங்கும் நுரைத்துக்கொண்டிருக்கும். அப்போது யாயின் விலை அதிகம். என்னைப்போன்ற நாடோடிகளால் அதிகமாகக் குடிக்கமுடியாது.

கோடைகாலம் கூட்டம் குறைவானது. வானமும் பூமியும் கொஞ்சம் தளர்வாக இருக்கும். வழிதவறிப்பெருமூச்சுவிடும் பாலைவனக்காற்றின் ஒலியும் அவ்வப்போது வந்துசெல்லும் ஒட்டகப்பயணிகளின் ஒலியும் மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும். திசைகள் திறந்து, வான்வெளித்து ,வெயில் குடித்துக்கிடக்கும் பாலையை நிதானமாக அமர்ந்து பார்த்தபடி இருக்கலாம். ஒன்றுக்கும் ஒரு அர்த்தமும் இல்லை என்ற எண்ணம், ஒவ்வொரு நாடோடியையும் மனநிறைவிலாழ்த்தும் இனிய சிந்தனை, என் மனதில் நிறையும். ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்று சொல்லிக்கொண்டே இருக்கும் அகம். வெளியே அப்போது ஒரு கின்னார் இசைத்தது என்றால் அக்கணம் வாழ்க்கை முழுமையாகிவிட்டதென்று பொருள்.

வெளியே கிழட்டு தாமஸ் அவனுடைய கின்னாரை மடிமேல் வைத்துக்கொண்டு பீளைபடிந்த கண்கள் மூடியிருக்க நரைத்த தாடி காற்றில் பறக்க அமர்ந்திருக்கிறான். தூக்கம் கனத்து அவன் தலை சரிந்தபோது கை மார்பிலிருந்து இறங்கி கின்னாரின் பன்னிரண்டு தந்திகள்மேல் விழ அது ‘ஆமாமல்லவோ’ என்று முனகியது. ஒருகணம் என் அகம் கல்விழுந்த கிணற்றுநீராகக் குலுங்கியது. நான் கேட்டது என் தாய்மொழியை. நான் இளவயதில் கேட்ட மொழி. முப்பத்திரண்டு ஆண்டுக்காலமாக நான் ஒரு சொல்கூடப் பேசாமல் விட்டுவிட்டமையால் மெல்ல மெல்லப் பின்வாங்கி அவிந்து என் ஆழத்துக்குள் வண்டலாகப் படிந்துவிட்ட மொழி. என் கனவுகள் மட்டுமே அறிந்த மொழி. நான் இன்னொரு கோப்பை யாயினுக்கு ஆணையிட்டேன்.

அதை நான் பாதி முடித்திருக்கையில் கிறுக்கு ஐசக் வீக்கம் மண்டிய கால்களை இழுத்து இழுத்து வந்து மதுக்கடை வாசலில் நின்றான். அவன் உடம்பில் பாலைவனக்காற்று மரங்களில் கொண்டு சுற்றிய கந்தல்சுருள்களைப்போல கிழிந்த உடைகள் இருந்தன. கையில் ஒரு பெரிய துணிமூட்டை. அதற்குள் அவன் கையில்கிடைத்த கந்தல்துணிகளை எல்லாம் எடுத்துச்சேர்த்துக்கொண்டே இருப்பான். பிரம்மாண்டமான மூட்டை அது. அதைச்சுமந்தே அவன் கால்கள் வீங்கிவிட்டன. ஆனால் அவன் அதை கீழே வைப்பதில்லை. தூங்கும்போதுகூட அவன் மடிமீது அது இருக்கும்.

உள்ளிருந்து ரெபெக்கா வேகமாக வந்து ‘நாசமாகப் போ ,அழுக்குப்பிடித்த பிணமே. காலையிலேயே வந்து ஏன் என் உயிரை வாங்குகிறாய்?’ என்றாள். அவளுடைய கோபமும் கையிலிருந்த மரச்சட்டியை அவள் ஓங்கியதும் ஐசக்கை எதுவும் செய்யவில்லை. அவன் அசையாமல் அங்கேயே நின்றிருந்தான். அவனுக்குத் தேவையானவற்றைப் பெறுவது வரை அவனை அங்கிருந்து அகற்றமுடியாது. அவனுடைய கண்கள் பழுப்புநிறமான கூழாங்கற்கள்போலிருந்தன. காலைப்பனியின் மெல்லிய ஈரம் படிந்த கூழாங்கற்கள்.

ரெபெக்கா வேனிற்காலத்தில் எரிச்சலுடனேயே இருப்பாள். என்னென்னவோ வசைபாடினாள். கனத்த தண்ணிரித்தொட்டியுடன் உள்ளே சென்ற அவளுடைய அம்மா ‘அந்தக் கிறுக்கனுக்கு எதையாவது கொடுத்து அனுப்பு. அவன் வாசலில் நின்றால் இங்கே யார் வருவார்கள்?’ என்றாள்.

‘ஆமாம், வருகிறார்கள். நீ சும்மா இருக்கிறாயா? காலையிலிருந்தே ஒரே வாடிக்கையாளன்தான். இந்தக் கிழக்கத்தி நாடோடி ஒருநாள் முழுக்க இருந்து ஒரு செம்புநாணயத்துக்குக் குடிப்பான்…’ என்றாள் ரெபெக்கா. திரும்பி என்னிடம் ’நாடோடி, நீ இந்தக்கோப்பை மதுவை இப்போதே முடித்து கிளம்பிவிடு…உன் உடைகளின் நாற்றம் காரணமாக மற்றவர்கள் இங்கே நுழையமாட்டார்கள்…’ என்றாள்.

நான் ‘…ரெபெக்கா, இந்தா. ஐசக்குக்கும் தாமஸுக்கும் ஒரு கோப்பை யாயின்வீதம் கொடு’ என்றேன்.

ரெபெக்கா அதிர்ச்சியடைந்தவள்போல என்னைப்பார்த்தாள்.

‘உண்மைதான்…இதோ இந்த வெள்ளிநாணயம் உண்மையானது….’ என்றேன். ’இது உன்னிடமிருக்கட்டும். இது முடிவதுவரை கணக்குவைத்துக்கொள்’

அவள் வெடுக்கென்று என்னிடமிருந்து நாணயத்தைப்பிடுங்கிக்கொண்டு உள்ளே சென்றாள். உள்ளே அவள் நாணயத்தைப் பலமுறை திரும்பத்திரும்பப் பார்த்திருப்பாள். இந்த ஊரில் என்னை மந்திரவாதி என்று நினைக்கிறார்கள். இவர்களின் பார்வையில் கிழக்குநாடுகளில் அனைவருமே மந்திரவாதிகள்தான். பறக்கும்கம்பளங்கள், பாம்பாக மாறும் கைத்தடிகள், தீக்கதிராக மாறி எரியும் நாக்குகள். ஒரு கிழக்கத்தியன் தன்னால் பறக்கமுடியாது என்று சொன்னாலே விசித்திரமாகப் பார்க்க ஆரம்பிப்பார்கள் என்று சென்ற முறை வந்த சீன வணிகன் இடுங்கிய கண்களை மேலும் சுருக்கி சிரித்துக்கொண்டு சொன்னான்.

நான் சொன்னதைக் கேட்டவன்போல தாமஸ் உள்ளே வந்தான். இப்போது அவன் வாடிக்கையாளனாகிவிட்டான். மிடுக்குடன் கின்னாரை மரப்பீடம்மேல் வைத்துவிட்டுப் பலகையில் அமர்ந்தான். கைகளை உரசிக்கொண்டு என்னைப்பார்த்துப் புன்னகைசெய்தான். காய்ந்தபுல்போன்ற தாடிக்குள் அவன் பற்கள் கருமையாகத் தெரிந்து மறைந்தன. ஐசக் எதையும் கவனித்ததாகத் தெரியவில்லை

ரெபெக்கா முதலில் ஐசக்குக்குத்தான் மதுகொண்டு கொடுத்தாள். அவன் அதை இரு கைகளாலும் வாங்கிக்கொண்டு பணிவுடன் மண் திண்ணையில் அமர்ந்தான். மிகச்சூடான சூப்பைக் குடிப்பதுபோல உதட்டைக்குவித்துத் துளித்துளியாக உறிஞ்ச ஆரம்பித்தான்.

உள்ளிருந்து ரெபெக்கா ‘இது என்ன மந்திரவாதம் செய்ததற்கான கூலியா?’ என்றாள்

‘இல்லை….நான் குறிசொன்னேன்’

‘யாருக்கு?’

‘ரோமானியப்படைத்தலைவனுக்கு’

‘அதுதானே பார்த்தேன்…இந்தக் கோடையில் இங்கே வெள்ளிநாணயம் வேறு யாரிடமிருக்கிறது?’ என்றாள் ரெபெக்கா

தாமஸ் “என்ன குறி சொன்னாய்?’ என்றான்

‘கெட்டகாலம் வருகிறது….உன்னுடைய அடிமைகள் கட்டுமீறப்போகிறார்கள். புழுதிப்புயல் உன் குதிரைகளைச்சூழ்ந்துகொள்ளப்போகிறது. ஆகவே உன் கடவுள்களுக்கு மேலும் சில கோழிகளைக்கொடு’ என்றபின் உரக்கச்சிரித்து ‘நான் எந்த ஒரு அதிகாரிக்கும் இதே குறியைத்தான் சொல்வது’ என்றேன்.

தாமஸுக்கு மது கொண்டுவரப்பட்டபோது அவன் பிரபுக்களுக்குரிய மிதப்பான பாவனையுடன் அதைப்பார்ப்பதைத் தவிர்த்தான். தீவிரமான முகபாவனையுடன் என்னை நோக்கி ‘இந்தக்கோடையில் தெற்கே பல கிராமங்களில் மரணங்கள் நிகழும் என்கிறார்கள்’ என்றான். ’அபிசீனியாவிலிருந்து சென்றமுறை வந்த சில நோயாளிகள் விசித்திரமான நோய்களை விட்டுச்சென்றிருக்கிறார்கள்…’ பேசியபடியே கவனமில்லாமல் கோப்பையை எடுத்து வாசனைபிடித்து நல்லது எனத் தலையை அசைத்து ‘…உடல்முழுக்க கொப்புளங்கள் வருகின்றன. நோயாளி அதிகபட்சம் நான்குநாளில் இறந்துவிடுகிறான். ஒருவனுக்கு நோய்வந்தால் அந்த இனக்குழுவே அழிகிறது’ என்றான்

நான் ஐசக்கின் குப்பைமூட்டையை சுட்டிக்காட்டி ‘இந்த சமேரியா இதைப்போல ஒரு பெரிய குப்பைக்கூடை’ என்றேன். ‘இது மாபெரும் வணிகப்பாதைகளில் உள்ளது. உலகத்தில் உள்ள எல்லா நோய்களும் இங்கே வந்துசேர்கின்றன. உலகத்தில் உள்ள எல்லா இனங்களும் தங்கள் விந்துவை இங்கே விட்டுச்செல்கின்றன….உலகத்திலுள்ள எல்லா சிந்தனைகளும் இங்கே வந்து விழுகின்றன’

தாமஸ் உரக்கச்சிரித்து ஆழமாக உறிஞ்சிவிட்டு ‘ஆமாம்…உலகிலுள்ள எல்லா நாடுகளிலிருந்தும் இங்கே நாடோடிகள் வந்து சேர்கிறார்கள்’ என்றான்.

இம்முறை உள்வாசலில் நின்ற ரெபெக்கா உரக்கச்சிரித்தாள். ’நீ அவனுக்கு மது வாங்கும்போதே நினைத்தேன்…இன்று நீதான் வாங்கிக்கட்டிக்கொள்ளப்போகிறாய்’

நான் ஐசக்கைப்பார்த்தேன். அவன் பாலைநிலத்தை நோக்கித் திரும்பி அமர்ந்து உறிஞ்சிக்கொண்டிருந்தான். கண்கள் நிலைகுத்தியிருக்க மிக ஆழமாக எதையோ நினைப்பவன்போல இருந்தான். அல்லது அனைத்து நினைப்புகளையும் ஒட்டுமொத்தமாக மறந்துவிட்டவன்போல.

’இதோபார் கிழக்கத்திநாடோடியே, நான் உன்னைப்போல இந்தமண்ணுக்கு அன்னியமானவன் அல்ல.நான் இந்த மண்ணில் பிறந்தவன். என் முன்னோர்கள் இருபதுதலைமுறையாகக் குலப்பாடகர்கள். அவர்கள் ஒவ்வொருவரின் பெயரும் என் நாக்கில் இருக்கிறது.’ தாமஸ் கனத்த கையை முஷ்டிபிடித்துப் பலகைமேல் அழுந்த ஊன்றியபடி சொன்னான்.

‘ஆனால் உன்னுடைய இனக்குழு அழிந்துவிட்டதே…பிறகென்ன?’ என்றாள் ரெபெக்கா

‘ஆம். அவர்கள் அன்னியநாட்டிலிருந்து வந்த நோயில் இறந்தார்கள்…அனேகமாக அந்த நோய் இந்த நாடோடியின் கிழக்குநாட்டிலிருந்து வந்திருக்கலாம்.’ தாமஸ் துப்பினான். யாயினை வேகமாகக் குடித்து உடலைக் கொஞ்சம் உலுக்கித் தொண்டையை காறிக்கொண்டான். ’இனக்குழு அழிந்த குலப்பாடகனின் மனமும் பெரிய குப்பைக்கூடைதான்…’

‘நீ ஏன் வேறுவேலைசெய்யக்கூடாது?’ என்றாள் ரெபெக்கா

‘ஏனென்றால் நான் குலப்பாடகன்’

‘குலப்பாடகன் வேலைசெய்யக்கூடாதா என்ன?’

‘கூடாது….ஏனென்றால் அவன் குலப்பாடகன்’ என்றான் தாமஸ். கடைசி சொட்டை நாவில் விட்டுவிட்டு ரெபெக்காவிடம் ‘கொசுறாக நீ கொஞ்சம் யாயின் தருவதில் தப்பில்லை’ என்றான்

ரெபெக்கா ‘எழுந்து போ’ என்றாள்

‘உனக்கு நான் இந்த கிழக்கத்திய நாடோடியின் கதை என்ன என்று சொல்கிறேன்’

‘யார் இவரா? இவர் ஏதாவது கிழக்கத்தி வணிகர்கூட்டங்களுடன் சேர்ந்து வந்திருப்பார். உடம்புமுடியாமலானபோது அவர்கள் விட்டுச்சென்றிருப்பார்கள்’

‘அதுதான் இல்லை…’ என்றான் தாமஸ் ‘இவர் இன்னும் மூன்றுபேருடன் இந்த சமாரியாவுக்குள் நுழையும்போது நான் பார்த்தேன்’

‘எப்போது?’

‘அப்போது நீ பிறக்கவில்லை. இந்த சமாரியாவிலேயே அதிக பணம்வாங்கும் அழகியாக உன் அம்மா இருந்தாள். முப்பதுவருடம் முன்பு…அதற்குமேலேகூட இருக்கும்’என்றான் தாமஸ் ‘அன்று சமாரியாவிலேயே மிகப்பெரிய வீரனாக இருந்தவன் இந்தக் கிறுக்கு ஐசக்’

‘உண்மையாகவா?’

‘ஆமாம்…அன்று ஐசக் இதைவிட உயரமாக இருந்தான்….கல்தூண் என்று நாங்கள் சொல்வோம். வெறும் கையால் மணல்பாறைகளை அடித்து உடைப்பவன் என்று அறியப்பட்டிருந்தான். எந்நேரமும் இடுப்பில் கனத்தவாளும் தோளில் மீன்வாலால் ஆன சவுக்கும் வைத்திருப்பான். நாகப்பாம்புகளைப் பச்சைகுத்திய அவன் கைகளையும் தோள்களையும் பெண்கள் மிகவும் விரும்பினார்கள். அரசப்படையில் அவன் அன்று நூற்றுக்குடையவனாக இருந்தான்….மாலைநேரங்களில் மதுக்கடைக்கு வந்தானென்றால் அவனைச்சுற்றி ஈ போல பெண்களும் பாடகர்களும் மொய்ப்பார்கள்…அவன் இருக்குமிடமே கொண்டாட்டமாக இருக்கும்’

ரெபெக்கா ஐசக்கைப் பார்த்துவிட்டு ‘பாவம்’ என்றாள்.

‘நான் அவனைப்பற்றித் தனியாக ஒரு கதைப்பாடல் வைத்திருக்கிறேன். அதைப் பிறகு பாடுகிறேன்…இப்போது நான் சொல்லவந்தது இந்த நாடோடியைப்பற்றி…;

‘நீ வாயைமூடுவதென்றால் நான் இன்னொரு கோப்பை மது வாங்கித்தருகிறேன்’ என்றேன்

‘நான் உனக்கு ஒரு கோப்பை மது தருகிறேன்…பேசு’ என்றாள் ரெபெக்கா ‘இவர் எதற்காக இங்கே வந்தார்?’

‘மது’ என்றன் தாமஸ்

‘நீ ஒரு…’ என்று சொல்லவந்த ரெபெக்கா எழுந்துசென்று மதுகொண்டுவந்து ஊற்றினாள். என்னைப்பார்த்துக் கண்ணைச்சிமிட்டினாள் ‘சொல்’

‘..முப்பது வருடம் முன்பு ஒரு பெரிய வதந்தி இந்தப் பாலைநிலத்தில் சுழன்றடித்தது. அதற்குக்காரணம் ஒரு வால்நட்சத்திரம்….’

‘ஆமாம்…அம்மா சொல்லியிருக்கிறாள்…சிவந்த தலைப்பிரட்டைபோல வானிலே தெரிந்ததாம்’

‘நான் முதலில் அதைப்பார்த்தபோது பாலைவனத்தில் தொலைதூரத்தில் நடக்கமுடியாமல் விழுந்துவிட்ட யாரோ சட்டையைக்கழற்றிக் குச்சியில் தொங்கவிட்ட சிவந்த பதாகை என்று நினைத்தேன். அதன் வால் நீளமானது. சிலசமயம் அது இரட்டைவால்குருவியின் வால்போலப் பிளவுண்டு தெரியும். சிலசமயம் மீன்சிறகுபோல…அது நான்குமாதம் வானில் தெரிந்தது. தென்மேற்கேதான் முதலில் அது உதித்தது. பிறகு வடகிழக்கு நோக்கி நகர்ந்துசென்று மறைந்தது….’

‘ஓ..’ என்றாள் ரெபெக்கா. ’அற்புதம்…அதைப்போல ஒன்று மீண்டும் வருமா?’

‘அனேகமாக வரவே வராது என்று வானசாஸ்திரிகள் சொல்கிறார்கள்….அதைப்போல ஒன்றை அவர்கள் அறிந்ததே இல்லை.’ தாமஸ் குடித்தான்

நான் அவனையே பார்த்தேன். இந்த சமாரியர் அந்த வால்நட்சத்திரம்பற்றிய பேச்சை சலிக்காமல் முப்பதுவருடங்களாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எங்கே எந்தப் பாடகன் அதைப்பேச ஆரம்பித்தாலும் வயிறுநிறைய பார்லி கஞ்சியாவது கிடைத்துவிடும். சொல்லிச்சொல்லி அந்த வால்நட்சத்திரம் ஒரு பெரும் புராணமாக ஆகிவிட்டது.

‘ஆனால் அந்த வால்நடத்திரம் பற்றி நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது…ஏழு தீர்க்கதரிசிகள் அதைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள்’ என்றான் தாமஸ் ‘அது ஓர் எச்சரிக்கை, ஓர் அறைகூவல். போருக்குமுன் நாம் வானில் அனுப்பும் எரிபந்தம்போல. இதோ ஆரம்பிக்கிறோம், இனிமேல் பின்வாங்கமாட்டோம் என்பதற்கான அறிவிப்பு’ அவன் கண்கள் பளிச்சிட்டன.

ரெபெக்கா அவன் முன் அமர்ந்து தன் பாவாடையைத் தொடைகளுக்கிடையே திரைத்துக்கொண்டாள். அழகிதான் என்று நினைத்துக்கொண்டேன். அவள் கன்னங்கள் எழுச்சிமிகுதியால் சிவந்து தடிக்க ஆரம்பித்தன. கண்கள் படபடத்தன

‘நூற்றாண்டுகளாக அடிமைகளாகவும் இழிமக்களாகவும் வாழ்ந்தாலும் சமாரியர்களாகிய நாம் உலகின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள். உண்மையான கடவுளைப் பாலைவனத்தில் கண்டுகொண்டவர்கள் நாம். நம்மிடம் மட்டுமே கடவுள் பேசியிருக்கிறார். நம்முடைய ஒற்றுமையின்மையால் நாம் அடிமைப்பட்டோம். இன்று ரோமாபுரியின் கனமான நுகங்களில் நம்மைக் கட்டியிருக்கிறார்கள். காலொடிந்துகிடக்கும் நம்மை சாட்டையால் அடிக்கிறார்கள். நாம் தாகத்துக்கு நமது குருதியையே குடித்துக்கொண்டு பாலைவனத்தின் அனலில் நடந்துகொண்டிருக்கிறோம்’

ரெபெக்கா தலையை அசைத்தாள்

‘நாம் பிரார்த்தனைசெய்தோம்….சிதறிப்போன நம்முடைய இனக்குழுக்கள் இன்று எகிப்திலும் அபிசீனியாவிலும் ரோமானியாவிலும் அடிமைகளாக கைச்சங்கிலிகளுடன் முதுகெலும்பு ஒடிய வேலைசெய்கிறார்கள். சவுக்கடி பட்டும் பட்டினிகிடந்தும் கற்பழிக்கப்பட்டும் சாகிறார்கள். ஆனால் நாம் பிரார்த்தனை செய்தோம். கண்களை மூடிக் கைகளைக் கிழக்கத்தியபாணியில் மார்பின்மேல் சேர்த்து இதயம் ஒரு பெரிய ரத்தத்துளியாக நின்று அதிர பிரார்த்தனை செய்தோம். கண்ணீர் உருகிய ஈயத்துளிகளாக நம் மார்புகளில் விழுந்தது. சொற்கள் உலைவாயின் வெப்பம்போல தகித்தன. நாம் செய்த பிரார்த்தனைகளைத் தூங்கும்குழந்தையின் முகச்சுளிப்பைப்பார்க்கும் தந்தை போல நமது பிதா குனிந்து பார்த்துக்கொண்டிருந்தார். நீண்ட தாடியைமெல்ல உருவியபடி அவர் புன்னகைசெய்தார். அதன்விளைவாகவே அந்த நட்சத்திரம் உதயமாயிற்று’

‘ஓ’ என்றாள் ரெபெக்கா. மார்பை அவள் கை அழுத்திக்கொண்டது. ‘பிதாவே…பிதாவே…நானும் எப்போதும் பிரார்த்தனை செய்வேன்…தெரியுமா?’

‘பிரார்த்தனைசெய்யாத எவரும் இந்த சமேரியாவில் இல்லை’ என்றான் தாமஸ். ‘அதன் விளைவாகத்தான் நமக்கு அந்த நட்சத்திரம் அளிக்கப்பட்டது. ஈரவிறகை நாம் நூற்றாண்டுகளாக ஊதிக்கொண்டிருந்தோம். மெல்ல அது சிவந்து பற்றிக்கொண்டது. அந்த முதற்கனல்தான் அது. இனி விறகு கொழுந்துவிட்டெரியும்….வானைத்தொடும் நெருப்புக்கோபுரமாக ஆகும்…’ ஒரேவீச்சில் எஞ்சிய மதுவையும் குடித்துவிட்டு தாமஸ் சொன்னான் ‘பட்டாக்கத்தி எங்கோ உருவப்பட்டுவிட்டது….’

நான் ‘ரெபெக்கா எனக்கு மேலும் ஒரு கோப்பை’ என்றேன்

‘…முப்பதாண்டுகளுக்கு முன்னால் அந்த வால்நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்து கிழக்கிலிருந்து ஏராளமானவர்கள் வந்தார்கள்’ தாமஸ் சொன்னான் ‘வான சாஸ்திரிகளும் ஞானிகளும். கிழக்கே நெடுந்தூரம்வரை அந்த வால்நட்சத்திரம் தெரிந்ததாம். அங்கிருந்து ஒருலட்சம் ஞானிகள் கிளம்பிவந்தார்கள் என்கிறார்கள். அரேபியாவைத்தாண்டி எதிப்தைத் தாண்டி அவர்களில் சிலர்தான் வந்தார்கள். இருந்தாலும் அன்று இந்த சின்ன ஊரில் எங்குபார்த்தாலும் கிழக்கத்திய முகங்கள் நிறைய தென்பட்டன. வேகாத அப்பம்போல மஞ்சளாக முகம் கொண்டவர்கள். இதோ இவரைப்போல அதிகமாக வெந்த அப்பம்போன்றவர்கள்…’

நான் ரெபெக்கா கொண்டுவந்து வைத்த மதுவைக் குடித்தேன். ஐசக் கடைசிச்சொட்டையும் உறிஞ்சிவிட்டுக் கோப்பையை வைத்தான். தன்னுடைய மூட்டையை மடியில் வைத்துவிட்டு அதன்மேல் கையை ஊன்றிப் பாலைநிலத்தையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்

‘அன்று நான் இந்த அன்னியர்களைப்பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன்’ தாமஸ் சொன்னான் ‘அது கடுங்குளிர்காலம். வடக்கிலிருந்து காற்று வாள்களை வீசிக்கொண்டிருந்தது. இரவுகளில் எவருமே வெளியே வருவதில்லை. நான் அன்று ஒரு கனவுகண்டேன். என்னுடைய மொத்த இனக்குழுவையும் பாலைவனத்தில் ஓர் இடத்தில் புதைத்திருக்கிறார்கள். நான் நடந்துசெல்லும்போது ஒரு கால் என் காலில் இடறியது. குனிந்துபார்த்தால் குட்டிஜானின் கால்கள். நான் அவனைத் தோண்டி எடுத்தேன். ஆச்சரியமென்னவென்றால் அவனுக்கு உயிர் இருந்தது…அவன் என்னிடம் அம்மா இங்கே அருகேதான் இருக்கிறாள் என்றான். நான் அவன் அம்மா மரியாளைத் தோண்டி எடுத்தேன். மணலில் இருந்து வெறிபிடித்தவன்போல அவர்களை எல்லாரையும் தோண்டித்தோண்டி எடுத்துக்கொண்டே இருந்தேன். அப்படியே வியர்த்து நடுங்கியபடி விழித்துக்கொண்டேன்’

‘உனக்கே தெரியும், உயிர்த்தெழுதல் பற்றிய கனவு வந்தால் மரணம் வருகிறதென்பதுதான் பொருள் என்று….எனக்கென்று எவருமில்லை. அப்படியென்றால் அது என் மரணமா என்ன? நான் நடுங்கியபடி ஒரு கோப்பை யாயினுக்காக மதுக்கடைகள் நோக்கி வந்தேன். பின்னிரவானதனால் எல்லாக் கடைகளும் மூடியிருந்தன. என்ன செய்வதென்று அறியாமல் நின்றபோது தொலைதூரத்தில் வரிசையாக விளக்குகள் வருவதைக்கண்டேன். அவற்றின் ஆட்டத்திலிருந்து தெரிந்தது, அவை ஒட்டகத்தின் மீதிருக்கும் விளக்குகள் என. உடனே அவற்றைநோக்கிச்சென்றேன்’ தாமஸ் சொன்னான்

‘அங்கேதான் இவர் இருந்தாரா?’

‘ஆமாம்….அந்தக்குழுவில் நிறையபேர் இருந்தார்கள். மொத்தம் இருபது ஒட்டகங்கள். பதிமூன்று ஒட்டகங்களில் சுமைகள் இருந்தன. நான் அவர்களை அணுகும்போது அவர்கள் சுமைகளை இறக்கி மணலில் கூடாரம்போட ஆரம்பித்திருந்தார்கள். என்னை அவர்கள் திருடன் என நினைத்துவிடக்கூடாதென்று நான் என் கின்னாரை எடுத்து இசைத்துப்பாடியபடியே சென்றேன். கிழக்கத்திக்குறுவாட்கள் குறிதவறாதவை அல்லவா?. அவர்களின் காவலன் தன் நீண்ட மெல்லிய உடைவாளை உருவி நீட்டி என்னிடம் நான் யார் என்று கேட்டான். பளபளப்பான பாம்புபோன்ற வாள். நான் இனக்குழு அழிந்துபோன குலப்பாடகன் என்று சொன்னேன். என்னை சோதனையிட்டபின் அமரச்செய்து கசப்பான கீழ்நாட்டு மதுவும் ரொட்டியும் உலர்ந்த பழங்களும் தந்தார்கள்’

தாமஸ் தொடர்ந்தான் ‘ அங்கே மணலில் விரிக்கப்பட்ட பெரிய கம்பளத்தில் நான்குபேர் அமர்ந்திருந்தார்கள். அந்தக் கம்பளம் வானில் பறக்கக்கூடியது. அதில் எனக்குச் சந்தேகமே இல்லை. அதிலிருந்த மர்மமான மந்திர எழுத்துக்கள் எதற்காக என்று எனக்கு நன்றாகவே தெரியும்….பளபளப்பான நீலநிறக் கம்பளம். அதில் அமர்ந்திருந்த நால்வரும் நான்கு சக்கரவர்த்திகள் போலிருந்தனர். ரெபெக்கா நீ நம்ப மாட்டாய். நான்குபேருமே கிழக்கர்கள். ஆனாலும் நால்வருக்கும் நான்கு நிறம்…நால்வரில் இவர்தான் கருப்பானவர்’

‘இவரா?’ என்றபடி ரெபெக்கா எழுந்துவிட்டாள் ‘இவர் அந்த சக்கரவர்த்திகளில் ஒருவரா?’

‘ஆமாம்…அப்போது இவர் எப்படி இருந்தார்தெரியுமா? பொன்னிறக்கேடயப்பூச்சி போல…இவர்கான் அவர்களில் வயதில் இளையவர். கொம்பு போலக் கூர்மையான கரிய தாடி. வெண்கூழாங்கற்கள் போலப் பற்கள். பெரிய கண்கள். என்னிடம் சமேரிய மொழியிலேயே பேசினார்…’

‘என்ன கேட்டார்?’

‘இங்கே இந்த வால்நட்சத்திரம்பற்றி என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டார். நான் பொதுவாக அனைவரும் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னேன். நம்முடைய ரகசியங்களை ஏன் அன்னியரிடம் சொல்லவேண்டும்? இவர் கோபம் கொண்டு உண்மையைச் சொல்லாவிட்டால் என்னைப் பைத்தியமாக ஆக்கிவிடுவதாக மிரட்டினார். அப்போது அவர்களில் வயதுமுதிர்ந்தவர் இவரைக் கண்டித்துவிட்டு என்னை அருகே அழைத்தார். அவரது நீண்ட தாடி மேகம்போல மார்பில் விழுந்து கிடந்தது. என்னிடம் ‘இங்கே ஏதாவது அற்புதம் நிகழ்ந்திருக்கிறதா?’ என்றார். நான் அவரை மகிழ்விக்கும்பொருட்டு ‘ஆமாம்…நீங்கள் வந்திருக்கிறீர்கள். ஒரு குலப்பாடகனின் வயிறு பூரணமாக நிறைந்திருக்கிறது’ என்றேன். ’இல்லை, இங்கே ஏதாவது அசாதாரண நிகழ்வு உள்ளதா’ என்றார். பின்பு குரலைத்தாழ்த்தி ‘மன்னர்குலத்தில் ஏதாவது பிறப்பு நிகழ்ந்திருக்கிறதா?’ என்றார்.

”நான் அந்தக்கணம் வரை அப்படி யோசித்ததில்லை” என்றான் தாமஸ் ’ஆனால் உடனே எனக்கு எல்லாமே புரிந்துவிட்டது. ஆமாம், கண்டிப்பாக நிகழ்ந்துவிட்டது என்று சொன்னேன். ஆனால் அது யார் என்று என்னால் சொல்லமுடியாது. அந்த வால்நட்சத்திரத்துக்கு அதுதான் அர்த்தம். சிங்கக்குட்டி பிறந்துவிட்டது’ அவர்கள் என்னைப் போகச்சொன்னார்கள். நான் போகவில்லை. சற்றுதள்ளிச்சென்று பாறைமேல் ஏறி அவர்களைக் கண்காணித்தபடி படுத்தேன். ஆனால் கிழக்கத்தியமது மிக வீரியம் மிக்கது. உனக்குத்தான் தெரியுமே…நான் தூங்கிவிட்டேன். காலையில் எழுந்தால் அங்கே அந்தக் கூடாரமோ ஒட்டகங்களோ இருந்ததற்கான தடமே இல்லை. சுவடுகளைக்கூடக் காற்று அழித்துவிட்டது. ஊற்றுக்களின் அருகே ஒரு மெல்லிய பொன்னிறச் சல்லாத்துணி கைவிடப்பட்டுக் கிடந்தது மட்டுமே நான் சொன்னதற்கான ஆதாரம். ஆனால் அதை மக்கள் நம்பவில்லை. ஒரு கோப்பை யாயினுக்குக்கூட அது உதவவில்லை’

‘இவர் போகவில்லையா?’என்றாள் ரெபெக்கா என்னைப் பார்த்துக் கண்ணைச்சிமிட்டியபடி.

‘இல்லை…ஆனால் மேலும் எட்டுவருடம்கழித்துத்தான் நான் இவரைப்பார்த்தேன். ஜாப்பா துறைமுகத்தில் ஒரு மதுக்கடையில் இவர் அமர்ந்துகுடித்துக்கொண்டிருந்தார். கிழிந்த ஆடைகள். அழுக்கடைந்த உடம்பு. பரட்டைத்தலை. ஆனால் கண்களை வைத்து இவரை நான் அடையாளம் கண்டுகொண்டேன்…ஓடிப்போய் நீங்களா என்று கேட்டேன். இவர் என்னை அடையாளம் காணவில்லை…’

‘நீங்கள் திரும்பிப்போகவில்லையா?’ என்றாள் ரெபெக்கா

‘நீ இவன் சொல்லும் கதைகளை நம்புகிறாயா? ஒரு கோப்பை மதுவுக்காக நான் மாறுவேடமிட்டுவந்த சீசர் என்றே இவன் சொல்வான்’ என்றேன்

‘குலப்பாடகன் வாயில் பொய் வருவதில்லை’ என்றான் தாமஸ் ‘ரெபெக்கா கண்ணே நீ அழகி. உன் தொடைகளும் அவற்றின் நடுவே உள்ள அழியாத ஊற்றும் மகத்தானவை. எனக்கு ஒரு கோப்பை யாயின் தரமாட்டாயா?’

‘மண்டையை உடைப்பேன்’ என்று ரெபெக்கா சிரித்தபடி கை ஓங்கினாள். ஆனால் அரைக்கோப்பை யாயினைக் கொண்டுவந்து தாமஸுக்கு ஊற்றினாள். என்னிடம் ‘ஆனால் இவன் சொல்லும் இதை நம்புகிறேன்…நீங்கள் இங்கே ஏழெட்டுமுறைதான் வந்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் வெறும் நாடோடி அல்ல…அதை நான் உறுதியாகவே நினைக்கிறேன்’

‘வெறும்நாடோடிக்கும் மற்ற நாடோடிக்கும் என்ன வேறுபாடு?’

‘மற்றவரிடம் ஒரு நல்ல கதை இருக்கும்’ என்று ரெபெக்கா கிளுகிளுத்தாள்

‘அல்லது புதையல் ரகசியம் இருக்கும்’ என்றான் தாமஸ் குடித்தபடி.

‘சரி, உனக்காக நானும் ஒரு கதை சொல்கிறேன்…என்னுடைய ஊர் எது தெரியுமா?’

‘சொல்லுங்கள்’

‘உன்னால் கற்பனைகூட செய்துபார்க்க முடியாது…இங்கிருந்து கிழக்கே…நெடுந்தொலைவில் பனிமூடிய மலைகளுக்கு அப்பால் ஒரு தேசம் இருக்கிறது. மனித இனத்தின் ஞானம் முழுக்க அங்கே உள்ள மரங்களில் இருந்து விதைகளாகக் கிளம்பிச்சென்றவைதான்…’

‘இண்டஸ்…எனக்குத்தெரியும்…அங்கிருந்து வந்த ஒரு வணிகனுடன் நான் ஒருவாரம் இருந்திருக்கிறேன்…’

‘ஆமாம். அது ஒரு நதி. அதற்குத் தெற்கே இன்னும் பெரிய நதிகள் இருக்கின்றன. மிகப்பெரிய வயல்வெளிகள். பிரம்மாண்டமான நகரங்கள். அங்கே சிலநகரங்களில் வெண்கலத்தால் வீடுகளுக்குக் கூரையிட்டிருக்கிறார்கள். இன்னும் சிலநகரங்களில் வெள்ளியால். சில ஆலயங்களுக்குப் பொன்னாலேயே கூரைவேய்ந்திருக்கிறார்கள்’

ரெபெக்கா வாய்திறந்து பிரமித்துப்போய்ப் பார்த்தாள்

‘தெற்கே செல்லச்செல்ல இன்னும் பெரும் தேசங்களும் நகரங்களும் இருக்கின்றன. தெற்கில் ஒரு நிலத்தின் முனையில் இரண்டுகடல்கள் இரண்டு திசைகளில் இருந்து வந்து சந்திக்கின்றன. அங்கே அலைகள் குதிரைகள்போல முட்டிக்கொள்ளும். ஒருகடல் இளம்பச்சைநிறமானது. இன்னொன்று கனமான பச்சைநிறம் கொண்டது. அந்த ஊரை ஆட்செய்பவர்கள் அதிபுராதனமான ஒரு மன்னர்குடும்பத்தைச்சேர்ந்தவர்கள். மீன்பிடிக்கும் குலத்தின் அதிபர்கள் அவர்கள்.. அந்தக்கடலில்தான் முத்துக்கள் கிடைக்கின்றன’

’நான் பார்த்திருக்கிறேன்…’ என்று ரெபெக்கா எழுந்துவிட்டாள் ’அது மீனின் கண் போலிருக்கும்…கீழைவணிகர்கள் அதை மேற்குநாடுகளுக்கு விற்பதற்காகக் கொண்டுசெல்வார்கள்’

‘ஆமாம்…முத்துக்கள் கிடைக்க ஆரம்பித்ததும்தான் அந்த மீனவர்குலம் செல்வம் ஈட்ட ஆரம்பித்தது. மரக்கலங்கள் கட்டவும் கடலோடி வணிகம்செய்யவும் கற்றுக்கொண்டார்கள். தங்களுக்கென அலைவாய் என அழைக்கப்பட்ட ஒரு மதில்நகரத்தை உருவாக்கிக்கொண்டார்கள். அவர்களின் குலத்தலைவன் அரசனாக ஆனான்….அவர்கள் வெல்லமுடியாத பண்டையர் குலமாக அறியப்பட்டார்கள்…’

ரெபெக்கா ’நீங்கள் அந்தக்குலமா?’ என்றாள்

‘என்று வைத்துக்கொள்…உனக்குத்தேவை கதைதானே? சரி, நான் அந்த அரசகுலத்தில் பிறந்தவன் என்றே வைத்துக்கொள்வோம். என்னுடைய பெயர் செழியன்’

‘திரும்பச்சொல்லுங்கள்’ என்றாள் ரெபெக்கா.

‘செழியன்… ’

‘செஸியா’ என்றாள் அவள்

‘சரி… செஸியா’ என்றேன்.

‘நீங்கள் எதற்காக இங்கே வந்தீர்கள்? இவ்வளவுதூரம் மலைகளையும் பாலைகளையும் தாண்டி?’

நான் சிரித்து ‘அதை உன்னுடைய பாடகனிடம் கேள்…அவனுக்கு அடுத்த பலவருடங்களுக்கு யாயின் கோப்பைகளாக மாறக்கூடிய கதைகளை அதிலிருந்து அவன் உருவாக்குவான்….’

‘சொல்லுங்கள்…’

‘ரெபெக்கா….வேண்டுமென்றால் இப்படி வைத்துக்கொள்… நான் வணிகனாக இங்கே வந்தேன். மொத்தப்பணத்தையும் உன் அம்மாவைப்போன்ற அழகிகளிடம் இழந்துவிட்டதனால் ஊருக்குத்திரும்பிச்செல்லமுடியவில்லை….இதுவும் நல்ல கதைதானே?’

‘நீங்கள் விளையாடுகிறீர்கள்…’

‘ஆமாம்’ என்றேன்

‘நான் கேட்பதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்…நீங்கள் எங்கள் ஜுடாயாவின் சிங்கக்குட்டியைப்பார்த்தீர்களா?’

‘இல்லை’

‘ஓ…’ என்றாள் ரெபெக்கா ஏமாற்றத்துடன் ‘உங்களுடன் வந்த பிறர் அவனைப்பார்த்தார்களா?’

‘ஆமாம்’

ரெபெக்கா மூச்சிழுத்தாள். ‘உங்களை அவர்கள் கூட்டிச்செல்லவில்லையா என்ன?’

‘கூட்டிச்சென்றார்கள்’

‘பிறகென்ன?’

‘உனக்கு எப்படிச்சொல்வது? அவர்கள் அவனருகே சென்று அந்தக்காலடியில் மண்டியிட்டார்கள்’

‘நீங்கள்?’

‘.நான் அவனைப்பார்க்கவில்லை’

‘ஏன்?

‘ஏனென்றால் நான் அவன்முன் மண்டியிடவில்லை’

‘அப்படியென்றால் நீயும் ஒரு தேவன்’ என்றான் தாமஸ் ‘என் தேவனே, எனக்கு இனிய மதுவை அருளுங்கள் ஐயா’

‘எனக்கு நீங்கள் சொல்வது புரியவில்லை’என்றாள் ரெபெக்கா.

‘அது இன்னொரு கதை…. தாமஸின் இன்னொருகோப்பை யாயின்’ என்று கண்ணைச்சிமிட்டினேன்

ரெபெக்கா சோர்வுடன் ‘இந்தமாதிரி சில்லறை மர்மங்கள் வழியாகத்தான் நீங்கள் வாழ்கிறீர்கள்’ என்றாள். ‘இங்கே கயிறுமாயம் செய்யும் ஒரு கிழக்கத்தியன் வந்தான்…ஒரு சின்ன தந்திரம்தான் அது. அதைவைத்து அவனுடைய குலம் ஆயிரம் வருடமாக வாழ்கிறது’

‘சரியாகச்சொன்னாய்’

ரெபெக்கா தாமஸிடம் ‘இப்போதெல்லாம் எவருமே தேவனைப்பற்றிப்பேசுவதே இல்லையே. அந்தக்காலத்தில் கொஞ்சநாள் இதேபேச்சாக இருந்தது என்று அம்மா சொல்லியிருக்கிறாள்’ என்றாள்

‘ஆமாம்…அந்தப் பேச்சு ஏரோதுமன்னனின் காதுகளில் விழுந்தது. அவன் பயந்துபோய் அந்த வருடம் பிறந்த அத்தனை குழந்தைகளையும் கொல்ல ஆணையிட்டான்’

‘ஆமாம்…கேள்விப்பட்டிருக்கிறேன்….என்னுடைய அண்ணன்கூடக் கொல்லப்பட்டான் என்று அம்மா சொன்னாள்’

‘ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டார்கள். படைவீரர்கள் வாளுடன் கிளம்பி வீடுவீடாகச்சென்று குழந்தைகளை எடுத்து வெட்டி வீசினார்கள். முலைகுடித்துக்கொண்டிருந்த குழந்தைகளைத் தாயின் கரங்களில் இருந்து பிடுங்கி வெட்டிவீசியபோது முலைகளில் இருந்து பாலும் கண்களிலிருந்து கண்ணீரும் பீரிட்டன….நான் அதைப்பற்றி எழுபது பாடல்கள் புனைந்திருக்கிறேன்…’

”அய்யோ’ என்றாள் ரெபெக்கா

கொல்லபப்ட்டகுழந்தைகளின் ரத்தம்படிந்த உடைகளைச் சேகரித்து மூட்டைகட்டி கொண்டுபோய் கணக்கதிகாரியிடம் காட்டிப் பணம்பெற்றுக்கொள்வார்கள் வீரர்கள். பணத்துடனும் ரத்தம்படிந்த வாளுடனும் வந்து குடிப்பார்கள். பெண்களைப் புணர்வாகள். எங்களுக்கு நாணயங்களை விட்டெறிந்து பாடச்சொல்வார்கள்…நான் புனைந்த எல்லாப் பாடல்களும் அவர்களுக்காகத்தான். அதைக்கேட்டு அவர்கள் போதையில் கதறிக் குமுறி அழுவார்கள்’

உள்ளிருந்து ரெபெக்காவின் அம்மா ‘அதெல்லாம் இப்போது எதற்கு?’ என்றாள்

‘அவை கவிதைகள்…கவிதைகள்தானே வரலாறு?’

‘பாடாதே’ என்றாள் ரெபெக்காவின் அம்மா

‘பாடாமலிருப்பதற்காக உனக்கு ஒரு கோப்பை யாயின் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது’ என்றேன்

தாமஸ் உக்கிரமான கோபம் கோண்டு ‘வாயைமூடு பன்றியே…நாடோடியாகிய நீயும் நானும் சமமா? நான் ஆயிரமாண்டு வரலாறுள்ள இனக்குழுவின் பாடகன்’

‘ஆனால் அந்த இனக்குழு இப்போது இல்லை’

’அவர்கள் வெட்டுக்கிளிகளைப்போல….பாலைவன மண்ணில் புதைந்து காத்துக்கிடக்கிறார்கள். ஒரு மழைபோதும் அவர்கள் உயிர்த்தெழுவார்கள்…எங்கள் தேவன் ஒருகையில் வாளும் இன்னொருகையில் தீயுமாக செந்நிறப்புரவி மீது வரும்போது விண்ணகம் உடைந்து மழை கொட்டும்…தண்ணீராலான மழை அல்ல…செந்நீராலான மழை.அந்தமழையில் செத்தவர்கள் எல்லாம் விழித்துஎழுவார்கள்…என் கின்னரம் ஓயாமல் பாடும் அப்போது’

‘நல்ல யாயின் காட்டுத்தீ போல… மெல்லமெல்லத்தான் பற்றி ஏறும்’ என்றேன்

‘த்தூ….நாடோடிப்பிச்சைக்காரா…என் முன்னால் நிற்காதே…ஓடு’ என்றான் தாமஸ் ’என் மீட்பர் வந்துகொண்டிருக்கிறார்’

‘ஒருவேளை முப்பதாண்டுகளுக்குமுன்னால் ஏரோது மன்னனின் வாளால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம்’

தாமஸ் திகைத்துவிட்டான். இமைக்காமல் என்னைப்பார்த்தான். தலை ஆடியது. பிறகு சட்டென்று கம்பிளிகிழிபட்டதுபோல ஒரு சத்தம். தாமஸ் குமுறி அழ ஆரம்பித்தான். தாடியில் கண்ணீர் கொட்டியது. கைகளால் அதைத்துடைத்தபடி , மார்புத்துணியைப் பற்றிக்கசக்கியபடி விசும்பி விசும்பி அழுதான்

‘சரிதான்…ரெபெக்கா அவனை இழுத்து வெளியே போடு’ என்றாள் அவள் அம்மா

நான் வெளியே வந்தேன். திண்ணையில் ஐசக் அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தான். நான் சிறுநீர் கழிக்க செஸபான் புதர்கள் நடுவே ஒதுங்கினேன். யாயின் குடித்தால் இதுதான் பிரச்சினை. குந்தி அமர்ந்துகொண்டு ஆடைகளை அவிழ்த்தபோது அப்பால் ஏதோ ஓசை கேட்டது. வணிகர்களா? கோடையில் யாரும் வரமாட்டார்களே?

நான் எழுந்து பார்த்தேன். சாலையில் ஒரு சிறிய கும்பல் சென்றுகொண்டிருந்தது. எல்லாரும் புழுதிபடிந்த நீள அங்கி அணிந்திருந்தனர். ஏழெட்டுபேர் சூழ்ந்துசெல்ல நடுவே ஒருவன் கழுதைமேல் வந்து கொண்டிருந்தான். சூழ்ந்துசென்றவர்கள் ஏதோ பாடிக்கொண்டிருந்தார்கள்

நான் எழுந்தேன். கடைக்குள்ளிருந்து ரெபெக்காவும் தாமஸும் வந்து வாசலில் நின்றார்கள். தாமஸ் உரக்க ‘அவன் தச்சன் மகன்…தன்னை ஒரு போதகன் என்று சொல்லிக்கொள்கிறான். படித்தவன்போலப்பேசுகிறான்’ என்றான்

அவனைப் பார்த்தேன். என் மனம் ஏன் அப்படி படபடக்கிறது என்று என்னால் ஊகிக்கமுடியவில்லை. அவனுடைய நீண்டதலைமுடி தோளில் வழிந்தது. தேன்கூடு போன்ற கன்னங்கரிய தாடி. அங்கி கந்தலாகிக்கிழிந்திருந்தது. அவன் கழுதைமேல் செல்வதுபோலத் தெரியவில்லை, அவன் உடலின் ஒருபகுதி கழுதையாக ஆகிவிட்டதுபோலத் தோன்றியது.

‘மீனவர்களுக்கு மீன்பிடிக்கச் சொல்லித்தந்தான் தச்சன் மகன்!
ஆமாம் தச்சன் மகன் ! ஆமாம் தச்சன் மகன் !ஆமாம் தச்சன் மகன்!
மீனவர்கள் அவனுக்கொரு சிலுவையைச்செய்தார்கள்
ஆமாம் சிலுவையைச்செய்தார்கள் !ஆமாம் சிலுவையைச்செய்தார்கள்!’

தாமஸ் கையைத் தூக்கி உரக்கப்பாடி ஆடினான். ரெபெக்கா சிரித்துக்கொண்டு பார்த்துநின்றாள்.

நான் அவன் கண்களைப்பார்த்தேன். என் கைவிரல்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. அவர்கள் என்னைத்தாண்டிச்சென்றார்கள். கழுதைமேல் இருந்த அவனுடைய கால்கள் தெரிந்தன. வெடித்துப்போன புழுதிபடிந்த கால்கள். நான் சட்டென்று அப்படியே அவனைநோக்கிப் பாய்ந்தோடிச்செல்லும் உக்கிரமான இச்சையை என் உடல் முழுக்க உணர்ந்தேன். என்னையறியாமலேயே முன்னகர்ந்தேன். ஆனால் கூரிய முட்களுடன் செஸபான் முட்புதர் எனக்கு முன்னால் சூழ்ந்து நின்றது. நான் முன்னகர்ந்தபோது இருமுட்கள் என் முழங்கையில் குத்தின. ஒரு முள் என் மேலாடையைப் பற்றிக்கொண்டது.

வேலிக்கு அப்பால் அவர்கள் சென்றபடியே இருந்தார்கள். நான் எரிச்சலுடன் முழங்கையை விலக்கிக்கொண்டேன். முள் குத்திய இடத்தில் குருதியாலான மெல்லிய தீற்றல். அங்கே ஒரு சொட்டு நெருப்பை வைத்ததுபோல எரிந்தது

சட்டென்று ஒரு விசித்திரமான கூச்சலைக்கேட்டேன். திடுக்கிட்டுப் பின்னால் நகர்ந்தேன். ஐசக் என் பின்னாலிருந்து பாய்ந்தோடி வந்து என்னைத்தாண்டி மூர்க்கமான வேகத்துடன் செஸபான் முட்புதர்களில் பாய்ந்து அதை ஊடுருவினான். முட்புதர்களில் சிக்கி ஒருகணம் திகைத்து மீண்டும் ஓர் அலறலுடன் திமிறி பாய்ந்து சாலைப்புழுதியில் விழுந்து எழுந்து கைகளை விரித்துக்கொண்டு கூவியபடியே ஓடினான். அவன் உடைகள் முட்புதர்களில் சிக்கிக்கொள்ள நிர்வாண உடம்பெங்கும் வரிவரியாக முட்கள் கிழித்து குருதிப்பட்டைகள் பிறந்திருந்தன.

நான் எட்டிப்பார்த்தேன். உடம்பெங்கும் ரத்தத்துடன் கருப்பைவிட்டு வெளியே பாய்ந்தோடும் குழந்தைபோல ஐசக் ஓடிக்கொண்டிருந்தான். அவனுடைய மூட்டை ரெபெக்காவின் கடை வாசலில் கிடந்தது

முந்தைய கட்டுரைகுருதி,தீபம்,நீரும் நெருப்பும்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஈழம் -கடிதங்கள்