வாக்களிக்கும் பூமி- 3,பாஸ்டன் நகரம்

 

பாஸ்டன் அமெரிக்காவின் சிந்தனைப்போக்கில் ஆழமான பாதிப்புகளைச் செலுத்திய நகரம். அதற்கான காரணத்தை அதன் தூய்மைவாத பாரம்பரியத்தில் தேடவேண்டும் என்று தோன்றுகிறது.  தூய்மைவாதிகள் பிரிட்டனில் எதிர்ப்பிய [புரட்டஸ்டண்ட்] கிறித்தவ மரபுக்குள் உருவான ஒரு கருத்தியல் தரப்பு. சொல்லப்போனால் பல்வேறு தரப்புகளின் தொகுப்புப்பெற்ற் அது. கிறித்தவ மதத்தில் சடங்குகளாகவும் ஆசாரங்களாகவும் நம்பிக்கைகளாகவும் புகுந்த புறப்பாதிப்புகளை முற்றாக விலக்கி பைபிள் சொல்லும் தூய கிறித்தவத்தை பின்பற்ற விரும்பியவர்கள். அது ஒரு இலட்சியக் கற்பனை மட்டுமே, ஏனென்றால் பைபிளே  யூத கிரேக்க ரோம  மரபுகளில் கலவையான தொகுப்புவடிவம்தான். தூய்மைவாதிகளுக்கு பைபிள் என்பது புதிய ஏற்பாடு மட்டுமே.  சுருங்கச் சொன்னால் தூய்மைவாதிகள் தூயகிறித்தவத்துக்கு திரும்புதல் என்ற பேரில் முன்வைத்தது ஒரு புதிய ஏற்பாடு சார்ந்து ஒரு புதிய கிறித்தவத்தை உருவாக்கிக்கொள்ளும் அவாவையே.

ஆங்கில சபையின் நெருக்கடி தாளாமல் புதிய நிலம் தேடிவந்த தூய்மைவாதிகளின் குடியிருப்புகள் ஆரம்ப காலத்தில் பாஸ்டன் நகரை அமைத்தன.  அவற்றின் மசாசுசெட்ஸ் பே காலனி முதன்மையானது. அவர்களுக்குள் ஆங்கில எதிர்ப்பு எப்போதும் இருந்து வந்திருக்கிறது. பின்னர் அது ஆங்கில மரபை சாராத சுதந்திர சிந்தனைக்கான தேடலாக உருவாகியது. மெல்ல மெல்ல அது அமெரிக்க இலட்சியவாதம் நோக்கி நகர்ந்தது. பிரெஞ்சுப் புரட்சியிலும் ஐரோப்பாவின் பண்பாட்டு மறுமலர்ச்சியிலும் தன் ஊக்கத்தையும் முன்னுதாரணத்தையும் கண்டு கொண்டது. பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு எதிராக பாஸ்டனில் பெரும் கலகங்கள் நடந்திருக்கின்றன. பாஸ்டன் படுகொலை [1770] போன்ற ஒடுக்குமுறை நிகழ்ந்திருக்கிறது.

 

பேரழிவு நினைவகம்

அமெரிக்க சுதந்திரப்போராட்டத்துக்கு வித்திட்டதாக நாம் பாடப்புத்தகங்களில் வாசிக்கும் பாஸ்டன் தேனீர் விருந்து [ 1773] அதில் முக்கியமானது.  பாஸ்டன் துறைமுகத்தில் முகாமிட்டிருந்த கப்பல்களில் புகுந்து தேனீர்பெட்டிகளை தூக்கி கடலில் போட்டார்கள் அமெரிக்க சுதந்திரப்போராளிகள். பாச்டனில் சுதந்திரப்போராளிகளை கூண்டில் அடைத்து மரத்தில் தொங்கவிட்டிருக்கிறார்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள். பாஸ்டனில்தான் அமெரிக்காவுக்கே உரிய சிந்தனையான ஆழ்நிலைவாதம் உருவாகியது. எமர்ஸன், கர்னல் ஆல்காட், தோரோ போன்றவர்கள் பாஸ்டன்வாசிகளே. பாஸ்டன் இன்றும் கல்வியின் நகரம். எம் ஐ டி, ஹார்வார்ட் போன்ற புகழ்மிக்க நகரங்கள் உள்ளன இங்கு.

 

பாஸ்டன் பாலா நான்

பாஸ்டன் போன்ற  ஒரு நகரத்தை கூர்ந்து நோக்கி அறிவதற்கு பலமாதங்கள் அங்கே வாழவேண்டும். என்னுடைய இந்தப்பயணம் அமெரிக்காவை தொட்டுத்தொட்டுச் செல்லும் ஒரு தட்டாரப்பூச்சிப் பறத்தல்தான். இத்தகைய பயணத்தின் எல்லைகள் பல. ஆழமான புரிதல்கள் உருவாக முடியாது. ஆனால் இதற்கும் சில சாதகமான அம்சங்கள் உண்டு. இது உதிரி உதிரியாக ஏராளமான பிம்பங்களால் நம் மனத்தை நிறைக்கிறது. அப்பிம்பங்கள் நாம் பின்னர் வாசிக்கும் இலக்கியம் வரலாறு ஆகியவற்றுடன் இணைந்துகொண்டு மெல்லமெல்ல முழுமை பெறுகின்றன. மேலும் இந்த வகையான உதிரிப் பிம்பங்கள் மூலம் கிடைக்கும் சில வெளிச்சங்கள் ஆய்வுநோக்கில் கிடைப்பதில்லை. இவை ஒரு முற்றிலும் அன்னியப் பார்வைக்கு மட்டுமே கிடைக்கக் கூடியவை.

பாஸ்டன் பாலா நான்

பாஸ்டன் நகரில் நானும் ‘வெட்டிப்பயல்’ பாலாஜியும் பாஸ்டன் பாலாவும்  இளவெயில் விரிந்த காலைமுதல் அலைந்தோம். காரை நகர் நடுவே ஒரு கார்நிறுத்துமிடத்தில் விட்டுவிட்டு காலநடையாகவே சென்றோம். அமெரிக்க நகரங்களில் சாலையோரங்களை சுட்டசெங்கற்களால் அமைத்திருப்பது மிக அழகாக இருந்தது.  உண்மையில் சுட்டசெங்கற்கள் அல்ல, சுண்ணமும் சேர்த்து சுடப்பட்டவையாதலால் அவை கான்கிரீட்  துண்டுகளே. நகர் முழுக்க வெறுந்தரையே இல்லை. ஆனால் மழைநீர் இந்தசெங்கல் இடைவெளி வழியாக உள்ளே இறங்குமென்பதனால் மரங்களுக்கு நீர் கிடைக்கும். பார்வைக்கும் செங்கல்லின் ஆழ்ந்த செம்மண்நிறம்  அழகாக இருக்கிறது.

அமெரிக்க நகரங்கள் முழுக்க நான் கண்ட ஓர் அம்சம் எங்கும் தரை காணக்கிடைப்பதில்லை என்பது. ஒன்று செங்கல் அல்லது கான்கிரீட் தரை. அல்லது சாலை. அல்லது புல்பரப்பு. ஆகவே தூசு என்பதே இல்லை.  இதனால் வீட்டை பரமரிப்பது மிகமிக எளிதாக் உள்ளது. பல நண்பர்களிந் வீடுகள் மிகப்பெரியவை. பல அறைகள் கொண்டவை. அதேசமயம் இங்கே வீட்டுவேலைக்கு ஆள்கிடைப்பதும் கஷ்டம். இந்தியாவிலென்றால் இத்தகைய வீடுகளை கூட்டி துடைத்து வைக்கவே பலபேரின் உழைப்பு தேவையாகும்.

 

<br/><a href=

சிலைமுகம்

இளவெயிலைக் கொண்டாடும் சூழல் எங்கும் இருந்தது. கண்திரும்பும் திசை முழுக்க பெண்களின் திறந்த மேல்மார்புகளின் ததும்பல்கள். நம்பமுடியாத குண்டு உடம்புகள். வெற்றுடலுடன் சிலர் ஓடிக்கோண்டிருந்தார்கள். குளிர்காலத்தில் சேர்த்த கொழுப்பை முழுக்க கோடையில் எரித்தாகவேண்டுமே. சிலர் புல்வெளியில் படுத்து புத்தகம் படித்தார்கள். உடம்பெங்கும் எண்ணை தேய்த்துக்கொண்டு புல்லில் படுத்துக்கிடப்பவர்கள் கறுப்புக்கண்ணாடிக்குள் தூங்கிக்கொண்டிருந்தார்கள். கிரீச்சிடும் சின்னக்குழந்தைகள். குட்டிக் குட்டி நாய்கள். இங்கே நகருக்குள் பெரிய நாய் வளர்ப்பது கஷ்டம் என்பதனால் பெரும்பாலானவர்கள் வீட்டுக்குள் வைத்திருக்கும் குட்டி நாய்களைத்தான் வளர்க்கிறார்கள். அவையும் வெயிலை திளைத்து அனுபவித்துக்கொண்டிருந்தன.

வெட்டிப்பயலுடன்

பாஸ்டன் பூங்கா அருகே இரண்டாம் உலகப்போரின் யூதப்படுகொலைக்கான நினவுச்சின்னம் இருந்தது. ஆறு கண்ணாடி கூண்டுகள். ஆறு நகர்களில் இருந்த விஷ ஆலைகளை நினைவூட்டுபவை. காலுக்கடியில் இருந்து உண்மையாகவே ஏதோ வாயு வருவதைப்போல அமைத்திருந்தார்கள். யூதர்களின் படுகொலைகள் உலக மனசாட்சிக்கு விடப்பட்ட பெரிய வினா.. மானுடம் என்பது என்ன என்பதையே மறு வரையறை செய்தவை  அவை. அதே சமயம் அவை சற்றே மிகைப்படுத்தப்பட்டுவிட்டனவா என்ற ஐயம் எனக்கு இந்நாளில் உள்ளூர உருவாகியிருக்கிறது. ஆயிரக்கணக்கான நாவல்கள் ,திரைப்படங்கள் மூலம் அமெரிக்கா அந்த யூதப்பேரழிவை ஒரு மானுடபிரச்சினையாக நிலைவில் நிலைநாட்டிக்கொண்டே இருக்கிரது. அதைவிடப்பெரிய மானுட அழிவான  நாகசாகி – ஹிரோஷிமா  அணுகுண்டு வீச்சு பேசப்படுவதே இல்லை. இது பேசப்படுவதே அதை மறைப்பதற்காகத்தானா?

சமீபமாகத்தான் டேவிட் இர்விங் போன்ற பேரழ்வு மறுப்பாளளர்களின் வாதங்களை வாசிக்கிறேன்.  ஆனால் யூதப்படுகொலைகள் நிகழ்ந்தன என்பதில் எனக்கு ஐயமில்லை.  அதேசமயம் இப்பேரழிவுகள் இவர்கள் இன்று சொல்லும் அளவுக்கு பேரளவில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டனவா? அல்லது அமெரிக்கா நிகழ்த்திய மானுட அழிவை மறைப்பதற்காக — அமெரிக்கா உலகை காத்தது என்ற வரலாற்றுப் பாடத்தை உருவாக்குவதற்காக- இவை முன்வைக்கப்படுகின்றனவா? அமெரிக்காவில் நாகசாகி ஹிரோஷிமா அழிவு பற்றி பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றதா? பொதுவாக எத்தனை நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன? விஷயம் தெரிந்தவர்கள்தான் சொல்ல வேண்டும்

அந்த விஷவாயு வலைப்பள்ளத்துக்குள் ஆழத்தில் யாரோ ஒருவரின் டிரைவிங் லைசன்ஸ் விழுந்துகிடந்தது. எடுக்க முடியாது. டிரைவிங் லைசன்சை தொலைப்பதென்பது அமெரிக்காவில் தீராத தலைவலிகளை உருவாக்கும் என்றார் பாலா. அந்த ஆள் யூதப்பேரழிவுகளை மறக்கவே முடியாது. 

பாஸ்டனின் நகரப்பூங்காவில் உள்ள வெண்கலச்சிலைகள் அழகாக இருந்தன. பிற ஊடகங்களை விட வெண்கலம் மனித முகத்தின் தசைகளின் நெளிவையும் வளைவையும் அழகாகக் காட்டுகிறது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. பாஸ்டன் நகரின் மேயர் ஒருவர் நடந்துசெல்லும் பாவனையில் இருந்த இரண்டாள் உயரமான சிலையை சுற்றிச் சுற்றிவந்து பார்த்தேன். நடப்பவரின் முதுமை அவரது சாய்வில் தெரிந்தது. கவலையும் பொறுப்பும்  தோய்ந்த முகம். அவரது பெயரை குறித்துக்கொள்ளலாமென எண்ணினேன். ஆனால் சட்டென்று ஒன்று தோன்றியது இந்த தகவல்களை நினைவில் நிறுத்த வேண்டியதில்லை, எனக்கு பிம்பங்களே போதும் என.

 

சிலைமுகம்

பூங்காவில் அமர்ந்திருப்பது போல் இருந்த சிலை ஒன்றின் அருகே இருந்து அதன் கண்களைப் பார்த்தபோது செம்புத்தகடின் களிம்புக்குள் உயிருள்ள ஒருமனிதரின் மெல்லிய தசைச்சூடு தெரிவதுபோல ஒரு பிரமை ஏற்பட்டது. சிலைகளை மிக அண்மையில் கூர்ந்து நோக்கினால் அ¨வையும் நம்மைக் கூர்ந்து நோக்க ஆரம்பித்துவிடும். பாஸ்டனின்  மாகாண சட்டச்சபை  எதிரே  ஓங்கி நின்றது. பெங்களூர் விதான் சௌதா கட்டிடத்தை எப்படியோ நினைவுறுத்தும் கட்டிடம். இவ்வகையான பிரிட்ஷ்ஷ் — அல்லது ஆங்கிலோ சாக்சன் – பாணிக் கட்டிடங்கள் உயரமான உருண்ட தூண்கள் மற்றும் அரைவட்ட கும்மட்டங்கள் கொண்டவை. கிரேக்க நோம கட்டிடக்கலையும் அரேபியக் கட்டிடக்கலையும் கலந்து உருவானவை. இந்திய மனதில் இவை நமக்கு அப்பால் உள்ள, நம்மால் அணுக முடியாத அதிகாரத்தின் சின்னங்கள். அந்த குளிர்ந்த பெரிய தூண்கள் ஒவ்வொன்றும் இறுக்கமான முகங்கள் கொண்ட வெள்ளை அதிகாரிகள்.

எருமை படைவீரர்கள்

அக்கட்டிடத்தின் முன்பு ஒரு கரிய புடைப்புச்சிலை.  அமெரிக்காவில் வடமாநிலங்களில்தான் அடிமைமுறை முதலில் ஒழிக்கப்பட்டது. அடிமைகள் தங்கள் அடிமைவாழ்க்கையை உதறுவதற்கான மிகச்சிறந்த வழியாக இருந்தது ராணுவத்தில் சேர்வதே.  அவர்கள் ‘எருமைவீரர்கள்’ என்று சொல்லப்பட்டார்கள். அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்து முதலில் போருக்குச் சென்ற கருப்பு போர்வீரர்குழு ஒன்றின் நினைவுக்காக வைக்கப்பட்டிருந்த அச்சிலையைப் பார்த்தபோதுதான் பாப் மார்லியின் ‘ப·பலோ சோல்ஜர்’ என்ற பாடலை முழுமையாக உள்வாங்க முடிந்தது. தன்நை அடிமையாக்கிய நாட்டுக்காக போருக்குச் செல்லும் அபத்தம்.

கூட்டம் கூட்டமாக கருப்பின மக்கள் அங்கே நின்று அச்சிலையை வேடிக்கை பார்த்து அவர்களுடைய தடித்த ஆங்கிலத்தில் பேசிக்கொண்டார்கள்.  அமெரிக்க ஆப்ரிக்கர்களில் இரு வகையை நான் கவனித்தேன். மிக உயர்தர உடையை மிகமிகச் சம்பிரதாயமாக அணிந்தவர்கள். பளபளக்கும் சூட், ஷ¥க்கள், தொப்பி. தொப்பிவைத்த மனிதர்கள் பெரும்பாலும் கறுப்பர்கள். இவர்கள் பெரும்பாலும் மொட்டையும் போட்டிருந்தார்கள். இன்னொரு தரப்பு.– இவர்களே பெரும்பான்மை – விசித்திரமாக உடையணிந்து தங்கள் ஆப்ரிக்க முடியை பார்ப்பவரை அதிரவைக்கும்படி அலங்கரித்துக்கொண்டிருந்தார்கள். டிரெட்லாக் என்று இவர்கள் சொல்லும் சடைக்கற்றைகள் பலரில் இருந்தன. சில சடைவிழுதுகள் இடுப்புவரைக்கூட வந்தன. பெண்களின் திரித்திரியாக சுருட்டப்பட்ட முடி மெடுஸாவின் பாம்புக்கூந்தல் போல இருந்தது.

பெரும்பாலான  அமெரிக்கர்கள் டியோடரண்டுகள் அல்லது வாசனைத்திரவியங்கள் பூசியிருந்தார்கள். அவை வெயில்பட்டபோது ஆவிகிளப்பின. எனக்கு வாசனைதிரவியங்கள் எல்லாமே நாசியை சீண்டும். ஆகவே தும்மிக்கொண்டே இருந்தேன். ஒரு பெண் என்னருகே சென்றால் உடனே என் நாசியில் குறுகுறுப்பு ஆரம்பித்துவிடும். கையில் எப்போதும்  காகிதக்கைக்குட்டை வைத்திருக்கவேண்டியிருந்தது.

பாஸ்டனின் தேவாலயங்களை ஒருநாள் முழுக்க சுற்றிப்பார்க்கலாம். தூய்மைவாதிகளிலேயே பல பிரிவுகள் உண்டு. அறிவியல் சார்ந்து கிறித்தவத்தை அணுகுவதாகச் சொல்லிக்கொள்ளும் அறிவியல்கிறித்தவப்பிரிவு அவறில் முக்கியமானது. அவர்களைப்பொருத்தவரை நோயும் துயரமும் படைப்பின் நோக்கம் அல்ல. ஆகவே நோய்க்கும் துயரத்துக்கும் எதிராக நாம் எதுவும் செய்யக்கூடாது. இந்த நம்பிக்கை அறிவியல்பூர்வமானதுஎ ந்று நம்பும் இவர்கள் இதனாலேயே தங்களை அறிவியல்வாத கிறித்தவர்கள் என்கிறார்கள்.  பத்தொன்பதாம் நூற்றாண்டில்   மேரி பேகர் எட்டி என்ற பெண்ணால் உருவாக்கபப்ட்ட சபை இது. இதைப்பற்றி மார்க் டிவைன் செம நக்கல் செய்து எழுதியதை வாசித்திருக்கிறேன்

ஒவ்வொருவரு கிறித்தவ மரபுக்கும் இங்கே அவர்களுக்கான தேவாலயங்கள் உள்ளன. தொன்மையான இரண்டு தேவாலயங்களை மட்டும் பார்க்கலாம் என்று முடிவுசெய்தோம். சேக்ரட் ஹார்ட் சர்ச் அவற்றில் ஆகபெரிது. கோவாவில் உள்ள மாபெரும் தேவாலயங்களை நினைவூட்டும் அகலமான உயரமான தேவாலயம். உயரமான சாளரங்களின் வண்ணக்கண்ணாடிகளில் மைக்கேலாஞ்சலோவின் ஏசுவும் மாதாவும் புனிதர்களும் ஜொலித்தன. மகோகனியால் செய்யபப்ட்ட புராதனமான இருக்கைகள். முழந்தாளிட மெத்தைகள். சிவப்பு தோல் உறைபோட்ட பைபிள்கள்.

 

தேவாலயங்களின் உள்ளே உள்ள பெரிய வெளி காஸ்பல் இ¨சையின் முழக்கத்தையும் நீண்ட சுருள்களையும் நமக்கு நினைவூட்டுகிறது. அங்கே பேசப்படும் எல்லா சொற்களுடனும் எதிரொலியின் முழக்கம் வந்து இணைந்து கொள்கிறது. தேவாலயத்தின் கூரைகள் ஏன் அத்தனை உயரமாக அமைக்கபப்டுகின்ரன என்று பாஸ்டன் பாலா கேட்டார். அவை தலைக்குமேல் வானம் இருக்கும் உணர்வை அளிக்கின்றன. அதன் மூலம் உருவாகும் விடுதலை உணர்வே தேவாலயம் அளிக்கும் முக்கியமான அனுபவம் என்று நான் சொன்னேன்.

சேகரட் கார்ட் சர்ச்

நகர் நடுவே உள்ள டிரினிட்டி தேவாலயம் முக்கியமானது. 1733ல் கட்டப்பட்டது இது. ஊசிக்கோபுரங்கள் தொகுப்பாக உருகி வழிந்த மெழுகுவத்தி போல இருந்தன. செங்கல் கட்டிடம். சிவந்த கட்டிடங்களின் அழகு அவை சாய்வெயிலில் அபாரமான சோபை கொண்டுவிடும் என்பதே. பாஸ்டன் நகரின் பழமையான தேவாலயம் இது. ஆனால் அதனருகே பிரம்மாண்டமான ஒரு கண்ணாடிக்கட்டிடத்தைக் கட்டி அந்த தேவாலயத்தின் அனைத்து அழகையும் சிதைத்திருக்கிறார்கள்.  அந்த கண்ணாடி ராட்சதனின் காலடியில் தேவாலயம் விழுந்துகிடப்பதுபோன்ற பிரமை ஏற்பட்டது. மதுரையிலும் திருவண்ணாமலையிலும் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் நாம் காணும் அதே விஷயம்தான். அங்கே கான்கிரீட் கட்டிடங்களுக்கு நடுவேதான் கோபுரங்கள் புதைந்து கிடக்கும். ”இந்த தேவாலயத்தை இந்தக்கட்டிடம் மறைத்துவிடும் என்று கலை ஆர்வலர்கள் எதிர்த்தார்கள். ஆனால் கண்ணாடியால் கட்டினால் அப்படி நிகழாது என்று சாக்கு சொல்லி கட்டிவிட்டார்கள்” என்றார் பாலா.

நகரின்  விரிந்த காற்றோட்டமான தெருக்கள் வழியாக நடந்தோம். இளவெம்மை நிறைந்த கோடை காலம். பாஸ்டன் பாலா பிக் டிக் என்று சொல்லப்படும் நகர் மேம்பாட்டுத்திட்டம் பற்றிச் சொன்னார். நகரின் மையப்பகுதியின் அடியில் விரிவான சுரங்கப்பாதைகளை அமைத்து ரயில்களை ஓடவிடும் திட்டம் ஐந்து வருடங்களில் முடியும் என்று சொல்லப்பட்டது. திட்டமிட்ட செலவில்  பத்து மடங்கை செலவிட்டு இருபது வருடங்களில் இன்னும் முடிவடையவில்லை.  நாலில் ஒருபங்கு ஊழல் என்று பேச்சிருக்கிறது.

இருட்ட இருட்ட எங்கும் ஓர் உல்லாசத்தோற்றம் பரவியது. இங்கே நான்குமாதம்தான் வெளியுலகம் திறந்திருக்கிறது. பிற மாதங்களில் பனியும் மழையும் நகரை மூடிக் கதவைச் சாத்தி விடுகின்றன. ஆகவே இந்த நாட்களில் மக்கள் வெயிலையும் வெளிச்சத்தையும் கொண்டாடுகிறார்கள்.  ஜோடிகள் ஆரத்தழுவி அடிக்கடி மெல்லிய முத்தங்களைப் பரிமாறிக்கொண்டு சென்றன. எல்லா  உணவகங்களிலும் நார்காலிகளை வெளியே போட்டு கைகளில் மதுகோப்பைகளுடன் ஓய்வாக அமர்ந்திருந்தார்கள்.  இரண்டு கடைகளில் ஏ.ஆர் ரஹ்மானின் ‘ஜெய்ஹோ’ பாடல் காதில் விழுந்தது.

பழைய புத்தகங்களை குவித்துப்போட்டு விற்கும் கடைக்குள் சென்று புத்தகங்களை ஆராய்ந்தோம்.நான் சில நூல்களை எடுத்துக்கொண்டேன். சாலையில் முகங்களை பார்த்துக்கொண்டே நடப்பதே முக்கியமான அனுபவமாக இருந்தது. இந்திய முகங்கள் நம் கண்களைச் சந்தித்து சட்டென்று பார்வையை திருப்பிக் கொண்டன. வெள்ளைய முகங்கள் கண்களைச் சந்திக்க நேர்ந்தால் புன்னகையுடன் ஹலோ என்றன. கருப்பு முகங்கள் நம்மை பொருட்படுத்தவே இல்லை. நகரதுக்குள்ளேயே சுழன்று வரும் ரயிலில் வந்தபோது அதேபோல அதே நகரில் முன்பு வந்த உணர்வை அடைந்தேன். ஆனால் அது கன்பரா. கூடவந்தவர் சிவராம

டிரினிடி சர்ச்

 
இருட்ட ஆரம்பித்து குளிரும் ஏறியபின் திரும்பி வந்தோம். வெட்டிப்பயலை அவரது பிரம்மசாரிக் குடியிருப்பில் விட்டுவிட்டு பாலா தங்கியிருக்கும் புறநகர் நோக்கிச் சென்றோம். இருபக்கமும் காடுகள் அப்போதும் நல்ல வெளிச்சத்துடன் இருந்தன. வானம் பளீரென்றிருந்தது. அப்போது இரவு எட்டரை மணி. ஒன்பதுமணிக்குத்தான் சூரிய அஸ்தமனம். குளிர்காலத்தில் மாலை மூன்றுமணிக்கே சூரியன் கூடணைந்துவிடுமாம். வெளிச்சம் சார்ந்து நேரத்தைக் கணிக்கும் என் பிரக்ஞை அதை மாலை என்றே பிடிவாதமாகச் சொல்லிக்கொண்டிருந்தது.

 

வெட்டிப்பயல், பாச்டன் பாலா,வேல்முருகன்

முந்தைய கட்டுரைஅயன் ரான்ட்,மேலும் கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅண்ணாச்சி