சைதன்யா என்னும் எழுத்தாளர்

நண்பர் கே.பி.வினோத்தின் மகள் சைதன்யாவைக் கைக்குழந்தையாகவே அறிவேன். குழந்தைகள் வளரும் வேகம் பிரமிக்கச்செய்வது. ஒருநாள் அவரைத் தேடிச்சென்றபோது ஒரு நோட்டுப்புத்தகம் நிறைய பென்சிலால் எழுதியிருந்ததைக் கொண்டுவந்து காட்டினாள். எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கால்முளைத்த கதைகள் நூலில் உள்ள கதைகள் சிலவற்றை மொழியாக்கம்செய்திருந்தாள். ஒரு மூன்றாம்வகுப்பு மாணவியின் மொழி அல்ல அது. சரளமான ஆங்கிலம். அதேசமயம் ஒருவகை இந்திய ஆங்கிலமும் கூட

எஸ்.ராமகிருஷ்ணனிடம் கதைகளைக் காட்டலாம் என்று நான் சொன்னேன். அவளுடைய பள்ளியிலும் காட்டலாம் என்றேன். பள்ளியில் உடனே அவற்றை நூலாக வெளியிடவேண்டும் என்று சொன்னார்கள். எஸ்.ராமகிருஷ்ணன் ஆசியுரையுடன் நூல் வம்சி புத்தகநிலையத்தால் வெளியிடப்பட்டுள்ளது

என் முதல் நூல் 28 வயதில் வெளிவந்தது. எட்டுவயதில் நுலாசிரியராக ஆன சைதன்யா சக எழுத்தாளரின் சகஜத்தன்மையுடன் எஸ்.ராமகிருஷ்ணனின் அடுத்த நூலை மொழியாக்கம் செய்ய ஆரம்பித்திருப்பதைப்பற்றிச் சொன்னாள். மகிழ்ச்சியாக இருந்தது. குழந்தைகளுக்கான நூல்களை அவர்களே எழுதிக்கொள்ளும் ஒரு காலம் வரப்போகிறதா என்ன?

நூல்வெளியீடு 9 ம் தேதி மாலை சென்னை அண்ணா சாலை புக் பாயிண்ட் அரங்கில் நடைபெற உள்ளது.

முந்தைய கட்டுரைகல்பற்றா கவிதைக்கூடல் -படங்கள்
அடுத்த கட்டுரைதமிழகத்தில் தமிழ்