வாசிப்பின் பெரும்தடை

அன்புள்ள ஜெ,

சுவாரஸ்யம், ‘நல்ல’ முடிவுகள், கதையின் அமைப்பு, தகவல்பிழைகள் குறித்து நீங்கள் சொல்வது புரிகிறது. அந்தச் சிக்கல்கள் எனக்கு இல்லை என்றும் நினைக்கிறேன். ஆனால்…

ஒரு வாசகன் தன் சுய அனுபவங்களில் நின்று கொண்டுதான் ஒரு கதையை வாசிக்கிறான். அவன் அனுபவங்கள் இன்னும் எல்லைக்குட்பட்டது. பல கதைகள் வாசகனின் அனுபவ எல்லைக்கு வெளியே நிகழும்போது அதன் தரிசனத்தையும், நுண்தளத்தையும் தவறவிடுகிறான் என்று நினைக்கிறேன். நாவல் என்று வரும்போது கூட மெல்ல மெல்ல கதைக்குள் வந்துவிடமுடியும். ஆனால் சிறுகதைகள் tricky என்று தோன்றுகிறது. கதைக்கு நிகரான சில அனுபவங்கள் அல்லது அனுபவத்துளிகள் சற்றேனும் இல்லாதபோது முழுக்க முழுக்க கற்பனையில் வாசிக்கும்போது அதில் ஒரு எல்லை உள்ளது என்று நினைக்கிறேன். நான் கடலை அதன் அலைகளுடன் நேரில் சென்று காண்பதற்கும் கடல் என்று வாசிப்பதில் மட்டும் உள்ள வேறுபாடு என்று சொல்லலாமா?. மேலும் ஒரு கதையின் தரிசனத்தை வாசகன் அடைவதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. அங்கிருந்து இன்னும் ஆழத்தை நோக்கி வாசகன் செல்லலும்போதே வாசிப்பு முழுமை அடைகிறது. இந்த ஆழம் வரை செல்ல ஒரு வாசகனுக்கு கதைக்கு நிகரான சுய அனுபவங்கள் கொஞ்சமேனும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இது என் வாசிப்பு சிக்கல் என்றே நினைக்கிறேன். இதை எப்படி களைந்துகொள்வது?

ராஜா

அன்புள்ள ராஜா

சுய அனுபவம் மூலம் மட்டுமே வாசிக்கமுடியும் என நினைப்பதுகூட பிழையானது. இலக்கியம் என்பதே சுய அனுபவத்தின் குறுகலான எல்லையை மீறிச்செல்வதற்கான ஒரு கருவிதான். நான் பனியைப்பார்த்ததில்லை. ஆனால் யூரி பாலாயனின் பனிப்பாலையில் அலைந்திருக்கிறேன். யூரிபாலாயனுக்கே நான் பனிப்பாலை பற்றி கொஞ்சம் புதியதாகச் சொல்லமுடியும்

கற்பனைமூலம் அறியாத இன்னொரு வாழ்க்கைக்குள் செல்வதற்காகத்தான் இலக்கியமே உள்ளது. முடியவில்லை என்றால் அங்கே இலக்கியம் என்ற இயக்கமே அந்தவாசகனைப்பொறுத்தவரை தோற்றுப்போய்விடுகிறது என்றே பொருள். உண்மையிலேயே ஒருவருக்கு சொந்த அனுபவம் அல்லாத ஒன்றை கொஞ்சம் கூட உணர முடியவில்லை என்றால் அவர் மேற்கொண்டு இலக்கியம் வாசிக்கவே வேண்டியதில்லை. அது வீண்வேலையும் நேரவிரயமும்தான்.

உங்களுக்கு [அல்லது எனக்கு]அப்படி என்ன பெரிய வாழ்க்கை அனுபவம் உள்ளது? விவசாயம் செய்திருக்கிறீர்களா? போருக்குச் சென்றிருக்கிறீர்களா? தற்கொலைக்கு முயன்றிருக்கிறீர்களா? கடலில் வழிதவறியிருக்கிறீர்களா? ஒன்றுமே இல்லை. இருப்பது ஓர் ஒன்றரையணா வாழ்க்கை. அந்த மோதிர வட்டத்துக்குள் அடைந்த அனுபவத்தைத் தொட்டுப்பேசினால் மட்டுமே என்னால் அனுபவிக்கமுடியும் என்றால் அதைவிட வேடிக்கையான வேறேதாவது உண்டா என்ன?

உண்மையைச் சொல்லப்போனால், நாம் சின்னப்பிள்ளைகளாக இருக்கையில் இப்பிரச்சினை இல்லை. அன்று நாம் வாழ்க்கையனுபவமே இல்லாதவர்கள். ஆனால் உற்சாகமாக வாசிப்போம். புதிய உலகங்களுக்குள் கற்பனைமூலம் சென்று உலவி மீள்வோம். வளர வளர நாம் கெட்டிப்பட்டு உறுதிப்பட்டு கற்பனையிழந்தவர்களாக ஆகிறோம். நம்முடைய சின்ன வாழ்க்கையில் சின்ன அனுபவவட்டத்துக்குள் நாம் அடைந்தவை மட்டுமே ‘உண்மையானவை’ ‘நம்பகமானவை’ என நினைக்க ஆரம்பிக்கிறோம். இந்த அகங்காரமே நம்மால் இலக்கிய ஆக்கங்களுக்குள் செல்லமுடியாமல் தடுக்கிறது

இலக்கியப்படைப்பின் முன் நாமறிந்த சில்லறைத் தகவல்களும் நம்முடைய எளிய வாழ்க்கையனுபவங்களும் சிறியவை என உணரும் ஓர் அடிப்படையான அடக்கம் வாசகனுக்கு இருக்கவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். ஒரு படைப்பு ஒரு படைப்பூக்க நிலையில் உருவானது. அது ஆசிரியனின் ஆழ்மனம் வெளிப்படும் ஒரு களம். நாம் வாசிக்க ஆரம்பிக்கையில் அதன்முன் எளிய அன்றாட மனநிலையில் நிற்கிறோம். நம் மேல்மனத்தையே அதன்முன்வைக்கிறோம். அது மிக மேலோட்டமானது, சிறியது

வாசிப்புக்காக நாம் நம்மை ஒப்புக்கொடுத்தால் நம் கற்பனை விரிய ஆரம்பிக்கிறது. நம்முடைய ஆழ்மனம் திறந்து நாம் மொழியினூடாக நிகழும் ஒரு கனவை அடைய ஆரம்பிக்கிறோம். கனவு நம்முடைய எந்த நனவைவிடவும் பெரியது, உக்கிரமானது, ஆழமானது. ஆகவேதான் இலக்கியம் வாழ்க்கையைவிடப் பெரியது என்று சொல்லப்படுகிறது. அந்தக்காரணத்தால்தான் வாழ்க்கைபோதாமல் நாம் இலக்கியத்தை வாசிக்கிறோம்.

இந்த விரிவு நிகழாமல் தடுப்பது படைப்பை வாசிக்க ஆரம்பிக்கும்போது நாம் அதை நோக்கித் திருப்பிக்கொள்ளும் நம்முடைய தர்க்கமனம், நம்முடைய மேல்மனம். அந்தக்கணமே அப்படைப்பு எதற்காக எழுதப்பட்டிருக்கிறதோ அந்த நோக்கம் நாம் வரையில் தோற்றுவிடுகிறது. அது நம் கற்பனையைத் தூண்ட, நம்மை ஒரு நிகர்வாழ்க்கைக்குள் கொண்டுசெல்ல எழுதப்பட்டிருக்கிறது. நாம் அதன்முன் நம் அன்றாட யதார்த்தபுத்தியை வைக்கிறோம். அதை தோற்கடிக்கிறோம். கொல்கிறோம்

இந்த அகங்காரத்துடன் வாசிக்கையில்தான் நாம் இலக்கியப்படைப்புகளுக்குள் நுழையாமல் வெளியே நிற்க ஆரம்பிக்கிறோம். அது உருவாக்கும் கற்பனை உலகை நம்முடைய சொந்த யதார்த்தபோதத்தைக்கொண்டு பரிசீலனை செய்ய ஆரம்பிக்கிறோம். ஆகவே அந்த உலகை சந்தேகப்படுகிறோம். பிழைகளைத் தேட ஆரம்பிக்கிறோம். நம்மை இலக்கியவாதிக்கு மதிப்பெண் போடுபவர்களாக நிறுத்திக்கொள்கிறோம்.

வாசிப்பு என்பது புனைவெழுத்தாளன் செய்யும் கற்பனைக்கு நிகராக நாமும் சேர்ந்து செய்யும் கற்பனைதான். அந்தக்கற்பனையைச்செய்யாத போது நாம் அப்படைப்பைக் கொன்றுவிடுகிறோம். அதன்பின் அந்தப்படைப்பு பற்றி நாம் செய்யும் ஆராய்ச்சி என்பது பிணப்பரிசோதனைதான். அதற்கு ஒரு பயனும் இல்லை. நம்முடைய அகங்காரத்தை நாம் திருப்திசெய்துகொள்ளலாம், அந்தப்படைப்பைத் ‘தாண்டி’ச்சென்றுவிட்டோம் என்று.

அந்த இரும்புச்சட்டையை போட்டுக்கொண்டால் நம்மால் எந்தப் புனைவுலகிலும் நீந்த முடியாது. அது ஒரு மிகப்பெரிய பலவீனம். ஒரு வகை அக ஊனம் என்றே சொல்வேன்.

இலக்கியம் எந்நிலையிலும் தன்னுள் இருக்கும் சிறுவனையும் சிறுமியையையும் இழக்காதவர்களுக்கானது.அவர்கள்தான் புனைவை தங்களை நோக்கி இழுக்க முயலமாட்டார்கள். தங்களை புனைவை நோக்கி விரித்துக்கொள்ள முயல்வார்கள்

ஜெ

முந்தைய கட்டுரைஈழம் இரு எதிர்வினைகள்
அடுத்த கட்டுரைகுருதி, நிலம் – கடிதங்கள்