[ஒன்று]
தூங்கிக்கொள்
முலைகளை நான் பார்த்துக்கொள்கிறேன்.
இருந்திருந்து சலித்திருக்கும் அவை
மாற்றி அமரச்செய்கிறேன்
கைபிடித்து வெளியே கொண்டுசெல்கிறேன்
வாசலுக்கு அழைத்துச்சென்று
கம்பியில் தலைமுட்டி தூங்கும் பயணிகள் கொண்ட
கடைசிப்பேருந்தை காட்டுகிறேன்
பொறாமைக்குடுக்கைகளான
இந்த சகபாடிகளை எனக்குப்பிடிக்கும்
ஒன்று கேசாதிபாத மதுரம்
இன்னொன்று சிந்தைக்கினியது*
படிஏறுவதிலும்
பெருமூச்சுவிடுவதிலும்
மேற்படிப்பு முடித்திருக்கிறார்கள்
சிலசமயம்
வாசலில்காத்திருக்கும் இரு பதற்றங்கள்
சிலசமயம்
முற்றத்தில் இறங்கிநிற்கும்
இரு நிலைகொள்ளாமைகள்
உள்ளே புயலடிக்கும்
இரு தேனீர்க்கிண்ணங்கள்
வெளியே சொல்லமுடியாத
இரு திணறல்கள்
சின்னப்பிள்ளைகள்
வரையும் மனிதவடிவங்கள்
ஆணாவதா பெண்ணாவதா என
முலைகள் வரையப்படுவதுவரை குழம்பிநிற்கின்றன
கடவுளுக்கு பிள்ளைகளைவிட அவசரம்
பத்துப்பதினான்குவருடம்
தயங்கிநிற்கசெய்கிறார்
இதயபூர்வமான இரு துடிப்புகள்
கடவுள் முடிவை அறிவித்துவிட்டார்
முலைகள்தான் முதலில்
கண்ணாடியில் பெண்
[இரண்டு]
பாவம்
நினைக்காமல் குனிந்தால்
பதற்றம்
பாவம்
காட்சியுள்ள கண்களல்ல
பாவம்
வெளி உலர்ந்தாலும்
உள்ளே காய்வதில்லை
குழந்தை இறந்த தாயின் நெஞ்சில்
இருந்து உளையும்
நினைவு உடைந்து சீழ்வழியும்
பாவம்
கண்ணீர் அடங்கினாலும்
பால்நிற்பதில்லை
தெறிக்கும் இரு திரட்சிகள்
பிழிந்து தரமுடியுமா
என்று யாசிக்கும் இரு வதைகள்
எஞ்சியகாலம்
ஆட்டம் முடிந்த முற்றத்தில்
மிதிபட்டுச்சிதையும்
இரு மண்ணப்பங்கள்.
கல்பற்றா நாராயணன்
[2,3-3-2013 அன்று ஆலப்புழா கல்பற்றா கவியரங்கில் வாசிக்கப்பட்ட புதிய கவிதை]
* சரஸ்வதியின் இரு முலைகள். ஒன்று இசை, இன்னொன்று இலக்கியம்.