விவாதம் என்னும் முரணியக்கம்

 

1

 

[கிளிந்த் ப்ரூக்ஸ்]

 

 

அன்புள்ள  ஜெயமோகன்,

தங்களுக்கு  வரும் பெரும் எண்ணிக்கையிலான கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதைப்போலவே நானும் உங்கள் வலைப்பூவைப்  படிப்பதை எனது தினசரித் தேவைகளில்  ஒன்றாக ஆகிப்போனதை உணர்கிறேன்.  அதற்காக என்னால் நீங்கள்  கூறும் எல்லாக் கருத்துக்களுடனும்  உடன்பட்டுப் போக முடிவதாக அர்த்தம் அல்ல. 

ஆனால் ஒன்றை நான் உண்மையுடன் ஒத்துக்கொள்கிறேன். என்னில் மாறுபாடான கருத்துக்களைக் காணும்போதும், தங்களின் நேர்மையான பார்வையும் இன்றைக்கு அரிதாகிப்போன அசலான சிந்தனை வெளிப்பாடுகளும் என்னில் மறுசிந்தனையைத் தோற்றுவிப்பதையும் புதிய கருத்தாக்கங்களை உருவாக்குவதையும் நான் உணர்கிறேன். என் தலைமுறையின் தவிர்க்கமுடியாத சமூக சிந்தனாவாதியாக தாங்கள் உருவெடுப்பதையும் நான் புரிந்துகொள்கிறேன்.  ஆயினும் உங்கள் கருத்துக்களை நிறுவுவதில் காணப்படும் வேகமும், ஒற்றைப்போக்கும், அக்கருத்துக்களின் பன்முகத்தன்மைகளை நீங்கள் புறக்கணிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளன என்பதையும் மெத்தப் பணிவுடன் சுட்டிட ஆசைப்படுகிறேன்.

,,ஜேயார்ஸி

 

பார்த்

 

அன்புள்ள  ரவிச்சந்திரன்,
என்னுடைய விவாதங்களைச் சார்ந்து இந்தக் கோணத்தில் பலரும் எழுதியிருக்கிறார்கள். நான் திட்டவட்டமாக பேசுகிறேன் என்றும் அதன் மூலம் மறுதரப்பை முற்றாக நிராகரித்துவிடுகிறேன் என்றும். அதை நான் ஒரு குறையாக எண்ணவில்லை. மாறாக அதுவே எந்த ஒரு விவாதத்துக்கும் இயல்பான முறை என்றே எண்ணுகிறேன்.

சிந்தனை என்பது ஒன்றை தெளிவுபடுத்திக் கொள்வதில்தான் இருக்கிறது. தெளிவுபடுத்திக் கொள்வதென்பது அதை முறையாக பகுத்து வகுத்துக்கொள்வதே. அறிந்த விஷயங்களை முறையாக வகுத்து வகுத்துக் கொண்ட பின்னரே அறியாத விஷயங்களை நோக்கிச் செல்ல முடியும் என்பதுஎன் எண்ணம். தெளிவுபடுத்திக் கொள்வதன் மூலம் தெளிவு தேவையாகும் புதிய இடங்களை நோக்கி நாம் நகர்கிறோம்.

ஆகவே ஒரு நல்ல எழுத்தில் தெளிவும் திட்டவட்டமுமான ஒரு பகுதி இருக்கும்போதே ஒருபகுதி குழப்பமான சிக்கலான பகுதியை நோக்கி நீண்டுமிருக்கும். என் எழுத்தில் அந்த அம்சம் இருப்பதை நான் எனக்கு வரக்கூடிய கடிதங்கள் வழியாகக் கண்டு கொண்டிருக்கிறேன். அந்த தெளிவற்ற பகுதியை நோக்கியே அதிகமும் நல்ல விவாதங்கள் எழுகின்றன.

ஏனென்றால் அதுநான் புதிதாகச் சிந்திக்கும் பகுதி. நானே பல இடங்களில் முட்டிமோதி முன்னகரும் பகுதி. அப்பகுதி நோக்கி தன் கேள்விகளை தொடுப்பவர் என்னுடன் இணைந்து தானும் சிந்திக்கிறார். எங்களுக்குள் நிகழ்வது ஓர் உரையாடல்

அதேசமயம் எனக்கு தெளிவுள்ள பகுதி எப்போதும் திட்டவட்டமாகவே இருக்கும்.அது என் கல்வி மூலம் , என் அனுபவம் மூலம், என் படைப்பூக்கம் மூலம் நான் கண்டுகொண்டது, வகுத்துக்கொண்டது. இப்பகுதி நோக்கி தன் விமரிசனத்தை தொடுப்பவர் என் அஸ்திவாரத்தை மறுக்கிறார்.  ஆகவே அவர் என்னை  உடைத்தாகவேண்டும். அத்தகைய கடுமையான தர்க்கங்களுடன்தான் அவர் வந்தாகவேண்டும். அதை நான் எதிர்பார்ப்பது இயல்பானதே.

நான் எழுதும்போது என்னை மீண்டும் மீண்டும் தொகுத்துக் கொள்கிறேன். ஆகவே என் எழுத்து தெளிவாக இருப்பது எனக்கே அவசியமானது. அதாவது இப்படிச் சொல்கிறேன். தெளிவாகவும் திட்டவட்டமாகவும் இருப்பது என்பதே ஓர் எழுத்தாளன் எப்போதும் முயன்றடையவேண்டிய நிலை. தெளிவின்மையும் மாறும் தன்மையும் அவன் சென்று தொடும் சிக்கல்கள் சார்ந்து இயல்பாகவே உருவாகக் கூடியவையாக இருக்க வேண்டும்.

அப்படி ஒரு தெளிவற்ற நுனி ஒரு நல்ல சிந்தனையாளனின் உலகில் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் மொத்த சிந்தனையும் ஒருவருக்கு தெளிவற்றும் மாறிக் கொண்டிருக்கும் என்றால் அவர் சிந்திப்பதில் ஏதோ சிக்கல் இருக்கிறதென்றே பொருள்.

என்னுடைய சிந்தனையை நான் திரும்பிப் பார்த்துக் கொள்ளும் போது இவ்விரு கேள்விகளைத் தான் கேட்டுக்கொள்கிறேன். என் சிந்தனை உலகம் முன்னகரும்தெளிவின்மை இல்லாமல் நிலைத்த உறுதியுடன் இருக்கிறதா? இல்லை என்றே எனக்குப் படுகிறது. தொடர்ச்சியாக நான் என்னால் வகுத்துச் சொல்லிவிடமுடியாத முனைகளில் சிக்கிக் கொண்டே இருக்கிறேன்.

ஆகவேதான் ஒன்றை தீவிரமாக எழுதிச் செல்லும்போது அதைவிட பெரிதான இன்னொன்றைச் சென்றடைந்து நின்று விடுகிறேன். உதாரணமாக அயன் ராண்ட் பற்றிய என் விவாதம். அதை தெளிவுறச் சொல்லிச் செல்கிறேன். ஆனால் நடைமுறைவாதத்தின் எல்லை வரை சென்றபின் இனிமேல் புதிய கோணத்தில் விரிவாகவே அதைப் பற்றிப் பேசமுடியும்என்ற இடம் வந்து நின்றுவிடுகிறேன்.

மாற்றுத் தரப்புகளை இருவகையாக பார்க்கலாம். மாற்று நம்பிக்கை, மாற்று நிலைப்பாடு. மாற்று நம்பிக்கைகளுடன் விவாதிப்பதில்லை என்பதே என் வழி.உலகின் கடைசி ஞானி முகமதுதான், மேற்கொண்டு மனித சிந்தனையில் எந்தமுன்னேற்றமும் தேவையில்லை என்று ஒருவர் நம்பினால் அது அவரது நம்பிக்கை அதை நான் மறுக்கக் கூட போவதில்லை.

தன் சாதிமேன்மையால் தனக்கு இயல்பாகவே ஞானம் உருவாகும் என இன்னொருவர் நம்பினால் அது அவரது நம்பிக்கை. அந்த தோரணை கொண்ட ஒருவரை  நான் பொருட்டாக எண்ணப்போவதில்லை. நம்பிக்கைகளுடன் விவாதிப்பதில்லை என்பது என்வழி. அதை திட்டவட்டமாகச் சொல்லிவிட்டு விலகிவிடுவேன்.

மாற்று நிலைப்பாடு தரப்புகளைப் பொறுத்தவரை தன் நிலைப்பாடுகளைச் சொல்லி என்னுடைய வாதங்களை உடைக்கும் அல்லது மாற்றியமைக்கும் பொறுப்பை ஒருவர் ஏற்றுக் கொண்டாக வேண்டும். அது சிந்தனைத்தளத்தில் நான் முன்வைக்கும் சவால்.அந்தச் சவாலை நான் குறைத்து அளிக்க வேண்டும் என்று கோர ஒருவருக்கு உரிமைஉண்டா என்ன? என்னால் முடிந்த வரை தீவிரமாக அச்சவாலை அளிப்பதுதானே என் பணியாக இருக்க முடியும்?

நான் என் தரப்பில் தேங்கியிருக்கிறேனா என நானே அறிந்துகொள்ள முக்கியமான முறை ஒன்று உள்ளது. இத்தனை கால அறிவுலகச் செயல்பாட்டில் என் தரப்பை என் எதிர் தரப்பினர் மாற்றியமைக்க நான் அனுமதித்திருக்கிறேனா என்னும் கேள்விதான் அது.

பின்னால் திரும்பிப் பார்க்கும்போது அது பலமுறை நிகழ்ந்திருப்பது தெரியவருகிறது. அந்த மாற்றங்கள் வழியாக நான் வளர்ந்திருப்பதும் தெரியவருகிறது. சிந்தனையில்  வளர்ச்சி என்பது அவ்வாறுமட்டுமே அமைய முடியும். அது ஓர் முரணியக்கம்.

இரு உதாரணங்கள். நான் விஷ்ணுபுரம் எழுதிக்கொண்டிருந்த நாட்களில் தமிழில் அமைப்புவாதம்  முன்வைக்கபப்ட்டது. [அமைப்பியல் என்பது அப்போதைய பெயர்.ஆனால் இயல் என்பது ஒரு தனி அறிவுத்துறையைச் சுட்டுவதற்கான சொல்லாட்சி.அமைப்புவாதம்  என்பது மொழியியலுக்குள் முன்வைக்கப்பட்ட ஒரு கோணம். ஆகவே அமைப்புவாதம் என்பதே சரியான சொல்]

தமிழவன் எண்பதுகளில் ஸ்டக்சுரலிசம் என்ற நூலை எழுதினார். இந்நூலை ஒட்டி உருவான விவாதம் இலக்கியத்தில் ஓர் அலையை உருவாக்கியது. நாகார்ஜுனன், பிரேம்-ரமேஷ், க.பூரணசந்திரன் போன்றவர்கள் இந்த புதிய சிந்தனை முறையை தமிழில் முன்வைத்தார்கள். அவர்கள் சொன்னதை தங்கள் போக்கில் புரிந்து கொண்டு பலர் தங்களையும் அமைப்புவாதிகளாகமுன்வைத்தார்கள்.

நான் இலக்கிய விவாத அரங்குகளிலும் சிற்றிதழ்களிலும் கேட்டதெல்லாம் இந்த இரண்டாம் நிலைக் குரல்களைத்தான். சாரு நிவேதிதா, கௌதம சித்தார்த்தன்,எஸ்.சண்முகம் , முத்துக்குமார் போல. இவர்கள் ‘சுந்தர ராமசாமியின் எழுத்தும் சரோஜாதேவி எழுத்தும் ஒன்றுதான்’ ‘இலக்கியவாதி என்பவனுக்குஇனிமேல் முக்கியத்துவமே இல்லை– அவன் இறந்து விட்டான்’ ‘கலை என்பது ஒருவகை சமூக உற்பத்தி மட்டுமே’ என்றெல்லாம் சில எளிய கோஷங்களாகஅமைப்புவாதத்தை முன்வைத்தார்கள்.

இந்தச் சிந்தனைகளை எதிர்கொள்ளும்போது இவை ஒருவகை வெற்றோசைகள் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ஏனென்றால்  எந்த ஆழமான சிந்தனைமரபும் இப்படிப்பட்ட வரிகளைச் சொல்ல முடியாது என நான் நன்றாகவே அறிவேன்.

இதையொட்டி நாகார்ஜுனன், பிரேம் போன்றவர்களுடைய கட்டுரைகளுக்குள் சென்ற போது அவை மிகமிகச் சிக்கலான செயற்கையான நடையில் எழுதப்பட்டிருந்தன. மேலும் அக்காலத்தில் அவர்கள் இலக்கியக் கோட்பாடுகளை முன்வைத்து இலக்கிய ஆக்கங்களை எள்ளி நகையாடும் ஒரு தோரணையையும் கொண்டிருந்தார்கள். ஒரு மொழியில் தன்னிச்சையாக எழும் இலக்கியப் படைப்பை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கும் ஒரு கோட்பாடு என்பது அபத்தமான ஒன்று என்று நான் எண்ணினேன்.

அத்துடன் இந்த விவாதங்களின் விளைவாக அறம், தரம், அழகியல், கலை போன்ற விழுமியங்களை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கும் ஒரு போக்கு தமிழில் உருவானது.தமிழில் எப்போதுமே நுண்ணிய இலக்கிய ஆக்கங்களுக்கு எதிரான மேலோட்டமான எழுத்தாளர்கள் எண்ணிக்கையில் அதிகம். இத்தகைய நிராகரிப்புகளை அவர்கள் உடனே தலை மேல் சுமக்க ஆரம்பிப்பார்கள். ஆக இந்தக்குரல்கள் சூழலை நிறைத்தன.

இந்த அலைக்கு எதிராக நான் கடுமையாக விவாதித்திருக்கிறேன். திட்டவட்டமாக என் தரப்புகளை முன் வைத்திருக்கிறேன். இந்நிலையில்தான் விஷ்ணுபுரம் எழுதி முடிந்தபின் இந்தச் சிந்தனைகளை இவர்களை நம்பாமல் நானே கற்றுக்கொள்ளலாம் என முடிவுசெய்து முதலில் மதன் சரூப் என்பவர்ஆங்கிலத்தில் எழுதி ஆக்ஸ்போர்ட் பிரஸ் வெளியீடாக வந்த புகழ்பெற்ற அறிமுகநூலை வாசித்தேன். முதல் ஆச்சரியம் எனக்கு  அச்சிந்தனைகளில் இருந்த படைப்பூக்கம்தான். அவை தமிழ்ச் சூழலில் முற்றிலும் மாறாக அபத்தமான புரிதல்களுடன் முன்வைக்கப்பட்டன என்ற எண்ணம் ஏற்பட்டது.

உதாரணமாக அமைப்புவாதம் சுந்தர ராமசாமி எழுதுவதையும் சரோஜாதேவி எழுதுவதையும் பிரதி என்னும் மொழிக் கட்டுமானமாகவே பார்க்கும். அதைத்தான்இரண்டும் ஒன்றே என்ற கோஷமாக  சாரு நிவேதிதா புரிந்து கொண்டு முழங்கினார்.ஆனால் அமைப்புவாதம் நோக்கில் பிரதி உருவாக்கும் குறியீட்டு ஒழுங்கின் பன்முகத்தன்மை சார்ந்து அதன் முக்கியத்துவம் வேறுபடுகிறது. பழைய விமரிசனத்தில் ‘ஆழம்’ என்று சொல்லப்படுவதை பார்த் முன் வைத்தஅமைப்புவாதம் ‘குறியீட்டு ஒழுங்கின் முடிவற்ற பன்முகத்தன்மை’ என்ச்சொல்லும், அவ்வளவுதான் வேறுபாடு.

அதேபோல பார்த் ‘ஆசிரியனின் மரணம்’ என்று சொல்வது ஆசிரியனைநிராகரிப்பதல்ல. ஆசிரியனை வெறும் ஒரு தனி மனிதனாக மட்டுமே பார்க்கும் நோக்குக்கு எதிரான ஒன்று. அவனுடைய படைப்பு மொழி என்பது ஒரு சூழலின் மொழியமைப்பின் ஒருபகுதியாக இருப்பது. ஆகவே அவன் அம்மொழிச் சூழலின் ஒருபகுதியாக இயங்குபவன். எழுத்தை உற்பத்தி என்று அமைப்புவாதம் சொன்னது படைப்பு என்ற சொல்லில் முன்பு இல்லாமலிருந்து புதிதாக உருவானது என்றபொருள் வருவதனாலேயே. பொருள் உற்பத்தியில் உள்ள இயந்திரத்தனத்தை பார்த் ஏற்றுக்கொண்டவரல்ல.

இதைத்தொடர்ந்து நான் என்னுடன் விவாதிப்பதற்கான எதிர் தரப்பைத் தேடி நானே சென்றேன். முதலில் டெல்லி சென்று சச்சிதானந்தனைச் சந்தித்து விரிவாகஉரையாடினேன். அதன்பின் பெங்களூருக்கு மூன்றுமுறை சென்று டி.ஆர்.நாகராஜுடன் உரையாடினேன். அவரக்ள் அப்போது இந்தியச்சூழலில் அமைப்புவாதத்தையும் பின் அமைப்புவாதத்தையும் முன் வைத்து பேசியவர்கள்.இவர்களுடனான என் உரையாடல்களை நான் காலச்சுவடு இதழில் பிரசுரித்தேன்.

அக்காலத்தில் சூழலில் இருந்த குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் சட்டென்று தெளிவுபடுத்திய பேட்டிகள் அவை. இன்றும் அவை மிக ஆர்வமூட்டும் பேட்டிகளாகஉள்ளன. காலச்சுவடில் பிறகெப்போதும் அத்தகைய தரமான பேட்டிகள் வந்ததில்லை.அவற்றுக்குப் பின் பலமாதகால உழைப்பு இருந்தது.

பின்னர்தான் பிரேமுடன் எனக்கு  நெருக்கமான உறவு உருவாகியது. அதுவும் குற்றாலத்தில் பதிவுகள் இலக்கியச் சர்ச்சையில் கடுமையான மோதலில் தொடங்கிய அந்த உறவு சட்டென்று நட்பாக மாறியது. இன்றும் பிரேமுடனான என் நட்பு எனக்கு கிடைத்த ஒரு நல் வாய்ப்பாகவே எண்ணுகிறேன். நாகார்ஜுனன் அப்போது இந்தியாவில் இல்லை. இருந்திருந்தால் அவருடனும் ஒரு நல்ல நட்புஉருவாகியிருக்கும்.

பிரேம் என் வீட்டுக்கு வந்து பலநாள் தங்கியிருக்கிறார். நான் அவர் வீட்டுக்கு  சென்று தங்கியிருக்கிறேன்.தொடர்ச்சியாக விவாதித்திருக்கிறோம்.

விளைவாக அமைப்புவாதம்- பின் அமைப்புவாதம் சார்ந்த என் நோக்கு மாறியது.அதேபோல என் தரப்பைப்பறிய அவர்களின் எண்ணமும் மாறியது. நான் இந்திய சிந்தனை மரபை ஒரு பெரும் உரையாடலாக அதன் பன்மைத்தன்மையுடன் முன்வைப்பவன் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். பின்னர் நான் கடுமையாக விவாதித்து வந்த பூரணசந்திரனுடனும்  அத்தகைய நட்பும் உறவும் சாத்தியமாகியது.

தமிழில்  அமைப்புமையவாதிகள்- பின் நவீனத்துவக் கோட்பாட்டாளர்கள் செய்த பிழை என்னவென்றால் வலுவான ஒரு தரப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக தங்களை ஆதரித்தவர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டதுதான். பிரேம் பேசியதை எல்லாம்அரை குறையாக உள்வாங்கிக்கொண்டு அவற்றை அபத்தமான கோஷங்களாக மாற்றிய சாருநிவேதிதா, கௌதம சித்தார்த்தன் போன்றவர்கள் ஆற்றிய தீங்கு மிகப்பெரிது.

பிரேம் சிக்கலாக முன்வைத்த சிந்தனைகளை சாரு மற்றும் கௌதம சித்தார்த்தனின்
அபத்தமான ஒற்றைவரிகளாக வாசகர்கள் புரிந்து கொண்டார்கள்.இரண்டாவதாக தமிழவன் நாகார்ஜுனன் பிரேம் போன்றவர்கள் அவர்களே பின்நவீனத்துவப் படைப்புகளை எழுதி அவற்றை பின் நவீனத்துவ எழுத்தின் உதாரணங்களாக முன்வைத்து வாதாடினார்கள். இந்த ஆக்கங்கள் பெரும்பாலும்உண்மையான படைப்பூக்கம் இல்லாத பரிசோதனை முயற்சிகளாக இருந்தன.

ஆகவே ஒரு பலவீனமான இலக்கிய எழுத்துமுறைக்கான வாதங்களாக நம் சூழலில் அமைப்புவாதம் சிறுத்துப்போனது.அதைவிட முக்கியமாக ஒரு சிக்கல் இருந்தது. அது தவிர்க்கமுடியாதது. இச்சிந்தனைகளை தமிழில் புதிதாகச் சொல்ல வரும்போது கலைச்சொல்லாக்கம், புதிய சொற்றொடர் அமைப்பு ஆகியவற்றில் பலவிதமான தடுமாற்றங்கள் உருவாயின.ஆகவே யார்  சரியான விஷயங்களைச் சொல்ல முயன்றார்களோ அவர்கள் சொல்வது யாருக்கும் புரியவில்லை. நாகார்ஜுனன் புரியாமல் சொல்லிவிட்டு விலகினார்.

பிரேம் சொல்லிச் சொல்லி பழகி தெளிவானார். இந்தத் தடைகளை மீறி இவர்களுடன் விவாதித்ததன் வழியாக மெல்லமெல்ல நான் என்தரப்பை அவர்களை நோக்கி நகர்த்தி விரிவாக்கிக் கொண்டேன். பக்தினின் ருஷ்ய உருவவாதம், அல்தூசர் போன்றவர்களின் மேலை மார்க்சிய அமைப்புவாதம் போன்றவை இலக்கியம் சார்ந்த என் சிந்தனைகளின் கோணத்தையே மாற்றின.

கிளிந்த்புரூக்சின் அமெரிக்க புதுத்திறனாய்வுக்கோட்பாடுகளையும் [பிரதிமையவிமரிசனம்] ரஸ்சல், விட்கென்ஸ்டீன் போன்றவர்களின் மொழிசார்ந்தகோட்பாடுகளையும் இவறில் இருந்து பின்னால் சென்று புரிந்துகொள்ள அவை எனக்கு வழியமைத்தன. வெறும் அனுபவ வாதத்தில் இருந்து நான் வெளியே வர அவை உதவின.

இப்படித்தான் எதிர்தரப்பு நம்மை மாற்றியமைக்க முடியும். நாம் அவற்றுடன் நம் முழுவீச்சாலும் போராடிப் போராடித்தான் அவற்றை நோக்கி நகரமுடியும். இப்படிப்பட்ட மாற்றத்தையே ஒரு எதிரி என்னில் நிகழ்த்த முடியும். அவர் என்னை விட மேலான ஆயுதங்களுடன் என் தரப்பை விட வலுவான தரப்புடன் என்னை சந்திக்க வேண்டும்.

இதேபோல சேலம் ஆர்..குப்புசாமி [ஆர்.கெ] அவர்களின் நீண்ட உரையாடல்கள்அதன்பின் சோதிப்பிரகாசம் அவர்களின் விவாதங்கள் மூலம் நான் மெல்ல மெல்ல தமிழியம் நோக்கி நகர்ந்திருக்கிறேன்.  தமிழியம் என்பது ஒரு பண்பாட்டுத் தேடல். அதை திராவிட இனவாத அரசியல் போன்றவற்றுடன் தொடர்புபடுத்தாமல் யோசிக்க முடியும் என்று அவர்கள் மூலம் தெளிவடைந்தேன்.

அது பல வருடங்கள் நீடித்த விவாதம். அதுவே கொற்றவை போன்ற ஒரு நாவலுக்கு அடிப்படை அமைத்தது. இந்த மாற்றங்களை பரிணாமகதி என்றே எண்ணுகிறேன். இந்தப் பரிணாமமே இயல்பானது. நான் என் தரப்பை இறுக்க்கமான மதநம்பிக்கையாக கொள்ளவில்லை, தொடர்ச்சியாக சீராக என் எதிர் தரப்புடன் உரையாடி வளர்கிறேன் என்பதற்கான ஆதாரம்.  ஆனால் நான் எதிர்பார்ப்பது என்னளவே ஆற்றல் கொண்ட எதிர்த்தரப்பை

 

ஜெ

 

மறுபிரசுரம்

முதற்பிரசுரம்  Jul 29, 2009 @ 0:02

 

முந்தைய கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 26
அடுத்த கட்டுரைமுரண்படும் தரப்புகள்