சென்ற வருடம் கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருதுவிழாவிற்கு கல்பற்றா நாராயணன் வந்திருந்தார். அன்று மதியம் நண்பர்கள் அவருடன் ஒரு இயல்பான சந்திப்பு உரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்பற்றாநாராயணனின் கவிதைகள் வாசிக்கப்பட்டு அதன்மேல் அவரிடம் கேட்கப்பட்ட வினாக்களுக்கு அவர் பதில் சொன்னார். அப்போது நண்பர் ராம் கல்பற்றா நாராயணனுக்காக ஒரு கவிதையரங்கு ஏற்பாடுசெய்யவேண்டும் என்று சொன்னார். ஏற்கனவே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் தேவதேவன், எம்.யுவன் ஆகியோருக்குக் கவிதை வாசிப்பரங்குகளை அமைத்திருந்தோம்.
பல இடங்களில் இடம்தேடி கடைசியில் ஆலப்புழாவில் ஓர் இடம் அமைந்தது. படகில்சென்றுசேரவேண்டிய இடம் என்பதே நண்பர்களின் உற்சாகத்தைத் தூண்டுவதாக இருந்தது. ஆலப்புழாவில் மங்கொம்பு என்னும் ஊர். நெடுமுடி அருகே. மங்கொம்பு கோபாலகிருஷ்ணன் மலையாளத்தின் அக்காலப் பாடலாசிரியர். அவர் ஒரு தமிழ்ப்பாட்டின் முதல் நான்கு வரிகளை எழுதியிருக்கிறார். ’ஸ்வப்ன ஸுவரதேவி உணரூ.’[ கவிதை அரங்கேறும் நேரம்] நெடுமுடிக்காரரை தேசமே அறியும்.
அலெக்ஸ் என் வீட்டுக்கு வந்திருந்தார். முந்தையநாள் நானும் கே.பி.வினோதும் நாகர்கோயிலுக்கு சென்னையிலிருந்து வந்தோம். பேருந்தில் ஏறிய ஓர் இளைஞர் என்னிடம் ‘வணக்கம் சார் ‘ என்றார். நான் வணக்கம் சொல்லி என்ன செய்கிறீர்கள், எங்கே இருக்கிறீர்கள் என்று விசாரித்தேன். நெல்லைக்காரர். மென்பொருளாளர். ராம்குமார் என்று பெயர். மறுநாள் வீட்டுக்கு வந்து கணிப்பொறியை நோக்கினால் ராம்குமார் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். என்னைப்பார்க்கவே அந்தப்பேருந்தில் ஏறியதாகவும் ஆனால் நேரில் பேசமுடியவில்லை என்றும் சொல்லியிருந்தார். அவரை ஆலப்புழாவுக்கு அழைத்தேன். மறுநாள் அவர் கிளம்பி நாகர்கோயில் வந்தார். நாங்கள் நால்வருமாக நாகர்கோயிலில் இருந்து ரயிலில் ஆலப்புழா சென்றோம்.
கொஞ்சகாலமாகவே ஆலப்புழா வட்டாரத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறேன். கொஞ்சநாள் முன்னால் தண்ணீர்முக்கம் அருகே ஒரு ஓய்வுவிடுதியில் இருந்தேன். அதன்பின் நெடுமுடி அருகே. பொதுவாக ஆலப்புழாவில் இது சீசன் கிடையாது. சாரல் இருந்தால்தான் அப்பகுதி அழகாக இருக்கும். கோடையில் வெயில் அடிக்காது, ஆனால் நீராவி எழுந்து வியர்த்துக்கொட்டும். ஆனாலும் நண்பர்களுடன் இருந்தமையால் இடமும் சூழலும் பிடித்திருந்தது.
முந்தையநாளே சென்றுவிட்டோம். படகில் ஏறி மறுபக்கம் நாங்கள் தங்கியபழங்கால வீட்டுக்குச்சென்றோம். ஆலப்புழாவில் வீட்டுமுன்னாலேயே படகுத்துறை இருக்கும். வீட்டில் எல்லாருக்கும் ஆளுக்கொரு குட்டிப் படகும் இருக்கும். தண்ணீர் சூழ இருப்பதில் எப்போதும் ஒரு பரவசம் இருந்துகொண்டே இருக்கும், குறிப்பாகத் தமிழ்நாட்டுக்காரர்களுக்கு. அதை நண்பர்களிடம் பார்த்தேன். தேவதேவன் முந்தைய தினமே வந்திருந்தார் .ரயில்நிலையத்தில் தங்கி அப்பகுதியைத் தனியாகச் சுற்றிப்பார்த்து அந்த வீட்டைக் கண்டுபிடித்து அங்கே இருந்தார். ஈரோட்டில் இருந்து கிருஷ்ணன் விஜயராகவன் கவிஞர் மோகனரங்கன் இளங்கோ ஆகியோர் சேலம் பிரசாத்தின் வண்டியில் வந்திருந்தனர். சுதாகர் வந்திருந்தார். இரவில் அரங்கசாமியின் வண்டியில் ராஜமாணிக்கம் சிவக்குமார் ஆகியோர் வந்தனர். கோவையிலிருந்து ஷிமோகா ரவி வந்திருந்தார். கூடவே கடலூர் சீனு. இரவுணவுக்குப்பின் நள்ளிரவு வரை பேசிக்கொண்டிருந்தோம்..
மறுநாள் ஒரு காலைநடை சென்றோம். அழகிய கிராமப்புறம். தமிழகக்கிராமப்புறங்களில் உள்ள வெறிச்சிடலும் வறுமையும் இல்லை. பெரும்பாலான தமிழகக் கிராமங்களில் மிக ஏழைகள் மட்டுமே இன்று வாழ்கிறார்கள். கொஞ்சம் வசதியானவர்கள், ஓர் அரசுவேலை இருந்தால்கூட நகரம்நோக்கி வந்து புறநகரில் வீடு கட்டிக்கொள்கிறார்கள். இதனால் கிராமங்களில் எந்த வசதிகளும் இல்லை. கடைகள், மருத்துவ வசதி, கல்வி வசதி எதுவும். மேற்கொண்டு கிராமம் விட்டு மக்கள் இடம்பெயர அதுவே காரணமாகிறது. மேலும் சென்ற அரைநூற்றாண்டில் தமிழகக் கிராமங்களில் குப்பை அள்ளப்படவில்லை. ஆகவே எல்லா கிராமங்களும் மாபெரும் குப்பைமேடுகளாக இருக்கின்றன. கிராமப்புற நீர்நிலைகள் குப்பைக்கிடங்குகளாக நாறுகின்றன. வாழ்வதற்குகந்த தமிழகக்கிராமங்கள் அனேகமாக இல்லை என்பதே உண்மை.
ஆனால் கேரளத்தில் இன்றும் கிராமங்களில் வாழ விரும்புகிறார்கள். கணிசமானவர்கள் வெளிநாடுகளில் சென்று சம்பாதிக்கும் குடும்ப உறுப்பினர்கள் கொண்டவர்கள். ஆகவே கிராமப்புறங்களில் வசதியான அழகிய வீடுகள் நிறைந்திருக்கின்றன. கிராமப்புறங்களில் நல்ல கடைகள் கல்வி நிறுவனங்கள் மருத்துவர்கள் எல்லாருமே உள்ளனர். கேரளச்சாலைகள் மோசமானவையாக இருக்கும். சென்ற அச்சுதானந்தனின் அரசு நல்ல சாலைகளை அமைத்திருக்கிறது
குட்டநாடு என்று இப்பகுதி அழைக்கப்படுகிறது. பெரும்பாலும்சேறு மண்டிய நிலம். இதை வைப்புநிலம் என்பார்கள். அதாவது ஆறுகள் கொண்டு கொட்டிய சேறு நிரம்பி உருவான மண் இது. அழிமுகநீர்ப்பரப்பு வளைந்து வளைந்து எங்கும் உள்ளது. வயல்களும் அழிமுகநீர்வெளியும் கிட்டத்தட்ட ஒரே உயரத்தில். அக்காலத்தில் வயலில் இருந்து நீரை இறைது வெளியே கொட்டி விவசாயம் செய்வார்கள். இப்போது பல இடங்களில் தடுப்பணைகளைக் கட்டிவிட்டார்கள். குட்டநாடு கேரளத்தின் நெற்களஞ்சியம்.
சாலையோரத்து டீக்கடையில் டீ குடித்தோம். பொதுவாகவே மக்கள் நெரிசலற்ற இடமாகத் தோன்றியது. வயல்நடுவே ஒரு திட்டு, அதில் ஒரு வீடு. இன்னொரு வீடு இன்னொரு திட்டில். கடலில் நிற்கும் கப்பல்கள் போல. குட்டநாட்டின் அடையாளமாக இருந்த மாபெரும் வாத்துக்கூட்டங்கள் காணாமலாகிவிட்டன. வாத்துமேய்த்தவர்கள் மறைந்திருப்பார்கள். ஆனால் கள்ளுக்கடையில் முதல் தின்பண்டமாக வாத்துமுட்டை, வாத்து ஆகியவற்றைத்தான் எழுதி வைத்திருந்தார்கள்.
காலைபத்துமணிக்குள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். கலாப்பிரியாவும் சாம்ராஜும் கோயில்பட்டி சரவணனும் மதுரையில் இருந்து காரிலேயே வந்தார்கள். பாலசுப்ரமணியம் சென்னையிலிருந்து வந்தார். பதினோரு மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பித்தது. கல்பற்றாகவிதைகளை வாசித்து அதன் மேல் ஒவ்வொருவரின் வாசிப்புகளைப் பகிர்ந்து கொண்டே போவதுதான் நிகழ்ச்சி. கவிதைகளை விளக்குவதில்லை. ஆராய்ச்சி செய்வதில்லை. ஒரு கவிதையை வாசிக்கையில் நினைவுக்கு வரும் பிறகவிதைகளைச் சொல்வதுதான் முக்கியமானது. நிகழ்ச்சிகள் எண்ணங்கள் எனக் கவிதையைச்சூழ்ந்து எழுந்துவருவனவற்றைச் சொல்ல ஆரம்பிக்கையில் கவிதை மேலும் மேலும் தெளிவுபடுவது ஒரு பெரிய ஆச்சரியம். ஒரு கவிதையை இன்னொரு கவிதையால்தான் புரிந்துகொள்ளமுடியும் என்று சொல்லப்படுவதுண்டு. அதை இத்தகைய விவாதங்களில் எளிதில் உணரமுடியும்
மதியம் உணவு இடைவேளை. கேரளபாணி உணவு. அவியல், சாம்பார் மீன்கறி மீன்பொரியலுடன். சற்று நேரம் ஓய்வு அதன்பின் மாலை ஐந்துமணி வரை அடுத்த அமர்வு. ஒரு மாலைநடை. இன்னும்கூடக் கேரளத்தின் கிராமங்களில் கால்பந்து விளையாடப்படுவதைப்பற்றி நண்பர்கள் ஆச்சரியமடைந்தார்கள். கல்பற்றாநாராயணன் சமீபத்தில் நட்சத்திரக்கிரிக்கெட் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். கிரிக்கெட் மிகச்சிறந்த நிபுணர்களால் விளையாடப்பட்டால் மட்டும் சுவாரசியமாகக்கூடிய ஒரு விளையாட்டு என்றும், நிபுணத்துவமில்லாதவர்கள் விளையாடுவதைப் பார்ப்பது பெரும்கொடுமை என்றும் சொல்லியிருந்தார். கால்பந்து அப்படி அல்ல. அது எந்நிலையிலும் உற்சாகமான விளையாட்டு என்று சொல்லியிருந்தார். அதைப்பற்றிப் பேசிக்கொண்டோம்
இரவு மீண்டும் கவிதை வாசிப்பு. கல்பற்றநாராயணன் கவிதைகள் உற்சாகமானவை. கணிசமான கவிதைகள் நகைச்சுவையம்சம் கொண்டவை. ஆகவே வாசிப்பு சட்டென்று நகைச்சுவைத்துணுக்குகளுக்கு வேடிக்கைக்கதைகளுக்கெல்லாம் சென்றது. பலவகையிலும் அற்புதமான அனுபவமாக இருந்தது. இரவுணவில் மரவள்ளிக்கிழங்கும் மீனும் இருந்தது. அன்றும் இரவு பன்னிரண்டுமணி வரை பேசிக்கொண்டிருந்தோம். இலக்கியம் அரசியல் ஆகியவற்றுடன் மாறிமாறிக் ‘கலாய்’த்துக்கொள்வதும் உண்டு
மறுநாள் காலைநடை. பின் பத்துமணிக்கு அடுத்த அரங்கு. மதியம் வரை. கல்பற்றா நாராயணன் பொதுவாக சில வினாக்களுக்குப்பதில் சொன்னார். இரண்டுமணிக்கு அமர்வை முடித்துக்கொண்டோம். நானும் அலெக்ஸும் வினோதும் ராம்குமாரும் மாலை மூன்றரை மணிக்குக் கிளம்பி நாகர்கோயில் வந்தோம். அலெக்ஸ் ஒருநாள் என்னுடன் இருந்துவிட்டு இன்று கிளம்பினார். நான் மீண்டும் திருவனந்தபுரம் செல்கிறேன்
கவிதை விவாதங்களை விரிவாகவே எழுதலாமா என்ற எண்ணம் வந்தது. ஆனால் அவை வெறும் குறிப்புகளாகவே எஞ்சும். கூடி அமர்ந்து கவிதைகளை வாசிப்பதென்பது தமிழ்மரபில் இரண்டாயிரம் வருடங்களாக இருந்துவரக்கூடிய ஒரு வழக்கம். சான்றோரவை என்று அதை நம் இலக்கியங்கள் சொல்கின்றன. ஒரு கவிதையை ஒட்டிப் பல கோணங்களில் எழுந்துவரும் பலவகையான எண்ணங்களை சரியாகப் பதிவுசெய்ய முடியாது. அந்த அனுபவம் நேரடியாக அறியப்படவேண்டிய ஒன்று.
பேச்சுநடுவே நான் ஒரு நிகழ்ச்சியை நினைவுகூர்ந்தேன். மலையாளஇயக்குநர் டி.வி.சந்திரன் [தமிழில் ஆடும்கூத்து] என்னிடம் சொன்னார். ‘டேய் மயிரே, மலையாள சினிமா தமிழ் சினிமா மாதிரி இல்லை. அதை நினைத்து நீ திரைக்கதை எழுதவேண்டும். இங்கே படப்பிடிப்புக்கு ஒரு நல்ல காளைமாடு வேண்டும் என்று சொன்னால் கொஞ்சநேரம் கழித்து தயாரிப்பாளர் வந்து ‘சார் இது சின்ன பட்ஜெட் படம். பத்துகிலோ பீஃப் வாங்கித்தருகிறேன். அட்ஜெஸ்ட் செய்துகொள்ளுங்கள்’ என்று சொல்வார்’ கவிதைவிவாதங்கள் காளையைப்போல.