குருதி, நிலம் – கடிதங்கள்

திரு ஜெயமோகன்,

நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.

‘குருதி’ கண்ணில் நீர் கோர்க்க படித்தேன். படித்து முடித்ததும் மனசெல்லாம் பாரமாக இருக்கிறது. இத்தனைக்கும் இந்த மாதிரியான எந்த கொடுமையையும் கண் எதிரே கண்டதில்லை. நான் சார்ந்த சமூகம் எனக்குத் தெரிந்து பெரிதாக மிதிபட்டதில்லை. குறைந்தபட்சம் எங்கள் குடும்பமாவது ஒரு நான்கு தலைமுறைகளாக ‘மிட்டா மிராசாக’ இருந்து வருகிறது. குந்தி தின்றதில் குன்று கொஞ்சம், இல்லை நிறைய அழிந்திருக்கிறது.

‘லே என்னலே சேத்துக்காட்டான்…சமுசாரி ஆயிட்டே போல… ‘ என்பார்கள். ‘ஏதோ இருக்கேன் ஐயா’ என்பார் பணிவாக. ’அப்டியே வெள்ளைய சுத்திக்கிட்டு வண்டிகட்டிக்கிட்டு வந்து பஞ்சாயத்திலே ஒக்காரவேண்டியதுதானேடா?’

ஆனால் இப்படிப்பட்ட வன்மமும், பொறாமையும் தோய்ந்த வார்த்தைகளை கேட்டிருக்கிறேன். சமூகத்தின் கீழ் படியில் இருக்கும் ஒருவர் தலையெடுத்தால் எவ்வளவு காழ்ப்பு. அது தன்னுடைய சுற்றமாக இருந்தாலும் சரி, வேறு சாதியடுக்கில் இருப்பவர்களானாலும் சரி. எப்பொழுதும் சகலரும் தம்மை அண்டிப் பிழைப்பவராய் இருக்க வேண்டும் என்பதில் அப்படி ஒரு முனைப்பு.

எங்கள் ஊருக்கு ஒரு முறை வந்திருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள். தஞ்சை பகுதியில் குடிசைகள் அதிகம் என்றும் அப்போது சொன்னீர்கள். எங்கள் ஊரில் ஒருவன் நிலமே இல்லாமல் குடிசையில் வாழ்ந்து, திரைகடல் ஓடி, கட்டடம் கட்டி, சாலை போட்டு, கழிவறை தொட்டி வரை கழுவி, கொஞ்சம் நிமிர்ந்து நிலம் வாங்கி, மறுபடியும் ஓடி,  திரும்பி வந்து ஒரு மாடி வீடு கட்ட வேண்டியதுதான். புதுமனை புகுவிழாவிற்குப் பிறகு அங்கு நிரம்பியிருக்கும் existing நிலசுவான்தார்களின் பெருமூச்சை, பொறுமலை அகற்ற ஐயர், மந்திரவாதி யாரையாவதுதான் அந்த மனிதர் அழைக்க வேண்டும்.

நிலம், குருதி இரண்டு கதைகளுக்கும் எவ்வளவு தொடர்பு. இரண்டின் கதை நாயகர்களுக்கும் நிலத்தின் மேல் இருக்கும் பிடிப்பில் எவ்வளவு வேறுபாடு? ஒன்று maniacal, பிறிது rightful anger. நம் நாடு தோறும் நடக்கும் நிலம் கையகப்படுத்தும் போது நடக்கும் போராட்டங்களில் சிக்கும் எளியவர்களின் வலியை நினைக்காமல் ஒரு வரியையும் படிக்க முடியவில்லை. எந்த romanticism ம் இல்லாமல்தான் சொல்கிறேன்.

“அவருக்குத் தெரிந்திருந்தது. ஆனால் அவர் ஒன்றும் சொல்லவில்லை. ஒன்றும் செய்யவுமில்லை. சிதைந்து அழிந்த தக்காளிச்செடிகளை ஒவ்வொன்றாக எழுப்பி நிறுத்தி குச்சி வைத்துக் கட்டி தண்ணீர் ஊற்றி மீண்டும் உயிர்ப்பித்தார்.’

அவனுக்கு வேலைகிடைத்த மறுநாள் அவர் நாலடி நீளமான அரிவாளுடன் மேலகரம் நாயக்கர் வீட்டுக்குச் சென்றார்.

‘எட்டுவருசமா என் பிள்ளைய மேல வரட்டும்னு காத்திருந்தேன்’”

அச்சம் தவிர், ஆண்மை தவறேல், ரௌத்திரம் பழகு — என்றால் இதுதான் போலும்.

பின்குறிப்பு: என் தந்தைக்கு வேறு ஒரு ஊரில் சில ஏக்கர் நிலம் இருக்கிறது. அது கொஞ்சம் communist belt. பிரச்சனை எதுவும் இருந்ததில்லை. அந்த நிலங்களில் கொஞ்சம் விற்க முற்பட்டபோது, அங்கிருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் சிலரும் அதை வாங்க விருப்பம் தெரிவித்தனர். “நீங்கள் சொல்லும் விலை தருகிறோம். எங்களுக்கும் கொடுங்கள்.” என்று. ஆனால் எங்கள் உறவினர்களிடம் இருந்து அதற்கு அப்படி ஒரு எதிர்ப்பு. “அதெப்படி அவனுங்களுக்கு விக்கிறது. குறைச்சலோ கூடுதலோ எங்களுக்கு மட்டும் வித்தா போதும்.” அதை brush aside செய்து அப்பா விற்றது வேறு விஷயம். என் தந்தை பெரிய முற்போக்குவாதி எல்லாம் கிடையாது. ஆனால் சாதியை பிடித்துக்கொண்டு தொங்கியதும் கிடையாது. விஜயகாந்த் பாணியில் சொன்னால் “ஆங்கிலத்தில் எனக்குப் பிடிக்காத வார்த்தை ‘survival of the fittest'”

அன்புடன்,

மங்கை

அன்புள்ள மங்கை,

குருதி ஒரு யதார்த்தம். நேரடியான அப்பட்டமான தமிழக நிலை அது. ஏற்கனவே பலர் அதை தங்கள் கோணத்தில் எழுதியிருக்கிறார்கள். இமையம், அழகியபெரியவன்.

நீங்கள் சொல்லும் அதே நிகழ்ச்சியை, நிலத்தை உங்கள் தந்தை விற்ற நிகழ்ச்சியை, அப்படியே சோ.தருமன் அவரது கூகை நாவலில் எழுதியிருக்கிறார்.

ஜெ

அன்புள்ள ஜெ,

குருதி வாசித்தேன்.

காந்தியவழியைப் பற்றி பேசக்கூடிய நீங்கள் வன்முறையை ஆதரித்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சேத்துக்காட்டார் எதற்காக கொலை செய்யவேண்டும்? அது வன்முறைப்பாதையை மட்டும்தானே சொல்கிறது. சேத்துக்காட்டாரை பழிவாங்க அந்த நாயக்கரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவரது வாரிசுகளை பழிவாங்கியிருந்தால் அவரால் என்ன செய்திருக்கமுடியும்?

கதிர்

அன்புள்ள கதிர்,

குருதி ஒரு மனிதனின் கதையைச் சொல்கிறது. அவனுக்காக வாதாடவில்லை. அவனுக்கு எதிராகவும் வாதாடவில்லை.

ஜெ

நிலம் கதை குழந்தைப்பேறின்மையைப் பற்றிய கதை. குழந்தைப் பேறுக்காக ஏங்கிய அந்தப் பெண்ணின் ஏமாற்றங்கள், வருத்தங்கள், தாழ்வுணர்ச்சி எல்லாம் நுணுக்கமாகவும் ஒரு தாயின் பரிவோடும் நமக்கு எடுத்துச் சொல்கிறது. (வாடிய செம்பருத்தி முற்றமெல்லாம் உதிர்ந்து கிடக்கும் என்றவரி எவ்வளவு நுணுக்கமான ஒன்று.) குழந்தை பெறும் வாய்ப்பை தாண்டிய வயது அதற்கேற்ற அவள் உருவ மாற்றம் போன்றவற்றை எழுதிய விதம் மிகவும் அருமை, கவித்துவமானது. குழந்தையற்ற பெண்ணின் வருத்தத்தை சொல்லும் கதையென நான் நினத்திருக்கையில் கடைசி சில வரிகளில் மொத்தகதையும் குழந்தையற்ற அவள் கணவனின் கதையாக மாறிப்போகிறது. தன் பேர் சொல்ல குழந்தையில்லாததால் அவன் நிலத்தை அதிக அளவில் வாங்கி தன் பேரை நிலைக்க வைக்க முயல்கிறான். அவனின் அடாவடித்தனத்திற்கெல்லாம் இப்போது பொருள் விளங்குகிறது. குழந்தையற்ற கடவுளான ஐயனாரோடு அவனை இணைத்துப் பேசுவது பொருந்திப்போகிறது. குழந்தைப்பேறின்மை ஒரு ஆணுக்கு ஏற்படுத்தும் இழப்பு அதிக துயரமானது. விலங்கினங்களில் கூட ஆண் விலங்குகள் தன் சந்ததி தழைக்க காட்டும் ஆர்வம், கொல்லப்பட்டாலும் பரவாயில்லையென அதற்குக் கொடுக்கும் முக்கியத்துவம் குறிப்பிடத் தகுந்தது.

த.துரைவேல்

முந்தைய கட்டுரைவாசிப்பின் பெரும்தடை
அடுத்த கட்டுரைஉலகின் மிகப்பெரிய வாழைப்பழம்