பிழை, குருதி-கடிதங்கள்

என் அன்பிற்கும் மரியாதைக்குமுரிய இனியன் ஜெயமோகனுக்கு,

காலம் இதழில், உங்களின் “பிழை” கதை படித்தேன். அறம் தொகுதியில் இடம்பெற வேண்டிய படைப்பு, சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். தனி மனித வாழ்வின் அற்புதமான தருணங்களை அழகாகவும் கவிதையாகவும் சொல்லுகின்ற உங்களின் சாமர்த்தியத்தை வியந்து நிற்கிறேன். உங்களை நான் சந்தித்த வேளை நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்று முகத்துக்கு நேரே சொன்னீர்கள். அறம் தொகுதியில் உள்ள கதைகளும் பிழை கதையின் ஒவ்வொரு வரியும் கடவுள் இருப்பதைத்தான் எனக்குக் காட்டுகிறது. ஒவ்வொரு கதையையும் படித்து விட்டு அந்தக் கதையினூடே பயணித்து கண் மூடித் தியானித்து ஆறுதலடைவது அந்த வேளை எவ்வளவு சுகமானது. உங்களெழுத்தின் வல்லமையே அதுதான். நீண்ட ஆயுளும் தேக சுகமும் கிட்ட பிரார்த்திக்கிறேன்.

அன்புடன்
எஸ்.எல்.எம். ஹனீபா

அன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய ஹனீபா அவர்களுக்கு,

நலம்தானே? உங்கள் பெயரைக் கண்டதும் உங்கள் உற்சாகச்சிரிப்பைக் கேட்டேன். ஒரு பயணத்தின் நடுவே நெரிசலான சாலையில் என் முகம் மலர்ந்துவிட்டது.

கடவுள் எனக்குத் தென்படாவிட்டாலும் என் எழுத்துக்களுக்குத் தென்பட்டால் நல்லதுதானே?

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

பொதுவாகவே தங்கள் தளத்தில் வரும் புனைவுகளைப் படிக்க மாட்டேன். காரணம், இணையத்தில் படித்து விட்டால் அவை புத்தகமாக வரும் போது வாங்க ஒத்துக் கொள்ளாத ஒரு நடுத்தர வர்க்க மனநிலை தான். ஒரு உண்மையான படைப்பாளிக்குச் செய்யும் ஒரு குறைந்த பட்ச மரியாதையை மறுப்பதாக ஒரு எண்ணம். (தவறாகக் கூட இருக்கலாம்.)

அறம் கதைகள் வெளிவந்த போதும் இப்படித்தான் செய்தேன். அச்சில் வந்த பின்னரே வாங்கிப் படித்தேன். “சோற்றுக் கணக்கு” குறித்து தங்களுக்கு ஒரு கடிதம் கூட எழுதியிருந்தேன்.

ஆனால் எவ்வளவு முயற்சித்தும் இம்முறை நடக்கவில்லை. “கைதிகள்” மற்றும் “அம்மையப்பம்” கதைகளைப் படித்து விட்டுக் கிறங்கித் திரிகிறேன்.

அந்தப் பறவையை எனது மனமாகவே நான் உணர்கிறேன். “இங்க வேல ரொம்ப கஷ்டம்தான் இல்ல தோழர்? -ன்னு கேட்டான்” என்ற வரியைப் படித்துவிட்டு கண்ணீரோடு வெகு நேரம் அமர்ந்திருந்தேன்.

எனது தற்போதைய பணிச்சூழல் கூட அந்த ஆசாரியை எனக்குப் பிடிக்கச் செய்திருக்கலாம்.

உங்கள் படைப்பில் நீங்கள் சொல்ல வந்ததை முழுமையாகக் கண்டுகொண்டேனா இல்லையா என எனக்குத் தெரியவில்லை.

ஆரம்ப நிலையில் உள்ள எனது வாசிப்பின் மூலம், எனக்குப் பிடிபடும் விஷயங்கள் சிலவே இவ்வளவு அக மகிழ்ச்சியைத் தருமெனில்…

தவிர்க்க இயலாத குடும்பச் சூழலினால், உயிரைப் போன்ற என் மகளைப் பிரிந்து வாழும் இந்நாட்களில் கிடைக்கும் ஒரு சில அற்புதக் கணங்கள் உங்களின் கதைகள் மூலமே.

மிக்க நன்றி.

என்றென்றும் அன்புடன்,
மூர்த்திஜி

அன்புள்ள மூர்த்தி

கதைகளை இணையத்தில் வாசிப்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன். அவை நமக்குக் கையில் அகப்படுபவையாக உள்ளன. எந்நேரத்திலும் எங்கும். நூல்களையும் பணம்கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். இரண்டாவது நுண்வாசிப்புக்கு அது உதவும்.

நலம்நாடும்

ஜெ

அன்புள்ள திரு ஜெயமோகன்

குருதி படித்துவிட்டு ஆடிப்போய்விட்டேன்.

காந்தியைப் பேசுகிறீர்கள். காந்தியமே சரி என்கிறீர்கள். எனக்கும் அதே உடன்பாடு.

ஆனால் ஏழைக்கு காந்தியம் நீதியைக் கொடுக்குமா?? ஏழைகளுக்கு நீதி எப்படி, யாரால் கொடுக்க முடியும் இந்தக் காலத்தில்?

சேத்துக்காட்டாருக்கு எட்டு வருடங்களும் நரகம் அல்லவா? தலை வெட்டிய பின்னர் தானே அவரைப் பொறுத்தவரை நீதி அவருக்குக் கிடைத்தது.

பணம், அதிகாரம் உள்ளவர்களுக்கு காந்தியம் அவசியம் இல்லை. சேத்துக்காட்டாருக்கு காந்தியத்தால் அவர் வாழ்நாளில் நீதி கிடைக்கப் போவதில்லை??

அவரின் குடும்பமே அவரை ஒதுக்கி வைக்கிறது அவரின் கடைசி காலத்தில்!! போற்ற வேண்டாமோ அவரை?

அஹிம்சை செய்ததால் அவருக்கு நீதி கிடைத்தாலும், இறுதியில் தன் நிலத்தில் வாழ்ந்தாலும், முதுமையில் தனிமை கொடிதல்லவா??

ஆனாலும் தன் நிலத்தில் பெருமையாகவே வாழ்ந்து அதையே சுடலைக்கும் உபதேசம் செய்யும் போது அஹிம்சையே ஏழைகளுக்கு நீதி கொடுக்கும் என்று சொல்ல வருகிறீர்களா?

குழப்பமாக இருக்கிறேதே??

ஆனாலும் என்னைப் பொறுத்தவரை சேத்துக்காட்டார் ஒரு பெரிய வீரனாகவே பட்டார்.

வலிமையாக இருந்தது குருதி.

வாழ்த்துக்கள்.

அன்புடன்
மாலா

அன்புள்ள மாலா

கதைகளில் ஆசிரியர் சொல்லக்கூடிய, விளக்கக் கூடிய எதுவும் உண்மையில் இல்லை. வாழ்க்கையைப் பார்ப்பதுமட்டுமே அங்கே நாம் செய்யக்கூடுவது.

எனக்கும்கூடத்தான் சேத்துக்காட்டார் விலக்கப்பட்டது வலி தந்தது.

ஜெ

முந்தைய கட்டுரைதிருமுகப்பில்…..
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் உதவி