ஜெயமோகன்,
“இந்நிலையில் நம் சூழலில் எப்போதும் நிகழும் ஒன்று உண்டு. தகவல்பிழைகளைக் கண்டடைந்து அதன் அடிப்படையில் விவாதத்தை முன்னெடுப்பது. ஒரு கட்டுரையை கூர்ந்து கவ,னித்து தகவல்பிழை ஒன்றை கண்டுபிடித்து ‘இதைக்கூட தெரியாமல் எழுதிய இவனெல்லாம் பேசலாமா’ என்ற தோரணையில் எழுதப்படும் கட்டுரைகளை நாம் சர்வசாதாரணமாக தமிழில் காணலாம். சமயங்களில் அது தட்டச்சுப்பிழையாகவோ அல்லது வாசகரின் புரிதல்பிழையாகவோ இருக்கும். ஒரு கட்டுரையின் தகவல்பிழை ஒருபோதும் அதன் மையமான வாதத்தை நிராகரிக்க காரணமாகாது என்பது எல்லா விவாதங்களிலும் உள்ள அடிப்படைவிதி” மேற்கண்ட கருத்தை சொல்லிய நீங்களே “யாருடைய காலில் வேண்டுமானாலும் விழும் தமிழர்கள்” என்ற அரவிந்தன் கண்ணையனின் கருத்தை திரித்து “காலில் விழும் தமிழ்க்குணத்தைப் பற்றிய நக்கல் அயன் ராண்டின் ரசிகருக்கு உகந்ததே. காலில் விழுவதென்பது இந்தியப்பண்பாட்டின் மிக மிக உயர்ந்த ஒரு ஆசாரம்.” என்று கூறியிருக்கிறீர்கள். அவர் எந்த காலில் விழும் கலாச்சாரத்தை குறிப்பிடுகிறார் என்பது எனக்குப்புரியும்போது தங்களுக்கு புரியாமலா இருக்கும். உன்னதனமான காலில் விழும் கலாச்சாரம், தற்போதைய சந்தர்ப்பவாத தமிழினத்தினால் எந்தளவுக்கு கேவலப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தாங்கள் அறியாததா?
மணிவண்ணன் அன்புள்ள மணி
சில வருடங்களுக்கு முன்னர் நான் திரு கருணாநிதி அவர்களின் காலில்
எழுத்தாளர்கள் விழ முற்பட்டதைச்சொல்லி மிகக் கடுமையாக
எதிர்வினையாறியிருக்கிறேன். அதிகாரம் பணம் ஆகியவறின் காலில் விழுதல் நம்
மரபல்ல. அது கோழைத்தனமாகவே கருதப்படும். ஒருவன் பெறோர் அல்லது பெற்றோரின்
இடத்தில் இருக்கும் மூத்தவர், குரு அல்லது குருவின் இடத்தில் இருக்கும்
சான்றோர் ஆகியோரின் காலில் மட்டுமே விழவேண்டும். அது ஓர் உயர்ந்த மரபு.
இம்மண்ணில் நாம் எத்தனை பெரியவரென்றாலும் நாம் ஒரு பெரிய ஓட்டத்தில் சிறு
துளிகளே என்றும் ஒரு பெரிய சங்கிலியின் கண்ணிகளே என்றும் நமக்குணர்த்தும்
விஷயம் அது. கல்வி மூலம் ஞானம் மூலம் வரும் மிக தவறான அம்சம் என்றால்
அகந்தையே. அகந்தையை வெல்ல ஒரே வழி பணிய வேண்டிய இடத்தில் பணிதலே
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து
என்று சொல்கிறார் வள்ளுவர்
ஜெ
வணக்கம் ஜெயமோகன்.
மா. அரங்கநாதனின் சித்தி என்ற சிறுகதை (சமீபத்திய தமிழ் சிறுகதைகள், என்.பி.டி). ஒரு ஏழை சிறுவனுக்கு ஓடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அந்த நாட்டில் மைதானங்கள் குறைவு என்பதனால், கிடைத்த இடத்திலெல்லாம் ஓடிக்கொண்டிருக்கிறான். அவன் ஓடுவதை பார்க்கும் ஒரு விளையாட்டு பயிற்சியாளர் அவனை தேசத்திற்காக ஓட வைக்க வேண்டும் என்று அவனுக்கு பயிற்சி அளிக்கிறார். நெடுந்தூரம் ஓடுவதில் அவனது திறமை கூடுகிறது. அவன் ஒலிம்பிக் போட்டிகளில் ஓட தேர்ந்தெடுக்கப்படலாம் என்று பேச்சு இருக்கிறது. ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவனிடம் பேட்டி எடுக்கிறார்கள்.
நீங்கள் போட்டியிடும் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மகிழ்ச்சி தானே?
எனக்கு ஓடுவதில் ரொம்பவும் மகிழ்ச்சி.
நம் நாட்டிற்கு பெருமை தேடி தருவீர்கள் அல்லவா?
ஓடுவது ரொம்பவும் நன்றாகவிருக்கிறது.
போன ஒலிம்பிக்கில் வென்ற வீரர் பற்றி உங்கள் கருத்து?
ஓடுபவர்கள் எல்லாருமே மகிழ்ச்சியடைவார்கள். அவர்கள் எல்லாரையும் நினைத்தால் நான் சமாதானமடைகிறேன்.
நமது நாடு விளையாட்டில் முன்னேறுமா?
சற்று தயங்கி, பின் கூறுகிறான். “எனக்கு ஓட மட்டுமே தெரியும். அதிலே எனக்கு கிடைப்பதுதான் நான் ஓடுவதற்கு காரணம். நான் எனக்காகவே ஓடுகிறேன். ஓட்டத்தின் சிறப்பு தான் அதன் காரணம். எனக்கு வேறெதுவும் தெரியாது.”
Achievement of your happiness is the only moral purpose of your life, and that happiness, not pain or mindless self-indulgence, is the proof of your moral integrity, since it is the proof and the result of your loyalty to the achievement of your values.
என்கிறார் அயன் ராண்ட். இக்கூற்றினை பற்றிய கதையாகவே எனக்கு அரங்கநாதனின் கதை பட்டது.
இந்த தனிமனித ஆற்றல் குறித்த நம்பிக்கையே அயன் ராண்டிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயமாக இருக்கிறது. அயன் ராண்ட் குறித்த எனது எளிமையான புரிதல் இது தான்: மனிதனை சமூகத்தின் அங்கமாக பார்த்தல், சமூகத்தை தனி மனிதர்களின் கூட்டாக பார்த்தல் என்று இரு பார்வைகள் உண்டு. அயன் ராண்ட் தனி மனிதனின் இருப்பை, அவன் ஆற்றலை, அவனது மகிழ்ச்சியை பற்றியே பேசுகிறார்.
“It is not from the benevolence of the butcher, the brewer or the baker, that we expect our dinner, but from their regard to their own self-interest. We address ourselves, not to their humanity but to their self-love, and never talk to them of our own necessities but of their advantage.”
இது ஆடம் ஸ்மித் Capitalism குறித்து கூறிய கூற்று. இந்த குரலே அயன் ராண்டிலும் ஒலிக்கிறதாக படுகிறது. அயன் ராண்ட் சமூகத்திற்கு எதிரி அல்ல. ஆனால் சமூகத்தின் பசிக்கு தனி மனிதனை இரையாக்குவதை எதிர்க்கிறார். புதுமை பித்தனின் சிற்பியின் நரகம் கதையில் வரும் யவனனும் அயன் ராண்டின் பிரதிநிதியாகவே வருவதாக தோன்றுகிறது.
சித்தார்த்.
—
அன்புள்ள சித்தார்த்
நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். கிட்டத்தட்ட அதுவே என்
கருத்தும். அயன் ரான்ட் இளைஞர்களில் ஒரு தன்னம்பிக்கையையும்
முழுமைநோக்கிய அவாவையும் உருவாக்க முடியும். அவர் இளைஞர்களுக்கான
எழுத்தாளர்தான்
ஆனால் அவரது நோக்கை ஒரு முழுமையான வாழ்க்கை நோக்காக ஒருவன் எண்ணினான்
என்றால், அவரில் இருந்து அவன் முன்னகரவில்லை என்றால், தை மட்டுமே
வாசித்து சிந்தனைசெய்வான் என்றால் மிகவும் தவறான சில இடங்களுக்கு அவன்
சென்றுவிடக்கூடும்
இதுவே நான் சொல்லவந்தது
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்,
தங்கள் அமெரிக்க பயணம் இனிதாக உள்ளது என நம்புகிறேன். இன்று நீங்கள்
எழுதிய பதிவில் அமெரிக்க கல்வி முறை மேலானது என சொன்னீர்கள், அது குறித்த என் எண்ணத்தை பதியலாம் என இந்த மடல் எழுதுகிறேன்.
வாதம் x எதிர்வாதம் என்ற முறையில் படிப்பது நமது இந்திய முறை கல்விக்கு மேலானதாக இருக்கலாம், ஆனால் குழந்தைகளுக்கு எந்த வயதில் அந்த முறை கல்வி கொடுக்கொறோம் என்பதில் தான் அதன் பயன் தெரியும். இங்கு அமெரிக்காவில் குழந்தைகளுக்கு சிறிய வயதில் அடிப்படை விஷயங்களை சொல்லி தராமல், அவர்களுக்கு தேவையான அளவு கல்வி பளு தராமல், இங்குள்ள இளம் தலைமுறையினர் இன்றுள்ள போட்டியான உலகில் பின்தங்கி உள்ளனர். அமெரிக்க வழி கல்வி கல்லூரி வயதில் மிகவும் சிறந்தது, ஆனால் பள்ளி பருவத்திற்கு இந்திய வழி கல்வியே சிறந்தது என்பது என் கருத்து.
குறிப்பு: நான் இந்தியாவில் பள்ளி படிப்பும், பொறியியல் இளங்கலை பட்டமும் பெற்ற பின் மிச்சிகன் மாநிலத்தில் பொறியியல் முதுகலை பட்டம் பெற்றேன். நான் பதிந்த இந்த எண்ணம் எனது அனுபவத்தின் அடிப்படையில் அமைந்தது.
வினோ கிங்ஸ்டன்
அன்புள்ள வினோ
அமெரிக்க வழி கல்வியைப்பற்றி எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது–
நண்பர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். இங்குள்ள கல்விமுறையை அறிய இங்கேயே
கொஞ்சம் ஆழமாக சென்று பார்க்கவேண்டும். குறிப்பாக கல்வியை மாணவர்களின்
சமூக பொருளியல் பின்னணி இன்றிஉ பார்க்கமுடியாது. எனக்கு இங்கே பீட்டர்
மொரேஸ் என்ற மிக நெருக்கமான நண்பர்– கல்வியாளர்- இருக்கிறார்.
நித்யாவின் மாணவராக ஆய்வுசெய்தவர். அவருடன் சில வருடங்கள் முன் விரிவாக
உரையாடியிருக்கிறேன். இங்கே ஆரம்பப்பள்ளியில் ஆசிரியர்களாக இருக்கும் சில
நண்பர்கள் உள்ளனர்
உங்கள் அனுபவம் சார்ந்த கருத்து முக்கியமானது. அதைப்பற்றி யோசிக்கவேண்டியது உள்ளது
ஜெ
அப்படியே Atlas Shrugged-உம் படிச்சிருங்க. பொதுவா Objectivism-க்கு மூல நூலா கருதப்படும் நாவல். நடுவிலே தூக்கி கடாசாம முழுசா படிசீங்கனா பாராட்டனும் :-) Fountainhead எவ்வளவோ மேல். என்னை பொறுத்தவரையில் Fountainhead-இன் சாராம்சம் Hero Worship அல்லது Ego worship. நாமே நம்மளை மதிக்கிரதுக்கு தேவையான பண்புகளை பற்றி பேசும் நாவல்.
நவீன்