சுஜாதா அறிமுகம்
மணிரத்னமும் நானும் பொன்னியின் செல்வனுக்காகத் தஞ்சையில் இடம்பார்க்க அலைந்தோம். மணிரத்னம் கூட்டத்தை அஞ்சுபவர். ஆகவே பொதுவாக வெளியே வரமாட்டார். ஆனால் தஞ்சையில் அவரை யார் அடையாளம் காணப்போகிறார்கள் என்று நினைத்தேன். அவருடன் தெருக்களில் சுற்றியலைந்தபோது ஒன்று தெரிந்தது. பிரபலங்களை மக்கள் ஒரு குறிப்பிட்ட தோரணையில் கற்பனைசெய்திருக்கிறார்கள். வேறுமாதிரி இருந்தால் எளிதில் அடையாளம் காணமாட்டார்கள். கும்பகோணம் ராமசாமிகோயில் முன் கல்லில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் இருவரில் ஒருவர் மணிரத்னம் என்று யாரால் சொல்லமுடியும்?
ஆனால் பெண்கள் அடையாளம் கண்டுகொண்டார்கள். நேராக வந்து ‘சார் நீங்க மணியா?’ என உரிமையுடன் அறிமுகம் செய்துகொள்ளும் பெண்கள் ஒரு ரகம். கணவனையோ மகனையோ அல்லது பக்கத்தில்நிற்பவரையோ அனுப்பி விசாரிக்கும்பெண்கள் இன்னொரு ரகம். ஒருவர் அடையாளம் கண்டுகொண்டால் உடனே கூட்டம்தான். நெரிசல்தான்
மொத்த தஞ்சைப் பயணத்திலும் என்னை எவருக்கும் தெரியவில்லை. சிலர் ‘நீங்க?’ என்பார்கள். ‘ஃப்ரெண்டு’ என்பேன். சிலர் மானேஜர் என்றே முடிவுசெய்வார்கள். கடைசி ஊர் தஞ்சாவூர். மறுநாள் கிளம்பிவிடவேண்டும். தஞ்சை சரபோஜி அரண்மனை பார்த்துவிட்டு வெளியே வருகிறோம். சட்டென்று முன்வழுக்கையும் செல்லத்தொந்தியுமாக ஒருவர் ஓடி வந்தார். வியர்வை வழிந்தது.வருவதைப் பார்த்தபோதே தெரிந்தது. ‘மணி அடுத்த ஆள்…இங்க நெறைய பையன்கள் இருக்கானுங்க…இவரு வந்ததுமே எல்லாரும் கூடிருவாங்க…வெளிய போய்டலாம்’ என்றேன்
வந்தவர் நேராக என்னிடம் வந்து ‘சார் நீங்க ரைட்டர் ஜெயமோகன்தானே? நான் உங்க வாசகர்…பிளாகெல்லாம் படிப்பேன்’ என்றார். மூச்சுத்திணறக் கைகுலுக்கிவிட்டு மணிரத்னத்தை நோக்கி ’சார் யாரு ஃப்ரண்டா?’ என்றார். ஒருகணம் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பிறகு சிரிக்க ஆரம்பித்தேன்
அந்தவருடம் கோவை விஷ்ணுபுரம் விருது விழாவின்போது காலையில் அறையில் பேசிக்கொண்டிருந்தோம். பெரிய கூட்டம். நான் இச்சம்பவத்தைச் சொன்னேன். ஒருவர் ‘சார் அது நான்தான்….எங்க பசங்களோட காலேஜ் டூர் வந்தேன்’ என்றார். அவர் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறாராம். அத்தனைபேருக்கும் ஆச்சரியம் தாளவில்லை.’எழுதினா நம்ப மாட்டாங்க சார்’ என்றார் அரங்கசாமி.
சுஜாதாபற்றி நண்பர் எஸ்.கெ.பி.கருணா எழுதிய சிறு குறிப்பை வாசித்தேன். நேரடியான நடையில் அழகாக எழுதப்பட்ட குறிப்பில் சுஜாதாவும் கருணாவும் மட்டுமல்ல கமலும் தெரிகிறார்