குரல்பணியாளர்கள்

அசடுகளும் மகாஅசடுகளும் – எதிர்வினை

அனைவருக்கும் நான் முதலில் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். இந்தப் பதிவு எழுத்தாளர்கள் என்ற பெயரில் சமூக மேன்மைக்குப் பாடுபடும் களப்பணியாளர்களை அவமதிக்கும் பாசிசப் போக்கை எதிர்த்துதான் இடப்படுகிறது.

முதலில் இந்த நிகழ்ச்சியில் அப்படி என்ன தவறு நிகழ்ந்து விட்டது என்று ராமசாமியும் , அவருக்கு ஒத்திசைவாய் ஜெயமோகனும் மாய்ந்து போகிறார்கள்?

இன்னும் இரண்டு விழுக்காடு கூட இல்லாத பார்ப்பன பயங்கரவாதம் தமிழ் சமூகத்தின் மீது காரிருளைப் படர விட்டுக் கொண்டிருக்கிறதே. அதை அறியாத இன்றைய தலைமுறையை அவர்களது பொறுப்பை உணர்த்தும் விதமாய்ப் பேசியதைத் தவறு என்கிறார்களா இருவரும்?

சமூக அவலங்கள மீதும், பெண்ணடிமைத்தனத்தின் மீதும் , சாதிப் புரட்டுகளின் மீதும் பெரியாரும், அம்பேத்காரும் தொடுத்த போர் இன்னும் முற்றுப் பெறாமல் , அடுத்த கட்ட நகர்வை எதிர்நோக்கி நிற்பதை இன்றைய ஈழம் சொல்கிறதே , அதை அறியாத தலைமுறையைக் களப் பணியாளர்கள் இடித்துக் கூறியதை தவறு என்கிறார்களா இருவரும்? அதுவும் இடிப்பதைக் கொஞ்சம் இளிப்புடன் செய்ததை மாணவர்கள் பால் நாங்கள் கொண்ட அன்பு என்று கூட உணராமல் “எக்காளச்” சிரிப்பு என்று சொன்னால் நமது களப் போர் எதிரிகள் எவ்வளவு வலுவானவர்கள் என உணர முடிகிறதா நண்பர்களே?

களப்பணியாளர்கள் என்ன களப்பணி செய்தார்கள் என்று கேட்டால் சங்கடப்படுவாராம் ஒருவர். அப்படி சங்கடப்பட என்ன இருக்கிறது ? களப்பணியைப் பட்டியலிட்டால் இடம் பற்றாது.

தமிழகத்தில் ஒடுக்கப்பட்டோர் , விளிம்பு நிலையில் இருப்போர் எங்கிருப்பினும் அங்கு சென்று அவர்களைக் குறித்த ஆவணப்படம் ஒன்றை எடுத்து அதை சர்வதேச அரங்குகளில் திரையிடுவது, மாறி வரும் காலத்தில் போராட்டக் களம் இணையமே என்றாகிவிட்ட நிலையில் இணையத்தளத்தில் சமூக மேம்பாட்டை உறுதி செய்து குரலுயர்த்துவது, சமூகத்தின் அனைத்துத் தரப்பையும் சென்று சேரும் தொலைக்காட்சி ஊடகத்தின் மூலம் சமூக சீர்கேடுகளைத் தட்டிக் கேட்பது, இடை இடையே நேரம் போகா நேரங்களில் பெண்ணுரிமை, பெண் விடுதலைக்குக் குரல் கொடுப்பது, எங்கும், எப்போதும் , எல்லா வகைகளிலும் நசுக்கப்படும் சிறுபான்மையினரின் நலனைக் காக்கக் குரல் கொடுப்பது , எங்களைத் தவிரப் பிறர் ஈடுபடும் போராட்டங்களிலுள்ள போலித்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவது, அருந்ததி ராய் போன்ற நாட்டின் சிறந்த சிந்தனையாளர்களின் கருத்துகளை அரசாங்கத்தின் ஏமாற்று வேலைகளால் புறக்கணிக்கப்பட்ட கல்வியறிவில்லா மக்களுக்கு சென்று சேரும் விதத்தில் இணையத்திலும், இதழ்களிலும் மொழிபெயர்த்து வெளியிடுவது , விடுதிகளில் குளிரூட்டப்பட்ட அறைகளில் கருத்தரங்குகள், விவாதங்கள், மூலம் சமூக அவலங்களைச் சாடுவது, உள்ளூர் சிக்கல்களை உலகளாவிய பிரச்சினைகளாக்க முயல்வது…… இன்னும் எத்தனை,…. தன்னடக்கம் கருதியும், அகந்தைக்கு இடமளிக்கும் என்பதாலும் பட்டியலை இங்கே நிறுத்துகிறேன். இவையெல்லாம் களப்பணிகள் இல்லை என்றால் காந்தியர்கள் போல அமைதியாய் இந்துத்துவம் பேசுவதுதான் களப்பணி என்கிறாரா ஜெயமோகன்?

குரல் கொடுத்து, குரல் கொடுத்தே எவரும் விரல் நீட்ட முடியா இடத்திற்குக் களப் பணியாளர்கள் சென்று சேர்ந்ததை ஏன் இவர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை?

நண்பர்களே! ஒன்றும் அறியா மாணவர்கள் என்பதால்தான் நாங்கள் அந்தப் புத்தகங்களைப் பரிந்துரை செய்தோம். அவர்கள் கொஞ்சம் விவரமானவர்கள் என்றால் “பாண்டி பஜார் ” சாலையோரக் கடைகளில் விற்கும் புத்தகங்களைத் தாண்டி இன்னும் சில சொல்லியிருப்போம..நாங்கள் வாசிப்பதில்லை என்கிறார்கள். ஆம் ! அடித்தட்டு மக்களை , நசுக்கப்பட்டவர்களை, உரிமை பறிக்கப்பட்டவர்களை, ஒடுக்கப்பட்டவர்களை மட்டுமே வாசித்து, பதிவு செய்வதில் ஓய்வறியாது உழைக்கும் எங்களுக்கு வெறும் புத்தகங்களை வாசிக்க நேரமில்லைதான். அதற்காக எங்களுக்கு அசட்டுப் பட்டம் என்றால் இந்த சமுதாயத்தின் நலனுக்காக அதையும் ஏற்க நாங்கள் தயார்தான்.

இப்படி எங்களை ஏசுபவர்கள் ராமசாமியாகவும், ஜெயமோகனாகவும் இருப்பது “காவி பயங்கரவாதத்தின்” ஒரு பகுதியே என்றால் வியப்படைவீர்களா என்ன?

இப்படிக்கு

கடுமையான களப்பணி கருத்து மனநிலையில்,
ராஜகோபாலன் ஜா, சென்னை

முந்தைய கட்டுரைநுகர்வெனும் பெரும்பசி-கடலூர் சீனு
அடுத்த கட்டுரைசுஜாதாவை அடையாளம் காண்பது…