தீபமும் கிடாவும்- கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

தீபம் மிக அற்புதமான கதை. வார்த்தைகளுக்கு அகப்படாத அக எழுச்சியைத்
தந்தது. லட்சுமி ஏற்றிய தீபம் முருகேசன் மனத்தில் மட்டுமல்லாமல், என்
இதயத்திலும் சுடர் விட்டு எரிந்து ஒளி வீசுகிறது,

அன்புடன்,
சந்திரசேகரன்

அன்புள்ள சந்திரசேகரன்

சிலசமயம் கதைகளில் ஒன்றுமே இல்லாமல் எல்லாம் அமைந்துவிடுகிறது

ஜெ

அன்புள்ள ஜெ ,

கிடா…. கண்களை மூடிக் கொண்டே யாரையாவது வாசிக்க சொல்லிக் கேட்டால்… ஒரு மிக நல்ல மண்வாசனை நிறைந்த குறும்படம் பார்ப்பது போல இருந்தது. ஒரு சின்ன உதாரணம்.. இதோ…
பனம்பாய்களில் பெண்கள் புடவையின் ஓர் அடுக்கை விலக்கி அடிப்பகுதி படும்படியாக அமர்ந்துகொண்டார்கள்.

நல்ல சிறுகதை

பிரசன்னா ராமசுப்ரமணியன்

அன்புள்ள பிரசன்னா

இவ்வகைக் கதைகளில் நுட்பம் என்பது காட்சிகளில்தான் இருக்கிறது. ஏனென்றால் இவை நாம் புறக்கண்ணால் பார்க்கும் ஓர் உலகைச்சார்ந்த கதைகள்

ஜெ

அன்புள்ள ஜெ

தொடர்ச்சியாகக் கதைகளை வாசித்துவருகிறேன். கலைடாஸ்கோப்பை சுழற்றியது மாதிரி விதவிதமான கதைகள். புனைவில் என்னென்ன சாத்தியம் என்றெல்லாம் காட்டக்கூடிய கதைகள். மொழியும் மனிதர்களும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். புதியபுதிய உலகங்கள் வருகின்றன

என்னமோ எனக்கு தீபம் மிகவும் பிடித்த கதை. மாமன் மகள்மீது கொண்ட காதல். அந்தப்பெண்ணையும் அவள் வீட்டையும் முருகேசனுக்கு மிகமிக நன்றாகவே தெரியும். ஆனால் எல்லாமே முற்றிலும் அன்னியமாக ஆகிவிட்டதை அவன் உணர்கிறான். அந்த வீட்டுக்குள் போக முடியவில்லை. மாமன் மகளைப் பார்க்க முடியவில்லை. அந்த தூரம் உருவாக்கும் பரவசம்தான் கதை இல்லையா?

ஆனால் மறுபக்கம் அந்த மண்ணும் மலைகளும் சூரியனும் எல்லாம் மிக அருகே வந்துவிட்டன

ரவிச்சந்திரன்

முந்தைய கட்டுரைநிலம் கடிதம்
அடுத்த கட்டுரைஅம்மா இங்கே வா வா-கடிதம்