திரு ஜெ
கடந்த சில தினங்களாக தங்களின் வலையில் வரும் சிறுகதைகளைத் தவிர்த்துக் கட்டுரைகளை மட்டும் வாசிக்கிறேன்.
காரணம், அதை நான் மீண்டும் புத்தக வடிவில் வாசிக்கையில் அந்த முதல் வாசிப்பின் நேர்த்தி(இது பொருத்தமான வார்த்தை அல்ல) கிட்டுவதில்லை. எனது இந்த முறையிலான வாசிப்பு சரியா என்று தெரியப்படுத்தவும். இதுபோன்று யாரேனும் தெரியப்படுத்தி உள்ளனரா ?
சுரேஷ்
அன்புள்ள சுரேஷ்
இது பெரும்பாலும் ஒரு தனிப்பட்ட மனப்பதிவுமட்டுமே. பெரும்பாலும் நண்பர்கள் முதல்வாசிப்பை இணையத்தில் செய்கிறார்கள். செல்பேசிகளில் வாசிப்பவர்கள் அதிகம். அலுவலகங்களில் வாசிப்பவர்கள் பெரும்பாலானவர்கள். பின்பு நூலாக வரும்போது அவர்களில் பாதிப்பேரே வாசிக்கிறார்கள். முதல் வாசிப்பில் அவர்கள் கவனிக்க மறந்த பல விஷயங்களை நூல் வடிவில் வாசிக்கையில் அடைகிறார்கள். இதைப் பலர் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
ஆனால் முதலில் இணையத்தில் வாசித்தமையால் பிறகு அச்சில் வாசிக்க முடியவில்லை என்று அனேகமாக எவரும் சொல்லவில்லை. இந்தப் பிரச்சினையின் காரணம் வாசிப்பில்தான் உள்ளது என நினைக்கிறேன். கதைகளை வாசிப்பதற்கு நமக்கு வாரஇதழ்க் கதைகள் வழியாக ஒரு பயிற்சி உள்ளது. கதையோட்டத்தை மட்டும் தொடர்ந்து சென்று முடிவை வாசிப்பது, முடிவு அளிக்கும் அதிர்ச்சியை அல்லது வியப்பை மட்டும் கதையனுபவமாக அறிவது.
இப்படி வாசிப்பவர்களுக்கு அக்கதையை முன்பு அவசரமாக வாசித்துவிட்டோம் என்பதும் சரி கதையை யாரோ சுருக்கமாகச் சொல்லிவிட்டார்கள் என்பதும் சரி பெரிய தடைகள். ஒரு நகைச்சுவையை முன்னரே தெரிந்துவைத்திருந்தால் சிரிக்கமுடியாதல்லவா, அதைப்போல.இத்தகைய வாசகர்கள் பெரும்பாலும் ஒரு கதையை மீண்டும் வாசிப்பதே இல்லை.
ஆனால் இலக்கியக்கதைகளை வாசிக்கவேண்டிய விதமே அதுவல்ல. முதல் வாசிப்பில் இயல்பாகவே கதையோட்டம் வழியாகச்சென்று முடிவை அடைவோம். அப்போது நமக்குக் கதையின் கதைக்கட்டுமானம் மட்டுமே கிடைக்கிறது. அது அளிக்கும் அனுபவம் மட்டுமே நமக்கு முதன்மையாக இருக்கிறது
மறுவாசிப்பு நிகழும்போதுதான் நாம் நுட்பங்களைக் கவனிக்க ஆரம்பிக்கிறோம். வர்ணனைகளில் உள்ள நுணுக்கம் நம் கவனத்துக்கு வருகிறது. கதாபாத்திரங்களின் உரையாடல்களின் அடியில் உள்ள உட்குறிப்புகள் நமக்குத்தெரிந்து கதாபாத்திரங்களை இன்னும் ஆழமாக அறிய ஆரம்பிக்கிறோம். கதைகளில் உள்ள நேரடி வர்ணனைகளைப் படிமங்களாக எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கிறோம்
அந்த வகையில் முழுமையான வாசிப்பை அளிக்க ஒரு இலக்கியப்படைப்பை குறைந்தது இரண்டு முறை வாசிக்கவேண்டும். பலமுறை நினைவில் ஓட்டிப்பார்க்கவும் வேண்டும். இல்லாத வாசிப்பு சரியானது அல்ல. ஆகவே இணையத்தில் வேகமாக நிகழும் ஒரு வாசிப்பினால் அடுத்த வாசிப்பு குறைபடும் என நினைக்கவேண்டியதில்லை. அடுத்த வாசிப்பை முதலில் தவறவிட்ட அம்சங்களைக் கருத்தில்கொண்டு இன்னும் நுணுக்கமான வாசிப்பாக அமைக்கலாம்.
ஜெ