அன்பின் ஜெயமோகன்,
நல்லதொரு ஆழமான கட்டுரையை நெடுநாட்களுக்குப் பின்பு படித்த திருப்தி. இப்படி ஒரு கட்டுரையை எழுதியதற்காக உங்களுக்கு இந்து விரோதி என்ற முத்திரை கூட கிட்டலாம். ஆனால், அடிப்படை பிரச்சினைகளை சரி செய்யாமல், அஸ்திவாரத்தை சீர்திருத்தாமல் இந்து ஒற்றுமை, இந்து மதத்தை பெருக்குவது என்பது மிகப்பெரிய நோயை உள்ளேயே வளரவிட்டு ஒரே நாளில் திடீரென்று வீழ்வதற்கே வழிவகுக்கும் (தேனாறும் பாலாறும் ஓடியதாக வெளியே பிரச்சாரம் செய்யப்பட்ட சோவியத் யூனியன் ஒரே நாளில் வீழ்ந்து நொறுங்கிப் போனதைப் போல).
தலித்துக்களுக்கு சம உரிமை கொடுக்க முடியாது என்று இந்துமதத்துக்கு திரும்புபவர்களை, அப்படியே வரவேற்றால் பின்பு என்ன சமிக்ஞையை நம்மிடையே இருக்கும் (இத்தனை அவலங்களுக்குப் பின்னும் மற்ற மதங்கள் ஆசைகாட்டி அழைத்த பின்பும் போகாமல் பூர்வ கலாச்சாரத்தை துறக்காமல் இருக்கும்) தலித்துக்களுக்கு இந்து அமைப்புகள் அனுப்புவதாக இருக்கும் என்பதை இவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கிறித்துவ வன்னியர்கள் தமது பூர்வீக கலாச்சாரத்துக்கு திரும்புவதை வரவேற்க வேண்டும் – ஆனால், அர்ஜூன் சம்பத் சொல்லியிருப்பது போல அது தலித்துக்களுக்கு இரண்டாம் நிலை கொடுப்பதற்காக என்றால், அதை ஏற்காமலிருப்பதே உசிதம். பலவித சரித்திரத் தவறுகளை சரி செய்வதற்காக, இன்று வலிந்து போய் விட்டுக் கொடுப்பது கூட சரியே என்று தோன்றுகிறது. உதாரணத்திற்கு சிதம்பரம் விவகாரம். அது குறித்து ஆழமாக நான் இன்னும் படிக்கவோ, செய்திகளை அறியவோ முற்படவில்லை. ஆனால், உடனடியாக தோன்றியது என்னவென்றால், சிதம்பரத்தில் பாடுபவர்கள் அரசியல் செய்கிறார்கள் என்றால் கூட, அதை அனுமதித்தால் என்ன தவறு என்று தோன்றியது. தமிழ்பாட்டு பாடினால் தீட்டுப் பட்டுவிட்டது என்று சொல்லி சபையைக் கழுவியது இங்கே நடந்தது ஐம்பது வருடத்திற்குள்ளாகத்தானே? அப்பிண்ணனியில் பார்க்கும் எவருக்கும் எல்லா நியாயங்களையும் மீறி இது தமிழை, தமிழர்களை இழிவுபடுத்தும் செயலாகத்தானே தோன்றும். இதில் அவர்கள் அரசியல் செய்கிறார்கள் என்று புலம்புவதை விடுத்து (அது அரசியல்தான் என்பதில் எனக்கு சந்தேகமில்லை, அதுவும் இஸ்லாமியர்கள் கூட உள்ளே நுழைந்த கூட்டத்தில் இருந்தார்கள் என்று படித்தபோது – இதே இஸ்லாமியர்கள் மசூதியிலும் இதைத்தானே செய்கிறார்கள், தமிழ் குரான் மொழிபெயர்ப்புகள் எல்லோருக்கும் புரிகிறார்போல் இருக்கின்றனவே அதைவிடுத்து அரபியில் ஏன் ஓதுகின்றார்கள், அங்கே சீர்திருத்தம் செய்ய மறுப்பவர்கள் இந்து ஆலயத்துக்குள் நுழைந்து ஏன் போராட வேண்டும்?) அதை அரசியலாகவே ஏற்று, அதற்கு அதை சரி செய்யும் விதமாக பாட அனுமதித்திருந்தால், அதை இந்து அமைப்புகள் ஆதரித்திருந்தால் என்ன தான் குறைந்து போயிருக்கும்? பாரம்பரியம் பாரம்பரியம் என்று சொல்லிக் கொண்டு பழைய வழக்குகளையே இன்னும் பின்பற்றியும், அதற்கு சால்ஜாப்புகளை சொல்லிக் கொண்டு இந்து அமைப்புகளும் துணை போய்க்கொண்டிருந்தால் பின்பு மதமாற்றங்கள் ஏன் ஏற்படாது?
திராவிட இயக்கங்கள் இடைப்பட்ட சாதிகளுக்கு (Intermediary Castes) பெரும் அரசியல் பலத்தையும், அதன் மூலமாக நீங்கள் மிகவும் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளபடி தொழில்-அதிகாரம்-நிலவுடமை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தன. அதிகாரம் தவிர ஏனைய விஷயங்களில் இதற்கான விலையைக் கொடுத்தது பிராம்மணர்களல்லாத ஏனைய சாதிகளே (குறிப்பாக தலித்துகளை). இடைப்பட்ட சாதிகளின் இந்து உணர்வையும், மதப்பிடிப்பையும் (பிராம்மணத்துவத்தை நீக்கி – உதாரணம்: மருவத்தூர் இயக்கம், வேதாத்திரி மகரிஷி இயக்கம்) ஒரு வகையில் திராவிட இயக்கங்கள் திடப்படுத்தி வலுப்படுத்தவே செய்தன என்றாலும் இதன் எதிரொலியாக தலித்துக்கள் பாரிய அளவில் கிறித்துவம் பக்கம் போகவும் வழிசெய்தன திராவிட இயக்கங்கள். இந்த நிலை மாற, இன்றைய தேதியில் தலித்துக்களுக்கு சம உரிமை – அவர்களை கோவில்களிலும் ஏனைய மத அமைப்புகளிலும் கொடுப்பது போன்ற செயல்களைச் செய்வதன் மூலம் இந்து அமைப்புகள் தலித்துக்களுக்கு இந்து சமுதாயத்தின் அங்கமாக தாம் கருதப்படுகின்றோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது அவசியம். இது ஒரு வகையில் வரலாற்றின் மறுவாசிப்பாகவும் இருக்கும். ஏனெனில், தொன்மையான இந்து சமுதாயம் – அதன் தத்துவங்கள் – அதன் மகாபுருஷர்கள் அடிப்படை சாதி அமைப்பான தலித்துக்களிலிருந்தே வந்திருக்கின்றார்கள். இது தமிழகத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் நிகழ்ந்திருக்கின்றது. இன்றைய தேதியில் தலித்துக்களுக்கு அவர்களது உரிமைகளை மீட்டுக் கொடுப்பது மட்டுமல்லாமல், அதீத உரிமைகளையும் கூட (பாரம்பரியம், சம உரிமை, கலாச்சாரம் போன்ற கூப்பாடுகளையும் மீறி), சமுதாயத்திலும், ஆன்மீக அமைப்புகளிலும் வழங்குவதே இந்து சமுதாயத்திற்கு இந்து அமைப்புகள் செய்யும் பெரிய சேவையாக இருக்க முடியும். சரியான சமயத்தில் நல்லதொரு விவாதத்தை தங்கள் கட்டுரையின் மூலம் துவங்கியிருக்கின்றீர்கள். சினிமா நடிகர்களைப் பற்றி எழுதினால் மாய்ந்து மாய்ந்து வந்து படிப்பவர்கள், அதை புரிந்து கொள்ளமுயலாமல் அரசியலாக்குபவர்கள்,தங்களின் இது போன்ற கட்டுரைகளைப் பற்றியும் விவாதிப்பார்களா?
அன்புடன்,
நேச குமார்.
முந்தைய கட்டுரை