கதைகள் -கடிதங்கள்

அன்புள்ள ஜெ

நலம்தானே?

சமீபத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் கதைகளை வாசிக்கிறேன். அறம் வரிசை கதைகளுக்கு நேர்மாறாக இவை அமைதியான நுணுக்கமான கதைகளாக உள்ளன. அந்தக்கதைகளை எழுதிய ஆசிரியரா இந்தக்கதைகளை எழுதினார் என்ற சந்தேகமே வருகிறது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகை. அம்மையப்பம் கவித்துவமானது. படைப்புசக்தி எப்படி ஒரு மனிதனை சிம்மாசனத்தில் ஏற்றிவைக்கிறது மனிதவாழ்க்கை அவனை எப்படி குப்பைக்கூடையில் போட்டுவைக்கிறது என்று காட்டக்கூடியது. கிறுக்கன் ஆசாரிக்கும் அவர் மனைவிக்குமான உறவு கவித்துவத்தின் உச்சம்

கிடா, நிலம் இரண்டுமே ஒரே தளத்திலான கதைகள். இரண்டும் மனித மனத்தின் நுட்பங்களைச் சொல்கின்றன. குழந்தை இல்லாத வெற்றிடத்தை நிரப்ப நிலம் வேண்டும் என்று தவிக்கும் சேவுகப்பெருமாள் அற்புதமான கதாபாத்திரம். கணவன் மீது பேரன்பு கொண்டவளாக இருப்பதனால்தான் ராமலட்சுமிக்கு அவனுடய குழந்தை வேண்டும் என்று தோன்றுகிறது. தத்து எடுக்க எல்லாம் அவள் சம்மதிக்க மாட்டாள். ஆனால் அதேபோல மனைவி மீது பேரன்புகொண்டிருப்பதனால்தான் சேவுகப்பெருமாள் வேறு திருமணம் செய்ய ஒத்துக்கொள்ளாமல் இருக்கிறான்.

நிலம் என்பது வேருக்காகத்தான் என்பதைச் சொல்லும் அந்த வரி ஆழமானது. யோசித்துக்கொண்டே இருந்தேன். குழந்தை இருந்தால் அதுவே ஒரு வேர். வேர் என்று சொல்லும்போது நாம் மூதாதையரைத்தானே சொல்கிறோம். அந்த வேர் இல்லாவிட்டால் ‘virtual“ ஆகவே நிலத்தைத் தேடி வேரை உருவாக்க முயலவேண்டியதுதான்

கிடாவும் அருமையான கதை.அந்த மொத்தக் குலமே குடியும் வன்முறையும் நிறைந்ததாக உள்ளது. பெண்களின் கண்ணீர் அதன் பின்னணியில் உள்ளது. அந்தக்கண்ணீர்தான் அந்தப்பெண்ணை வேறுமாதிரி யோசிக்க வைத்திருக்கலாம். குடியும் வன்முறையும் கொண்ட so called ஆண்மை கொண்ட கணவன் வேண்டாம் என்று அதுதான் சொல்லவைத்திருக்கலாம். கிடா அண்ணனை புரிந்துகொள்வதுபோல பெண் தம்பியை புரிந்துகொள்கிறாள் என நினைத்தேன்

வாழ்த்துக்கள். மிகவும் creative ஆன மனநிலையில் இருந்திருக்கிறீர்கள்

எம்.ராமச்சந்திரன்

அன்புள்ள ஜெமோ

கதைகளை வாசித்துக்கொண்டிருந்தேன்

பிழை, அம்மையப்பம், நிலம், கிடா நான்குமே அருமையான கதைகள். தொடர்ச்சியாக இவ்வளவு அற்புதமான கதைகளை எழுதமுடிவது ஓர் ஆச்சரியம்தான். நீங்கள் கதைகளுக்காகக் காத்திருப்பது இல்லை போல. ஒரு மூட் வந்தால் தொடர்ந்து எழுதித்தள்ளுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

இந்த எல்லா வகைகளிலும் நீங்கள் நல்ல கதைகளை எழுதியிருக்கிறீர்கள். பிழை கதை தேவதை போன்ற கதைகளின் வகை. அதாவது உண்மைத்தகவல்களைக்கொண்டு கதைகளை எழுதுவது. அம்மையப்பம் கதை உங்கள் இளமைப்பருவம் பற்றிய நினைவுகளாக எழுதுவது. ஒரு தொடர் நாவல் எழுத முயன்று நின்றுவிட்டிருக்கிறது என நினைக்கிறேன். நிலம் கிடா இரண்டுமே நீங்கள் மௌனமான நுணுக்கங்களுடன் எழுதிய நைனிடால் மாதிரியான கதைகளின் பாணி. அந்தமாதிரியான கதைகளை நீங்கள் அதிகம் எழுதவில்லை.

வெறும் வாழ்க்கைச்சித்தரிப்பு என்று தோன்றக்கூடிய கதைகள் இவை. ஆனால் அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லக்கூடியவை என்று தோன்றும் சில கவித்துவமான வரிகள் அவற்றை அப்படி இல்லை என்று சொல்லவைக்கின்றன. உதாரணமாக நிலம் கதையில் நிலம் என்பது வேருக்காகத்தான் என்ற வரி. கிடா கதையிலே மிகச்சிறந்தது எல்லாம் சாமிக்கு என்ற வரி.

சிறந்த கதைகள். இந்த வேகம் நீடிக்கட்டும்

ஜெயராம்

முந்தைய கட்டுரைநமது பேச்சாளர்கள்
அடுத்த கட்டுரைஒரு பாடல்